இதுவரை நான்
வாசித்த நூல்களின் எண்ணிக்கையை நான் கணக்கு வைக்கவில்லை. பெரிய எண்ணிக்கை ஒன்றைச்
சொல்லுவதில் பெருமிதமும் இருக்க முடியாது. “நுண்ணிய நூல் பல கற்பினும் மற்றும் தன்
உண்மை அறிவே மிகும்” என்று திருவள்ளுவர் குட்டு வைக்கிறார். உன்னதமான ஒரே ஒரு நூலை
மட்டும் கசடறக் கற்பது நிச்சயமாக ஒரு பெரிய சாதனைதான். அப்படிக் கற்றவர்கள்
இருக்கிறார்கள். அந்தரிகி வந்தனமு (salutations to them all).
ஒருமுறை,
”இவ்வளவு நூல்களைப் படித்தால் மண்டை குழம்பிவிடாதா?” என்று என்னிடம் மாணவன் ஒருவன்
கேட்டான். “அது ஒருவரின் brain capacity - மூளைத் திறனைப் பொறுத்தது. பத்து
நூல்கள் படித்து மண்டை குழம்பிப் போகிறவனும் உண்டு. பத்தாயிரம் நூல்கள்
படித்தாலும் இயல்பாக இருப்பவனும் உண்டு” என்று சொன்னேன். வாசித்ததை எல்லாம்
நினைவில் வைக்க வேண்டும் என்று கவல்பவன் நிச்சயமாக வாசிப்பால் மனப் பிறழ்வே
அடைவான்.
வாசிப்புப்
பழக்கமும் இசைத்திறனும் உள்ள தாவரவியல் பேராசிரியரான என் நண்பர் அஸ்லம் ஒருமுறை
தொடர் புத்தக வாசிப்புப் பற்றி மாணவர்களிடம் இப்படிச் சொன்னார்: “Cruising through
knowledge.” இந்த வாசகம் எனக்கொரு உவமையைச் சிந்திக்கத் தருகிறது. கடலில் செல்லும்
மீன்பிடிப் படகு. திருலோக சீதாராமின் நூல் தலைப்பும் நினைவுக்கு வருகிறது:
“இலக்கியப் படகு.”
பாத்திரக்
கடல், ஜவுளிக் கடல் என்றெல்லாம் விளம்பரம் செய்கிறார்களே, அது போல் நூல்களின்
சேகரத்தை புத்தகக் கடல் என்று கற்பனை செய்யலாம். மனம் என்னும் படகை வாசகன் அந்தக்
கடலில் செலுத்துகிறான். மீனவர் கடலுக்கு தினமும் செல்வது போல் அன்றாட வாசிப்பு.
மீனவர் கடல் நீரை அள்ளி படகுக்குள்
நிரப்ப மாட்டார். அது போல் வாசிக்கும் எல்லாச் சொற்களையும் நம் மனதிற்குள்
நிரப்புவது இல்லை.
மீனவர் கடலின் விளைச்சலான மீன்களை வலை
வீசிப் பிடிக்கிறார். வாசகன் அது போல் தன் ரசனை அல்லது சிந்தனை என்னும் வலையை வீசி
ஒரு நூல் தருகின்ற முக்கியமான கருத்துக்களை மட்டும் பிடித்துக் கொள்கிறான்.
மீனவர் தான் பிடித்த எல்லா மீன்களையும் தானே சாப்பிடுவதில்லை. வாசகன் தான் அள்ளி வந்த எல்லாக் கருத்துக்களையும் செரித்துக் கொள்வதில்லை. சில நூற்கள் ருசிக்கத் தக்கவை, வெகு சில நூற்களே செரிக்கத்தக்கவை என்பர். அப்படிச் செரிக்கின்ற கருத்துக்கள்தாம் ஒருவரின் ஆளுமையை உருவாக்குகிறது.
”தி புக் லெகாஸி” என்னும் முகநூல்
வாய்க்காலில் நேற்று வாசிப்புக் குறித்து ஒரு சிறிய நீதிக் கதையைப் படித்தேன். அதை
இங்கே தமிழாக்கித் தருகிறேன்:
ஆர்வமுள்ள சீடன் ஒருவன் தன் ஆசானிடம்
கேட்கிறான், “நான் ஏகப்பட்ட நூல்களைப் படித்திருக்கிறேன். ஆனால் பெரும்பாலான
நூல்கள் மறந்து போய்விட்டன. படிப்பதில் என்ன அர்த்தம் இருக்கிறது?”
ஆசான் அவனை மௌனமாகப் பார்த்தார். அவன்
வினாவுக்கு அவர் விடை ஏதும் சொல்லவில்லை.
சில நாட்கள் கழிந்தன. அவர்கள்
ஆற்றங்கரை ஒன்றில் அமர்ந்திருந்தனர். திடீரென்று அந்த முதிய ஆசான் அவனிடம்
சொன்னார்: “எனக்கு தாகமாக இருக்கிறது. எனக்குக் கொஞ்சம் தண்ணீர் கொண்டு வா. ஆனால்,
அங்கே தரையில் கிடக்கும் பழைய வடிகட்டியில் அள்ளி வா.”
சீடனுக்கு ஒன்றும் புரியவில்லை.
“ஓட்டைகளால் ஆன வடிகட்டியை வைத்து எப்படி நீரை அள்ள முடியும்?” என்று மனதில்
எண்ணினான். ஆனால் ஆசானிடம் வாதாடும் தைரியமும் இல்லை. அவன் குழப்பத்துடன் அவரைப்
பார்த்தான். அவர் கண்களை மூடி தியானத்தில் அமர்ந்துவிட்டார். வேறு வழியின்றி துரு
ஏறிக் கிடந்த அந்தப் பழைய வடிகட்டியை எடுத்துக் கொண்டு ஆற்றில் நீர் சேந்தச்
சென்றான்.
ஒருமுறை, இருமுறை, பலமுறை அவன் நீர்
அள்ள முயன்றபோதும் ஒரு சொட்டு நீரைக் கூட அள்ள முடியவில்லை. எப்படி முடியும்? தன்
உள்ளங்கையால் ஓட்டைகளை அடைத்துக்கொண்டு அள்ளிப் பார்த்தான். அப்போதும் தண்ணீர்
வழிந்து போனது.
களைத்தும் வெறுத்தும் அவன் ஆசானிடம்
திரும்பி வந்தான். “மன்னியுங்கள் ஆசானே! என்னால் நீர் அள்ளி வர முடியவில்லை.
அதற்குச் சாத்தியமே இல்லை” என்றான்.
ஆசான் அவனைக் கனிவாகப் பார்த்துச்
சொன்னார், ”பரவாயில்லை. உன் மீது குற்றம் ஏதுமில்லை. வடிகட்டியை வைத்து நீர் அள்ள
முடியாது என்பது எனக்கும் தெரியும். ஆனால், இப்போது உன் வடிகட்டியைப் பார்.”
அப்போதுதான் அவன் தன் கையில்
வைத்திருக்கும் வடிகட்டியை கவனித்துப் பார்த்தான். துருவேறிய பழைய வடிகட்டி
இப்போது புத்தம் புதுசு போல் பளபளத்தது. அதில் தண்ணீர் தங்கவே இல்லை என்றாலும்
நீரோட்டம் அதைக் கழுவி சுத்தமாக்கி விட்டிருந்தது.
ஆசான் அவனிடம் சொன்னார்: “வாசிப்பு
இதைத்தான் செய்கிறது. ஒவ்வொரு தகவலையும் நீ நினைவில் வைத்திருக்க வேண்டும் என்ற
அவசியம் இல்லை. வடிகட்டியில் நீர் போவது போல் நீ வாசிப்பதெல்லாம் நழுவிப் போகிறது
என்றாலும் கவலை இல்லை. ஏனெனில், நீ வாசிக்கும்போது உன் மனம் புத்துயிர் பெறுகிறது.
உன் ஆன்மா புதிதாகிறது. உன் சிந்தனைகளில் உயிர்வளி ஏறுகிறது. அதை நீ அப்போது
கவனிக்காமல் இருந்தாலும் ஒவ்வொரு கணமும் நீ உள்ளும் புறமும் மாற்றப்பட்டு
வருகிறாய்.”
அதுதான் வாசிப்பின் உண்மையான நோக்கம்.
உன் நினைவை நிரப்பிக் கொள்வது அல்ல; உன் மனம் மாசில்லாமல் தூய்மை அடைவது!
மேற்சொன்ன கதை நன்றாகத்தான்
இருக்கிறது. நூறு சதவிகித உண்மை என்றெல்லாம் பின்னூட்டம் இட்டிருந்தார்கள். ஆனால்,
என்னால் அப்படி ஏற்க முடியவில்லை. என் வாசிப்பும் அனுபவமும் வேறு விதமாகச்
சொல்கிறது.
எல்லா நூல்களும் மனதைச்
செம்மைப்படுத்தி விடாது. மனதைக் கெடுக்கக் கூடிய நூல்களும் இருக்கத்தான்
செய்கின்றன. எனவே, மனதைத் தூய்மை ஆக்கக் கூடிய நூல்கள் என்று தேர்ந்தெடுத்துப்
படித்தால்தான் உண்டு. அப்படிப் படித்தாலும் ஒருவரின் மனம் தூய்மை ஆகிவிடும் என்று
எந்த உத்தரவாதமும் இல்லை. வேதத்தையே படித்தாலும் மனக் கசடு நீங்காதார் உண்டு.
‘சாத்தான் வேதம் ஓதுகிறது’ என்று ஒரு சொலவம் இருக்கிறதே!
நிறைய நூல்களை வாசித்து நான் கண்டு
கொண்ட உண்மைகளில் ஒன்று, வாசிப்பதால் மனம் தூய்மை அடையாது என்பதுதான். ’வித்யா
கர்வம்’ என்னும் படித்த ஆணவம் வேண்டுமானால் உண்டாகும், நிறைய பேருக்கு அப்படி
உண்டாகி விடுகிறது. வெகு சிலரே அதிலிருந்து தப்பிக்கின்றனர். அதற்கு ஆன்மிகப்
பயிற்சி வேண்டும்.
தன்னார்வமாக வாசிப்புப் பழக்கத்தை
வளர்த்துக் கொள்பவர்களுக்கே இந்த நிலை என்றால், கல்விப் புலம் சார்ந்து
பட்டங்களைச் சேகரிப்பவர்களின் நிலையைச் சொல்லவே வேண்டியதில்லை. அவர்கள்தாம் படித்த
முட்டாள்களாக உருவாகிறார்கள். இந்தியாவிலேயே அதிக பட்டங்கள் பெற்றவர், எண்பது
வயதில் தன் பிஏ பட்டப்படிப்பைப் படித்துக் கொண்டிருப்பவர் என்கிற ரீதியில் வரும்
செய்திகளைப் பார்க்கும்போது அவர்கள் மீது பரிதாபம்தான் தோன்றுகிறது. எப்படிப்பட்ட
வடிகட்டிய முட்டாள்கள். இந்தப் பட்டங்களால் சமூகத்தில் தமக்கு மதிப்பும்
மரியாதையும் கிடைக்கும் என்று நினைப்பவர்கள் இவர்கள். முறைசார் கல்வி என்பது ஓர்
அரசியல் பெருமிதம். அதைப் பற்றி அறிவுலக மேதைகள் எவ்வளவு ஒவ்வாமையுடன்
சொல்லியிருக்கிறார்கள் என்பதைச் சற்று சிந்தித்தால் போதும், அது எவ்வளவு
போலித்தனமானது என்பது விளங்கும்:
”மனிதர்கள் அறிவிலிகளாகப்
பிறக்கின்றனர், முட்டாள்களாக அல்ல. கல்விதான் அவர்களை முட்டாள்கள் ஆக்குகிறது!”
(“Men are born ignorant, not stupid. They are made stupid by education”)
என்கிறார் பெட்ரண்ட் ரஸ்ஸல்.
“கல்வியையும் நுண்ணறிவையும் குழப்பிக்
கொள்ளாதீர்கள். உன்னிடம் ஒரு பிஎச்டி (முனைவர்) பட்டம் இருக்கும் நிலையில் நீ ஒரு
முட்டாளாக இருக்கலாம்” (“Never
confuse education with intelligence. You can have a PhD and still be an idiot”)
என்கிறார் விஞ்ஞானி ரிச்சர்ட் ஃபெய்ன்மேன்.
“படிப்பு என்பது வயிற்றுச் சோற்றுக்கு வழியில்லாதவர்கள் மாதச் சம்பளத்துக்கு வழிதேடிக் கொள்ளும் முயற்சி” என்கிறார் சிந்தனையாளரும் இலக்கிய மேதையுமான ஜெயகாந்தன்.
இப்படியெல்லாம்
சொல்கிறார்கள் என்றால், உண்மையான கல்வி எது? உண்மையான அறிவு எது? நூல்களை
வாசிப்பதால் பெறப்படும் அறிவுக்கு எல்லை இருக்கிறது. அதற்கு அப்பால்தான் மெய்யறிவு
உள்ளது என்று உணர்வதே அதன் ஆரம்பம் ஆகும். அந்த மெய்யறிவை அடைவதற்கான பயிற்சி
முறையே ஆன்மிகம். அதுவே உண்மையான கல்வி.
”நான் இன்னும் மெய்யறிவில் செம்மை நிலையை அடையவில்லை என்று உணர்கிறேன். ஏனெனில் எனக்கு இன்னமும் நூல்களை வாசிக்கும் ஆர்வம் இருக்கிறது” என்று ஸூஃபி மகான் ஹக்கீமி ஷாஹ் ஃபைஜி அவர்கள் என்னிடம் ஒருமுறை சொன்னார்கள். மெய்யறிதலின் புலத்திற்குள் நுழைந்துவிட்ட ஒருவர்க்கு நூல்கள் தேவைப்படாது என்பது உண்மைதான். ஆனால், அவர்கள் நூல்களே வாசிக்க மாட்டார்கள் என்பது இதன் அர்த்தமன்று. தனக்குத் தேவைப்படாத நிலையிலும் தன்னால் வழிகாட்டப்படும் சாதகர்களின் தேவை கருதி ஓர் ஆசான் நூல்களின் வாசிப்பைத் தொடர்பவராக இருக்கலாம். மகான் அவர்கள் அந்த நிலையில் இருக்கிறார்கள் என்றும் அவர்கள் சொன்னது என் நிலையை எனக்கு உணர்த்துவதற்கான வழிகாட்டல் என்றும் நான் புரிந்துகொண்டேன்.
நூல்கள்
வாசிக்கும் ஆர்வம் எனக்கு இன்னமும் தொடர்கிறது; அகத்தைத் தூய்மையாக்கும் ஆன்மிகப்
பயிற்சியும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.







