Monday, April 4, 2011

கஜல் துளிகள்



எண்ணங்களைவிடவும்
நுட்பமாய் இருக்கிறாய் நீ.

உன்னைப் பற்றிய கவிதைகள்
கல்லில் செதுக்கப்படும்
பூக்கள் ஆகின்றன.



கண்ணாக நீ இருந்தாய்
இமையாக நான் இருந்தேன்
இரவெல்லாம்.

உறக்கமாய்  நான் இருந்தேன்
கனவாக நீ இருந்தாய்
இரவெல்லாம்.



காத்திருப்பதில் என்ன பயன்
நீ வரும் பாதை
எதுவென்று தெரியாமல்?

பாதை தெரிந்தும்
பயன்தான் என்ன,
நீ யாரென்று தெரியாமல்?




வண்ணத்தில் மயங்காதே
வண்ணங்களைக் காட்டும்
ஒளியைக் காதலி.

ரோஜாவைச் சுற்றும்
புல்புலுக்குக் கிடைப்பதில்லை
விளக்கைச் சுற்றும்
விட்டிலின் முடிவு.



1 comment:

  1. இப்பத்தான் தங்களின் கவிதை வரிகள் புரிபட‌
    ஆரம்பித்திருக்கின்றன. ஒவ்வொரு வரியும் அருமை.

    ReplyDelete