சகோதரர் முனைவர் எச்.முகம்மது சலீம் அவர்கள் தொகுப்பாசிரியராக உருவாக்கியிருக்கும் “தெற்கிலிருந்து ஒளிரும் சூஃபிச் சுடர்கள்” என்னும் நூலுக்கு ஆய்வுரை எழுதியுள்ளேன். அது அந்த நூலிலேயே இடம்பெற்றுள்ளது. அதனை இங்கே தருகிறேன்,
தக்கலையைச் சேர்ந்த சகோதரர் சலீம் அவர்கள் பணி நிமித்தம் சிங்கப்பூரில் வசிக்கிறார். இலக்கிய மற்றும் சமூகச் செயற்பாட்டாளரான தோழர் ஹாமீம் முஸ்தஃபா அவர்களின் உறவினர். இந்நூலினை மணலி அப்துல் காதர் அவர்களின் நன்னூல் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. மூவருக்கும் எனது நன்றிகள்.
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்.
அகிலங்களுக்கு அருட்கொடை ஆன அண்ணலெம் பெருமானார்
மீதும் அன்னாரின் தூய குடும்பத்தார் மீதும் சத்திய சகவாசியர் மீதும் ஏகனின் பேரருள்
என்றென்றும் இலங்கட்டுமாக.
”தெற்கிலிருந்து ஒளிரும் சூஃபிச் சுடர்கள்”
என்னும் இந்நூலினை சகோதரர் ஹெச்.முஹம்மது சலீம் அவர்கள் அனுப்பித் தந்து
அணிந்துரை எழுதப் பணித்தார்கள். இந்த ஆராய்ச்சி நூலுக்கு அணிந்துரை எழுதும் பேறு எனக்குக்
கிடைத்திருப்பது இறைவனின் பேரருளால் மட்டுமேயாகும்.
இந்நூல் இஸ்லாமிய மெய்ஞ்ஞானத் தமிழ் இலக்கியங்களில் ஆழ்ந்து
கவியுளம் கண்டோரான அறிஞன்மார் ஐவரால் எழுதப்பட்ட பத்துக் கட்டுரைகளின் தொகுப்பாகப்
பிறங்குகின்றது.
’தெற்கிலிருந்து ஒளிரும் சூஃபிச் சுடர்கள்’ தமிழ் என்னும் தருப்பணத்தில்
படிந்து நம் கண்கள் கூசாத வண்ணம் அழகு காட்டுகின்றன.
இவை மெய்ஞ்ஞானம் பேசும் கட்டுரைகளாகும். ஞானம் நவில்கையில் செவிநுகர்
கனிகள் என்று சிந்தை சிலிர்ப்போர் சிலர். ஞானம் என்னும் சொல் காதில் விழும் கணத்தில்
காத தூரம் கடுகி ஓடுவோர் பலர். ’கடை விரித்தேன் கொள்வாரில்லை’ என்பதே இறைஞானியர் இந்த
அவனியில் மக்கள் திரளிடம் அடைந்த அனுபவம்.
எனினும், இதற்கென இஷ்டப்பட்டு உழைப்போர் இருப்பதால் இந்த ஞானக்
கடை கஷ்டப்பட்டுத் தொடர்ந்தாலும் ஒருபோதும் நஷ்டப்பட்டு விடாது என்பது உறுதி. இதற்கு
இறைக் காப்பே நிறை காப்பு.
இந்நூலின் செம்பாகம் சகோதரர் முகம்மது சலீம் அவர்களால் எழுதப்பட்டுள்ளது.
198 பக்க நூலில் அவர் எழுதியிருக்கும் நான்கு கட்டுரைகள் 103 பக்கங்கள் அமைந்து சரிபாதியாகத்
திகழ்கின்றன. மேலும் இந்நூலில் தோழர் ஹாமீம் முஸ்தபா எழுதிய மூன்று கட்டுரைகள் உள்ளன.
தக்கலை எம்.எஸ்.பஷீர், ரஹ்மத் ராஜகுமாரன், மற்றும் செந்தாமரை கே.பி.எஸ்.ஹமீது ஆகியோர்
எழுதிய மூன்று கட்டுரைகளும் உள்ளன.
சகோதரர் எச்.முகம்மது சலீம் அவர்கள் ஸூஃபி மெய்ஞ்ஞான இலக்கியங்களில்,
குறிப்பாக பீரப்பாவின் நூற்களில் பெரிதும் ஈடுபாடுள்ள பெற்றியர்; அவற்றில் ஆழ்ந்து
தான் கண்டடைந்த கருத்துக்களை நீர்மையும் நேர்மையும் பொலிய வெளியிடுவதில் வெற்றியர்.
பீரப்பாவின் ஞான இலக்கியப் பரவல் என்பது ஒரு தனிப்பெரும் அறிவுத்
துறை என்று அவர் கண்டிருப்பதால் அதற்கு ‘அப்பாவியம்’ என்னும் அழகிய பெயரும் அளித்திருக்கிறார்.
அன்னார் எழுதியுள்ள ’இயற்கைப் பாடம்’, ‘எண்ணெண்ப’, ‘எழுத்தென்ப’,
’அப்பாவியம்’ ஆகிய நூற்களை நான் வாசித்து ஆன்மிக உணர்வுக்கு ஊட்டமும் அறிவுக்குப் பயனும்
அடைந்திருக்கிறேன். அவ்வழியில், இந்நூல் இன்னுமொரு நன்னூல்.
“படைப்பினையும்
படைப்பாளனாகிய இறைவனையும் தனித்தும் தொடர்பு படுத்தியும் அறியும் நிலையே மெஞ்ஞானமாகும்”
என்று இந்நூலினுள் அவர் குறிப்பிடுகிறார். இது, அவரது அறிவுத் தெளிவுக்குச் சான்றாகும்.
ஏக இறைவன் தன் படைப்புக்களுடன் இருந்தாலும் அவன் ஒருபோதும் படைப்பாகிவிட மாட்டான்,
படைப்பு ஒருபோதும் இறைவனாகிவிடாது என்னும் கொள்கைத் தெளிவினை இது காட்டுவதுடன், இறைவனை
“ஷஃ’னே தன்ஸீஹ்” மற்றும் “ஷஃ’னே தஷ்பீஹ்” (தனித்திருத்தல் மற்றும் உடனிருத்தல்;
Transcendence & Immanence) ஆகிய நிலைகளில் விளக்கித் தரும் ஸூஃபிகளின் பார்வையையும்
இந்த வரையறை சுட்டிக் காட்டுகிறது.
ஞானக் குறம் பற்றி எழுதும்போது, ”கைக்குறி கூறுதலில் மணல்கூட்டி
கூடற்சுழி குறித்து கூறும் குறமரபு இழ்ழைந்தோடக் காண்கிறோம். சீவக சிந்தாமணி, முத்தொள்ளாயிரம்,
திருச் சிற்றம்பலக் கோவை போன்ற நூல்களில் காணப்படும் குறமரபு இங்கும் பேணப்படும் பான்மை
காண்கிறோம்” என்று நூலாசிரியர் தரும் பதிவு தமிழ் இலக்கியப் பரப்பில் அவருக்கிருக்கும்
தோய்ந்த வாசிப்பினைக் காட்டும்.
இக்குறிப்பினை வாசித்தபோது என் சிந்தை இதே திசையில் சிந்தித்து
பீரப்பாவின் நூற்தலைப்புகளை ஒன்றுடன் ஒன்று பொருத்தி அர்த்தம் எடுத்து மகிழ்ந்தது.
மஹரிபத்து மாலை அணிந்த ஞானக் குறவஞ்சி ஞானத் தித்தி ஊதியபடி ஞான நடனம் ஆடுகிறாள். அவளுக்கு
மெஞ்ஞானக் களஞ்சியம் ஒன்று பரிசளிக்கப்படுகிறது. ’பிஸ்மில்’ ஓதி ஞானப் புகழ்ச்சி செய்து
அவள் அதன் ஞானப் பூட்டை ஞானத் திறவுகோலால் திறக்கிறாள். அதனுள் ஞான முச்சுடர் வீசும்
ஞான ரத்தினங்களை ஞானக் கண்ணால் கண்டு ஞான ஆனந்தக் களிப்பு எய்துகிறாள். இவ்வாறு ஞான விகடச் சமர்த்தாக யோசித்துப் பார்த்து
மகிழ்ந்தேன்! இது ஓர் உவகைக் கற்பனைதான்.
’சீரியஸ்’ சிந்திப்பிற்கு இன்னொன்று சொல்வேன். ஞானப் பூட்டு
முழுமையாய்க் கிடைத்திருக்க, ஞானத் திறவுகோல் என்னும் பனுவலின் காப்புப் பாடல் ஒன்று
மட்டுமே நமக்குக் கிடைத்திருக்கிறது என்னும் செய்தியை நான் ஓர்ந்தேன். ஞான வாழ்வு என்பதே
அப்படித்தானே? தான் என்னும் பூட்டு அனைவரிடமும் இருக்கிறது. அதன் திறவுகோல் அத்தனை
எளிதில் கையளிக்கப் படுவதில்லை. மிகுந்த தேடலுக்குப் பின்னரே அது கிடைக்கிறது. எனவே,
அப்பா உரைத்த ஞானத் திறவுகோலை நாம் தேடித்தான் அடைய வேண்டும் என்று இறைவன் மறைத்துவிட்டான்
போலும். இந்தக் காப்புப் பாடலில், “ரப்பனா திறவுகோல் தந்து எனைக் காத்தருள்” என்று
பீரப்பா பிரார்த்திப்பது போல் அந்தத் திறவுகோலை இறைவனேதான் ஒருவருக்குத் தந்தருள வேண்டும்.
தோழர்
ஹாமீம் முஸ்தபா அவர்கள் இற்றைச் சூழலில் மிகக் காத்திரமான சமூக அரசியல் கவிதைகளை எழுதி
வருபவர். ’தமிழின் மஹ்மூது தர்வேஷ்’ என்று அவரை அழைக்கலாம். இந்நூலில் இடம்பெற்றிருக்கும்
அவரின் கட்டுரைகள் நவீன ஆய்வுப் பார்வைகளுடன் எழுதப்பட்டுள்ளன. ‘மாலை’ என்னும் சிற்றிலக்கிய
வகை பற்றிப் பேசுமிடத்தில் அவர் தரும் அவதானங்கள் கூர்ந்து நோக்குதற்கும் மேலாய்வு
செய்தற்கும் உரியவையாக உள்ளன. ”சிற்றிலக்கிய வடிவமாக மாலை இருந்தாலும் தமிழில் இஸ்லாம்
சமயம் சார்ந்து உருவான இலக்கியங்களுக்கு மாலை என்று பெயர் குறிப்பிடும் வழக்கம் இருந்ததாகத்
தெரிகிறது” என்று அவர் குறிப்பிடுவதை ஓர்ந்தால் ’மாலை’ மயக்கம் நீங்கித் தெளிவு பிறக்கும்.
”பொதுவாக தமிழ் மரபில் நின்றுகொண்டு காப்பிய இலக்கியம் படைப்பவர்கள்
தமிழ்நாட்டின் நிலவியல் பின்புலம் சார்ந்து அவற்றைப் படைத்தளிப்பது என்பது ஒரு மரபாகப்
பேணப்பட்டு வருகிறது” என்று ஹாமீம் முஸ்தபா எழுதுகிறார். சீறாப் புராந்த்திலும் அறபு
நாட்டை ஐநில வருணனையுடன் உமறுப் புலவர் வரைந்து காட்டுகிறார். அதற்குக் காரணம் இந்த
இலக்கிய மரபுதான். செய்யுள் வழக்கு மற்றும் நாடக வழக்கு என்று தொல்காப்பியம் குறிப்பிடும்
இலக்கணங்களை அறிந்தால் இதில் குழப்பம் ஏற்படாது. அறபு நிலம் பெரிதும் பாலைவனமாக இருப்பது
நாடக வழக்கு (எதார்த்த நிலை) ஆகும். அறபு நிலத்தை ஐவகை நிலங்கள் கொண்ட ஒன்றாகப் பாடுவது
தமிழிலக்கணத்தைப் பின்பற்றி இஸ்லாமியத் தமிழ்ப் புலவர்கள் வகுத்துக் கொண்ட செய்யுள்
வழக்காகும். இதில் தவறு ஏதும் இல்லை.
’புறாக்’ என்னும் விண்புரவியின் பெயர் இஸ்லாமிய நவீன உலகில்
செலுத்தும் தாக்கத்திற்கு ஹாமீம் முஸ்தபா பல உதாரணங்களைக் காட்டியுள்ளார். விமான நிலையம்,
ஆளில்லாப் போர் விமானம், விண்வெளி மையம், கடல்சார் சேவை மையம் முதலியவற்றுக்கு புறாக்
என்னும் பெயர் சூட்டப்பட்டுள்ளதைக் குறிப்பிடுகிறார். என் உறவினர் ஒருவர் தன் மகிழுந்துக்கு
புறாக் என்று பெயர் சூட்டியிருப்பதும், என் வசிப்பிடப் பகுதியில் ’புறாக்’ என்னும்
ஆட்டோ ஒன்று ஓடுவதும் நினைவுக்கு வருகிறது. இவையும் அதன் தாக்கம் உணர்த்தும்.
இந்நூலின் வழியாக நாம் அறியலாகும் இன்னொரு முக்கியமான பண்பாட்டு
அம்சம் இஸ்லாமிய இலக்கியங்களின் முற்றோதலாகும். ஹாமீம் முஸ்தபா எழுதியுள்ள ”முற்றோதல்
மரபும் இஸ்லாமிய இலக்கியங்கள் முற்றோதப்படுதலும்” என்னும் கட்டுரை இந்த மரபின் நீள
அகலங்களைத் துலக்கிக் காட்டுகிறது. அவர், இந்த முற்றோதல் மரபு பற்றி எப்போதும் சிலாகித்துப்
பேசுபவர் என்பதை அவருடன் பழகியோர் அறிவர்.
”வலிமார்கள் எனப்படும் இறைநேசர்கள், சூஃபிகள் இவர்களிடம் தொழிற்பட்ட
முக்கியமான குணங்களுள் ஒன்று இஸ்லாத்தை வட்டாரப்படுத்துதல்” என்று ஹாமீம் முஸ்தபா கூறுவது
ஆழ்ந்து சிந்திக்கப்பட வேண்டிய ஒன்றாகும். இந்த வட்டாரப்படுத்தல் மீது உலகமயமாக்கலின்
காலச் சூழல் வழி ஒற்றை மயமாக்குதல் செலுத்தும் தாக்கத்தினை விரிவாகப் பேச வேண்டிய அவசியம்
இருக்கிறது.
”இஸ்லாம் உருவான நிலப்பரப்பான அரபு வட்டாரத்தில் தரீக்காக்கள்
சார்ந்த எத்தகைய அசைவுகளும் இல்லை” என்று ஹாமீம் முஸ்தபா சொல்வது சவூதிக் குடும்பத்தின்
வல்லாட்சி உருவான காலத்திற்குப் பின் ஏற்பட்ட நிலையைக் குறிப்பதாக விளங்குகிறேன். இதுவும்
விரிவான உரையாடலுக்குரிய ஒரு புள்ளியாகும்.
ஹாமீம் முஸ்தபா எழுதியுள்ள “16, 17 நூற்றாண்டு குமரி மாவட்டமும்
தமிழ் இஸ்லாமிய இலக்கியங்களும்” என்னும் கட்டுரையும் வரலாற்று நோக்கில் குமரி மாவட்டம்
பற்றிய சுவையான செய்திகளை நல்குகின்றது.
”கோட்டாறு புலவர் ஞானியார் ஷெய்கு முகியித்தீன் மலுக்கு முதலியார்”
என்னும் கட்டுரையில் பன்னூலாசிரியர் தக்கலை எம்.எஸ்.பஷீர் “தீட்சை அளித்தவர்” என்னும்
உட்தலைப்பின் கீழ் இப்படி எழுதுகிறார், ”சூபி ஞானி மன்சூர் ஹல்லாஜின் சீடர்களில் ஒருவரான
மௌலானா செய்யிது தமீம் குதுபுஸ்ஸமான் மௌலானா செய்யிது ஜமாலுல் மாஹீ பரிய்யி ஆவார் என
அறியப்படுகிறது.” இந்தச் செய்தி கருத்து மயக்கத்தை ஏற்படுத்துகிறது. இவர்தான் கோட்டாறு
ஞானியாருக்கு தீட்சை வழங்கினாரா? அப்படிச் சொல்ல இயலவில்லை. மன்ஸூர் ஹல்லாஜ் (ரஹ்)
அவர்களின் காலம் பொ.ஆ 858 – 922 (ஹிஜ்ரி 244 – 309); கோட்டாறு ஞானியாரின் காலம் பொ.ஆ
1769 – 1794 (ஹிஜ்ரி 1167 – 1209) ஆகும். இருவருக்கும் இடையே எட்டு நூற்றாண்டுகள் இடைவெளி
இருப்பதால் மன்ஸூர் ஹல்லாஜின் சீடரிடம் இவர் நேரடியாக தீட்சை பெற்றிருக்க வாய்ப்பில்லை
என்பது போதறும். கோட்டாறு ஞானியார் அவர்கள் மானசீக தீட்சை பெற்றிருப்பார் என்றே கருத
முடிகிறது. ’நாஞ்சில் நன்மொழியோன்’ எழுதிய இக்கட்டுரை வழி ஞானியாரப்பாவின் அகப் பரிமாணங்களை
நான் அறிந்து மகிழ்ந்தேன்.
இக்கட்டுரைப்
பொருண்மையின் மேல் விளக்கங்களை இந்நூலின் இறுதிக் கட்டுரையான “ஞானியார் சாகிபு: ஓர்
அறிமுகமும் சில பகிர்வுகளும்” என்னும் கட்டுரை தருகிறது. [இக்கட்டுரையின் அடிக்குறிப்பு
எண்#3 ஞானியார் சாகிபிற்கு தீட்சை அருளியவர் குறித்துக் குறிப்பிடுகிறது. அதிலும் ஆண்டுக்
கணக்கு இடிக்கிறது. கோட்டாறு வந்துற்ற அந்த மகான் ஹல்லாஜிய்யா ஞானக் கொடிவழியில் வந்த
ஒருவராதல் வேண்டும் என்பதே சாத்தியம்.] இக்கட்டுரையை இயற்றிய செந்தாமரை கே.பி.எஸ்.ஹமீது
அவர்கள் ஞானியார் சாகிபின் கொள்ளுப் பேரரும், சதாவதானி செய்குத்தம்பிப் பாவலரின் மகனாரும்
என்பதால் ஹல்லாஜிய்யா தரீக்கா குறித்தும் ஞானியார் சாகிபு குறித்தும் அவரால் நேரடி
அனுபவத்திலிருந்து பேச இயல்கிறது. அதே சமயம் ஹல்லாஜிய ஞான முழக்கம் கருத்துப் பிறழ்வுகளுக்கும்
வழி வகுத்துவிடும் வாய்ப்புகள் உண்டு என்று அவர் உரைப்பது ஞான முதிர்வு அடையாத இளம்
பிள்ளைகளுக்கும், ஞான சூன்யர்களான அறியாப் பிள்ளைகளுக்கும் ஓர் எச்சரிக்கை ஆகும். இதற்கு
மேல் இக்கட்டுரை பற்றிப் பேசாமல் ‘சுருட்டி மறைக்க’ வேண்டும் என்று உணர்கிறேன் எனில்
அது எவ்வளவு ஆழமான ஒன்று என்பது புலப்படும்.
”வேதபுராணம்” என்னும் ஒப்பரிய ஞானப் பனுவலினை இன்பத் தமிழில்
இயற்றி மாநிலம் பயனுற அளித்த மகான் நூஹ் லெப்பை ஆலிம் (ரஹ்) அவர்கள் பற்றி ரஹ்மத் ராஜகுமாரன்
எழுதியுள்ள கட்டுரை அற்புதங்கள் நிறைந்த அன்னாரின் வாழ்க்கை குறித்த கோட்டுச் சித்திரமாக
அமைந்துள்ளது. குச்சி, எலியின் உடல், தன் உடல், ஒரு ஆன்மிகக் குழுவினரின் உடல்கள் ஆகியவற்றின்
துண்டான பகுதிகளை மீண்டும் ஒட்ட வைத்து முழுமைப்படுத்தும் அற்புதங்கள் விரிவதால் இந்தக்
கட்டுரைக்கு “உறுப்புக்களை ஒட்ட வைக்கும் மகான் நூஹ் லெப்பை ஆலிம் (ரஹ்)” என்று ர.ரா
தலைப்பிட்டுள்ளார். இப்னு அறபி (ரஹ்) அவர்களின் ‘ஃபுஸூசுல் ஹிகம்’ நூலைக் கசடற கற்றல்
– கராமாத் என்னும் அற்புதங்கள் – விசித்திரமான ஒரு சூழலில் திருமணம் – இல்லற வாழ்க்கை
– வேத புராணம் இயற்றல் – இறப்பு என்னும் கட்டங்களாக அமைந்த ஆலிமவர்களின் வாழ்க்கையில்
இருந்து அற்புதங்கள் நிகழ்ந்த பகுதியை பெரிதும் முன்னிறுத்துவதால் இத்தலைப்புப் பொருத்தமாக
உள்ளது.
ஆயிரம் கட்டுரைகள் எழுதிய பின்னும் அயராது எழுதி எழுதி மேற்செல்லும்
ர.ரா அவர்களது கட்டுரையின் தொடர்ச்சி போல் முகம்மது சலீம் எழுதிய “வேதபுராணம் என்னும்
ஞான வித்தகம்” என்னும் இச்சிறு கட்டுரை அமைந்துள்ளது. இதில் வேதபுராணத்தின் கட்டமைப்பை
வரைந்து காட்டிய பின்னர், “தமிழ் சூபி இலக்கிய வெளியில் பயிற்சியும் ஆர்வமும் உள்ள
ஆய்வறிஞர்கள் வேதபுராணம் குறித்து ஆழமாக ஆய்வு செய்து இந்த பேரறிவுக் களஞ்சியத்தின்
அருமை பெருமைகளைத் தமிழ் இலக்கிய உலகம் உணர வழிவகை செய்ய வேண்டும்” என்று முகம்மது
சலீம் குறிப்பிட்டுள்ளார். அவர் கோரும் அப்பணி பெரும்பணியும் அரும்பணியும் ஆகும். மகான்
நூஹ் லெப்பை ஆலிம் (ரஹ்) அவர்கள் தன் இளம் பருவத்தில் ஷைகுல் அக்பர் இப்னு அறபி (ரஹ்)
எழுதிய “ஃபுஸூசுல் ஹிகம்” என்னும் நூலினை ஆழ்ந்து கற்றவராதலால் அதன் அகமிய வெளிச்சத்தில்
வேதபுராணத்தை எழுதியிருப்பார் என்று அனுமானிக்கலாம். இந்த அனுமான நோக்கில் வேதபுராணம்
ஆராயப்படல் வேண்டும். ஆர்.பி.எம் கனி அவர்கள் ஏறத்தாழ ஐம்பது ஆண்டுகட்கு முன் வெளியிட்ட
“மெய்யறிவின் ஒளிச்சுடர்கள்” என்னும் நூல் ஃபுஸூசுல் ஹிகம் நூலின் தோராயமான மற்றும்
முழுமையல்லாத தமிழாக்கமாகத் திகழ்கிறது. அந்நூலின் முழுமையான தமிழாக்கத்தை இறைஞானி
ஹகீமி ஷாஹ் ஃபைஜி (தவ்வலல்லாஹு உம்ரஹு) அவர்கள் செய்து அச்சுக்கு ஆயத்தம் ஆகி வருகிறது.
அந்நூல் வெளியாகும் பட்சத்தில் மேற்சொன்ன ஆராய்ச்சிக்கு வழி பிறக்கும், இன் ஷா அல்லாஹ்.
பீரப்பா அவர்கள் கேரளாவின் பீர்மேடு முதல் குமரிமுனை வரை புலங்கள்
பல பெயர்ந்து தவமியற்றினார்கள் என்பது போன்றே பல திசைகளில் இருந்தும் பயணித்து வந்த
ஞானச் செய்திகளை உள்வாங்கி கிரகித்து உண்மை கண்டு அவற்றைத் தன் இலக்கியங்களில் வெளிப்படுத்தியுள்ளார்கள்.
ஞானமணி மாலையில் பீரப்பா ஓர் உருவகக் கதையும் அதற்கு விளக்கமும் உரைக்கிறார்கள். அந்தக்
கதை ஜென் ஞான நெறியிலும் இந்து மத வேதாந்த நெறியிலும் காணக் கிடைக்கிறது! ஒரே கதை பல்வேறு
சிந்தனைப் பள்ளிகளால் தமக்குத் தகுந்தபடி பிரதியாக்கப்படும் என்பதற்கு இஃதொரு சான்று.
“சூழ்வனத்தில் ஒரு சோம்பி இருந்தாற்போல் மாளவிருக்கும் மனிதர்காள்”
என்று நம்மை அழைத்து அந்தக் கதையைச் சொல்கிறார் பீரப்பா. “புலி ஒன்று ஒருவனைத் துரத்துகிறது.
அவன் ஓடிப் போய் ஒரு கிணற்றில் விழுகிறான். கிணற்றுக்குள் கொடி ஒன்று படர்ந்துள்ளது.
அதை அவன் பிடித்துக் கொண்டு தொங்குகிறான். மேலே இருந்து அந்தப் புலி அவனை கவனித்துக்
கொண்டு நிற்கிறது. அப்போது அந்த வேரினை இரண்டு எலிகள் கடிக்க ஆரம்பிக்கின்றன. அவன்
கீழே பார்க்கிறான். நீர் இல்லாத அந்தப் பாழ் கிணற்றில் நெருப்பும் தேளும் பாம்பும்
கிடக்கின்றன. இப்போது அவன் எப்படி மகிழ்ச்சி அடைய முடியும்?” என்பதே கதை. இதற்கான விளக்கத்தையும்
பீரப்பா உரைக்கிறார்: “துரத்திய புலி என்பது மரணம் ஆகும். கிணறுதான் இந்த உலகம். அவன்
பிடித்த கொடிதான் இன்றைய நாள். அந்தக் கொடியைக் கடித்து நறுக்கும் எலிகள்தாம் பகலும்
இரவும் (சூரியனும் நிலாவும்).”
ஜென் தத்துவக் கதைகளில் இதன் பிரதி சற்று வேறுபடுகிறது. அந்த
மனிதன் பிடித்திருக்கும் கொடியில் கொத்தாகப் பழங்கள் தொங்குகின்றன. மேலே நிற்கும் புலியையும்
கீழே கிடக்கும் விஷ ஜந்துக்களையும், தான் பற்றியிருக்கும் கொடியை நறுக்கும் எலிகளையும்
மறந்து அவன் பழங்களைப் புசிக்கிறான். ’ஆஹா, எம்புட்டு ருசி!’ என்று மகிழ்கிறான். இவ்வுலகை
அனுபவித்தல் என்பது இத்தகையதே என்பது ஜென் கதை உணர்த்தும் நீதியா? இருக்கலாம். சிலர்
வேறு கோணத்திலும் விளக்குகின்றனர். அதாவது, வாழ்வில் எவ்வளவு இக்கட்டான சூழ்நிலை வந்தாலும்
அதிலும் மகிழ்ச்சி நல்கும் விடயங்கள் இருக்கவே செய்யும், அதை நாம் அடையாளம் காண வேண்டும்
என்று சொல்கின்றனர்.
சரி, அவன் எவ்வளவு நேரம்தான் அந்தப் பழங்களை ருசிக்க முடியும்?
எலிகள் அந்தக் கொடியை நறுக்கிவிட்டால் அவன் கீழே விழுந்து செத்துவிடுவானே? இப்போது
அவன் எப்படித் தப்பிப்பான்? என்று வினாக்கள் எழுகின்றன. இந்தக் கதைக்கு வேதாந்திகளின்
பிரதி விடை சொல்கிறது. அவர்கள் இக்கதையில் அந்த மனிதனின் நண்பனை வர வைக்கிறார்கள்.
அவன் ஒரு சிறந்த் வேடன். அவன் அந்தப் புலியை விரட்டிவிட்டு, கிணற்றுக்குள் கிடக்கும்
மனிதனிடம் ஒரு கயிற்றைப் போடுகிறான். கிணற்றுக்குள் கிடப்பவன் கொடியை விட்டு அந்தக்
கயிற்றைப் பற்ற வேண்டும். அப்படிச் செய்தால் அந்த நண்பன் அவனை மேலே இழுத்துக் காப்பாற்றிவிடுவான்.
அந்த நண்பன்தான் குருநாதர். அவர் வீசும் கயிறு என்பது அவர் வழங்கும் தீட்சையும் பயிற்சியும்
ஆகும்.
இந்த நூலினை நான் வாசித்தபோது என் சிந்தையில் சுடர்ந்த சில செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொண்டு என் அணிந்துரையை நிறைவு செய்ய விழைகிறேன்.
பீரப்பா, ஷெய்கு சதக்கத்துல்லாஹ் அப்பா, மற்றும் உமறுப் புலவர்
ஆகியோர் சமகாலத்தவர் என்றாலும் மூவருள் உமறுப் புலவரே ஏனைய இருவரினும் மிக இளையவர்.
பீரப்பாவின் பாடல்களை உமறுப் புலவர் அறிந்திருக்க வேண்டும் என்று கருதலாம். பீரப்பாவின்
தாக்கமும் அவரின் பாடல்களில் இருக்க வாய்ப்பு உண்டு. உதாரணமாக, “கருவுருவாய்த் திருவுருவாய் கருவிலுறு மருவுருவாய்
திருவுருவாய்…” என்று இறைவனை வருணித்துச் செல்கிறது பீரப்பா பாடிய ’ரோசு மீசாக்கு
மாலை’யின் திறப்புச் செய்யுள். உமறுப் புலவர் இயற்றிய சீறாப்புராணத்தின் காப்புச் செய்யுளிலேயே
இதன் தாக்கத்தைக் காண்கிறோம்: ”திருவுருவாய் உணருருவாய் அறிவினொடு தெளிவிடத்துஞ்
சிந்தியாத / அருவுருவாய் உருவுருவாய் அகம் புறமும் தன்னியலா வடங்கா வின்பத் / தொருவுருவாய்
இன்மையினில் உண்மையினைத் தோற்றுவிக்கும் ஒளியாய் யாவும் / மருவுருவாய் வளர்காவல் முதலவனைப்
பணிந்துள்ளி வாழ்த்து வாமே.” இது போல்
சீறாப் புராணத்தில் எங்கெல்லாம் பீரப்பாவின் தாக்கம் இருக்கிறது என்று ஒரு தனி ஆய்வே
நிகழ்த்தலாம்.
பீர் முஹம்மது அப்பா, கோட்டாறு ஞானியார், ஆலிப்புலவர் போன்ற
மெய்ஞ்ஞானியர் யாத்த பனுவல்களைப் பற்றி ஆராய்ச்சியுடன் விளக்கி எழுதப்படும் நூலொன்று
பாமரர் ஈடுபட்டு வாசிக்கும்படி அமைவது சாத்தியமில்லை என்றே சொல்லிவிடலாம். எல்லோர்க்குமான
எளிய அறிமுக நூலாக இத்தகைய நூற்கள் எழுதப்படும்போது மெய்ஞ்ஞானம் மழுக்கப்பட்டு ஒளி
குறைந்துவிடும் வாய்ப்புள்ளது. அதே சமயம், பொது மக்களும் இதனை எடுத்து வாசிக்க ஆர்வமுறும்
வகையில் எழுதுவது அவசியமாகிறது. இதனை எப்படிச் சாதிப்பது? முடிந்த அளவு பிறமொழி மேற்கோள்களைத்
தவிர்ப்பது ஒரு வழி. விஞ்ஞானி ஸ்டீஃபன் ஹாக்கிங் எழுதிய நூலான “தி ப்ரீஃப் ஹிஸ்டரி
ஆஃப் டைம்” என்பது உலகெங்கும் பேரெண்ணிக்கையில் விற்பனை ஆன ஒன்றாகும். அதன் முன்னுரையில்
அவர் சொல்வார்: “என் பதிப்பாளர் என்னிடம் சொன்னார், ’நீங்கள் இந்நூலில் இடும் ஒவ்வொரு
அறிவியல் சூத்திரமும் சமன்பாடும் இந்த நூலின் விற்பனையைப் பாதியாகக் குறைத்துவிடும்.’
எனவே இதில் நான் முடிந்த அளவு அறிவியல் சூத்திரங்களையும் சமன்பாடுகளையும் தவிர்த்திருக்கிறேன்.”
இந்த உத்தி இந்நூலிலும் கையாளப்பட்டுள்ளது.
உதாரணமாக, “பரமா நபியைப் படைத்திலையாகிற் படைப்பொன்றும் இல்லை
என்று உரமாய் மொழிந்த என் உத்தமனே” என்னும் பீரப்பாவின் மேற்கோளைக் காட்டும்போது,
“லவ்லாக்க லவ்லாக்க லமா ஃகலக்த்தல் அஃப்லாக்” (நபியே! நீவிரில்லை எனில் வானாதிகளைப்
படைத்திரேன்) என்னும் அறபி மேற்கோளினை எழுதலாம். அதேபோல், ”பெருகு தொன்னூறோடொன்பதும்
அரிய திருநாமமென்று” என்னும் வரியின் செய்திக்கு, “இன்ன லில்லாஹி திஸ்’அத்த வ திஸ்’ஈன
இஸ்மன், மிஃத்த இல்லா வாஹிதா” (திண்ணமாக அல்லாஹ்வுக்கு தொன்னூற்றொன்பது பெயர்கள் உள,
நூற்றுக்கு ஒன்றின்றி) என்று அறபி மேற்கோள் எழுதலாம். [இப்படி எழுதுவதில் இன்னொரு சிக்கலும்
உண்டு. ஸூஃபி வட்டங்களில் புழக்கத்தில் உள்ள சில ஹதீஸ்களுக்கு எடுகோள் காட்ட இயலாது.
அவற்றை ஏற்கும் விடயத்தில் பெரிய ஆராய்ச்சிகளைத் தனியே விளக்கமாக எழுத வேண்டியிருக்கும்.
மேலே நாம் சுட்டிய இரண்டு ஹதீஸ்களில் முதலாவது இதற்கு ஒரு சான்று. இரண்டாவது ஹதீஸுக்கான
எடுகோள்: ஸஹீஹுல் புஃகாரி #7392.] இப்படி அறபியில் மேற்கோள் காட்டி எழுதும்போது பொது
வாசகரிடம் அந்நூல் வரவேற்புப் பெறாமல் போய்விடக்கூடும். ஆனால், அத்தகு சான்றாதார எடுகோள்கள்
காட்டப்படாத பட்சத்தில் ஆராய்ச்சி நூலின் வலிமை சற்றே குறைபடும் என்பதும் எதார்த்தம்.
இந்நூலின் கட்டுரையாளர்கள் இவ்விரண்டு நிலைகளுக்கும் நடுநின்று எழுதியுள்ளார் என்பது
என் அவதானம்.
’தெற்கிலிருந்து ஒளிரும் சூஃபிச் சுடர்கள்’ நாற்றிசையும் பரவி
ஞான வெளிச்சம் இலங்கட்டும்.