Wednesday, April 24, 2019

மணலகத்து நினைவுகள்... - 1






















 ஆன்மிக நண்பர் நூருல் அமீன் ஃபைஜி ஒருநாள் செல்பேசியபோது அண்மையில் வெளிவந்த நாவல் ஒன்றை எனக்கு அன்பளிப்பாக அனுப்பி வைப்பதாகச் சொன்னார். மூன்று நாட்களில் தூதஞ்சலில் வந்தடைந்தது முஹம்மது யூசுஃப் எழுதிய “மணல் பூத்த காடு”. நாவலைப் படித்துவிட்டு நானொரு மதிப்புரை / விமர்சனம் எழுத வேண்டும் என்பது அவரின் விழைவு. 



       

















நாவலைப் படித்து முடித்த நிலையில் இரண்டு விஷயங்களை மட்டும் முத்தாய்ப்பாகச் சொல்லத் தோன்றுகிறது: 1) இந்நாவல் பல பதிப்புக்கள் காண வேண்டும். 2) யூசுஃப் மேலும் பல நாவல்கள் எழுத வேண்டும். (அதை நாம் வாசிக்க வேண்டும் என்பதைத் தனியே சொல்லத் தேவையில்லை).

      அறபுலகில் வாழும் தமிழர்கள் (முஸ்லிம்கள், இந்துக்கள், கிறித்துவர்கள், நாத்திகர்கள்(?) எல்லோரையும்தான் சொல்கிறேன். முஸ்லிம்களின் விழுக்காடு செம்பாகமாய் இருக்கலாம்) தமது புலம்பெயர்ந்துறை வாழ்வின் அனுபவங்களைப் பதிவு செய்துள்ள கவிதைகளும் சிறுகதைகளும் ஓரளவு வந்துள்ள நிலையில் ஒரு பெருநாவல் வந்திருப்பது இதுவே முதன் முறை என்று நான் எண்ணினேன். ஏற்கனவே அஜ்னபி வந்துவிட்டது என்று தோழர் மானசீகன் ((எ) முகமது ரஃபீக், பேராசிரியர், உத்தமப்பாளையம்) சுட்டிக் காட்டி அந்நாவல் வளைகுடா நாடுகளைக் களமாகக் கொண்டது என்றும் சவூதி அரேபியாவைக் களமாகக் கொண்ட முதல் நாவல் இதுவாக இருக்கலாம் என்றும் சொன்னார். 
 
      நாவலுள் செல்லும் முன்பே அதன் தலைப்பு என்னை மிகவும் கவர்ந்துவிட்டது. சென்ற ஆண்டு கோடை விடுமுறையில் மனோஜ் குரூரின் மலையாள நாவலின் தமிழாக்கமான “நிலம் பூத்து மலர்ந்த நாள்” படித்துவிட்டு விமர்சனம் எழுதியிருந்தேன். அந்நாவலின் தலைப்புச் சாயலை “மணல் பூத்த காடு” என்னும் இப்புதினத் தலைப்பில் கண்டேன். அதுவே ஓர் ஈர்ப்பாயிற்று.

      முகம்மது யூசுஃப் தனது நேரடி அனுபவங்களையே நாவலின் கதையாக நெய்துள்ளார். கதாநாயகனின் பெயர் அனீஸ். தூத்துக்குடியிலிருந்து பொருள் வயின் பிரிவாக ரியாத் வருகிறான். தமிழக முஸ்லிம்களில் பலரும் அப்படிப் “பயணம்” செய்பவர்களாக மத்தியக் கிழக்கு நாடுகளிலும், சிங்கப்பூர் மலேசியா புருனை ஆகிய தெங்கிழக்காசிய நாடுகளிலும் “கேம்ப்” இட்டவர்களாக இருப்பது எல்லோரும் அறிந்ததுதான். இருபதாம் நூற்றண்டில் ஐம்பதுகளுக்குப் பின்னர்தான் இது ஒரு மோகமாகப் பெருகியிருக்கும் என்று கருதுகிறேன். ’(கேம்ப்) இட்டார் மேலோர் இடாதார் இழிகுலத்தோர்…’ என்னும் கண்ணோட்டங்கள் தமிழக முஸ்லிம்களிடம் இருந்தமையை நான் எனது மாணவப் பருவத்தில் ’மஹ்மூது பந்தர்’, திருப்பூந்துருத்தி, பண்டாரவாடை, ராஜகிரி, அய்யம்பேட்டை முதலிய ஊர்களில் கண்டிருக்கிறேன். ’பத்தாங்கிளாசுக்கு மேல படிக்கிறதுக்கு நானென்ன லூசுப்பயலா? துபாய் கெளம்பீருவேன்’ என்று என் ஒருசாலை மாணாக்கன் அக்பரலி பேசியபோது எனது மண்டை ப்ளஸ் ஒன்னில் என்ன க்ரூப் எடுக்கலாம் என்று சீரியசாகச் சிந்தித்துக் கிடந்தது. அதையெல்லாம் எழுதினால் இன்னொரு காடு பூத்துவிடும். முஹம்மது யூசுஃபின் நாவலைப் பற்றித் தொடர்ந்து பேசுவோம்.

      நாவலின் களம் (Plot) மற்றும் கரு பற்றி யூசுஃப் முன்னுரையில் சொல்வதே போதிய அறிமுகம் நல்குகிறது: “பயோ மெடிக்கல் என்ஜினீயர் என்று வேலைக்குச் சேர்ந்திருந்தாலும், வேலைக்குச் சேர்ந்த அந்த நிறுவனத்திற்கு “அபூ ஹம்ஸா பலசரக்குக் கடை” என்று பெயர் வைத்தலே நலம்.

      ”இதுதான் என்றில்லாமல், இங்குதான் என்றில்லாமல், இப்படித்தான் என்றில்லாமல் மூன்று வருடத்தில் விதவிதமான வேலைகள் விதவிதமான இடங்களில் வேறு வேறு ஊர்களில் வேறு வேறு மனிதர்களுடன்.

      ”அரேபியாவில் ஐந்து நாட்களில் 5000 கிலோ மீட்டர் தொடர்ச்சியாகச் சுற்றியது, அங்குள்ள பெண்கள் கல்லூரிக்குள்ளும் நுழைந்தது, அங்குள்ள ஆண்களில் சிறைச்சாலை சென்றது, அங்குள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களின் மருத்துவமனைகளின் கதவுகளைத் தட்டியதுதான் இந்த எழுத்தின் பின்புலம்”.

      தன்னையொரு ”நடையாடி” என்று குறிப்பிடும் யூசுஃப், இந்நாவலின் மூன்று முதன்மை அம்சங்களை முன்மொழிந்து இந்நாவலை நம் முன் வைக்கிறார்: “உங்களுக்கு பயணங்கள் விருப்பமா, தகவல் கொண்டாடியா, புதிய செய்திகளின் மீது ஆர்வமா அப்படியானால் இந்த எழுத்து உங்களுக்கானது”. நிச்சயமாக, இம்மூன்று அம்சங்களுமே “கால்களால் எழுதப்பட்ட கதை”யான இந்த நாவலில் அழுத்தமாக இருக்கின்றன.

      முஸ்லிம்களின் முதன்மையான இரண்டு புனிதத் தலங்கள் (ஹரமைன் ஷரீஃபைன்) எனப்படும் மக்கா மற்றும் மதீனா, நவீன அரேபியாவின் தலைநகராகத் திகழும் ரியாத், தாயிஃப், ஜித்தா, ஜோர்டான், அபஹா, கமீஸ் முஸ்யாத், ஜித்தா, உயைனா, ஜபல் துவைஃக், ஹாரா, திரியா, ஜிசான், ஃபரசன் தீவு, சலாலா, மலாஸ், அரார், முஜம்மியா, வாதி அல் மித்னா, சாலி அல் கபீர், முஹைல், நமாஸ், குன்ஃபுதா, மிக்வா, அல் பாஹா, பிஷா, சமக், தத்லீத், வாதி அல் தவாசீர், ஜபல் சஃவ்தா, ஜபல் அந்நூர், ஜபல் அர்ரஹ்மான், தபூக், பிஹ்ர் இப்னு ஹிர்மாஸ், அம்மார், கஸிம், புரைதா, உசைனா, ஜுல்ஃபி, தமாம், ஹஃபூஃப், அல்ஹஸா, கஃப்ஜி, ஜபலல் லஃப்ஸ், மக்னா, துபாய், தெய்ரா, நஜ்ரான், சரோரா, சகாகா, துமாத் அல்-ஜந்தால், ஜுபைல், துரைஃப், அல்-மதாயா, பெட்ரா, மதின் சாலே… ஏறத்தாழ நாவலில் வருகின்ற மாகாணங்கள், ஊர்கள் மற்றும் இடங்கள் அனைத்தின் பெயரையும் குறித்துவிட்டேன் என்று நினைக்கிறேன். இத்தனை இடங்களில் நாவலின் கதை, கதாநாயகன் அனீஸின் வழியே பயணிக்கிறது. நாமே அங்கெல்லாம் செல்வது போல் இருக்கிறது. இந்தத் தன்மைக்காகவே, யாராவது ஒரு ”நல்ல ரசனை” உள்ள இயக்குநர், திறமையும் ரசனையும் உள்ள ஒளி மற்றும் ஒலிப் பதிவாளர்கள், இசையமைப்பாளர் உள்ளிட்ட தொழில்நுட்பக்குழு மற்றும் குறிப்பாக நல்ல நடிகர்கள் ஆகியோரைக் கொண்டு இந்நாவலை ஒரு திரைப்படமாக எடுக்கலாம்.

      அரேபியாவின் இத்தனைப் பகுதிகளையும் நேரில் கண்டு எழுதியிருப்பதில் நமக்குப் பல புதிய திறப்புக்கள் கிடைக்கின்றன. அரேபியாவைப் பற்றிக் கறுப்பு வெள்ளையாக மனதில் இதுகாறும் இருந்துவந்த சித்திரம் அப்படியே வண்ணப் படமாக மாறிவிடுகிறது. அரேபியா என்றால் வெறும் பாலைத் திணை மட்டுமே என்பதுதான் பொதுப் புத்தியில் இருக்கும் சித்திரம். ஆனால் அரேபியா என்பது ஐந்திணை நிலங்கள் கொண்டது, தமிழகம் போன்றே, என்று இந்நாவல் காட்டுகிறது. அவ்வாறு வரும் பகுதிகள் பலவும் என் மனதை வெகுவாகக் கவர்ந்தன. ஏனெனில், சீறாப்புராணத்தில் அரேபிய நாட்டைத் தமிழகம் போலவேதான் உமறுப்புலவர் பாடி வைத்திருக்கிறார். அது ஏதோ தெய்வக் குத்தம் என்பது போல் வஹ்ஹாபிகள் குற்றம் சாட்டுவதுண்டு. உமறுப் புலவர் அரேபியா சென்றதில்லை. காணமல்தான் பாடுகிறார். மருத நில வருணனைகளைக்கூட இடம்பெறச் செய்கிறார். அதில் மிகைப்பாடு இருக்கலாம். (நல்ல மிகைப்பாடுதானே!) எனினும், இந்நாவலைப் படிக்கும்போது உமறுப்புலவரின் வருணனை உண்மைக்கு அருகில்தான் இருக்கிறது என்று காண்கிறோம். ‘இப்போதுதான் அரேபியா இப்படி இருக்கிறது. உமறுப் புலவர் காலத்திலோ அல்லது நபிகள் நாயகம் (ஸல்) வாழ்ந்த காலத்திலோ அது இவ்வாறு வளமாக இருக்கவில்லை’ என்று குற்றஞ் சாட்டினாலும்கூட, உமறுப்புலவர் பாடியது போன்றே அரேபியாவை ’ஏக இறைவன்’ மாற்றி வருகிறான் என்பது ஓர் அற்புதம் அல்லவா?


     












ஃபரசன் தீவுக்குச் சென்ற அனுபவத்தை எழுதுகையில், “வேப்ப மரம், வாழைத் தோப்பு, ஆள் அமர்ந்து சென்றபடி செல்லும் கோவேறு கழுதை, நாய் குரங்கு கரிசல் மண் எல்லாம் இங்கு பார்த்தேன்” (ப.93) என்று எழுதுகிறார்.

      அவ்விடத்தில் ”எட்வர்ட் டேம்” என்றொரு அணை இருக்கிறது. அதன் கீழே ஆறு ஓடிக் காய்ந்த தடம் இருக்கிறது! கோடையில் குற்றாலம் காய்ந்துகிடப்பது போல் என்று உவமை சொல்கிறார் யூசுஃப். எனில், அரேபியாவில் நதி ஓடியதாக உமறுப்புலவர் பாடியதை நான் நினைவு கூர்ந்தேன். அவ்விடத்தில், கூறு ஐந்து ரியால் என்று கொடுக்காப்புளியும், இரண்டு ரியாலுக்கு மல்லிகைப்பூவும் வாங்கியதாக யூசுஃப் பதிவு செய்திருப்பதைக் காணும்போது தமிழகத்துச் சிற்றூர் ஒன்றைப் பற்றிய எழுத்தாகவே மயக்கம் கொள்கிறோம். அதனைத் தொடர்ந்து அவர் எழுதியிருக்கும் பத்தி எனக்கு மிகவும் வியப்பூட்டியது:

      ”காலையில் ஒரு கடையில் காலைச் சாப்பாடாகத் தேனும் தினைமாவும் வாங்கித் தின்றோம். அது ஒரு சூடானிக் கடை. குற்றாலக் குறவஞ்சி சிங்கா சிங்கி ஞாபகம் வந்தது. ரொம்பத் திகட்டியதால் பாதிதான் சாப்பிட முடிந்தது. // சுத்தமான தேன் என்று ஆங்காங்கே விற்கிறார்கள். சுத்தமானது தேன் என்று நிரூபிக்கத் தேனைத் துணியில் சுற்றித் தீயிட்டுக் கொளுத்திக் காட்டுகிறார்கள். ஜமுக்காளம் போன்ற ஒரு உடையை இடுப்பில் அணிந்த ஆட்களைக் கண்டேன். ஏசுநாதர் தலையில் இருக்கும் முட்கிரிடம் போன்று பூவால் ஆன கிரிடம் சிலர் தலையில் வைத்திருக்கிறார்கள். இடுப்பில் சின்ன கத்தி உறையுடன் செருகி வைத்துக் கொண்டு திரிகிறார்கள். ஒரு மலை வாழ் மக்கள் போன்று காட்சி அளிக்கின்றனர். இதுவெல்லாம் கமிஸ் முஸ்யாத் என்னும் ஊருக்கும் ஜிஸானுக்கும் இடையில் அப்ஹா, சபியா போன்ற இடங்களில் நான் பார்த்தவைகள்.” (ப.93).
      
  இந்தப் பத்தியை வாசிக்கும்போது சங்க காலக் குறிஞ்சி நிலத்தில் கண் திறந்து கொண்டது போல் இடம்-காலம் மாறியதோர் உணர்வு ஏற்பட்டது. பாணர், கூத்தர், விறலியர் குறித்த வருணனை போல் மனக்காட்சி விரிகிறது. சங்க காலத்துத் தமிழகச் சாயல் கொண்டிருக்கிறது இன்றைய அரேபியாவின் ஒரு பகுதி என்பது ஆச்சரியம் அன்றோ? (அரேபியாவின் உயரமான மலை ஜபல் சஃவ்தா. அதன் உயரம் பத்தாயிரம் அடிகள். தமிழகத்தின் கொடைக்கானல் போன்ற குளிர் பிரதேசச் சுற்றுலாத் தளம். இந்தத் தகவல்கள் ப.168-இல் உள்ளன.)

      திணைகள் பற்றி, ஐவகை நிலங்கள் பற்றிப் பள்ளிக்கூடத்திலேயே பாடம் சொல்லித் தருவார்கள். குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் பாலை ஆகிய ஐவகை நிலங்களின் குறிப்புக்கள் ஒரு வாய்ப்பாடு போல ‘மலையும் மலை சார்ந்த இடமும் குறிஞ்சி, காடும் காடு சார்ந்த இடமும் முல்லை, வயலும் வயல் சார்ந்த இடமும் மருதம்…” என்றிப்படியே. அந்த வாய்ப்பாடு முஹம்மது யூசுஃபின் மனத்தில் ஆழமாகப் பதிந்து விட்டது போலும். ஒரு சிறுவனுக்கு உரிய வியப்புடன் அரேபியாவில் ஐவகை நிலஙக்ளைக் கண்டு உவக்கும் பல தருணங்களில் இவ்வாய்ப்பாடு கொண்டே அவற்றைப் பதிவு செய்திருக்கிறார்:

      ”அப்ஹா போல தபூக்கும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளும் மலையும் மலை சார்ந்த பகுதியாக அரேபியாவின் குறிஞ்சித் திணையாகக் காட்சியளிக்கும்” (ப.277)

      ”கடலும் கடல் சார்ந்த ஊரிலிருந்து நேர் எதிர்மறையாய் இந்த மணலும் மணல் சார்ந்த பகுதிக்கு அனீஸ் வந்து ஒன்றரை வருடங்கள் ஆகிவிட்டன.” (ப.298)

      ”சவூதி அரேபியாவின் வயலும் வயல் சார்ந்த மருத நிலங்களில் சகாகாவும் ஒன்று.” (ப.309)

      “கடலும் கடல் சார்ந்த நெய்தல் நில ஊரில் இருந்து பாலை வந்த சாதாரணக் கடற்காகம் அவன்” (ப.322)

”மணலும் மணல் சார்ந்த பகுதியைப் பிறந்த வீடாகவும் புகுந்த வீடாகவும் வேறு வழியின்றி விதி வசத்தால் கொண்ட அவனுக்கு எல்லா நீர் நிலை மீதும் அலாதி இன்பம்” (பக்.357-358).

”மணலும் மணல் சார்ந்த பகுதியில் / ஓர் ஒற்றைக் கல்லில் / உன்னை எண்ணிய வண்ணம் நான்” (ப.370)

      இதைவிட ஒரு படி மேலே சென்று ஓரிடத்தில் சிலப்பதிகார மேற்கோள் காட்டிப் பேசுகிறார்:
”’முல்லையும் குறிஞ்சியும் முறைமையின் திரிந்து
நல் இயல்பு இழந்து நடுங்கு துயர் உறுத்துப்
பாலை என்பது ஓர் படிவம் கொள்ளும்…’ என்கிறது தமிழ்.
பாலையில் செடி வளர்க்க முற்படும் ஓர் அறபியைக் கண்டதில் மகிழ்ச்சி என் மனதில் தோன்றியது.” (ப.159).

நிலத்தின் நீணெடுங் கனவுகளென விண் அவாவி எழுந்து நிற்கும் மலைகளைக் குறிக்கக் “குறிஞ்சி” என்னும் அரிய மலரின் பெயரைத் தேர்ந்தது தமிழ். தமிழுக்கு ழகரமென்பது சிறப்பெழுத்து சிறப்பொலி என்பது போல் குறிஞ்சி மலரும் தமிழர்க்குப் பெருமிதப் பொருள். எனினும், ழகரத்தின் சாயல் கொண்ட ”ளாத்” என்னும் எழுத்து அரபியில் இருக்கிறது [அறபிகள் தமது மொழியை ’லுகத்துள் ளாத்’ (ளாத் என்னும் ஓசையின் மொழி) என்று பெருமிதம் கொள்கின்றனர். அதன் வரிவடிவம்கூட தமிழின் ழகர வரிவடிவத்துடன் ஒத்துள்ளது என்று இறையருட் கவிமணி கா.அப்துல் கபூர் குறிப்பிடுகிறார்). அதுபோல் அரபி நிலத்திலும் குறிஞ்சி உள்ளது (நிலத்திணையாகவும் பூவாகவும்!):

”நிறைய நீர் நிலையும் இருக்கு. எரிமலை வாயும் (crater) இருக்கு. நிறைய இஸ்லாமிய வரலாற்று இடங்கள் இருக்கு. மலை பிரதேசம் இருக்கு. மொத மொதல்ல குறிஞ்சிப் பூவ அபஹாங்கிற ஊருலதான் பாத்தேன்” (ப.378).


















வளமான மருத நிலங்களும் அரேபியாவில் இருக்கின்றனவாம்: ”கஸிம் மாகாணம் சவூதி அரேபியாவின் மருதத் திணை. நிறைய கோதுமை விளையும் இடங்களையும் விவசாய நிலங்களையும் காணலாம். சொட்டு நீர்ப் பாசனம் உள்ள ஊர். காதலியின் கடைக்கண் பார்வை போலத் திடீர் திடீர் என மழை கூடப் பெய்யும்.” (ப.234)

நீர் நிலைகளே மருத மண்ணின் ஆதாரம். அரேபியாவில் ஆறுகளா? குளங்களா? கிணறுகளா? என்று கேள்வி எழலாம். மக்னா என்னுமிடத்தில் மூசா நபி நீரிரைத்த கிணறு உள்ளது. அதன் பெயர் ’பிர் சாதனி’. அவ்விடத்தை முஹம்மது யூசுஃப் இப்படி வருணிக்கிறார்: “நிறைய நீர் ஓடிய தடங்கள் காட்சியளித்தன. செடிகள் வளர்ந்திருந்தன. பனை மரங்கள் கண்டதும் அனீஸுக்குச் சந்தோசம் தாளவில்லை. சிரித்தபடி ஒன்றிரண்டு மரங்களைக் கட்டிப்பிடித்தான்” (ப.281). அவ்விடத்தில் தய்யிப் அல்-இஸ்ம் என்னும் நதி ஓடியிருந்ததாக ஓர் செய்தியையும் தருகிறார். அரேபியாவில் பனைமரம் என்பதும் எனக்குச் சீறாப் புராணத்தை மேலும் சிலாகிக்க வைக்கும் செய்தியாகிறது!

குறிஞ்சி மருதம் நெய்தல் என்று திணைகள் தோறும் அனீஸ் செய்யும் பயணங்களின் குறிப்புக்களைப் படிக்கும்போது நம் மனவெளியில் அரேபியாவும் தமிழகமும் நெருங்கி வருகின்றன. சகாகா என்னும் ஊருக்குப் புறத்தே உள்ள ஒட்டகப் பண்ணைக்குச் செல்லும் காட்சியில் இப்படி எழுதுகிறார் யூசுஃப்: “ஆச்சர்யமாக அந்த இடத்தைப் பார்த்தபடி உள்ளே நுழைந்தான் அனீஸ். செம்மண் முழுக்கச் செம்மண். தூத்துக்குடியில் இருந்து இராமநாதபுரம் போகும் வழியில் இருக்கும் சூரங்குடியில் நிற்பது போலத் தோன்றியது அவனுக்கு.” (ப.315).

ஒரு நாட்டுப் பரப்பில் ஐவகை அல்லது நால்வகை அல்லது மூவகை நிலத்திணைகள் இருந்தாலும் அவை சம விழுக்காட்டில் இருக்காது. தமிழ்நாட்டில் மருதமும், ராஜஸ்தானில் பாலையும், கேரளாவில் குறிஞ்சியும் செம்பாகமாய் அமைவது போல் அரேபியாவின் பரப்பில் மிகுந்திருப்பது பாலைத் திணைதான். சுடுமணல் பரவிய பாலைவனம் என்பது மரணத்தின் குறியீடு என்றுதான் மனம் நினைக்கும். பாரதியார் தனது வசனக் கவிதையில் பாலைவனச் சுழற்காற்றில் சிக்கிப் பயணக்குழு ஒன்று அழிந்து படுவதாகப் பாடியிருக்கிறார். அத்தகு பாலைவனம் அழகானதா? அதை ஒருவன் நேசிக்க இயலுமா? இயலும் என்று காட்டுகிறார் முஹம்மது யூசுஃப். நாவலைப் படித்துச் செல்லும்போது நாமும் பாலையை நேசிக்கத் தொடங்கியிருக்கிறோம்.


















”காடு கடல் என எல்லாத் திணைகளுமே உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுபவை. மண் சார்ந்த பாலை மட்டுமே உங்கள் கண்ணுக்கெட்டும் தூரம் வரை தன்னை நிர்வாணமாகக் காட்டித் தரும் பெரும் திணை” (ப.215) என்று பாலைக்காக வாதாடுகிறது அவரின் சிந்தனைத் திறன்.

”எந்தக் காலடித்தடமும் இன்றிக் கன்னிப் பெண்ணாய் சற்றும் இளமை குறையாமல் வனப்புடனும் வாளிப்பாகவும் காட்சி அளிக்கும் பாலை மண், பூமிப் பெண்ணின் அழகின் மொத்தத் திரட்சி. பெண்ணை விட அதிகச் சுகந்தம் வீசும் மண் பற்றி அறிய முதலில் நீங்கள் மண்ணை நேசித்திருக்க வேண்டும். இல்லையெனில், உங்கள் தெரு மண் பற்றிய நல்ல அபிப்பிராயம் கூட உங்கள் மனதில் உண்டாவதில்லை” (ப.298) என்று அவர் சொல்லும்போது பாலை என்னும் லைலாவின் மஜ்னூனாகவே மாறியிருக்கிறார்.

“பாலை மண்தான் பூமியின் ஆதி தாய். நிலத்தின் அலங்காரம். மண்ணின் மூத்த குடி” (ப.299) என்று அவர் சன்னதம் கொண்டது போல் பேசும்போது நம் மனம் அதை மறுப்பின் நிழல்கூட இல்லாமல் ஏற்றுக்கொள்கிறது.

”நிலத்தை உண்மையாக நேசிக்கத் துவங்கிவிட்டால் இந்த மண் அளிக்கும் ஆச்சர்யம் மகத்தானதாக இருக்கும்” (ப.305) என்று அவர் சொல்வது அழகியல் ரசனை மட்டுமன்று, சூழலியல் நோக்கிலும் இன்று மக்களின் காதுகளில் ஓதப்பட வேண்டிய இன்றியமையாத ஞான தரிசனம் என்று காண்கிறேன்.

குறிஞ்சி நிலம் பற்றி அவர் குறித்திருக்கும் ஓர் அவதானம் என்னை மிகவும் சிந்திக்க வைத்தது. கமிஸ் என்னும் ஊரில் பதூக் விவசாயி ஒருவரைச் சந்திக்கிறான் அனீஸ். பேரீச்சந் தோப்பில் அயராது உழைத்து வருபவர் அவர். ”அரபு தேசம் என்றால் எண்ணெய்க் கிணறுகள் பற்றியே பேசும் பரந்து பட்ட உலகில் அந்த அரபி விவசாயி அந்த மண்ணின் சாட்சியாகத் தெரிந்தான்” (ப.442) என்று எழுதுகிறார் யூசுஃப்.

அரபு நாடுகள் என்றாலே எண்ணெய்க் கிணறுகள்தான் அவற்றின் அடையாளங்களாகப் பொது புத்தியில் தோன்றும். அவ்வாறு ஒரு சித்திரம் உருவாக்கப் பட்டிருக்கிறது. (’விளக்கெண்ணெய் ஷேக்குகள்’ என்று அறபி முதலாளிகளை வருணிப்பார் என் சக பேராசிரியர் ஒருவர். அது உண்மைதான் என்பதற்கான சான்றுகளையும் இந்நாவலில் பல இடங்களில் பகடிச் சுவை மிக்க வரிகளில் யூசுஃப் எழுதியிருக்கிறார்.) ஆனால், எண்ணெய்க் கிணறுகள் எல்லாம் ஒரு நூற்றாண்டுக் காலத்திற்குள்தான் அரேபியாவில் உண்டாயின. அதற்கு முன்? பத்துப் பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன்? அந்த அரேபியாவின் அடையாளம் யாது?

அரேபியாவின் அடையாளமாக விவசாயி ஒருவரைச் சுட்டிக் காட்டியிருப்பதில் நிறைய அர்த்தங்கள் புதைந்துள்ளன. அரேபியா மெல்ல மெல்ல பசுமையாக மாறி வருவதை அங்கு சென்று வருவோரும், அவர்கள் அனுப்பும் புகைப்படங்களை ஊடகங்கள் வழிக் காண்போரும் நன்கு அறிவார்கள். இது தொடர்பான நபி மொழிகள் ஸு-ப்ரஸித்தம்:

நபிகள் நாயகம் (ஸல்) நவின்றார்கள்: “அரபியரின் நிலம் மேய்ச்சல் நிலங்களாகவும் நதிகளாகவும் மாறாத வரை ஊழி நாள் (உலக முடிவு, மறுமை நாள்) நிகழாது” (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி); நூல்: சஹீஹ் முஸ்லிம்).

நபிகள் நாயகம் (ஸல்) அருளினார்கள்: “அறபிய தீபகற்பம், முன்பு இருந்தது போல், சோலைகளாகவும் ஆறுகளாகவும் மீளாத வரை யுக முடிவு நிகழாது.” (அறிவிப்பாளர்: அபூஹுரைரா; நூல்: முஸ்னத் அஹ்மத்).
























 

இந்த ஹதீஸ்களை நோக்கினால், அறபுப் பாலைவனப் பகுதி முன்பொரு காலத்தில் பசுமையான சோலைகளாக இருந்தது என்பது பெறப்படும். அதற்கான சான்று: எண்ணெய்க் கிணறுகள்! அளப்பரிய எண்ணெய் வளம்!

ஆம், மரங்கள் செடிகள் கொடிகள் என்னும் பசுந் தாவரத் திரள் மண்ணுள் புதைந்து பல கோடி வருடங்கள் மக்கிய பின்னரே கச்சா எண்ணெயாக மாறுகின்றன. அரேபியாவில் உள்ள எண்ணெய் வளத்தைப் பார்த்தால் அமேசான் காட்டைப் போல் பலநூறு மடங்கு இயற்கை வளம் அங்கே ஒருகாலத்தில் இருந்திருக்க வேண்டும் என்று சொல்லலாம்.

எனில், அரேபியாவின் ஆதி முகம், உண்மையான அடையாளம், பசுமையே அல்லவா! (அதனை அடையாளப் படுத்தும் பச்சை நிறம். அந்நிறத்தைச் சூடி நிற்கும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களது அடக்கத்தலத்தின் மீதுள்ள விதானம்!) அதனால், பசுமையை மீட்டெடுக்கப் பாடுபடும் விவசாயிதான் நிகழ்காலத்தில் அரேபியாவின் அடையாளம் ஆகிறார்!


















”மணல் பூத்த காடு” நாவலை வாசிக்கும்போது அவசியமாக எனது கைப்பேசியை அருகிலேயே வைத்துக் கொண்டேன். நாவலில் அவர் குறிப்பிடும் இடங்களை எல்லாம் கூகிள் செய்து அவற்றின் புகைப்படங்களைப் பார்த்து உள்வாங்கியபடி படிப்பது ஒரு புதிய அனுபவமாகவும், நாவலின் கதைக்குள் மேலும் ஆழ்ந்து போக இயலுவதாகவும் அமைந்தது. அப்படிப் படித்துக் கொண்டிருக்கையில், ரியாதில் பணி நிமித்தம் தங்கியிருக்கும் அனீஸ் தூத்துக்குடியில் இருக்கும் தனது மனைவிக்கு அவளின் பிறந்த நாளுக்கு வாழ்த்துரைத்து எழுதும் கடிதத்தில் பெர்ஜர் பெய்ண்ட்ஸ் அரேபியா என்னும் நிறுவனம் தயாரித்துள்ள “கலர்ஸ் ஆஃப் அரேபியா” என்னும் பத்துக் குறுங் காணொளிகளை யூட்யூபில் காணுமாறு பரிந்துரைப்பதைக் கண்டேன். நானும் கண்டேன். அத்தொகுப்புக்களின் கதையமைப்பையும் அவை உணர்த்தும் வாழ்வியல் கருத்துக்களையும் அனீஸின் கடிதமாக யூசுஃப் விவரித்திருக்கிறார். அரேபியாவின் பல்வேறு பகுதிகளில் அவை படமாக்கப் பட்டுள்ளதால் அரேபிய நில விகாசங்கள் பற்றிய நல்லதொரு அறிமுகத்தை நல்குகின்றன.

 (தொடரும்...)

2 comments:

  1. அருமை, இவ்வளவு விரிவான விமர்சன கட்டூரைக்கும் தொடரும் என்று எதிர்பார்க்க வைத்ததற்கும் வாழ்த்துகள். தன் கொள்கைக்காக மனிதகுல மேன்மைக்காக எழுத்துழகு வந்து இத்தகைய புதினம் தந்த யூசுப் அவர்களை மனமார பாராட்டி கொண்டாடியமைக்கு அன்பின் அத்தழுவலுடனான சலாம்.

    ReplyDelete
  2. உங்கள் நுட்பமான அலசல் அருமை. மீதியையும் படிக்க ஆவலாய் உள்ளோம். எனக்கும் இதை யாராவது தொலைக் காட்சி சீரியலாக எடுத்தால் நன்றாயிருக்குமே என தோன்றியது. யூசூபையே அனிஸ் வேடத்தில் நடிக்க வைக்கலாம்.
    உங்கள் வாழ்த்துக்கு நன்றி!.

    ReplyDelete