Tuesday, December 30, 2025

ஒரு ஸூஃபி நூலுக்கான முகவுரை

 


(அண்மையில் இந்தியா வந்திருந்த என் இளைய சகோதரர் யூனுஸ் பர்வேஸ் அமெரிக்காவில் இருந்து எனக்கு மூன்று நூல்களைக் கொண்டு வந்து தந்தார். மூன்றும் ஸூஃபித்துவ நூல்கள். அதில் ஒன்று “ஜீனத்துல் குலூப்” என்னும் நூலின் ஆங்கிலப் பெயர்ப்பு. அதனைத் துருக்கி மொழியில் எழுதியவர் ஷைஃகு முழஃப்பர் ஒஸாக் அல்-ஜர்ராஹி என்னும் ஸூஃபி குரு. அந்நூலின் ஆங்கிலப் பெயர்ப்பிற்கு ஸூஃபித்துவ அறிஞரும் நியூயார்க் மாநிலப் பல்கலைக்கழகப் பேராசிரியருமான வில்லியம் சிட்டிக் ஓர் அருமையான முகவுரை எழுதியுள்ளார். அதன் தமிழாக்கம் இது)

         shaikh muzaffar ozak al-jerrahi

முகவுரை

வில்லியம் கிளார்க் சிட்டிக்

             william clark chittick

கடந்த சில ஆண்டுகளில் மேற்குலகில் ஒரு விழிப்புணர்வு வளர்ந்து வந்துள்ளது. அதாவது, ஆதாரபூர்வமான உண்மையான ஸூஃபித்துவம் என்பது முழுமையும் ஒருங்கிணைவுமான இஸ்லாமே அன்றி வேறில்லை.

            முன்பு ஒரு காலம் இருந்தது. இஸ்லாம் என்பது உணர்வற்ற இதயம் கொண்ட வறட்டுப் பண்டிதர்களின் மதம் என்றும், கிறித்துவம், அல்லது பௌத்தம், அல்லது ஹிந்துயிசம், அல்லது ஈரானிய மதங்கள் ஆகியவற்றில் இருந்து பெற்ற ’தாக்கம்’ மட்டுமே முஸ்லிம்களில் விதிவிலக்கான ஒரு சிறு குழுவினர் அன்பின் மீதும் ஆன்மிகத்தின் மீதும் கவனம் செலுத்தக் காரணம் என்றும் எங்களிடம் ‘அறிஞர்கள்’ ஆனந்தமாகச் சொல்லிக் கொண்டிருந்தனர். மேற்குலகிடம் எல்லா வினாக்களுக்கும் விடைகள் இருக்கின்றன என்று நம்பிவிட்ட சமகால முஸ்லிம் அறிவாளர்களும் அரசியல்வாதிகளும்கூட தமது பங்கிற்கு, தம் பின்தங்கிய நிலைக்கு இதுதான் காரணம் என்று எதன் மீதாவது பழிபோட வேண்டி ஒரு சாக்குப் போக்கைத் தேடினர். அவர்களுக்கு ஸூஃபித்துவம் என்பது இலகுவான இலக்காகப் பட்டது. எனவே, ஸூஃபித்துவமும் இஸ்லாமும் ஒத்துப்போகாதவை என்னும் கருத்தைக் கீழைத்தேயவியல் அறிஞர்களும் நவீனவாதிகளும் ஏற்றுக்கொண்டனர்.

            மிக அண்மையில், ஒரு சிலரைத் தவிர, பெரும்பான்மை மேற்குலக வல்லுநர்கள் இந்த நிலையைக் கேள்விக்கு உட்படுத்தியுள்ளனர். “தாக்கம்” பற்றிய பேச்சு எதைக் காட்டுகிறது? தனக்குத் தானே முக்கியத்துவம் அளித்துக் கொண்டு ஸூஃபித்தின் வரலாறு நெடுகிலும் அதனை அனுபவித்து வந்துள்ளோரிடம் இருந்து அதனை நீக்கிவிட முனையும் பண்டிதனின் ஆசையைத் தவிர வேறு எதையாவது அது காட்டுகிறதா? என்று அவர்கள் ஆராய்ந்தனர். இதை விட முக்கியமான அணுகுமுறை ஒன்றையும் அவர்கள் சுட்டிக் காட்டினர்: “ஸூஃபித்துவத்தைப் புழங்குவோரின் பார்வையில் ஸூஃபித்துவம் என்பது என்ன?” இதுதான் கேட்கப்பட வேண்டிய கேள்வி.

            அப்போது நாம், இஸ்லாமியச் சிந்தனை மற்றும் நடைமுறையின் ஒளிமயமான ஆழங்களில் சுய விழிப்புடன் பங்கெடுப்பதைக் குறிப்பதற்கு முஸ்லிம்கள் பயன்படுத்தும் பல சொற்களில் ஸூஃபித்துவம் என்பதும் ஒன்று என்று காண்கிறோம்.

            இந்தப் பரிமாணம் இல்லாமல் போகும்போது சமயம் என்பது அந்தரங்க ஒழுங்கற்ற நம்பிக்கைகள் மற்றும் சடங்குகளின் தொகுப்பாக மாறிவிடுகிறது. இதுதான் பொதுவான நிலைமையாகவும் உள்ளது.

            ஸூஃபித்துவம் என்பது நபி (ஸல்) அவர்களின் ஆன்மிகம்தான். அது, இஸ்லாமை முழுமையாக வாழ்ந்தோரால் வழிவழியாகக் கையளிக்கப்பட்டு வருகிறது.

            ஸூஃபித்துவத்தில் நிறுவனமயமாக்கப்பட்ட அமைப்புகள் சிலவற்றில் காணப்படும் மிகைப்பாடுகளைக் கண்டு முஸ்லிம் நவீனவாதிகள் அதனை விமர்சிப்பது வழக்கமாக உள்ளது. ஆனால் ஸூஃபித்துவத்தை அவர்கள் மறுப்பதற்கான உண்மைக் காரணங்கள் வேறு. அதாவது, அவர்கள் தம் சொந்த மரபின் உயிருள்ள வேர்களுடனான தொடர்பை இழந்துவிட்டனர்; மேலும், சமயத்தை முற்றிலும் அரசியல் ரீதியாகவே அவர்கள் பார்க்கின்றனர். நவீன மேற்கத்திய சிந்தனையில் அதீத மதிப்பு வழங்கப்பட்டுள்ள அரசியல் புலத்தில் வாழ்வின் அர்த்தத்தை அவர்கள் காண்பதால் ஸூஃபித்துவம் என்பது இஸ்லாமுக்கு முரணானது என்று அவர்கள் நிராகரிக்கின்றனர். சமூகச் செயற்பாடுகளுக்கு அப்பால் அதிகமான பல அம்சங்கள் சமயத்திற்கு உண்டு என்று இத்தகையோரை ஏற்க வைப்பது மிகவும் சிரமமாகும். குர்’ஆன் நமக்கு நினைவூட்டுகிறது, நபி (ஸல்) அவர்களாலேயே குருடர்களுக்குப் பார்வை அளிக்க இயலவில்லை. இஸ்லாமின் சாராம்சமான மெய்ஞ்ஞானப் பரிமாணத்திற்கு – அதாவது, பல தலைமுறைகளாக இறைஞானியரும் இறைநேசர்களும் (ஆரிஃபீன் வ அவ்லியா) இஸ்லாமின் அகப் பரிமாணத்திற்கு அளித்து வந்துள்ள விளக்கங்கள் மீது -   நவீனவாதிகள் ஆழங்காணாத அறியாமையில் இருக்கிறார்கள் என்னும் எதார்த்தம் அவர்கள் பின்பற்றும் பாதை புதிதாகத் தொடங்கப்பட்ட ஒன்று என்பதையே உறுதிப் படுத்துகிறது.

            மேற்கு மொழிகளில் உள்ள மூலங்கள் ஸூஃபித்துவத்தைப் பல்வேறு நோக்கு நிலைகளில் இருந்து அணுகுகின்றன. பொதுவாக, அந்த நூல்கள் எல்லாம் ”வெளியாட்கள்” அல்லது “உள்ளாட்கள்” என்று அழைக்கப்படுவோரால் எழுதப்பட்டவை எனலாம். அவற்றில் சில நூற்கள் இந்த இடைவெளியில் பாலமிடுவதாகவும் உள்ளன. இந்த ”வெளியாட்கள்” (புறமியர்) ஸூஃபித்துவ வரலாறு குறித்த காத்திரமான பல்வேறு ஆய்வுகளையும் செவ்வியல் பிரதிகளின் மொழிபெயர்ப்புகளையும் செய்துள்ளனர். “உள்ளாட்கள்” (அகமியர்) ஸூஃபி மரபின் பிரதிநிதியாகவே பேசுகின்றனர், அல்லது அப்படிப் பேசுவதாகக் கோருகின்றனர். அத்தகயோருள் ஒருவர்தான் ஷைஃகு முழஃப்பர் அவர்கள். ஒருங்கிணைந்த முழுமையான இஸ்லாம் இப்போதும் உயிர்ப்புடன் உள்ளது என்பதை அவரின் நூல்கள் புலப்படுத்துகின்றன. அவர், தாம் ஆராயும் பொருண்மையை ஓர் அகழாய்வுக் களம் போல் பாவிக்கும் வல்லுநர்களின் வறண்டு போன வரலாற்று நோக்கையோ, நுண்ணறிவின் முன்னால் காணாமல் போய்விடும் மெய்நிகர் தொன்மங்களுக்குச் சுகமளிக்கும் நவீன முஸ்லிம்களின் பச்சாதாப அணுகுமுறையையோ கையாள்வதில்லை.

            ”உள்ளாட்கள்” எழுதியுள்ள நூல்களில் காணபடும் ஸூஃபித்துவத்திற்கான பல்வேறு அணுகுமுறைகளை நாம் புரிந்து கொள்ள ஷைஃகு முழஃப்பரின் நூல் உதவுகிறது. இது அன்னாரின் எழுத்தில் காணப்படும் சிறப்பம்சங்களில் ஒன்றாகும். அவர் சுட்டுவது போல், இந்த எழுத்தாளர்களை நாம் பல்வகையாகப் பகுத்துக் காணலாம், “பேச்சாளி ஷைஃகுகள்” மற்றும் “உருவாகி வரும் ஷைஃகுகள்” என்பதில் இருந்து “ஆன்மிக ஷைஃகுகள்” என்பது வரை. அப்புறம் அவர், இந்த அணுகுமுறைகளை வேறுபடுத்திக் காண்பதற்கான பல்வேறு நியதிகளைத் தருகிறார். ஆன்மிகச் சாதகர்கள் நன்மை தீமைகளைப் பிரித்துப் பார்க்க தமது நுண்ணறிவைப் பயன்படுத்த வேண்டும் என்று கூறும்போது அவர் இஸ்லாமிய மரபின் மையத்தில் நிற்கிறார். போதிய கல்வியறிவு இல்லை எனில் ”முனைப்புகள்” / “எண்ணங்கள்” (நிய்யாத்) போதுமானவை அல்ல. “அறிகின்றோரும் அறிகிலாதோரும் நிகராவரா?” (குர்’ஆன் 39:9).


            
அடிப்படையில் இந்நூல், ஹல்வத்தி-ஜர்ராஹி ஸூஃபி நெறியின் சாதகருக்கான ஒரு கையேடு ஆகும். ஆனால் எந்த ஒரு நிலையிலும் உள்ள ஸூஃபித்துவ ஆர்வலர் எவரும் இதனால் பயன் அடையலாம். வேறு ஸூஃபி நெறியினர், அல்லது பொதுவாக முஸ்லிம்கள், இறைவனுக்கு உகந்த முறையில் எப்படி வாழ்வது என்று வழிகாட்டும் பல செய்திகளை இந்நூலில் காணலாம். அனைத்து மரபுகளினதும் ஸூஃபித்துவச் சாதகர்கள் தம் நெறியில் இஸ்லாமியச் சகோதரத்துவ இணக்கத்தை அதிகப்படுத்தும் எடுத்துக்காட்டுகளை இதில் காணலாம். புழுதி படிந்த பழஞ் சுவடிகளில் ஒளிந்து கிடக்கும் போதனைகளின் சமகால வெளிப்பாட்டினை இந்நூலில் அறிஞன்மார் காண்பர். இஸ்லாம் பற்றி ஆர்வம் உள்ள பொது வாசகர்கள் ஊடகத்தில் பரப்பப்படும் பொய்களின் விடத்தை முறிக்கும் அருமருந்தை இதில் அடைவர்.

            முடிவாக, இஸ்லாம் என்பது சமய வடிவங்களில் இருந்து தன்னை எப்படியோ துண்டித்துக் கொண்ட அரிதான மற்றும் ‘உலகளாவிய’ ஆன்மிக நெறி என்று எண்ணும் நம் சமகாலத்தவர் இந்நூலினை வாசிக்கும்போது, ஸூஃபி சாதகர்கள் எல்லாக் காலத்திலும் அறிந்து வந்துள்ள ஓர் உண்மையைப் புரிந்து கொள்ளலாம்: “ஒரு விதத்தில், ஸூஃபித்துவம் என்பது இஸ்லாமின் அகப் பரிமாணத்தை விட அதன் புறப் பரிமாணத்திற்கு அதிக கவனத்தை அளிக்கிறது. ஏனெனில், உடல் வடிவங்கள் மற்றும் செயற்பாடுகள் மட்டுமன்றி, அனைத்துப் பொருட்களிலும் இறை வெளிப்பாட்டைக் காணும் ஒரு பிரபஞ்சவியலில் அது வேர் ஊன்றியுள்ளது. ஒரு ஸூஃபியின் இலட்சியம் இந்த வாழ்க்கையிலேயே, அதாவது இந்த உடலிலேயே, இறைவனை உணர்ந்து கொள்வதாகும். உடல் என்பது மனித இருப்புக்கும் ஆன்மிகப் பயிற்சிக்கும் அவசியக் கருவியாகும்.

இஸ்லாமிய போதனைகளில், உடலும் உயிரும் இரண்டு வெவ்வேறு பொருட்கள் அல்ல; ஆனால் அவை ஒரே எதார்த்தத்தின் இரண்டு பரிமாணங்கள் ஆகும். இவை இரண்டும் மூன்றாம் பரிமாணம் ஒன்றால் இணைக்கப்படுகின்றன. அது ஆன்மா என்று அழைக்கப்படுகிறது. அதுவே நம் விழிப்புணர்வின் குவிமையம் ஆகும்.

            ஆன்மா, ஆன்மிக உலகின் ஒருமையான ஒளிமயமான நிலைக்கு உயரலாம். அல்லது, உயிரற்ற பருப்பொருளின் சிதறிப்போன பன்மையான நிலைக்கு இழிந்து விடலாம். இவ்வுலகில் ஆன்மிகப் பூரணத்துவத்தையும் மறுமையில் மாசிலா இன்பத்தையும் அடைய விரும்புவோர் இவ்வுடலை உயிருடனும் தெய்வீக மூலத்துடனும் இணங்க வைக்க முயல வேண்டும்.

            இருத்தலின் ஒவ்வொரு தளத்திலும் ஒத்திசைவு, சமனம், மற்றும் இணக்கம் ஆகியவற்றை நிறுவ மனிதனை அனுமதிக்கும் பயிற்சிகள் உடல் மற்றும் ஆன்மா ஆகிய இரண்டு நிலைகளிலும் இருந்தால் மட்டுமே அது நிகழ முடியும். இந்தப் பயிற்சிகள் மனிதனால் பகுத்தறியப்பட முடியாதவை. எனவேதான், இஸ்லாம் அவற்றை இறைத்தூதருக்கும் அவரின் பிரதிநிதிகளுக்கும் வழங்கப்பட்ட இறை வழிகாட்டலில் கண்டடைகிறது.

            ஆன்மாவின் தளம் என்பது உடலை விடக் குறைந்த பருன்மை கொண்டது என்பது தெளிவு. ஒரு விதத்தில், அது உடலின் எதார்த்தத்துடன் உடலை விட அதிக நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளது. சொல்லப் போனால், இந்தப் பருவுடல் சிதைவுற்று புழுதியாகி மறைந்துவிடும் என்றும் ஆன்மாவே ஓர் உடலாகத்தான் உயிர்த்தெழுப்பப்படும் என்று முஸ்லிம் ஆன்மிக ஆளுமைகள் பலரும் நமக்குச் சொல்கிறார்கள். ஆன்மாவுடன் நேர்ப்படும்படியாக உயிர்த்தெழுப்பப்பட்ட உடல்தான், சில கிரந்தங்களில் எழுதியுள்ளபடி, “உடல் ஆன்மா ஆகிறது, ஆன்மா உடல் ஆகிறது” என்று சொல்லப்படும் இடமாகும். பதின்மூன்றாம் நூற்றாண்டின் இறைஞானி ஸத்ருத்தீன் குன்யவி சொல்வது போல், மரணத்தின் வழியாக “புறம் அகம் ஆகிவிடுகிறது, அகம் புறம் ஆகிவிடுகிறது.” இப்போது ஸூஃபித்துவக் கல்வியில் நன்கு அறியப்பட்டிருக்கும் ஒரு சொல்லைக் கொண்டு குறிப்பிடுவதெனில், “கற்பனை” (ஃகயால்) என்பதே ஆன்மாவின் சாராம்சம். மேலும், கற்பனை என்பது உருவ மற்றும் மீவுருவ (அல்லது அருவ) எதார்த்தங்கள் ஒன்றிணைகின்ற, உடலும் ஆன்மாவும் கலக்கின்ற இடைப்புலம் ஆகும். அதுவே பர்ஸஃக் என்னும் உலகம். அதாவது, மரணத்திற்கும் மறுவுயிர்ப்புக்கும் இடையில் உள்ள உலகம். இன்னொரு விதத்தில், அது மறுவுயிர்ப்பிலும் அதற்கு அப்பாலும் நிகழும் அனுபவங்களின் உலகம்.

            ஸூஃபிசம் என்பது ஒரு பூடகமான தத்துவமோ, எதார்த்தத்தை விட்டு ‘தப்பித்த’லோ அல்ல. அது எதார்த்தத்தினுள் செல்வதற்கான நுழைவாயில். அது, மனித இருப்பின் இயல்பு கோருகின்ற தெளிவான உறுதியான முறைகளில் நிகழ்கிறது. பிரபலமான ஒரு மேற்கோளைச் சொல்ல வேண்டும் எனில், “முழு ஸூஃபித்துவமும் மிகச் சரியான நன்னடத்தை (அதப்)தான்.” நடத்தை என்பது மறுமையையும் இறைவனையும் நோக்கியதாக இருந்தபோதும், இவ்வுலகில் இந்த உடலில் மிக விவேகத்துடன் வேர் கொண்டுள்ளது. ஷைஃகு முழஃப்பர் அவர்களின் எழுத்தில் மீண்டும் மீண்டும் பேசப்படும் ஒரு பொருண்மை நபி (ஸல்) மற்றும் இறைநேசர்கள் ஆகியோரைப் பின்பற்றி நல்ல மற்றும் அழகான குணாம்சங்களைத் தன்னில் வளர்த்துக் கொள்வது மிக அவசியம் என்பதாகும். இந்த உலகத்தில் நாம் வாழப் போகிறோம் எனில் மனித நிலைகள் நிச்சயம் அவசியமானவையே. நமக்கு வேறு வழியில்லை.

            உடலும் ஆன்மாவும் உறவாடும் புலம் தெளிவான உறுதியான முன் மாதிரிகளாலும் மீண்டும் மீண்டும் செய்யப்பட்டு கிரகிக்கப்பட வேண்டிய துல்லியமான அறிவுறுத்தல்களாலும் வடிவமைக்கப்பட வேண்டும். அப்போதுதான் அற மற்றும் ஆன்மிக வளர்ச்சி சாத்தியப்படும். அப்போதுதான் ஒரு நபர் ‘மனிதன்’ என்னும் பெயருக்கு அதன் உண்மையான அர்த்தத்தில் தகுதியுடையவர் ஆவார்.








No comments:

Post a Comment