Saturday, May 3, 2014

யாதும் ரோஜாவின் பெயரும் - part1


      கல்லூரியின் விடுமுறை நாட்களில் கால் பங்கு கழிந்து விட்டது. சென்ற ’செம்’மில் ஆவணப்பட இயக்குநர் கோம்பை அன்வர் அவர்களைக் கல்லூரிக்கு அழைத்திருந்தோம். அவரின் “யாதும்” என்னும் ஆவணப்படத்தை மாணவர்களுக்குத் திரையிட்டுக் காண்பித்தோம்.

      ”தனது வேர்களையும் அடையாளங்களையும் தேடி ஒரு தமிழ் முஸ்லிமின் பயணம்” (A Tamil Muslim’s journey in search of his roots and identity) என்று இந்த ஆவணப் படம் தன்னை முன்னிறுத்துகிறது.

      படத்தைப் பார்த்த மாணவர்களில் முதுகலைத் தமிழ் பயிலும் மாணவர்களும் இருந்தார்கள். இந்து சமயத்தைச் சேர்ந்த அவர்கள் இப்படத்தை வெகுவாகப் பாராட்டினார்கள். பல புதிய தகவல்களும் புரிதல்களும் தங்களுக்குக் கிடைத்ததாகச் சொன்னார்கள். சமய நல்லிணக்கத்திற்கு இந்த ஆவணப் படத்தின் பங்களிப்பு இக்காலச் சூழலில் மிக முக்கியமானது என்று உணர்ந்தேன்.

கும்பகோணத்தில் பிப்ரவரி 14,15,16 ஆகிய திகதிகளில், இஸ்லாமிய இலக்கிய மாநாடு நடைபெற்றது. அதற்கு அவர் வருகிறார் என்னும் தகவலை அதன் அழைப்பிதழில் பார்த்துத் தெரிந்து கொண்டேன். 17-ஆம் தேதிக்கு அவரை வைத்துக் கல்லூரியில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்துவிடலாம் என்று யோசனை உதித்தது. தொடர்பு கொள்ள அவரின் அலைபேசி எண் கிடைக்குமா என்று இணையத்தில் தேடி அவரின் தளத்தில் கண்டடைந்தேன்.

அப்போது அவரின் முகநூல் ப்ரொஃபைல் விவரங்களைப் பார்க்க நேர்ந்தது. அவ்விவரங்கள் ஒருவகையில் அவரது அகத்தின் குறுக்குவெட்டுத் தோற்றம்தான். அவருக்குப் பிடித்த இசை, நூற்கள், திரைப்படங்கள் பற்றிய குறிப்புக்கள். அவர் பட்டியலிட்டிருந்த நூற்களில் ஒன்றில் என் மனம் ஒட்டி நின்றது. அந்த நூல் பல வருடங்களுக்கு முன்பே ஒடிஸ்ஸி அலமாறியில் இருந்தபடி என்னை நோக்கி மௌன சமிக்ஞை செய்திருந்தது. உம்பர்டோ இகோ (Umberto Eco) எழுதிய ‘The Name of the Rose’ என்னும் சமய வரலாற்றுப் புதினம். (இத்தாலிய மூலத்தில்: Il nome della rosa. ஆங்கில மொழிபெயர்ப்பு: வில்லியம் வீவர்).

இவ்வாரம் திங்கட் கிழமை (28.04.2014) இந்நூலை வாங்கிவிட்டேன். 1327-ஆம் ஆண்டு இத்தாலி நாட்டில் பெனடிக்டைன் / ஃப்ரான்சிசன் சிந்தனைப் பள்ளியைச் சார்ந்த ஒரு கிறித்துவ மடாலயத்தில் நடைபெறும் தொடர்க் கொலைகளின் மர்மத்தை வில்லியம் என்னும் துறவி துப்பறிவதுதான் கதை. (சியான் கானெரி நடித்து இப்புதினம்1986-ல் திரைப்படமாக வெளிவந்தது).

உம்பர்டோ இகோ ’செமியோலஜி’ என்னும் துறையில் ஈடுபாடு மிக்கவர். பிரதியின் கட்டமைப்பிலிருந்து அர்த்தங்களை உருவாக்கும் கலை என்று இதனை விளக்கலாம். சமிக்ஞையாக, குறியீடுகளாகச் சொல்லப்பட்டுள்ள என்கோடட் தரவுகளை டீகோடிங் செய்து அர்த்தங்களை அடைதல். இப்புதினத்தில் இது ஒரு முக்கியமான இழை. பதினான்காம் நூற்றாண்டில் இருந்த இத்தாலிய சமய – கலாச்சார – அரசியல் நிலைகள் பற்றி அறிவதற்காகவும் இதனை வாசித்தேன்.

சென்ற பதினைந்து நாட்களில் நான் வாசிக்கும் இரண்டாவது நாவல் இது. முந்தி வாசித்த நாவலும் இத்தாலி நாட்டுடன் தொடர்புடையதாகவே இருந்தது. (ஆக ஒரு மாதமாக ’நான்’ இந்தியாவிலேயே இல்லை!). அந்த நாவலின் கதை இத்தாலியில் தொடங்கி இஸ்தான்பூலில் போய் முடிந்தது. (நாவல் வாசிக்கும்போது அந்தந்த நாட்டின் பின்னணி இசை என் காதில் கேட்கும். இத்தாலிக்கு ஒப்பேராவும் சிம்ஃபொனியுமாக கேட்டது. இஸ்தான்பூலுக்கு துருக்கி ’மெவ்லவி’ தர்வேஷ்களின் ’நை’ என்னும் புல்லாங்குழலும் தஃப்பும்.) டான் ப்ரவ்ன் எழுதிய “இன்ஃபெர்னோ” (’நரகம்’ என்று அர்த்தம்) என்னும் இந்நாவல் பேராசிரியர் ரொபர்ட் லாங்க்டன் என்னும் கதாபாத்திரத் தொடரில் நான்காவதாகும். நான்கும் அடியேனின் நூலகத்தில் உள்ளன, சகதர்மினியின் அன்பளிப்பாக.

’இன்ஃபெர்னோ’ நாவல் இத்தாலிய கவியான தாந்தே அலிகெரியின் ‘டிவைன் காமெடி’ காவியத்தில் வரும் இன்ஃபெர்னோ என்னும் பகுதியை அடிப்படையாகக் கொண்ட ஒரு நவீன த்ரில்லர். டான் ப்ரவ்னின் புதினங்களை நான் படிப்பது கொட்டாவி விடாமல் வரலாற்றைத் தெரிந்து கொள்வதற்காகத்தான். அதிலும் ஐரோப்பிய மறுமலர்ச்சிக் காலக் கிறித்துவக் கலைகளில் பொதிந்து கிடக்கும் ரகசிய வரலாறுகளை அறிந்துகொள்ள. இப்படி நான் சொல்வதற்கு ஒரு காரணம் உண்டு.

பல வருடங்களுக்கு முன் “மகாகவி தாந்தே” என்னும் பெயரிய நூல் ஒன்றினை தஞ்சாவூரில் வாங்கினேன். டிவைன் காமெடியின் தோராயமான மொழிபெயர்ப்பு. கவியோகி சுத்தானந்த பாரதியின் நடையில் அதை வாசித்த போது அந்த அனுபவம் எனக்கு டிவைனாகவும் இல்லை காமெடியாகவும் இல்லை. ஐம்பது பக்கங்களுக்கு மேல் வாசிக்க முடியாமல் நிறுத்திவிட்ட ட்ராஜடி அனுபவம் அது. தமிழினி பதிப்பக வெளியீடு என்று நியாபகம். முன் அட்டையில் ஓர் ஐரோப்பிய ஓவியம். மூடிய கண்களுடன், இரு கைகளையும் விரல்கள் கோர்த்துப் பிணைத்தபடி, மண்டியிட்டு அமர்ந்த நிலையில் தியானம் செய்யுமொரு வாலிப உருவம். செந்நிறக் கேசம். பார்ப்பதற்கு ஆணுருவாய் இல்லையே என்று அப்போதே உறுத்திற்று. எனினும், தலைப்பில் தாந்தே என்று போடப்பட்டிருந்ததால் அஃது அவரின் இளமைக்கால உருவம் போலும் என்று எண்ணினேன். ஆன்மிகத் துறையில் அட்மிஷன் ஆன பல பேர் புஜம் வரை புரளும் அலையிட்ட கூந்தல் வளர்த்துக் கொள்வதைப் பார்த்திருகிறேன், அவர்களின் ஃபோட்டோக்களில்: அரவிந்தர், பரமஹம்ச யோகானந்தர், பரஞ்சோதி மகான் போன்றோர். (What to say of eternananda?). இயேசு நாதரின் ஓவியங்களே அப்படித்தான் வரையப்பட்டுள்ளன, நேர்வகிடு எடுத்து (’வலம்புரிச் சுருள்முடி மாடியொதுக்கி’...), நெய்யிட்டு நீவிய கேசம் இருபுறமும் தோள்கள் வரை நீண்டு, ஆரிருள் ராத்திரி அருவியாகி வழிந்தாற் போல், ஒரு யுவதியின் தலை போல்.

ஆனால் அந்த நூலின் அட்டைப் படத்தை அலங்கரித்த ஓவியம் தாந்தேவின் முகம் அல்ல. அவரது காதலி – ம்யூஸ் ஆன ’பீட்ரைஸ் போர்ட்டினாரி’யின் ஓவியம் அது. (ஆங்கிலக் கவிஞரும் ஓவியருமான தாந்தே காப்ரியல் ரோசெட்டி 1864-1870-ல் வரைந்த தைல ஓவியம் அது. ஓவியத்தில் உள்ள முகம் பீட்ரைஸின் உண்மை முகம் அல்ல. ரோசெட்டியின் பல ஓவியங்களுக்கு மாதிரியாக அமைந்த ஜேன் மோரிஸ் என்னும் யுவதியின் தோற்றம் அது.)

பீட்ரைஸின் உண்மையான முகம் எப்படி இருக்கும் என்று தெரியவில்லை.  ஆனால், தாந்தேயின் முக-ஓவியங்கள் (portraits) கிடைக்கின்றன. இத்தாலிய ஓவியரான சாண்ட்ரோ போட்டிசெல்லி வரைந்த ஓவியம் மிகவும் பிரசித்தி பெற்றது. அதில் தாந்தே சிகப்பு நிற அங்கியும் தொப்பியும் அணிந்து தோன்றுகிறார். தொப்பியில் இலைகளுடன் ஒலிவக் கொப்பு ஒன்று வளைக்கப்பட்டுள்ளது. ஐம்பது வயது மதிக்கத் தக்க முகத்தில் எடுப்பான மூக்கு சற்றே கீழ் நோக்கி வளைந்துள்ளது. (இதே முக ஜாடை கொண்ட விவசாயக் கூலிகளைத் தஞ்சாவூர் பக்கம் பார்த்திருக்கிறேன். புகையிலை சீவலுடன் வெற்றிலை குதப்பும் தாந்தேக்கள்!)

தாந்தேவின் முகத்தை ஓவியமாக்கிய பிறரும் – அண்ட்ரியா டெல் காஸ்டாக்னோ, ரஃபேல் போன்றோர் – சிலைகளாக வடித்தவர்களும் மேற்சொன்ன தன்மைகளிலேயே அவரைக் காட்டியிருக்கிறார்கள். இதற்கொரு காரணம் உண்டு. தாந்தேயின் காலத்தில், பிரசித்தி பெற்ற எவரேனும் இறந்து போனால் உடனடியாக அவரின் முகத்தில் ஒலிவ எண்ணெய் தடவி அதன் மீது ப்ளாஸ்டர் பரப்பி மோல்ட் செய்து எடுப்பார்கள். இவ்வாறு தாந்தேயின் முகமும் அவர் இறந்தவுடன் முகமூடியாக (death mask) செய்யப்பட்டதாம். அவரின் சொந்த ஊரான ஃப்ளாரன்ஸில் உள்ள “பாலெஸ்ஸொ வெக்கியோ” (பழைய அரண்மனை) என்னும் அருங்காட்சியகத்தில் இப்போது அந்த முகமூடி இருக்கிறது. (இதுவுமே டூப்ளிக்கேட்தான் என்று விஞ்ஞானிகள் சொல்கிறார்கள். உண்மையில் தாந்தே அப்படியொரு கிளிமூக்குக்காரன் அல்லவாம். ஓவியர்கள் அப்படி மிகைப்படுத்தி வரைந்து வைத்திருக்கிறார்கள் என்றொரு கருத்தும் உள்ளது.)


பீட்ரைஸ் தியானத்தில் இருப்பது போல் காப்ரியல் ரோசெட்டி வரைந்த ஓவியத்தில் பீட்ரைஸின் தோற்றம் – தோரணை அவ்வாறு காட்டப்பட்டிருப்பதற்கு ஒரு பின்னணி உண்டு. அதை அறிய வேண்டும் எனில் தாந்தே தனது காதலியான பீட்ரைஸை எப்படி உருவகித்துக் கொண்டார் என்பதை நாம் அறிய வேண்டும்.

(to be continued...)

No comments:

Post a Comment