Sunday, February 9, 2014

இந்தியாவின் கிளி


      சூஃபி உலகில், கி.பி.13-ஆம் நூற்றாண்டு என்றால் நினைவுக்கு வரும் பெயர் ’ரூமி’ என்பதாகத்தான் இருக்கும். இறைக்காதலின் நாவாக இருந்து அவர் தந்திருக்கும் மஸ்னவி என்னும் காவியம் ‘பாரசீக மொழியின் குர்ஆன்’ என்று போற்றப் படுகிறது. குர்ஆன் என்றால் ஓதப்படுவது என்று பொருள். அரபி மொழியில் உள்ள நூற்கள் அனைத்திலும் அதிகமாக ஓதப்படும் நூல் குர்ஆன் என்பது போல் பாரசீக மொழியில் உள்ள அனைத்து நூற்களிலும் அதிகமாக ஓதப்படும் நூல் மௌலானா ரூமியின் மஸ்னவி காவியம்தான்.

      ரூமியின் பூர்வீகம் ஆஃப்கானிஸ்தானில் உள்ள பல்ஃக் என்னும் பகுதி. செங்கிஸ் கானின் படையெடுப்பு நிகழ்ந்த அக்காலத்தில் ரூமியின் தந்தையான பஹாவுத்தீன் வலத் தனது பரிவாரங்களுடன் ஆஃப்கானிஸ்தானை விட்டு வெளியேறி இரான் இராக் அரேபியா ஆகிய நாடுகளுக்குச் சென்று பின் துருக்கியில் உள்ள கோன்யா என்னும் ஊரில் குடியமர்ந்தார். ரூமியின் பரம்பரை இன்னமும் அங்கே இருக்கிறது.

      அதே காலகட்டத்தில் ஆஃப்கானிஸ்தானில் இருந்து வெளியேறிய இன்னொரு குடும்பம் கிழக்கு நோக்கி நகர்ந்து இந்தியாவில் குடியமர்ந்தது. சைஃபுத்தீன் ஷம்ஸி என்பவர் அன்றைய நாளில் தில்லியில் ஆட்சி செய்திருந்த சுல்தான் இல்துமிஷ்-இன் காவல் துறையில் பணி பெற்றார். அரசனின் ராஜாளி, குதிரை ஆகியவற்றைப் பராமரிக்கும் பணியில் இருந்த இமாதுல் முல்க் என்பவரின் மகளை அவர் திருமணம் செய்து கொண்டார். இந்தத் தம்பதிக்கு கி.பி.1253-ல் பிறந்தார் அபுல் ஹசன்.

      தில்லியை ஆட்சி புரிந்த ஐந்து அரசர்களின் அவையை அலங்கரித்த அவரின் புனைபெயர் இன்றும் ஈரமும் வாசமும் உலராமல் உச்சரிக்கப் படுகிறது: அமீர் ஃகுஸ்ரோ.

      அண்மையில் அடியேன் வாங்கிப் படித்த அழகான நூல் “IN THE BAZAAR OF LOVE The Selected Poetry of Amir Khusrau”. ப்ளூமிங்க்டன்னில் உள்ள இந்தியானா பல்கலைக் கழகத்தில் ஃபார்ஸி பேராசிரியராகப் பணியாற்றும் பால் லோசன்ஸ்கி மற்றும் போஸ்டன் பல்கலைக் கழகத்தில் ஃபார்ஸி பேராசிரியராகப் பணியாற்றும் சுனில் ஷர்மா ஆகியோர் இணைந்து அமீர் ஃகுஸ்ரோவின் கவிதைகளை ஆங்கிலம் ஆக்கியுள்ளனர்.

      மௌலானா ரூமியுடன் அமீர் ஃகுஸ்ரோவை ஒப்பிட்டு அவர்கள் தரும் அவதானிப்புக்கள் சுவையானவை. ரூமி முழுமையாக ஆன்மிகத்தில் திளைத்த ஞானக் கவிஞர். ஃகுஸ்ரோ, அரசர்களின் அவைக் கவிஞராக இருந்து பெரிதும் அரச பாடல்களைப் பாடியவர். எனவே ரூமிக்கு ‘மௌலானா’ (எமது ஆசான்) என்னும் பட்டமும் ஃகுஸ்ரோவுக்கு ‘அமீர்’ (அதிகாரி/ இளவரசன்) என்னும் பட்டமும் சொல்லப் படுவது பொருத்தமானதே.

      ரூமியும் ஃகுஸ்ரோவும் தத்தமது ஆன்மிக குருநாதர்களின் மீது கொண்டிருந்த காதல் சூஃபித்துவத்தில் உதாரணங்களாகத் திகழ்கின்றன. குருவை எந்த அளவு நேசிக்க வேண்டும் என்பதற்குச் சீடர்கள் கற்க வேண்டிய பாடங்களாக இவர்கள் இருவரும் இருக்கிறார்கள். ரூமியின் குருநாதர் ஷம்ஸுத்தீன் தப்ரேஸி (ரஹ்); அமீர் ஃகுஸ்ரோவின் குருநாதர் நிஜாமுத்தீன் அவ்லியா (ரஹ்).

      அமீர் ஃகுஸ்ரோ வாழ்ந்த காலத்தில் உருது மொழி உருவாகவில்லை. அவரின் கவிதைகள் பெரும்பான்மையும் ஃபார்ஸி மொழியில் அமைந்திருக்கின்றன. எனினும் தில்லியின் வட்டார மொழியாக இருந்த ஹிந்த்வி மொழியில் நாட்டுப்புற பாணியில் அவர் பல பாடல்கள் எழுதியிருக்கிறார். வசந்த விழா, ஹோலி பண்டிகை ஆகியவற்றில் பெண்கள் பாடுவது போல் அவை அமைந்திருக்கின்றன. மேலும், அவர் இயற்றிய விடுகதைகளும் சிலேடைக் கவிதைகளும் மக்களிடம் பெரிதும் பரவி வழங்கின. ’தோத்தாயெ ஹிந்த்’ (இந்தியாவின் கிளி) என்று அவர் செல்லமாக அழைக்கப் பட்டார்.

      பாரசீகமும் ஹிந்த்வியும் கலந்து உருது மொழி உருவாகிட முன்னோடியாக அமீர் ஃகுஸ்ரோ இருந்தார் என்பது மட்டுமல்ல அவரின் பணி. இவ்விரு மொழிகளின் பின்னணியாக இருந்த பண்பாடுகளின் இணைவிற்கும் அவர் முன்னோடியாக இருந்தார். அவரின் தந்தை ஆஃப்கானியராகவும் தாய் இந்தியராகவும் இருந்ததால் அவரின் ரத்தத்திலேயே இந்த உணர்வு இருந்ததில் வியப்பில்லை.

      சூஃபிகளின் ஆன்மிக இசை வடிவமாக இன்று உலகெங்கும் ஒலித்துக் கொண்டிருக்கும் கவ்வாலி என்னும் வகையை உருவாக்கியவர் அமீர் ஃகுஸ்ரோதான். ஃபாரசீக கஜல் மரபு மற்றும் இந்திய பஜன் மரபு ஆகியவற்றின் கலவைதான் கவ்வாலி. மேலும், சிதார் மற்றும் தப்லா ஆகிய இசைக் கருவிகளை உருவாக்கியவர் என்றும் அவர் சுட்டப்படுகிறார்.

      இந்தியச் சூழலில் சூஃபிகளுக்கான கவிதை மற்றும் இசையை வடிவமைத்ததில் அவர் உருவாக்கிய பண்பாட்டுத் தாக்கம் இன்றளவும் கஷ்மீர் முதல் ஹைதராபாத் வரை வாழும் முஸ்லிம் சமூகத்தில் உயிரோட்டமாக உள்ளது. (கேரளம் மற்றும் தமிழகத்தில் இப்பண்பாட்டுத் தாக்கம் அழுத்தமாக இல்லை.)

      உலகெங்கிலும் பரவியிருக்கின்ற பல்வேறு சூஃபிப் பள்ளிகளில் (தரீக்கா) இசையைத் தங்களின் தியான முறைக்குள் வரித்துக் கொண்டிருக்கும் முதன்மையான சூஃபிப்ப் பள்ளிகள் இரண்டுதான்: மௌலானா ரூமி (ரஹ்) அவர்கள் அமைத்த மௌலவிய்யா தரீக்கா மற்றும் ஃக்வாஜா மொய்னுத்தீன் ச்சிஷ்தி (ரஹ்) அவர்களிலிருந்து தொடரும் ச்சிஷ்திய்யா தரீக்கா.

      ஃக்வாஜா மொய்னுத்தீன் ச்சிஷ்தி (ரஹ்) à குத்புத்தீன் பஃக்தியார் ஃகாக்கீ (ரஹ்) à பாபா ஃபரீதுத்தீன் கன்ஜெ ஷக்கர் (ரஹ்) à நிஜாமுத்தீன் அவ்லியா (ரஹ்) என்று தொடர்ந்த சூஃபி குருவழியில் நிஜாமுத்தீன் அவ்லியாவின் சீடராக விளங்கியவர் அமீர் ஃகுஸ்ரோ. (பாபா ஃபரீதுத்தீன் (ரஹ்) அவர்களின் தாய்மொழி பஞ்சாபி ஆகும். அன்னார் இயற்றிய ஆன்மிகப் பாடல்கள் சீக்கியர்களின் புனித நூலான ’குரு கிரந்த் சாஹிப்’-ல் சேர்க்கப்பட்டுள்ளன. மட்டுமன்று, ஃக்வாஜா மொய்னுத்தீன் ச்சிஷ்தி (ரஹ்) அவர்களின் ஆன்மிகப் பிரதிநிதிகளில் ஒருவரான அப்துல்லாஹ் பியாபானி பூர்வீகத்தில் அஜைபால் என்னும் பெயரில் மாந்திரீகவாதியாக இருந்தவர். எனவே இன்றளவும் அஜ்மீர் தர்காவிற்கு சீக்கியர்களும் இந்து சாதுக்களும் அருள் நாடி வந்து செல்வதைக் காண்கிறோம்.) 

Hazrath Syed Noori Shah (rah) at Ajmer Sharif

      மௌலானா ரூமி அமைத்த மவ்லவிய்யா தரீக்கா கிளைகள் இன்றி அப்படியே தொடர்ந்து வருகிறது. இந்தியாவில் பரவிய சிஷ்திய்யா தரீக்கா அதன் கொடிவழியில் பல்வேறு மகான்களின் பெயர்களால் கிளைகளுடன் பரவியிருக்கிறது. அக்கிளைகள் நிஜாமுத்தீன் அவ்லியாவிலிருந்து கிளைத்துள்ளன. அன்னாரின் ஆன்மிகப் பிரதிநிதிகளில் ஃக்வாஜா சாபிர் கில்யாரீ (ரஹ்) அவர்களின் வழி வடமேற்கு நோக்கியும், ஃக்வாஜா கேஸு தராஸ் (ரஹ்) அவர்களின் வழி தெற்கு நோக்கியும் பரவிற்று. அவ்வழியில் ஹைதராபாதில் வாழ்ந்த சூஃபி மகான் நூரீ ஷாஹ் (ரஹ்) அவர்களிலிருந்து வரும் கிளைகள் தமிழகத்திலும் கேரளத்திலும் பரவியுள்ளன. என் குருநாதரை இவ்வழியில் அடியேன் அடைந்து கொண்டேன்.

      அமீர் ஃகுஸ்ரோவின் குருநாதரான நிஜாமுத்தீன் அவ்லியா (ரஹ்) வரையிலான நான்கு குருமகான்கள் பற்றிய பாடல் வரிகள், உத்தமப்பாளையம் அன்வாருல்லாஹ் ஷாஹ் நூரீ (ரஹ்) அவர்கள் இயற்றிய ’கொடிவழிக் கும்மி’ என்னும் நூலிலிருந்து:

      ”தீனுக் குறுதுணை ஆனவராம் – அருட்
            செம்மலாம் காஜா முயினுத்தீனாம்
      ஞானக் குருபரன் தம்பொருட்டால் எங்கள்
            நாடு செழிக்கச் செய் நாயகனே!

      காஜாவாம் குத்புத்தீன் காக்கிவலீ – மிகக்
            கண்ணியம் வாய்ந்த பரீதுவலீ
      தேசுறு நாதாக்கள் தம்பொருட்டால் – நாங்கள்
            தீனை வளர்க்கத் திறனருளாய்!

      நானிலம் போற்றிடும் நிஜாமுத்தீன் அவ்லியா
            நல்லடி யாரவர் தம்பொருட்டால்
      மானில வாழ்க்கையும் மறுவுலகப் பேறும்
            மகிழ்ந்தளித் தாட்கொள்வா யெங்களையே!”


     நிஜாமுத்தீன் அவ்லியா அவர்கள் அடங்கியிருக்கும் தர்கா தில்லியில் இருக்கிறது. அதன் வளாகத்திலேயே அமீர் ஃகுஸ்ரோவின் தர்காவும் இருக்கிறது. அமீர் ஃகுஸ்ரோ தன் குருநாதர் மீது பாடிய பாடல்கள் அங்கே இன்றளவும் கவ்வாலி இசையுருவில் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. கவ்வாலி இசைக் கலைஞர்களில் அன்னாரின் பாடல்களைப் பாடாத ஒருவரையும் காட்ட இயலாது. அல்லாஹ் பக்‌ஷ், முபாரக் அலீ கான், நுஸ்ரத் ஃபதேஹ் அலீ ஃகான், முன்ஷி ரஜியுத்தீன், ஃபரீத் அயாஜ், சாப்ரி பிரதர்ஸ், வார்ஸி பிரதர்ஸ், ஆபிதா பர்வீன், ஜாஃபர் பதாயூனி என்று தொடரும் கவ்வாலிப் பாடகர்கள் அனைவருமே அமீர் ஃகுஸ்ரோவின் பாடல்களை மீண்டும் மீண்டும் பாடியிருக்கிறார்கள். (நுஸ்ரத் ஃபதேஹ் அலீ ஃகான் அவர்கள் முந்நூறு வருடங்களாகக் கவ்வாலி பாடி வரும் பரம்பரையில் பிறந்தவர். சூஃபி இசையின் சிகரம் என்று உலகம் போற்றும் அத்தகைய ஆளுமை பரிணமித்து வர அத்தனை ஆண்டுகள் ஆகியிருக்கின்றன!)

      தன் குருநாதரான நிஜாமுத்தீன் அவ்லியாவின் மீது அமீர் ஃகுஸ்ரோ கொண்டிருந்த ஆழிய அன்பை எடுத்துக் காட்டும் நிகழ்ச்சிகள் பல உண்டு. அவற்றில் சிலவற்றைக் காண்போம்.

      குருவின் மீது சீடன் எத்தகைய நம்பிக்கை வைத்திருக்கிறான் என்பது அவ்வப்போது சோதிக்கப் படலாம். அமீர் ஃகுஸ்ரோவும் அப்படிச் சோதிக்கப் பட்டிருக்கிறார்.

      ஒரு நாள், தன் சீடர்களுடன் தில்லியின் கடைவீதிகளில் பகலெல்லாம் நடந்திருந்த நிஜாமுத்தீன் அவ்லியா அவர்கள், பொழுது சாய்ந்து இருள் கவிந்த பின், விலைமகள் ஒருத்தியின் வீட்டின் முன் சென்று நின்றார்கள். அந்த விலைமகள் மிகுந்த கண்ணியத்துடன் மகான் அவர்களைத் தன் வீட்டின் மாடிக்கு அழைத்துச் சென்றுவிட்டாள். சீடர்கள் அனைவரும் வீட்டின் முன் நின்று கொண்டிருந்தார்கள். குரு தாமதிக்காமல் உடனே வெளியே வந்துவிடுவார்கள் என்று அவர்கள் நினைத்தார்கள். நேரம் நகர்ந்து கொண்டிருந்தது. மகான் இன்னும் வரவில்லை.

      அந்த விலைமாது மிகவும் வியந்து போயிருந்தாள். தன் விதியில் இப்படி ஒரு நல்லருள் எழுதப்பட்டுள்ளதா? என்று தன்னைத் தானே கேட்டுக் கொண்டாள். இத்தகைய புனிதமான மகான் பெரும்பாவியான தன் வீட்டிற்கு வந்திருக்கிறார் என்பதை அவளால் எப்படி நம்ப இயலும்? ”தங்களின் வருகையால் நான் ஆசீர்வதிக்கப் பட்டிருக்கிறேன். உங்களுக்கு நான் என்ன சேவை செய்ய முடியும்?” என்று அவள் கேட்டாள். “ஒரு தட்டில் உணவும், மதுக்குப்பியில் தண்ணீரும் கொண்டு வரும்படி உன் பணிப்பெண்ணிடம் கூறு. என் சீடர்கள் அதைக் கண்டு நான் உணவும் மதுவும் கொண்டுவரச் சொன்னதாக நினைத்துக் கொள்ளும்படி அவள் கொண்டுவர வேண்டும்” என்று மகான் சொன்னார்கள். அப்படியே நடந்தது.

      சீடர்களில் சிலரின் சிந்தனையில் ஊசாட்டம் வந்துவிட்டது. ”நாம் வசியத்தில் மாட்டிக் கொண்டிருந்தோம். குரு நாம் நினைத்தது போல் புனிதமானவர் அல்ல. இதோ அவர் மது அருந்துகிறார். விலைமாதுடன் இருக்கிறார்! எத்தனை மோசமான பேர்வழி!” என்று பலவாறு எண்ணியபடி அவ்விடத்தை விட்டு அகன்று போய்விட்டார்கள்.

இரவு செல்லச் செல்ல, மேலும் பல சீடர்கள் விலகிச் சென்று கொண்டே இருந்தனர். இறுதியில் அங்கே அமீர் ஃகுஸ்ரோ மட்டும் நின்றார். விடிந்தது. மகான் அவ்வீட்டில் இருந்து வெளியே வந்தார்கள். ”எல்லோரும் எங்கே?” என்று கேட்டார்கள். “அவர்கள் போய்விட்டார்கள் குருவே” என்றார் அமீர்.

      ”நான் மது வரவழைத்ததையும் தாசியுடன் இரவைக் கழித்ததையும் நீ பார்க்கவில்லையா? நீ மட்டும் ஏன் நிற்கிறாய்? நீயும் போக வேண்டியதுதானே?” என்று மகான் கேட்டார்கள்.

      ”குருவே! நானும் போகலாம்தான். ஆனால் தங்களின் திருவடிகள் அன்றி எனக்குப் போக்கிடம் வேறு எங்கே இருக்கிறது?” என்றார் அமீர் ஃகுஸ்ரோ.

      நிஜாமுத்தீன் அவ்லியாவின் இதயத்தில் அருள் சுரந்து அவர்களின் கனிவான முகத்தில் பேரொளி பொங்கி இலங்கியது. ”உன் காத்திருப்பு முடிந்தது. நீ முழுமை அடைந்துவிட்டாய்” என்று அமீர் ஃகுஸ்ரோவை அவர்கள் திருவாய் மலர்ந்து ஆசீர்வதித்தார்கள்.

      இன்னொரு நிகழ்ச்சி.
      அமீர் ஃகுஸ்ரோ அரசனுடன் வெளியூருக்குச் சென்றிருந்த சமயம். ஏழ்மையால் மிகவும் அவதிப்பட்ட ஒருவர் நிஜாமுத்தீன் அவ்லியாவிடம் பொருளுதவி கேட்க வந்தார். மகான் மஸ்ஜிதில் தியானத்தில் அமர்ந்திருந்தார்கள். அந்த நபர் மெல்ல அவர்களை அணுகித் தனது தேவையைச் சொன்னார். “வெளியே என் செருப்புகள் கிடக்கின்றன. அதை எடுத்துச் செல்” என்னும் உத்தரவு மகானின் உதடுகளில் பிறந்தது. அந்த நபர் செய்வதறியாது விழித்தார். செருப்புக்களை எடுத்துச் சென்று என்ன செய்வது? அவருக்குத் தேவைப்பட்டது நாற்பதாயிரம் பொற்காசுகள்! செருப்பு நாலு காசுகளுக்கு மேல் வராதே? எனினும், மகானின் உத்தரவைத் தட்டவும் அவருக்குப் பயமாக இருந்தது. தேய்ந்து போன செருப்புக்களைக் கையில் சுமந்து செல்லவும் வெட்கப்பட்டார். எனவே, மகானின் காலணிகளை ஒரு துணியால் சுற்றித் தன் கைகளில் எடுத்துச் சென்றார்.

தில்லிக்கு வெளியே அவர் நடந்து போய்க் கொண்டிருந்தார். எதிர் திசையிலிருந்து அமீர் ஃகுஸ்ரோ ஒரு குதிரையின் மீது இவர்ந்து ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தார். அந்த நபரின் அருகில் வந்ததும் குதிரையிலிருந்து சட்டென்று குதித்து இறங்கினார் அமீர். “உங்களிடம் ஏதோவொரு பொக்கிஷம் இருக்கிறது. அதை உடனே எனக்கு விற்றுவிடுங்கள்” என்று அந்த நபரிடம் சொன்னார். “என்னிடம் எந்தப் பொக்கிஷமும் இல்லையே. நான் பரம ஏழை ஐயா” என்று அவர் சொன்னார். “இல்லை, உம்மிடம் என் குருநாதரின் நறுமணம் வருகிறது! ஏதோ ஒரு பொருள் உங்களிடம் இருக்கிறது. மறைக்காமல் சொல்லுங்கள்” என்று அவரிடம் அதட்டலாகச் சொன்னார் அமீர். அந்த நபர் தன் கையிலிருந்த துணிப்பொட்டலத்தைப் பிரித்துக் காட்டினார். தன் குருநாதரின் காலணிகளைக் கண்களில் ஒற்றியபடி எடுத்துக் கொண்டார்கள் அமீர் ஃகுஸ்ரோ. அதற்கு விலையாக அந்த நபரின் கையில் ஒரு பணமுடிப்பை வைத்தார்கள். நாற்பதாயிரம் பொற்காசுகள்!

தில்லி திரும்பிய அமீர் ஃகுஸ்ரோ தன் குருநாதரை எதிர்பார்த்து மஸ்ஜிதின் வாசலில் நின்றார்கள். நிஜாமுத்தீன் அவ்லியா வெளியே வந்தபோது அவர்களின் காலணியைப் பணிவுடன் முன் வைத்தார்கள். “இதை எவ்வளவு கொடுத்து வாங்கினாய்?” என்றார்கள் மகான். “நாற்பதாயிரம் பொற்காசுகள்” என்றார் அமீர். புன்முறுவல் பூத்தபடி மகான் சொன்னார்கள், “மிகவும் மலிவாக வாங்கிவிட்டாய், அமீர்!”

இன்னொரு நிகழ்ச்சி.
ஒருமுறை நிஜாமுத்தீன் அவ்லியா அவர்கள் குதிரை மீது இவர்ந்து தில்லியின் கடைவீதியில் வந்து கொண்டிருந்தார்கள். அந்தக் காட்சி அங்கே வந்த அமீர் ஃகுஸ்ரோவின் உள்ளத்தில் பரசவத்தை மூட்டியது. ஓடோடிச் சென்று தன் குருநாதரின் கையில் முத்தமிட்டார். ”இன்னும் கீழே” (அவ்ர் நீச்சே ரே) என்றார்கள் மகான். உடனே மகானின் பாதத்தில் முத்தமிட்டார். “இன்னும் கீழே” (அவ்ர் நீச்சே ரே) என்று மீண்டும் மகான் சொனார்கள். சட்டென்று கீழே விழுந்த அமீர் ஃகுஸ்ரோ குதிரையின் குளம்பில் முத்தமிட்டார். “உன் காதல் ஏற்கப்பட்டது” என்று மகான் அருளினார்கள்.

புறத்திலிருந்து பார்ப்போருக்கு இந்நிகழ்ச்சிகள் எல்லாம் கடைவீதியில் நடந்தவை. அகத்தில் இருந்து காண்போருக்குத் தெரியும், இவை எல்லாம் காதலின் வீதியில் நடந்தவை. இனி, அமீர் ஃகுஸ்ரோவின் கவிதை வீதியில் உலா வருவோம்.


(to be continued)      

9 comments:

  1. http://m.youtube.com/watch?v=QUgnXoHoeTk chaap tilak

    ReplyDelete
  2. கவிதை வீதியில் தடம் பதிக்க காத்திருக்கிறேன்

    ReplyDelete
  3. ஆசிரியரின் அடுத்த பதிவுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன் ..

    ReplyDelete
  4. / ”குருவே! நானும் போகலாம்தான். ஆனால் தங்களின் திருவடிகள் அன்றி எனக்குப் போக்கிடம் வேறு எங்கே இருக்கிறது?” என்றார் அமீர் ஃகுஸ்ரோ./ கண்ணீரை வரவழைத்து விட்டது இந்த வரிகள்.

    ReplyDelete
  5. புறத்திலிருந்து பார்ப்போருக்கு இந்நிகழ்ச்சிகள் எல்லாம் கடைவீதியில் நடந்தவை. அகத்தில் இருந்து காண்போருக்குத் தெரியும், இவை எல்லாம் காதலின் வீதியில் நடந்தவை./// உண்மைதான்... இதயத்தை அப்படியே உருக்கி கண்களில் கண்ணீரை வரவழைத்து. அருமையான பதிவு.

    ReplyDelete
  6. அமீர் ஃகுஸ்ரோ அவ்லியா அல்லாஹ் அவர்களை ஜியாரத் செய்யவரும் மக்களின் காலனிகள் என் தலை மீது வைக்கிறேன், அதன்பொருட்டால் என் ஷைய்ஹின் மீது அவ்வாறு உண்மை காதலோடு இருக்கும் நாசீபை ஆதரவு வைத்த்தவனாக

    ReplyDelete
  7. மிக அருமையான பதிவு!!!

    ReplyDelete