Sunday, October 26, 2025

உவந்தனம் பெரிதே!

 


சென்ற திங்கள் என் பிறந்தநாளுக்கு ஜார்ஜ் ஜோசப் பரிசு ஒன்று கொடுத்தார்: “நீங்க விரும்பிப் படிப்பீங்கன்னு தோனுச்சு சார், இந்த நூல் வாங்கிட்டு வந்தேன்.” அவர் கொடுத்தது கரிகாலன் எழுதிய “நோம் என் நெஞ்சே”. ‘சங்க காலப் பெண்பாற் புலவர்கள் வாழ்வும் எழுத்தும்’ என்பது இந்நூலின் பொருண்மை. சங்க காலப் பெண்பாற் புலவர்கள் இயற்றிய பாடல்களை எல்லாம் திரட்டியெடுத்து ”சங்கப் பெண் கவிஞர்களின் கவிதைகள் மூலமும் உரையும்” என்னும் தலைப்பில் ந.முருகேச பாண்டியன் ஒரு நூல் தந்திருக்கிறார்.  சங்கக் கவிதைகளை நம் வாழ்வில் காணும் அன்றாட நிகழ்வுகளோடு இயைத்துக் காணும் உத்தியுடன் ஜெயமோகன் “சங்கச் சித்திரங்கள்” எழுதினார். கரிகாலன் எழுதிய நூல் இவ்விரண்டுக்கும் இடை நிலையில் அமைகிறது. சுவைஞனாகவும் அறிஞனாகவும் ஒருங்கிருந்து அணுகி பெண்பாற் புலவோரின் சங்கப் பாடல்களை, நாற்பத்திரண்டு கட்டுரைகளாக நாம் புலனுண்ண அளித்திருக்கிறார்.

            பதினைந்து நாட்களுக்கு முன் இந்த நூலினை வாசிக்க ஆரம்பித்தேன். அவ்வப்போது கையில் எடுப்பதும் இரண்டு மூன்று கட்டுரைகளை வாசித்துவிட்டு வைத்துவிடுவதுமாகப் போய்க் கொண்டிருந்தது. பத்து நாட்களுக்கு முன் பாதி வாசித்து வைத்ததோடு மறந்தே போனேன். வேறு அலுவல்கள் நேரத்தைப் பிடித்துக் கொண்டன. முந்தாநாள் காலையில், ஓய்வாக முகநூலில் மூழ்கியிருந்தேன். ப்ரூனோ மார்ஸ் என்னும் மேற்கத்திய நவீன இசைக் கூத்தனின் ஃபினஸ்ஸ் (Finesse) என்னும் பாடலின் இடையிசை (interlude)-இல் அவன் தன் குழுவுடன் ஆடும் நடன அசைவுகள் எப்படி ரசிகர்களை உணர்ச்சி வசப்படுத்திற்று என்பதை ரீல்ஸ் ஒன்று காட்டிற்று. தொடர்ந்து. ப்ரூனோ மார்ஸின் நடன மற்றும் இசைத் தத்துவம் பற்றிய காணொலி ஒன்றையும் பார்த்து முடித்தேன். வியப்பாக இருந்தது.


            
கைப்பேசியை அணைத்து வைத்துவிட்டு சும்மா அமர்ந்திருந்தபோது, பத்து நாட்களுக்கு முன் பாதியில் கை மறந்து வைத்த ‘நோம் என் நெஞ்சே’ நூல் நினைவுவர அதன் வாசிப்பைத் தொடரலாம் என்று எடுத்தேன். பதினைந்தாம் கட்டுரையுடன் நிறுத்தியிருந்ததால் பதினாறாம் கட்டுரையை விரித்தேன். “காலம் தோறும் வளரும் காதல் கதைகள்!” என்பது தலைப்பு. ஆட்டனத்தி ஆதிமந்தி இணையரின் காதல் குறித்து இதில் பேச ஆரம்பித்தார். பின்வரும் வரிகளை வாசித்தபோது இன்பச் சிலிர்ப்பு:

“ஆட்டனத்தி அழகும் வீரமும் ஆடற்கலையும் இணைந்த இளைஞன். இவனை சேர இளவரசனாகவும் சிலர் கூறுவதுண்டு. நீச்சலையும் நடனத்தையும் இணைத்ததோரு நடன அழகியலில் இவன் விற்பன்னன்”(ப.62). நான் உடனே ப்ரூனோ மார்ஸை ஆட்டனத்தியாகக் கண்டேன். அல்லது, கால் இடத் தொலைவுகளைக் கடந்து என் கற்பனையில் ஆட்டனத்தியும் ப்ரூனோ மார்ஸும் அத்விதம் ஆகிவிட்டனர். என் சிலிர்ப்பை வாட்ஸாப் வழியில் கரிகாலனுக்கும் ஜார்ஜ் ஜோசப்புக்கும் அனுப்பினேன். கரிகாலன் இதயப் படம் போட்டார். ஜார்ஜ் ஜோசப், “நீச்சல் நடனம் இதுபோல்தான் இருந்திருக்குமோ?” என்று சொல்லி ஒரு தம்ஸப் போட்டார்.

கடந்த மூன்று நாட்களாகத் தொடர்ந்து வாசித்தேன். வெளியே கார்காலப் பெரும்பொழுதின் சூழல் வேறு. எம்குடிச் சிறுமகள் உருளைக் கிழங்கும் பாற்களிம்பும் கொண்டு சுடச்சுட அருஞ்சுவை அடிசில் ஒன்று உண்ணத் தந்தாள். அத்துடன் தலைப்பேசியில் நல்லிசையும் சேர்ந்துகொண்டது. பண்ணும் பட்சணமும் பைந்தமிழ்ப் பனுவலும் ஒருங்கே பெற்றேம் யாம்!

இன்று, ’நோம் என் நெஞ்சே’ நூலை அரை மணி நேரத்திற்கு முன் வாசித்து முடித்தேன். நல்ல தமிழை ருசிக்கவும் சங்கத் தமிழரின் வாழ்வியலை அறியவும் விழைவோர் இந்நூலை வாசிக்கலாம். பண்டைத் தமிழரின் பண்பாடு பற்றி ஆழ்ந்து சிந்திப்போருக்கு இந்நூலில் ஆங்காங்கே சிந்தனைக் களங்கள் தென்படும். இந்நூல் நெடுகிலும் கரிகாலன் பல புதிய பார்வைகளை முன்வைத்து நம்மைச் சிந்திக்கத் தூண்டுகிறார். ஈங்கிவண் கூறுவல் சிறிதே!

சங்க காலம் என்பது தமிழர் வரலாற்றில் ஒரு  transition period ஆகும். அது, சாதியற்ற தமிழர் சாதியத் தமிழாக மாற்றம் அடைந்த காலக் கட்டம் என்று பக்தவத்சல பாரதி அவதானிக்கிறார். மேலும், கற்கருவிகளைக் கையாண்ட போது பூசல்களும் சண்டைகளும் நிகழ்ந்த நிலை மாறி இரும்புக் கருவிகளைக் கையாளத் தொடங்கியதும் போர்கள் பெருகிய காலக் கட்டம் என்று இதனைக் கரிகாலன் அவதானிக்கிறார். தமிழினத்தார் தம்முள்ளே சண்டைகளும் சமர்களும் நிகழ்த்தினர் என்பதைச் சங்கப் பாடல்கள் காட்டுகின்றன. எற்றுக்கு? கரிகாலன் தயங்காமல் உண்மை மொழிகிறார்: “உற்பத்திக் கருவிகளான மனிதனை அடிமையாக்கவும், நிலங்களை அபகரித்து செல்வங்களைக் கொள்ளையிடவும், எல்லைகளை விரிக்கவும் தமிழ் மண்ணில் போர்கள் நிகழத் தொடங்கின. வீரம் ஒரு பண்பாடாக மாறியது. உடையோரைச் சார்ந்த புலவர்கள் போர்த்தொழிலைப் பாடினார்கள்” (ப.112).

இதே போல், “உடைமைச் சமூகம், ஆநிரை சமூகத்திலிருந்து உருப்பெறுகிறது” (ப.123) என்றும், “விருந்து என்கிற நாகரீகம் தோன்றுவதற்கு முன்புவரை இனக்குழு சமூகத்தில் அகமணமுறையே இருந்தது. விருந்து பண்பாடு வளர்ந்த பிறகே புறமணமுறை வளர்கிறது” (ப.123) என்றும், “ஆதி நிலவுடைமை மதிப்பீட்டால் ஆனதே சங்கக் கவிதைகள்” (ப.29) என்றும், ‘அவ்வையை வயதானவளாகக் காட்டுவதில் ஆணாதிக்க மனநிலையும் இருந்தது. கள்ளுண்ட அதியன் காலத்து அவ்வை(யைத்) தமிழ் மனங்களிலிருந்து மறைத்து புனிதப்படுத்தும் முயற்சி!” (ப.96) என்றும் அவர் தரும் அவதானிப்புகள் எல்லாம் ஆழ்ந்த வரலாற்றுப் பார்வை கொண்டுள்ளன.

சங்க காலத்தில் பாணர்களும் புலவர்களும் இருந்துள்ளனர். ஒருவரே இரண்டுமான இருந்ததும் உண்டு. “குறுநிலப் பரப்புகளாக இருந்த திணை நிலங்களை பாடிய பாணர் மரபு மெல்ல பெருநிலங்களைப் பாடிய புலவர் மரபாக உருமாறுகிறது” (ப.19) என்று கூறி, “பாணர்கள் அலைகுடிகள். புலவரோ நிலைக்குடிகள். புலவர்களே போர், வீரம், அரசு அதிகாரம் போன்ற மதிப்பீடுகளை உருவாக்கி திணை வாழ்வை மாற்றியதில் செல்வாக்கு மிகுந்தவர்கள். மொழி எவ்வாறு அதிகாரமாகிறது என்பதை ஆராயும் அமைப்பியலை வாசித்தவர்கள் இப்பரிணாம வளர்ச்சியைப் புரிந்துகொள்ள முடியும்” (பக்.19-20) என்று கரிகாலன் சிந்திக்கத் தூண்டுகிறார்.

சங்ககாலத்தில் பரத்தமை ஒழுக்கம் என்று ஒன்று வகுக்கப்பட்டிருந்தது. தொல்காப்பியம் அதற்கான இலக்கணத்தைச் சொல்கிறது. திருமணம் செய்த மனைவியே அன்றி இல்லற வரையறைக்கு அப்பால் ஓர் ஆண்மகன் பலவகையான பெண்களுடன் உறவு கொண்டிருந்தான். அவர்கள் காமக் கிழத்தியர் என்றும் பரத்தையர் என்றும் வகைப்பட்டனர். இவர்களிலும் பல வகைப்பாடுகளும் ஏற்றத்தாழ்வுகளும் உண்டு. இத்தகைய சூழ்நிலை இருந்தால் மணமுறிவு (divorce) நிகழ்ந்திருக்க வேண்டுமே? அப்படி நிகழ்ந்ததற்கான குறிப்பேதும் சங்க இலக்கியத்தில் இல்லை. ஆனால், ஊடல் மட்டும் இருந்திருக்கிறது. அது குறித்துக் கரிகாலன் ஆய்ந்து சொல்கிறார்: “பெண்களுக்கிடையே ஏற்றத் தாழ்வின் காரணமாக சமநிலையின்மையை ஆணாதிக்க மதிப்பீடு உருவாக்கியிருந்தது. அது ஆணின் இருப்பை சிறிதும் அசைக்காமல் பார்த்துக் கொண்டது” (ப.107).

கரிகாலன் என்னும் ஆய்வறிஞர் அவ்வப்போது, நக்கீரனுக்கே நெற்றிக்கண் கிடைத்துவிட்டது போன்றும் தோன்றுகிறார். அந்த நெருப்புப் பார்வைக்கு வள்ளுவரும் தப்பவில்லை: “திருவள்ளுவர் மீது கோபம் கொள்ளும் இடங்களும் இருக்கவே செய்கின்றன. வரைவின் மகளிர் அதிகாரத்தின் பத்து குறட்பாக்களும் வள்ளுவனை பிற்போக்காளனாகக் காட்டுபவை!” (ப.105). இன்னோர் இடத்தில் 1115-ஆம் திருக்குறளை மேற்கோள் காட்டி கரிகாலன் சொல்கிறார்: ”காம்பு களையாத அனிச்சம் மலரை சூடினால் பெண் இடை தாங்காது! வள்ளுவர் வருத்தப்படுகிறார். அழகின் வழி பெண் உடலை பலவீனமாக்கிய ஆண் தந்திரமே இது” (ப.109).

பரத்தையர் குறித்துப் பேசுமிடத்தில் அந்த நெற்றிக்கண் தொல்காப்பியரையும் சுடுகிறது: “புராதன சமூகம் உதிர்ந்து உருவாகிய் உடைமைச் சமூகத்தில் ஆணுக்கு இரண்டு கிழத்திகள் தேவைப்பட்டனர். வாரிசைப் பெற்றுக் கொடுக்க இல்லக்கிழத்தியும், விதம் விதமாக இன்பத்தை அள்ளிக் கொடுக்க காமக்கிழத்திகளும் தேவைப்பட்டனர். இதைதான் ‘பெருமையும் உரனும் ஆடூஉ மேன’ என்றார் தொல்காப்பியர். இதுதான் ஆணுக்கான பெருமை, வீரம் எல்லாம்!” (ப.105).

வெறுமனே செய்திகளை அடுக்கிச் சொல்லிக் கொண்டு போகும் நூலாக இல்லாமல் கரிகாலன் தானே ஒரு கவிஞர் என்பதால் அற்புதமான உவமைகளும் உருவகங்களும் கொண்டு கருத்துக்களைத் தீட்டியிருக்கிறார். அதற்கு ஒரு சான்று: “காதல், நடுக்குளத்தில் பூத்திருக்கும் மலர். சிலர் பறித்து கரை சேர்கிறார்கள். சிலர் மூழ்கிவிடுகிறார்கள். சிலர் வேடிக்கை பார்க்கிறார்கள்!” (ப.127).

சங்க இலக்கியத்தில் பாலைத் திணைப் பாடல்களே மிகுதி. அந்தத் திணை பிரிவின் துயரைப் பேசுவதாகும். பாலைப் பாடல்களை ஆண் புலவர்கள் பாடியுள்ளனர் என்றாலும் அவை தலைவியோ தோழியோ பாடுவதாகவே பெரிதும் அமைக்கப் பட்டுள்ளன. இதற்கான புள்ளிவிவரங்களைத் தருமிடத்தில் கரிகாலன் இப்படிச் சொல்கிறார்: “ஏனோ ஆண்களுக்கு பெண்களின் கண்ணீர் ருசி காலம் தோறும் பிடித்திருக்கிறது” (ப.47). இதை வாசித்தபோது “அனல் காற்று” நாவலில் ஜெயமோகன் எழுதிய ஒரு வரி நினைவுக்கு வந்தது: ”கண்ணீரும் பெண்களுக்கு ஓர் உறவுச்சம்.”

கரிகாலன் பெண்ணை வியந்தும் நயந்தும் கொண்டாடும் இடங்கள் ரசனையானவை. வெள்ளிவீதியாரைப் பற்றிச் சொல்லும்போது “பிரிவு என்பது வெளியாக, காலமாக இவரது கவிதைகளில் தோன்றி காமத்தின் அவதியைப் பிழிந்து தருகிறது” (ப.12) என்கிறார். மேலும், “ஆதி கானகத்தில் பெண்களே பருவங்களை அறிந்திருந்தார்கள். அவர்கள் உடல் ஐந்திணை நிலம், மனம்தான் பருவம்” (ப.38) என்று குறிப்பிடுகிறார். இவற்றில், இயற்பியலின் அடிப்படை அம்சங்களான வெளி மற்றும் காலம் (Space and Time) ஆகியவற்றின் பிரதிநிதியாகப் பெண்ணை அவதானிப்பது ஆழ்ந்த உளவியலும் மெய்யியலும் முயங்கிய ஒரு பார்வை ஆகிறது.

பெண் குறித்துப் பேசும்போது அவளுடலின் தனித்த அடையாளமாக இருக்கும் மார்பகம் பற்றியும் பேச வேண்டியதாகிறது. வருமுலையாரித்தி என்னும் சங்கப் பெண் புலவர் எழுதிய கவிதை பற்றிய கட்டுரையில் சில முக்கியமான செய்திகளைக் கரிகாலன் சொல்கிறார். ஆப்ரிக்க நாடுகளில் நிகழ்த்தப்படும் ‘முலை தேய்த்தல்’ என்னும் கொடூரமான சடங்கு பற்றி அவர் சொல்லும்போது திடுக்கிட்டேன். அறபு மற்றும் ஆப்ரிக்க நாடுகளில் நிலவும் பெண்களுக்கான விருத்தசேதனச் சடங்கு என்னும் சிக்கலைப் பற்றி நினைவு கூர்ந்தேன்.

சங்க காலத்தில் ‘முலை’ என்னும் சொல் மிக இயல்பாகப் புழங்கப்பட்டுள்ளது. ஆனால் இன்று அது ஓர் அவையல் கிளவி (unparliamentary word) ஆகியுள்ளது. சங்கப் பெண் புலவோருள் ‘வருமுலையாரித்தி’ என்று ஒருவருக்குப் பெயரே இருந்திருக்கிறது என்பதையும் கரிகாலன் சுட்டிக் காட்டுகிறார். கழார் கீரன் எயிற்றியார் பாடிய பாடல்கள் பற்றிய கட்டுரையில் “முலை அழகியல்” பண்டைத் தமிழரிடம் இருந்ததாகக் குறிப்பிடுகிறார். இதுபோல், ஆங்கித்தில் ’பூப் ஈஸ்தடிக்ஸ்’ என்று எவராவது எழுதியிருக்கிறார்களா எனத் தெரியவில்லை.

மேற்சொன்ன கழார் கீரன் எயிற்றியார் எழுதிய நற்றிணை 312-ஆம் பாடலில் “எதிர்த்த தித்தி முற்றா முலையள்” என்று ஒரு தொடர் வருகிறது. அதில் உள்ள தித்தி என்னும் சொல்லுக்கு, “முலை முகட்டில் இருக்கும் கருமை” என்று கரிகாலன் அருஞ்சொற்பொருள் உரைத்துள்ளார். முலைக் காம்பினைக் குறிக்கும் ஆங்கிலச் சொற்களான teats மற்றும் tits ஆகியவற்றுக்கு இச்சொல்லே மூலமாதல் வேண்டும். மொழி வல்லார் ஆய்க.


கரிகாலனின் இந்நூல் வழி சில சுவையான சொற்களையும் நாம் அறிகிறோம். சில உதாரணங்கள் காட்டுதும்:

அ) அணல் – தாடி என்பதற்கான தமிழ்ச்சொல் (’மையணல் காளை’ – புறநானூறு #83; ‘புல் அணலோன்’ – புறம் #299).

ஆ) அல்லங்காடி – இரவு முழுதும் இயங்கும் அங்காடி. சங்க காலத்தில் இருந்துள்ளது.

இ) வயா நோய் – கருவுற்ற பெண்டிர்க்கு முதல் மூன்று மாதங்களில் தோன்றும் மசக்கை.  

ஈ) கழிகல மகளிர் – விதவையர்; கைம்பெண்டிர்; widows. [மனைவியை இழந்த பின்னர் மறுமணம் செய்யாமல் துறவு கொண்ட ஆணைப் பற்றியும் ஒரு குறிப்புண்டு; இத்தனைக்கும் அவன் மகளிர் பலருடன் வாழ்ந்தவன்தான். (மாற்பித்தியார் எழுதிய புறநானூறு #251 & 252-ஆம் பாடல்கள்; சங்க காலத்து ஷாஜஹான்!)

ஆ) தொடலை – ஒருவர் ஒளிய பிறர் அவரைக் கண்டுபிடித்துத் தொட்டு விளையாடுவது. இன்றைய கண்ணாமூச்சு விளையாட்டு.

”தமிழர் ஒவ்வொருவரும் தம் நூலகத்தில் வைத்துப் போற்றும் நூலாக இது அமையும் என்பது திண்ணம். தமிழ் மாணவர்களுக்கு, முனைவர் பட்ட ஆய்வாளர்களுக்கு, இந்நூல் ஒரு அவசியமாக இருக்கும்” (ப.4) என்கிறார் கரிகாலன். அதுவே என் வாசிப்பின் வழி நான் இந்நூலுக்குத் தரும் மதிப்பீடுமாகும்.

இந்நூலினை ‘படைப்பு பதிப்பகம்’ வெளியிட்டுள்ளது. அதன் உரிமையாளர் ஜின்னா அஸ்மி என்னும் முகம்மது அலி ஜின்னா நான் பணியாற்றும் ஜமால் முகம்மது கல்லூரியில், அப்போது நான் முதுகலைத் தமிழ் படித்த காலத்தில் எம்.சி.ஏ படித்துக் கொண்டிருந்தார். மரபுக் கவிதை எழுதுவதில் திறமை கொண்டவர். அவரின் முதல் கவிதைத் தொகுப்பு அந்த மாணவப் பருவத்திலேயே எம் கல்லூரி ஆண்டு விழாவில் வெளியிடப்பட்டது. அந்த நூலுக்குத் தலைப்புச் சூட்டும் ஆலோசனைக் கூட்டம் என் அறையில்தான் நடந்தது. நண்பரும் எழுத்தாளருமான மானசீகன், நாவலரும் பேராசிரியருமான அப்துர் ரஹீம் ஆகியோர் உடனிருந்தனர். ‘வெளிச்சத்தின் முகவரி’ என்று அதற்குப் பெயர் சூட்டினோம். இது நடந்தது 2002-இல். அண்மையில்தான் மீண்டும் ஜின்னா அஸ்மியுடன் தொடர்பு கொண்டு பேசினேன். அவர் முந்நூறு நூற்களுக்கும் மேல் வெளியிட்டிருக்கும் பதிப்பாளராகத் திகழ்ந்து தமிழ்ப்பணி ஆற்றுகிறார். ’நோம் என் நெஞ்சே’ நூல் உருவாக்கத்தில் என் நண்பரின் பங்களிப்பும் இருப்பது கண்டு யாஅம் உவந்தனம் பெரிதே!

No comments:

Post a Comment