Friday, June 28, 2024

இந்தக் காலம் அதுபோல…

 

       "Flow of Time" - Bruce Rollf

            ’புத்தி வந்தால் பத்தி போய்விடும்; பத்தி வந்தால் புத்தி போய்விடும்’ என்றொரு கோட்பாடு உண்டு. இது ஒரு மூட நம்பிக்கை. [தமிழ்க் குறிப்பு: பக்தி என்பதைத் தமிழில் பத்தி என்று எழுதலாம். ’முத்தி நெறி அறியாத மூர்க்கரோடும் முயல்வேனை, பத்தி நெறி அறிவித்து பழவினைகள் பாறும் வண்ணம்’ என்று மாணிக்கவாசகர் பாடுதல் பார்மின் (திருவாசகம் / அச்சோப் பதிகம்)]

            புத்தி என்பது அறிவு சார்ந்தது; பத்தி என்பது உணர்ச்சி சார்ந்தது. எனினும், இரண்டுமே உணர்வு சார்ந்தது (மீண்டும் ஒரு தமிழ்க் குறிப்பு: உணர்ச்சி என்பது emotion; உணர்வு என்பது பிரக்ஞை, conscience என்று சுட்டிக் காட்டினார் முதுமுனைவர் தி.ந.ராமச்சந்திரன் அவர்கள்.)

            உணர்ச்சிக்கு இடம் தராத தனி அறிவு என்றோ, அறிவுக்கு இடம் தராத தனி உணர்வு என்றோ கிடையாது. இதில் அதுவும் அதில் இதுவும் இடம் பெறும், தாக்கம் செலுத்தும். இரண்டும் ஒரே பிரக்ஞையில்தான் நிகழ்கின்றன.

            அறிவியலாளர்கள் என்றால் உணர்ச்சிமயமாக இருக்க மாட்டார்கள், அதற்கு மாறாக கண்டிப்பான வரட்டுத் தனத்துடன் இருப்பார்கள் என்று எண்ணுவதும், கவிஞர்கள் என்றால் அறிவுபூர்வமாக இருக்கமாட்டார்கள், அதற்கு மாறாக அசட்டுத்தனமான மிகையுணர்ச்சியுடன் இருப்பார்கள் என்று எண்ணுவதும் பொதுப் புத்தியில் உள்ள ஒரு புரிதல். என்ன செய்வது, அது சரிதான் என்று நிரூபிக்கும் வகையில் இருக்கும் சிலர் தம்மை விஞ்ஞானிகள் என்றும் கவிஞர்கள் என்றும் சொல்லிக் கொள்ளும்போது அப்படி ஒரு புரிதல் இருக்கத்தானே செய்யும்? ஆனால், அந்தப் புரிதல் மேலோட்டமானது, பிழையானது.

            அறிவின் உச்சத்துக்குச் செல்லும் விஞ்ஞானிகள் சட்டென்று கவித்துவமாகி உணர்ச்சியின் சிகரத்தைத் தொட்டுவிடுவதுண்டு; அதேபோல், உணர்ச்சியின் உச்சத்திற்கு ஏகும் கவிஞர்கள் சட்டென்று அறிவின் சிகரத்தில் ஏறி நிற்பதுண்டு.

            ”காலம் என்னும் கற்பனைக்கே பெரும் மயல் ஆகி…” என்று பாடுகிறார் திருலோக சீதாராம். காலம் எப்படி மனிதப் பிரக்ஞையால் கற்பனிக்கப்படுகிறது என்று ஐன்ஸ்டீன் பரக்கப் பேசியிருக்கிறார், அறிவியல் மொழியில். காலத்தின் எதார்த்தம் என்ன என்று காண முனைவது அறிவியலில் ஒரு தனி ஆராய்ச்சித் துறையாகத் தீவிரப்பட்டு வந்துள்ளது. அத்துறையில் எனக்கு ஆர்வம் உண்டு.


                       அண்மையில், கார்லோ ரோவல்லி என்பார் எழுதிய “The Order of Time” (கால ஒழுக்கு) என்னும் அறிவியல் நூலினை வாசித்தேன். ரோவல்லி இத்தாலியர். அவர் ஒரு கோட்பாட்டு இயற்பியலாளர். இத்தாலி, அமெரிக்கா, பிரான்சு மற்றும் கனடா ஆகிய நாடுகளில் பல்வேறு பல்கலைக்கழகங்களில் பணியாற்றியுள்ளார்.


            கார்லோ ரோவல்லியின் நூலை வாங்கும்படி என்னைத் தூண்டியது அவரது நூலில் அட்டையில் அவரைப் பற்றி எழுதப்பட்டிருந்த ஒற்றை வரிக் குறிப்பு: “Physics has found its poet” (இயற்பியல் தன் கவிஞனைக் கண்டடைந்துவிட்டது.) இது உண்மை, வெறும் புகழ்ச்சியில்லை என்று நூலை வாசித்தால் ஏற்றுக் கொள்வோம். [ரோவல்லி தன் தாய்மொழியான இத்தாலியில்தான் எழுதுகிறார். அவரின் இந்நூலை எரிகா செக்ரே மற்றும் சைமன் கார்னெல் ஆகியோர் மிக நேர்த்தியான அழகான ஆங்கிலத்தில் பெயர்த்துள்ளனர்.]

            கவிதையைத் தன் அறிவியல் தேடலுக்கான கருவிகளில் ஒன்று என்று ரோவல்லி காண்கிறார். ”உண்மையில், கவிதை என்பது அறிவியலின் ஆழமான வேர்களில் ஒன்று: புலன்களுக்கு அப்பால் காணும் ஓர் ஆற்றல் அது” [’The Order of Time’, ப.21] என்று அவர் சொல்கிறார். ‘ரவி பார்க்காததைக் கவி பார்ப்பான்’ என்றொரு முதுசொல் இங்கு உண்டு.

            நூலில் உள்ள அத்தியாயங்களின் தலைப்புகளில் சில எனக்கு மிக அற்புதமான ஆப்த வாசகங்களாகத் தெரிகின்றன. அவற்றை வரிசை கூட்டிப் பார்த்தாலே ஓர் அற்புதமான ஞானக் கவிதை போல் தோன்றுகிறது:

            ஆம், காலம்தான் மாபெரும் மர்மம்.

            காலம் பொடிப் பொடி ஆதல் / காலத்தின் நொறுங்கல்

            உலகம் நிகழ்வுகளால் ஆகியுள்ளது, பொருட்களால் அன்று.

            காலம் என்பது அறியாமை.

            உறக்கத்தின் சகோதரி.

            இந்தத் தலைப்புகள் மிகச் சிறந்த கவித் தீற்றல்கள் என்று சொன்னால் மறுக்க முடியுமா?

            ”காலம் பொடிப் பொடி ஆதல்” / ”காலத்தின் நொறுங்கல்” என்னும் வரியை வாசிக்கையில் பாரதி எழுதிய ‘ஊழிக் கூத்து’ ஞாபகம் வரவில்லையா?

            எத்திக்கினிலும் நின் விழி அனல் போய் எட்டித் – தானே

            எரியும் கோலம் கண்டே சாகும் காலம்!

என்னும் வரி, குறிப்பாக.

            உறக்கத்தின் சகோதரி என்று இங்கே குறிப்பிடப்படுவது மரணம். இது சிம்ஃபொனி இசையின் பேராளுமைகளில் ஒருவரான பாக் சொன்ன வாசகம்.

            ’பாக்’கிற்கு நதி மூலம் ஒரு நபிமொழி: “உறக்கம் என்பது மரணத்தின் சகோதரன்.”

            இனி, காலம் எத்தகைய உணர்ச்சிகளை எல்லாம் தூண்டி நடத்துகிறது என்று பார்க்க, கார்லோ ரோவல்லி எழுதிய நூலின் ஒரு சிறு பகுதியை வாசிக்கலாம்:

            ”நம் நிகழில் நம் கடந்த காலத்தின் தடயங்கள் மொய்க்கின்றன. நாம் நமது வரலாறுகளாய் இருக்கிறோம். கதையாடல்கள். நான் என்பது சோஃபாவில் சாய்ந்தபடி மடிக்கணியில் ‘அ’ என்னும் எழுத்தினைத் தட்டிக் கொண்டிருக்கும் இந்த கணநேரச் சதைக் குவியல் இல்லை. நான் எழுதிக் கொண்டிருக்கும் சொற்றொடர்களின் ரேகைகள் நிரம்பிய எண்ணங்கள் நான். நான் என் அம்மாவின் அரவணைப்புகள்; என்னை வழிநடத்த என் தந்தை என் மீது காட்டிய அமைதியான அன்பு நான். நான் என் விடலைப் பருவப் பயணங்கள்; என் வாசிப்பு என் சிந்தையின் அடுக்குகளில் படிய வைத்திருக்கும் உள்ளடக்கம் நான். நான் என் காதல்கள்; என் விரக்தியின் கணங்கள்; என் நட்புகள்; நான் எழுதியவை, நான் கேட்டவை; என் நினைவுப் புலத்தில் செதுக்கப்பட்டுள்ள முகங்கள். நான், எல்லாவற்றுக்கும் மேல், ஒரு நிமிடத்திற்கு முன் தனக்காக ஒரு கோப்பைத் தேநீர் தயாரித்துக் கொண்ட ஒருவன்; ஒரு கணத்திற்கு முன் தனது கணினியில் ‘நினைவு’ என்னும் சொல்லைத் தட்டச்சு செய்த ஒருவன். இப்போது நான் நிறைவு செய்யும் சொற்றொடரை இப்போது கோர்வை பண்ணிய ஒருவன். இதெல்லாம் மறைந்துவிட்டால், அப்போதும் நான் இருப்பேனா? நான் இந்த நீளமான, எழுதப்பட்டுக் கொண்டிருக்கும் நாவல். அது என் வாழ்வின் உள்ளடக்கம்.

”நினைவுதான், காலத்தின் ஊடாகச் சிதறிக் கிடக்கின்ற, எதனால் நாம் உருவாகியுள்ளோமோ அந்த நிகழ்வுகளை ஒன்றாகப் பற்றவைக்கிறது. இந்த நோக்கின்படி, நாம் காலத்தில் இருக்கிறோம். இந்தக் காரணத்திற்குதான், நான் நேற்று இருந்த அதே நபராக இன்றும் இருக்கிறேன். நம்மைப் புரிந்து கொள்வது என்பது காலத்தைப் பற்றிச் சிந்திப்பது. ஆனால், காலத்தைப் புரிந்து கொள்ள நாம் நம்மைப் பற்றிச் சிந்திக்க வேண்டும்.” [‘The Order of Time’, பக்.154-155.]


இன்னும் கொஞ்சம் காட்டுதும். “உறக்கத்தின் சகோதரி” என்னும் இறுதி அத்தியாயத்தின் தொடக்கத்தில் உள்ள சில பத்திகளை வாசிப்போம்:

“இந்தியாவின் பெருங்காவியமான மகாபாரதத்தின் மூன்றாம் பாகத்தில், யக்‌ஷா என்னும் வலிய ஆன்மா, பாண்டவர்களில் மூத்தவரும் அதிக ஞானம் உள்ளவரும் ஆன யுதிஷ்டிரனிடம், மர்மங்களில் எல்லாம் மிகப் பெரிய மர்மம் எது? என்று கேட்கிறான். அவர் சொன்ன விடை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு அப்பால் எதிரொலிக்கிறது: ‘ஒவ்வொரு நாளும் எண்ணற்ற மக்கள் சாகின்றனர். ஆனாலும், உயிருடன் இருப்போர் தாம் அமரர்கள் என்பது போல் வாழ்கின்றனர்.’

”நான், நான் ஓர் அமரன் என்பது போல் வாழ விரும்ப மாட்டேன். நான் மரணத்தை அஞ்சவில்லை. நான் வேதனையை அஞ்சுகிறேன். நான் இப்போது என் தந்தையின் அமைதியான மற்றும் சுகமான முதிய வயதைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்றாலும் நான் முதுமையை அஞ்சுகிறேன். நான் பலவீனத்தை அஞ்சுகிறேன், காதல் இன்மையை அஞ்சுகிறேன். ஆனால் மரணம் எனக்கு அச்சம் தருவதில்லை. நான் சிறுவனாக இருந்தபோது அது எனக்கு பயம் தரவில்லை; அது வெகு தொலைவில் இருக்கிறது என்று நான் அப்போது கருதினேன் என்பதே காரணமாக இருக்கலாம். ஆனால், இப்போதும், என் அறுபது வயதிலும், அது இன்னும் உண்டாகவில்லை. நான் வாழ்வை நேசிக்கிறேன். ஆனால், வாழ்க்கை என்பது போராட்டம், துயரம், வேதனை ஆகியவையும்தான். மரணம் என்பது நன்கு சம்பாதிக்கப்பட்ட ஓர் ஓய்வு என்றே நான் கருதுகிறேன். பாக் தனது அற்புதமான கன்டாடா BWV 56-இல் அதனை உறக்கத்தின் சகோதரி என்று அழைக்கிறார். அன்பான சகோதரி. என் இமைகளை மூடி என் தலையை வருடிக் கொடுக்க விரைவில் வருவாள்.

“தான் ’நாட்கள் நிரம்பியவனாய்’ இருக்கும் நிலையில் யோபு மரித்தான். இது ஒரு அற்புதமான வெளிப்பாடு. ‘நாட்கள் நிரம்பி’யதை உணரும் தருணத்தை அடைய வேண்டும் என்றும் நம் வாழ்க்கை என்னும் சிறு வட்டத்தை முழுமைப்படுத்தி முடிக்க வேண்டும் என்றும் நானும்கூட விரும்புகிறேன். இப்போதும், அதில் நான் திளைக்க முடிகிறது, ஆம்; கடலில் பிரதிபலிக்கும் நிலா, நான் காதலிக்கும் பெண்ணின் முத்தங்கள், அனைத்துக்கும் அர்த்தம் தரும் அவளின் உடனிருப்பு ஆகியவற்றை இப்போதும் அனுபவிக்கிறேன்; முன்பு போல் என் வீட்டில் மழைக்காலத்தின் பிற்பகல்களை, சோஃபாவில் சாய்ந்தபடி குறியீடுகளாலும் சூத்திரங்களாலும் காதிதங்களை நிரப்புவதை, நம்மைச் சுற்றிலும் நிரம்பியிருக்கும் ஆயிரமாயிரம் ரகசியங்களில் இருந்து ஒரு சிறு ரகசியத்தைக் கைப்பற்றுவதாகக் கனவு காண்பதை இப்போதும் சுகிக்கிறேன்…  மென்மையாகவும் அதே சமயம் மூர்க்கமாகவும், தெளிவாகவும் அதே சமயம் பூடகமாகவும் புதிராகவும் இருக்கின்ற உயிரோட்டமான வாழ்க்கையை இந்தப் பொற் கிண்ணத்தில் இருந்து மேலும் பருக வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன். ஆனால் அந்தக் கோப்பை தரும் கசப்பான அமுதத்தை ஏற்கனவே நான் ஆழ்ந்து பருகிவிட்டேன். இக்கணமே வானவர் ஒருவர், “கார்லோ, நேரமாகி விட்டது,” என்று சொல்லிக்கொண்டு என் முன் வந்து நின்றால், இந்த வாக்கியத்தை முடிக்கும் வரை அவகாசம் தாருங்கள் என்று கூட கேட்க மாட்டேன். அவரைப் பார்த்து புன்னகை செய்தபடி கிளம்பிவிடுவேன்.”


ஏறத்தாழ இருநூறு பக்கங்கள் நீளும் நூலில் குவாண்டம் அறிவியலின் கோட்பாடுகள் மற்றும் சொல்லாடல்களின் வழியாக ‘காலம்’ என்பதை ஆராய்ந்து செல்லும் கார்லோ ரோவல்லி இந்த நூலை முடிக்கும்போது மீண்டும் ஒரு கவிஞராகவே காட்சி அளிக்கிறார். இம்முறை கவிதைகூட தோற்றுவிடுகிறது. காலம் என்பதை ஆழமாக உணர்த்த இசையே கருவியாகிறது. நூலின் இறுதி இரண்டு பத்திளை வாசித்து அமைவோம்:

“அப்புறம், அகஸ்டின் அவதானிப்பது போல், இசை என்பது கால போதம் (அதாவது, காலம் பற்றிய உணர்வு (அதாவது, பிரக்ஞை)). அதுவே காலம்தான். காலம் மலர்தலாக இருக்கும் வேத துதிகளே அது (ராபர்டோ கலாஸ்ஸோ சொன்ன கருத்து.) பீத்தோவனின் மிஸ்ஸா சாலெம்னிஸ் என்னும் கோர்வையின் பெனடிக்டஸ் (துதி / பிரார்த்தனை)யில் வைலின் இசை என்பது தூய அழகும் தூய துயரும், தூய ஆனந்தமும் கலந்த ஒன்றாக இருக்கிறது. இதுதான் அர்த்தத்தின் ஊற்றாக இருக்க வேண்டும் என்று ஓர் மர்ம உணர்வுடன் நாம் மூச்சடைத்து அந்தரத்தில் மிதக்கிறோம். இதுதான் காலத்தின் நதிமூலம் என்று உணர்கிறோம்.

“அப்படியே, அந்தப் பாடல் தேய்ந்து மறைகிறது. ‘வெள்ளிச் சரடு அறுந்தது, பொன் விளக்கு நொறுங்கிற்று, நீர்ச்சுனையில் தாழி உடைந்து, வாளி கைநழுவி கிணற்றுக்குள் விழுந்து, புழுதி மண்ணுக்கு மீள்கிறது’ (பிரசங்கி 12:6-7) இப்படி இருப்பது நன்றாகத்தான் இருக்கிறது. நாம் நம் கண்களை மூடி ஓய்வு பெறலாம். இதெல்லாம் எனக்கு இனிதாகவும் அழகாகவும் படுகிறது. இதுதான் காலம்.”

ஓ! காலம் கருதினும் கைகூடும்!