Sunday, April 10, 2011

கஸல் பூங்காஉருதுக் கவிதை உலகத்தில் உலா வருகிறேன் சில மாதங்களாக. நாகூர் ரூமி அவர்கள் திருச்சி வந்திருந்த போது கஸல் பற்றிய பேச்சு வந்தது. “குலாம் அலீ கேட்டிருக்கிறீர்களா?” என்று என்னைக் கேட்டார். ஜக்ஜீத் சிங், ஹரிஹரன், நுஸ்ரத் ஃபதேஹ் அலீ கான் ஆகிய மூவரின் குரல்களில்தான் நான் அதிகமாக கஸல்களை ரசித்துள்ளேன். குலாம் அலீ கேட்டதில்லை. “கேளுங்கள், கமகம் கொட்டும். ஒரே வரியைப் பல மாதிரியாகப் பாடுவார்” என்று நாகூர் ரூமி சொல்லிச் சென்றார். பற்ற வைத்துவிட்டுப் போய்விட்டார்!


சில வருடங்களாக கஸல் கேட்பதை நிறுத்தியிருந்த நான் மீண்டும் கேட்கத் தொடங்கினேன். என் டேப் ரிக்கார்டர் ரிப்பேர் ஆகி மூன்று வருடங்கள் ஆகிறது, அதுதான் காரணம். என்னிடம் உள்ளதெல்லாம் ஒலிநாடாக்கள்- டேப் கேஸட்டுகள். இப்போது மடிக்கணினி இருப்பதால் கஸல்களை டவ்ன்லோட் செய்து கேட்டுக் கொண்டிருக்கிறேன். குலாம் அலீ, மெஹ்தி ஹசன், தலத் அஸீஸ், ஆஷா போன்ஸ்லே – கய்யாம், அனூப் ஜலோத்தா என்று ஒரு கஸல் ராஜசபையே இப்போது என் கணினிக்குள் காத்திருக்கிறது.


அது இரவா? இல்லை பகலா? என்று சொல்ல இயலாத ஒரு நேரகதியில், அது கோடையா? இல்லை வசந்தமா? என்று கூற முடியாத ஒரு பருவநிலையில், அது விழிப்பா? இல்லை கனவா? என்று உணர மாட்டாத ஒரு மனநிலையில், அது ஒளியா? இல்லை இருளா? என்று விளக்க இயலாத ஒரு லயத்தில் கஸலின் பூங்காவில் உலவிக் கொண்டிருக்கிறேன்.கஸலின் பாடுபொருள் காதல்தான். பெரும்பாலும் காதல்தான். கஸல், காதலின் கவிதை. அதன் ஆன்மாவின் இலக்கணம் இதுதான். ஆனால் கஸல் பாடப்படும் விதம், காதலை அது சொல்லும் விதம், அது பெண்ணின் மீதான காதலாகவும் அர்த்தப்படும், இறைவனின் மீதான காதலாகவும் அர்த்தப்படும். எப்படி அர்த்தம் எடுத்துக் கொள்கிறோம் என்பது அவரவர் ‘பக்குவம்’ சார்ந்தது, தாகம் சார்ந்தது. எல்லா வரிகளும் அப்படித்தான் என்று சொல்லிவிட முடியாது. ஆனால் பல வரிகளை என்னால் அப்படி இனம்கண்டு ரசிக்க முடிகிறது. எப்படியோ, வலீ முஹம்மத் வலீ (1667-1707) என்னும் கவிஞர் சொன்னதுதான் ஞாபகம் வருகிறது:


“காதல் விளையாட்டின்


அனுபவமே சிறந்தது


இறைவன்மீது என்றாலும் சரி


பெண்ணின்மீது என்றாலும் சரி”


இரண்டுமே கைவரப் பெற்றவர்கள், இரண்டிற்கும் உள்ள உறவை அறிந்தவர்கள் கொடுத்து வைத்தவர்கள்தான். தயவு செய்து என்மேல் பொறாமை படாதீர்கள்! இறைவன் இந்த அருட்கொடையை நம் அனைவருக்கும் உண்மையாக்கி வைப்பானாக!


”அடைய முடியாத காதலியே அழகாக இருக்கிறாள்” என்று அப்துல் ரகுமான் எங்கோ எழுதியிருப்பதாக ஞாபகம். அது உண்மையானால் இந்த இலக்கணம் இறைவனைத் தவிர வேறு யாருக்குப் பொருந்தும்? முழுமையாக அடையப்பட முடியாதவன் அவன் மட்டுமே!


“காதலின் முதல் கடிதத்தை எழுத


கொஞ்சம் தாமதம் ஆகத்தான் செய்யும்.


பறவைக் குஞ்சுகள் பறப்பதற்குக்


கொஞ்சம் தாமதம் ஆகத்தான் செய்யும்”


என்று ஆரம்பிக்கிறது ‘ஹஸ்தி’ என்னும் கவிஞர் எழுதிய ஒரு கஸல். லௌகீகம், ஆன்மிகம் என்று இரண்டு தளத்திலும் இதனை அர்த்தப் படுத்தலாம். ஒரு பெண்ணின் மீது காதல் கொண்ட ஒருவன் அவளுக்குக் கடிதம் எழுத நினைக்கிறான். அவனோ அவள் மீது ’உண்மை’யாகவே காதல் கொண்டவன். நிராகரிக்கப்படும் அபாயம் அவன் உயிரை எரிக்கிறது. நகத்தைக் கடித்துத் துப்பி விரல்களை எல்லாம் ரணகளம் ஆக்கிவிடுகிறான். தாள் தாளாகக் கிழித்துப் போட்டுக் கொண்டே இருக்கிறான். அவளைத் திருப்தி படுத்தக் கூடிய ஒரு கடிதத்தைத் தான் எழுதிவிட்டதாக அவனால் திருப்தி அடைய முடியவில்லை. இதைத்தான் ஹஸ்தியின் கஸல் வரிகள் சொல்கிறது. ஆனால் அது சொல்வது இது மட்டுமா?


இதே வரிகளை ஆன்மிகத் தளத்தில், சூஃபித்துவ வெளிச்சத்தில் பார்க்கலாம். இறைவனைத் திருப்தி படுத்தக்கூடிய ஒரு தொழுகையை நான் நிறைவேற்ற நினைக்கிறேன். இத்தனை வருடங்கள் தொழுதும், இறைவனால் என் தொழுகையில் குற்றம் காணவே முடியாது என்று சொல்ல முடியுமா? அப்படி ஒரு தொழுகையாவது என்னிடம் உண்டா? அப்படித் தொழுதுவிட்டேன் என்று என்னால் திருப்தி அடைய முடியுமா? என் தொழுகையில் உள்ள குறைகள் எனக்கே உருத்துகிறதே! இதற்கு என்ன காரணம்? அதையும் ஹஸ்தி தன் கஸலில் கூறுகிறார்:


“உடலைப் பற்றிய பேச்சில்லை


அவளின் உள்ளம் வரை போக வேண்டியிருந்தது.


தொலை தூரப் பயணம் செல்ல வேண்டுமெனில்


கொஞ்சம் தாமதம் ஆகத்தான் செய்யும்.”


இது விளக்காமலே புரியும் என்று நம்புகிறேன்! வெறும் உடலின் அளவில் இருந்தால் அது காதல் அல்ல. ஒரு பிணத்தைக் காதலிக்க முடியாது அல்லவா? உடலால் அவள் அருகில் இருக்கிறாள். ஆனால் அவளின் உள்ளம் அவனை விட்டும் வெகு தொலைவில் இருக்கிறது. எனவே இப்படிப் பாடுகிறான். உடலில் இருந்து உள்ளத்திற்குச் செல்வது மிக நீண்ட பயணம் என்கிறான்.


இந்த வரிகளை சூஃபித்துவ வெளிச்சத்தில் புரிந்து கொள்ளும்போது எப்படி மாறுகிறது பாருங்கள். உடலால் தொழுகையை நிறைவேற்றி விடுவது மிக எளிது. ஆனால் தொழுகை என்பது வெறுமனே உடலால் சில சடங்குகளை நிறைவேற்றும் விஷயம் அல்ல. உடல் ஒரு கருவி. அதைக்கொண்டு தொழுவது உள்ளம்தான். “இதயத்தின் பிரசன்னம் இல்லாமல் தொழுகை இல்லை” (லா ஸலாத்த இல்லா பிஹுளூரில் கல்ப்) என்பது நபி(ஸல்) அவர்களின் அருள்மொழி. அப்படி இறைவனில் உள்ளம் கரைய ஒரு தொழுகையை நிறைவேற்ற வேண்டும் என்றால் நாம் போக வேண்டிய தூரம் இன்னும் அதிகம் இல்லையா?


“இதயத்தின் வேதனைக்காக


மனிதனைப் படைத்தான்.


வழிபாடு மட்டுமே நோக்கம் எனில்


வானவர்க்கு என்ன குறை?”


என்று கேட்கிறார் கவிஞர் ஜிகர். எவ்வளவு சரியான கேள்வி!

4 comments:

 1. sir adutha pathivu seekiram podunga
  ethnai thadava unga kadaikku varrathu?

  ReplyDelete
 2. பிரபஞ்ச குடிலில் உள்ள பழைய சோற்றை சாப்பிட்டாலும் வேறெந்த குடிலிலும் உள்ள சுடு சோறு கூட நெருங்க முடியாதே..!

  ReplyDelete
 3. //தொலை தூரப் பயணம் செல்ல வேண்டுமெனில்
  கொஞ்சம் தாமதம் ஆகத்தான் செய்யும்.”//

  ஆம், பின்னே! அது அணோர் அணீயான்; மஹதோமஹீயான் அல்லவா?
  போய் சேர்ந்து பயணம் முடிக்குமாறா அது உள்ளது

  ReplyDelete
 4. மிகவும் அருமை நண்பரே,
  எனக்கும் கஸல் கேட்பதில் மிகவும் ஈடுபாடு உள்ளது. வெகு நாட்களாக நான் செய்யவேண்டும் என்று இருந்த பணிகளை நீங்கள் ஏற்கனவே தொடங்கி விட்டதை பார்த்து மிகவும் மகிழ்ச்சி. இன்றுதான் உங்களது வலைப்பூவை பார்த்தேன். அதற்கு சற்று முன்பு நான் பதிவு செய்துள்ள பதிவை பார்க்க தங்களுக்கு அழைப்பு. தங்கள் கருத்தை பதிவு செய்யவும். "காதலின் முதல் கடிதம்" பாடல் இறைவனுக்கும் பொருந்தும்.. ஒரு பெண்ணுக்கும் பொருந்தும் என்பதை இப்பொழுது அறிந்து ஆச்சர்யமான மகிழ்ச்சி. வாழ்க கஸல்.

  ராமு
  http://reverseliving.blogspot.in/
  --
  rahne do jane do
  रहने दो जाने दो

  ReplyDelete