Wednesday, January 19, 2022

சிந்தையில் ஆயிரம் வினாக்கள்

 


               ”காதலின் நாற்பது விதிகள்” மற்றும் “ஜின்களின் ஆசான்” ஆகிய இரண்டு மொழிபெயர்ப்பு நாவல்கள் சீர்மை பதிப்பக வெளியீடாக வந்து ஒருமாதம் ஆகிவிட்டது. இவற்றை மொழிபெயர்த்த அனுபவங்களை எழுதும்படி சீர்மை உவைஸ் சொன்னார். உள்ளம் அசை போடுகிறதே தவிர எழுதும் முனைப்பு எழவே இல்லை. அவ்வப்போது முகநூலில், இணைய தளத்தில் என்று யாராவது இந்த நாவல்களைப் பற்றி எழுதுகிறார்கள். நிஷா மன்சூர், சௌந்தர், இமான் ஆகியோர் எழுதிய விமர்சனங்களை வாசித்து யோசித்துக் கொண்டிருந்தேன். ஆனால், நான் எதுவும் எழுத வேண்டும் என்று அமையவில்லை.

            இரண்டு நாட்களுக்கு முன்னர் சீர்மை உவைஸ் யூடியூப் காணொளி ஒன்றின் இணைப்பை அனுப்பி அவசியம் காணவேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். பத்து நிமிடம் பார்க்கலாம் என்று ஆரம்பித்தது. முழுக் காணொளியும் முடியும் வரை இடைவெட்டே இல்லாமல் பார்த்து முடித்தேன். “Decolonizing Sufism: Sufism between Apolitical ‘Moderate’ Islam and New Age Appropriation” என்னும் அந்தக் காணொளி எத்தனையோ நினைவுகளையும் சிந்தனைகளையும் கிளரியபடி நகர்ந்தது.


            
அந்தக் காணொளி, மேற்சொன்ன தலைப்பில் டியூக் பல்கலையின் ஆசிய மற்றும் மத்தியக் கிழக்கு ஆய்வகத்தின் பேராசிரியர் முனைவர்.ஓமித் சஃபி நிகழ்த்திய உரையாகும். தெளிவாக நிதானமாக நிகழ்த்தப்பட்ட அந்த உரை மிக முக்கியமான பல சிந்தனைகளை வழங்கிற்று, குறிப்பாக, சூஃபிப் பேரிலக்கியங்களை மொழிபெயர்த்தல் தொடர்பாக.

            ”ஓரியண்டலிஸ்ட்ஸ்” என்று சொல்லப்படுகின்ற கிழக்கியலாளர்கள் சூஃபி இலக்கியங்களை மொழிபெயர்க்கும் போதெல்லாம் எப்படி அவற்றில் இருந்து வேண்டுமென்றே அவற்றின் இஸ்லாமியப் பரிமாணத்தை நீக்கி விடுகிறார்கள் என்பதையும், அத்தகைய பித்தலாட்டத்தின் பின்னணியில் உள்ள அரசியலை வெளிச்சமிட்டுக் காட்ட வேண்டிய காலத் தேவையையும் ஓமித் சஃபி சொல்லிச் செல்லச் செல்ல அடிவயிற்றைப் பிசைந்தது. குறிப்பாக இரண்டு பெரும் சூஃபி மகாகவிகளை அவர் மையப்படுத்திப் பேசினார்: காஜா ஹாஃபிஸ் மற்றும் மவ்லானா ரூமி. அதிலும், இவ்விருவரையும் மொழிபெயர்த்து இருபத்தோராம் நூற்றாண்டில் உலகமெங்கும் பரப்பியிருக்கின்ற, குறிப்பாக அமெரிக்காவில் கோடிப் பிரதிகளுக்கு மேல் விற்றிருக்கின்ற இருவரை மையப்படுத்தினார்: டேனியல் லாடின்ஸ்கி மற்றும் கோல்மன் பார்க்ஸ்.



            காஜா ஹாஃபிஸின் சூஃபி கவிதைகளின் மொழிபெயர்ப்பு என்னும் பேரில் டேனியல் லேடின்ஸ்கி இரண்டு நூற்கள் போட்டிருக்கிறார். அவை இரண்டும் உண்மையான ஹாஃபிஸைக் காட்டவே இல்லை என்கிறார் ஓமித் சஃபி. லேடின்ஸ்கி செய்திருப்பது அப்பட்டமான ஃபோர்ஜரி வேலை என்று குறிப்பிடுகிறார். ஹாஃபிஸின் பெயரால் இணையத் தளத்தில் பகிரப்படுகின்ற மேற்கோள்களில் 99.999% ஹாஃபிஸ் சொன்ன கருத்துக்களே அல்ல என்று சொல்கிறார். உள்ளம் திக்கென்றது. பத்துப் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன் டேனியல் லேடின்ஸ்கி எழுதிய “I heard God laughing: Poems of Hope and Joy” என்னும் நூலில் இருந்து சில கவிதைகளை ஒரு நாட்குறிப்பேட்டில் அழகிய சித்திர எழுத்தாக எழுதி வைத்தேன். அவற்றைத் தமிழில் பெயர்த்து ஒரு நூலாகக் கொண்டு வரலாம் என்ற எண்ணம் இருந்தது. ஏனோ அதில் ஒரு வரியைக் கூட மொழிபெயர்க்காமல் வைத்துவிட்டேன். சில ஆண்டுகள் கழித்து எடுத்துப் பார்த்தபோது எழுத்துக்கள் மங்கிப் போயிருந்தன. இதைச் செய்யாதே என்று அகத்துள் ஓர் உணர்வு. அப்படியே விட்டுவிட்டேன். ஓமித் சஃபி கூறியதைக் கேட்டதும் என் முடிவுக்கு மிகவும் மகிழ்ந்தேன். 



            கோல்மன் பார்க்ஸ் குறித்து எனது வலையத்தில் (பிரபஞ்சக் குடில்) அவ்வப்போது நான் எழுதியிருக்கிறேன். அடுத்து அவரைப் பற்றி ஓமித் பேச ஆரம்பித்ததும் நாடித்துடிப்பு ஒரு கணம் எகிரிற்று. கோல்மன் பார்க்ஸும் பாரசீக மொழி அறியாதவர்தான். ஆங்கிலத்தின் வழியாகத்தான் ரூமியை ’மீண்டும்’ ஆங்கிலப் பெயர்ப்புச் செய்கிறார் – பழைய மொழிபெயர்ப்பில் இருந்து புதிய வடிவ மொழிபெயர்ப்பாக மாற்றுகிறார். அவரது அத்தகைய ஒரு டஜன் நூற்கள் என்னிடம் உள்ளன. அதில் ஒன்றைத்தான் சீர்மை வெளியீடாக “நீருக்குள் மூழ்கிய புத்தகம்” என்னும் பெயரில் தமிழில் கொண்டு வந்தோம். டேனியல் லேடின்ஸ்கி போன்று கோல்மன் பார்க்ஸை நிராகரிக்க முடியாது என்றும், அவரின் நிலை சற்றே சிக்கலானது என்றும் ஓமித் சஃபி கூறியதும் சற்று நிம்மதியாக இருந்தது. கோல்மன் பார்க்ஸ், சஃபிக்கு நண்பர். நேரடியாகத் தொடர்பில் இருப்பவர். ஜியார்ஜியா பலகலையின் மேனாள் பேராசிரியரான கோல்மன் பார்க்ஸ் இலங்கையைச் சேர்ந்த எம்.ஆர்.பாவா முஹையுத்தீன் என்னும் சூஃபி ஞானியின் சீடர். தனது மொழிபெயர்ப்பு முறையை மறைக்காமல் தனது நூற்களிலேயே சொல்லியிருப்பவர். மேலும், இஸ்லாமியச் சமயப் பரிமாணத்தை ரூமியின் கவிதைகளை விட்டும் தான் ஏன் ’நீக்கம்’ செய்கிறார் என்பதற்கு அவர் சில காரணங்களைச் சொல்கிறார். அந்த அளவு வரை அவரிடம் வெளிப்படைத் தன்மை இருக்கிறது. சூஃபிகள் குறிப்பிடும் ”தவ்க் / ஜவ்க்” என்னும் ஆன்மிகச் சுவை / ருசி (”Flavor”) – மவ்லானா ரூமியின் மூல வரிகளில் இருப்பது – அது ஓரளவு கோல்மன் பார்க்ஸின் ஆங்கிலப் பெயர்ப்புக்களில் வந்துவிடுகிறது – ஒரு சொட்டாகிலும் தொட்டு விட முடிகிறது – என்பதை ஓமித் சஃபி ஒப்புக்கொள்கிறார். இது பெரும்பான்மையோர் ஒப்புக்கொண்ட ஒன்றே. எனவே, அவரது கவிதைகள் சூஃபித்துவத்தையே அறியாத வாசகர்களுக்கு சூஃபித்துவத்தின் மீது ஓர் ஆர்வத்தை உண்டாக்கவும், அவர்களுள் சிலர் முறையான சூஃபி நெறியினுள் நுழைவதற்கான ஒரு தூண்டலாகவும் அமையக்கூடும் என்று ஓமித் சஃபி சொல்கிறார். என் வாழ்க்கை அனுபவம் அதற்கான சாட்சி! கோல்மன் பார்க்ஸின் “The Essential Rumi” என்னும் நூலை வாசித்த பின் சூஃபி நெறிக்கான என் தேடல் பெரிதும் வேகம் எடுத்தது – கி.பி.2000-இல்.

            ”காதலின் நாற்பது விதிகள்” நாவலைப் பற்றியும் இடையில் ஓரிடத்தில் ஓமித் சஃபி பேசுகிறார். அதனை எழுதிய துருக்கிய எழுத்தாளரான (அமெரிக்காவில் வசிக்கிறார்) எலிஃப் ஷஃபாக் அவர்கள் அந்த நாவலில் காட்டியிருக்கும் ஷம்ஸி தப்ரேஸி மற்றும் மவ்லானா ரூமி ஆகியோரின் வரலாறு மிகவும் புனைவு கலந்து சித்தரிக்கப்பட்டுள்ள ஒன்றாகும். மேலும், சூஃபிகள் பற்றி ஷஃபாக் கொண்டுள்ள புரிதலுக்குத் தக அந்த வரலாறு எழுதப்பட்டுள்ளதே தவிர அதுவே முற்றிலும் உண்மை என்று ஆகிவிடாது. இந்த நாவலை மொழிபெயர்ப்பதில் எனக்கு மிகுந்த தயக்கம் இருந்தது. இப்பணியைச் செய்யலாமா வேண்டாமா, ஏன் செய்ய வேண்டும் என்றெல்லாம் சீர்மை உவைஸும் நானும் சென்ற ஆண்டு உரையாடினோம். ‘வேறு யாரும் கையில் எடுத்துத் திரித்துத் திரித்து மோசமாக எழுதி விடலாம். அதைத் தடுக்க வேண்டும் என்பதற்காகவாவது நாம் கொண்டு வந்துவிட வேண்டும்’ என்ற புள்ளியும் பேசப்பட்டது. எலிஃப் ஷஃபாக் சூஃபி அல்லர். சூஃபித்துவத்தில் அவர் போதிய அறிவும் அனுபவமும் உணர்வும் கொண்டவராகவும் தெரியவில்லை. எனினும், இது ஷம்ஸி தப்ரேஸும் மவ்லானா ரூமியும் இடம் பெறும் நாவல் என்பதற்காகவே மொழிபெயர்த்தேன். “நவீன அமெரிக்க மனம் உள்வாங்கும் விதத்தில் மவ்லானா ரூமியின் வரலாறு” என்றொரு வரி அதன் அட்டையிலேயே இடம் பெற வேண்டும் என்று எண்ணியிருந்தேன். அதாவது, அமெரிக்க மனம் என்பது ஒரு கோணல் கண்ணாடி. எனவே, பிம்பங்களை அது கோணலாகத்தான் காட்டும். வாசகர்கள் ஆகிய நாம் அதனை நேராக்கிக் காண வேண்டிய தேவை இருக்கிறது! ’இந்த நாவல் ரூமியை ஏதிலார்க்கு அறிமுகப் படுத்தும் பணியைச் செய்யும். அதற்காக மொழிபெயருங்கள்’ என்று உவைஸ் சொன்னதும் ஒரு புள்ளி. எனவே, இந்த நாவல் சூஃபி நெறியில் ஏற்கனவே இருப்பவர்களுக்கானது அல்ல. அவர்களுக்கு இது மனக் கசப்பைக் கூட உண்டாக்கலாம். ஏனெனில், ஷம்ஸி தப்ரேஸ் மற்றும் மவ்லானா ரூமி ஆகியோரின் நேர்த்தியான தோற்றங்களைக் காட்டும் தெளிவான நேரான கண்ணாடி அவர்களிடம் உண்டு. அமெரிக்க மனம் என்னும் கோணல் கண்ணாடி அவர்களுக்கு உருத்தவே செய்யும்.

            சூஃபித்துவத்தின் பேரிலக்கியங்கள் எல்லாம் எனக்கு ‘ஓரியண்டலிஸ்ட்’டுகள் அல்லது ‘இஸ்லாமிஸிஸ்ட்’கள் வாயிலாகவே, ஆங்கிலப் பெயர்ப்புகளின் வழியாகவே, அறிமுகம் ஆயின. எனவே, ஆர்தர் ஆர்பெரி, ரெய்னால்டு நிக்கல்சன், ஈ.எச்.வின்ஃபீல்டு, ட்பிள்யூ.எச்.டி.கார்டினர், ஃபாதர் தாக்ஸ்டன் போன்றோர் எல்லாம் தமது மொழிபெயர்ப்புக்களின் ஊடாக இஸ்லாத்துக்கு எதிரான பித்தலாட்டங்களை இலைமறை காயாகச் செய்து வைத்திருக்கிறார்கள் என்பதை நினைக்கும் போதே நெஞ்சம் நோகிறது. (இதில் உச்சம், உமர் கய்யாமின் கவிதைகளை எட்வர்டு ஃபிட்ஜெரால்டு பெயர்த்தது. மூலத்தைப் படித்துவிட்டு இவர் செய்த காரியத்தை நோக்கினால் ’எடுபட்ட பிச்சரால்டு’ எவ்வளவு பெரிய மோசடி செய்திருக்கிறார் என்று விளங்கும். யாருக்குக் கவலை?) 

மூலத்தை ஒருபோதும் வேறு மொழியில் துல்லியமாக பெயர்க்க முடியாது என்பது உண்மைதான். அது வேறு. ஆனால், மூலப் பிரதியின் கருத்தையே திரிப்பது வேறு. மேலும், அதை மூலப் பிரதியின் நோக்கத்தையே சிதைக்கும் வண்ணம், சமயக் காழ்ப்பின் காரணமாகச் செய்வது பெரும் குற்றமே. “If you consult any dictionary you will see that the word ‘exactitude’ is not among the synonyms of faithfulness. There are rather loyalty, honesty, respect, and devotion.” என்கிறார் உம்பர்த்தோ எகோ.



            டேனியல் லேடின்ஸ்கி செய்திருக்கும் ’ஹாஃபிஸ்’ மீதான குளறுபடிகள் குறித்துப் பேசும்போது ஓமித் சாஃபி ஒரு முக்கியமான ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார்: “காஜா ஹாஃபிஸ் ஷீராஸி (ரஹ்) அவர்களின் ஃபார்சி கவிதைகளை இஸ்லாமிய உலகம் எழுநூறு ஆண்டுகளாகப் பயின்று வருகிறது. சூஃபி குருமார்கள் அன்றி மார்க்க அறிஞர்களின் உரைகளிலும்கூட அவரின் கவிதை வரிகள் மேற்கோள் காட்டப்பட்டு வருகின்றன. தீவானே ஹாஃபிஸ் என்னும் அவரது கவிதைத் தொகுப்பிற்கு ஷரஹ் என்னும் விரிவுரைகள் எழுதப்பட்டிருக்கின்றன. அவரது கவிதைகளையும் சூஃபி பார்வையையும் ஆங்கில உலகத்திற்கு எடுத்துரைக்கக் கூடிய நல்ல நூற்களும் அவ்வப்போது தகுதியான அறிஞர்களால் எழுதப்படுகின்றன. ஆனால் எழுநூறு ஆண்டுகளாகத் தொடர்ந்து வரும் நம்பகமான மரபை முற்றிலுமாக மறுதலித்துவிட்டு, மறுத்துவிட்டு, இஸ்லாமிய நீக்கம் செய்வதையே குறிக்கோளாகக் கொண்டு மனம் போன போக்கில் அந்த சூஃபி ஞானியின் கவிதைகளுக்கு ‘போக்கிரி’த் தனமான வண்ணங்களை ஏற்றி நூல்கள் எழுதப்படுவதும், உலகின் முன்னணி பதிப்பகங்கள் என்று பீற்றிக் கொள்பவை அவற்றை வெளியிடுவதும் ஏன்? அடிப்படையான தகுதிகூட இல்லாத அத்தகையோர் எப்படி மிகுதியான புகழையும் பணத்தையும் அடைகிறார்கள்? அவர்களின் பிம்பங்களை ஊடகங்கள் ஏன் ஊதிப் பெருக்குகின்றன?”

            இந்தக் கேள்விகளுக்கான விடை உலகறிந்த ரகசியம். இஸ்லாமியோஃபோபியா என்னும் அரசியலும் கார்ப்பரேட் வியாபாரமும். சூஃபி மகான்களை இஸ்லாமிய நீக்கம் செய்து காட்டுவது என்பது இஸ்லாமியோஃபோபியாவை பரப்புவதன் ஓர் அங்கமாக இவர்களால் முன்னெடுக்கப்படுகிறது. சூஃபிகளின் ஞானச் செல்வங்களை முஸ்லிம்களே மறுதலிக்கும்படிச் செய்வதும் இதன் மூலம் சாத்தியமாகிறது. அதே சமயம், சூஃபிகள் எல்லாம் இஸ்லாத்தின் கட்டுப்பாடான சட்டங்களுக்கு எதிரானவர்கள் என்னும் பொய்ப் பிம்பத்தையும் கட்டமைத்துவிட முடிகிறது. இப்படி ஒரே கல்லில் இரண்டு அல்லது மேற்பட்ட மாங்காய்கள் விழுகின்றன.

            இந்த இடத்தில், “காதலின் நாற்பது விதிகள்” நாவல் குறித்து ஜோசஃப் இம்மானுவேல் எழுதியிருந்த பின்னூட்டத்தை நினைவு கூர்கிறேன். அதை உவைசுக்கும் அனுப்பி வைத்தேன். அதில் இருந்து ஒரு வரியைச் சுட்டிக்காட்டி உவைஸ் தனது கருத்தை எனக்கு எழுதினார்: “//இசுலாமியச் சட்டங்களுக்குள் அடங்காத ஷம்ஸை, மார்க்க வல்லுநர்களுக்கும் மத அடிப்படைவாதிகளுக்கும் பிடிக்கவில்லை.//  இந்த நோய் எல்லோரையும் பீடித்திருக்கிறது போலும். ரூமி, ஷம்ஸ் ஆகியோரை இவர்கள் இஸ்லாத்தின் கனிகளாகப் பார்க்க விரும்பவில்லை. இஸ்லாத்தை மீறிக்கொண்டு எழுந்த கலகக் காரர்களாகவே பார்க்கிறார்கள். இது படுமோசமான குறுகிய நோக்கு என்பதே என் எண்ணம். அது போன்ற எண்ணம் ஏற்பட ஓரளவுக்கு நாவலும் காரணம்.”

            ”இசுலாமியச் சட்டங்களுக்குள் அடங்காத ஷம்ஸ்..” இது தவறு. “இஸ்லாமியச் சட்டங்களுக்குள் அடங்காதவர் போல் தோன்றுகின்ற ஷம்ஸ்…” இது உண்மை. ஒரு சூஃபி ஞானி இஸ்லாமியச் சட்டங்களின் அந்தரங்கத்தையும் அறிந்து பேணுபவரே தவிர அவற்றைக் கைவிடுபவர் அல்லர். ஷரீஅத் என்னும் சட்டவியலின் ஏவல் விலக்கல்களைத் தன் வாழ்வில் பேணாதவர் சூஃபித்துவத்தின் கீழான நிலையில் கூட நிற்க முடியாது, அதில் மேனிலைகளை அடைவது பற்றிப் பேச்சே இல்லை. “ரூமி எப்போதும், தன் வாழ்வின் கடைசி வரை ஒரு ஃபக்கீஹ்-ஆக மார்க்கச் சட்டவியல் அறிஞராகத் தனது ஆசிரியப் பணியைத் தொடர்ந்து வந்தார். காலையில் அந்தப் பணி. இரவெல்லாம் சூஃபி ஞானியாகக் கவிதைகளை எழுதினார்” என்று ஓமித் சஃபி சொல்கிறார். இதுதான் உண்மையான சித்தரிப்பு. ஷம்ஸ் வடிவமைத்ததாக நாவலில் காட்டப்படும் ரக்ஸ் என்னும் சுழல் நடனம் – ஹதீஸ் அடிப்படையில் – நஃபில் என்னும் உபரியான தியானப் பயிற்சியாக உண்டாக்கப்பட்டதே அன்றி அதை ஷம்ஸோ ரூமியோ ஐவேளைத் தொழுகைக்குப் பகரமாக வைக்கவில்லை. அதேபோல், ரூமி அவர்கள் ஃகான்காஹ் என்னும் சூஃபி தியானக் கூடத்தைத் திறந்தார்கள், ஆனால் மதரஸாவை மூடிவிடவில்லை என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். “மவ்லானா ரூமி ஒரு வேளை தொழுகையைக் கூட விட்டவர் அல்லர்” என்று ஓமித் சஃபி சுட்டிக் காட்டுகிறார். இசுலாமியச் சட்டங்களுக்குள் அடங்காதவனாக, அல்லது அதை எதிர்க்கும் கலகக்காரனாக ஒருவன் இருந்தால் அவன் சூஃபியாக மாட்டான், ஷைத்தான் ஆவான். அவனை இஸ்லாமிய உலகம் வழிகேடன் (ஜிந்தீக்) என்று பார்க்குமே தவிர சூஃபி என்று கொண்டாடாது.   

            மவ்லானா ரூமியின் ஒரு ருபாயீ (நான்கடிக் கவிதை): ”மன் பந்தாயே குர்ஆனம் அகர் ஜான் தாரம் / மன் ஃகாக்கே ராஹே முஹம்மத் முஃக்தாரம் / கர் நக்லு குனத் ஜுஸீன் கஸ் அஸ் குஃப்தாரம் / பேஸாரம் அஸூ வ அஸீன் சுஃகன் பேஸாரம்” – ”உயிரோடிருக்கும் காலமெல்லாம் குர்ஆனின் அடிமை நான் / தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆன முஹம்மது நபியின் பாதையில் ஒரு தூசு நான்! / இந்த எனது வார்த்தைகளுக்கு முரணாக எவரேனும் என்னை முன்வைத்தால் / அவனுக்கும் எனக்கும் தொடர்பில்லை, அவன் சொல்வதையும் தள்ளுகின்றேன்!”

            இன்னொரு ருபாயீ பாடலில் மவ்லானா ரூமி சொல்கிறார்: “இஷ்க்கஸ்த் தரீக்கே ராஹே பைகம்பரே மா” – ”காதலே நமது இறைத்தூதரின் பாதையும் சாலையும் ஆகும்!”

            மார்க்கத்தின் வெளிப்படையான அறிவு நிரம்பப் பெற்றிருந்த மவ்லவியான ரூமியை ஷம்ஸி தப்ரேஸ் (ரஹ்) அவர்கள் எப்படி ஓர் மெய்ஞ்ஞானியாக (ஆரிஃப் பில்லாஹ்) ஆக்கினார்கள்? நபி முஹம்மத் (ஸல்) அவர்களின் காதலை அவரின் நெஞ்சில் பற்ற வைத்து – ஃபனா ஃபிர் ரசூல் – இறைத்தூதரில் தன் சுயத்தை அழித்தல் என்னும் முறையில் புடம் போட்டுத்தான் அப்படி ஆக்கினார்கள். “குர்ஆன் என்பது கிதாபே இஷ்க் (காதல் நூல்)” என்று ஷம்ஸி தர்பேஸின் ஞானப் பார்வையே ரூமிக்குக் கற்பித்தது.

            பல்கலைப் பேராசிரியப் பெருமக்களான ஆர்பெரி, நிக்கல்சன் போன்றோர் முற்றிலும் நேர்மையாகவே எழுதியிருப்பார்கள் என்று பார்த்தால் அதிலும் வழுக்கள் இருக்கின்றன என்றே ஆய்வுகள் காட்டுகின்றன. என்னை மிகவும் குடைந்து கொண்டிருந்த கவிதை ஒன்று உண்டு: “என்ன செய்வது முஸ்லிம்களே! / எனக்கே தெரியவில்லை என்னை /  கிறிஸ்தவனோ யூதனோ முஸ்லிமோ அல்ல நான் / கிழக்குமல்ல மேற்குமல்ல / தரையுமல்ல கடலுமல்ல / நிலம் நீர் ஆகாயம் காற்று எதுவுமல்ல / அரசனுமல்ல ஆண்டியுமல்ல / இந்தியனோ சீனனோ அல்ல / ஈராக்கியனோ கொராசானியனோ அல்ல / இம்மையைச் சேர்ந்தவனோ / மறுமையைச் சேர்ந்தவனோ அல்ல / எனது இடமோ இடமற்றது / எனது தடமோ தடமற்றது…” – இவ்வாறு செல்கிறது அந்தக் கவிதை. இந்த மொழிபெயர்ப்பு, சமீபத்தில் உமர் கய்யாமின் பாடல்களைத் தமிழில் பெயர்த்திருக்கும் நாகூர் ரூமி அவர்கள் செய்தது – “பாரசீகக் கவிஞானி ஜலாலுத்தீன் ரூமியின் கதைகள் கவிதைகள்” (சந்தியா பதிப்பகம், 2002) என்னும் நூலின் பின்புற அட்டைப் படத்தில் இருக்கிறது. அவ்வளவு முக்கியமான கவிதை – முகவரிக் கவிதை – என்று நினைத்திருக்கிறார் நாகூர் ரூமி. இது ரெனால்டு நிக்கல்சனின் ஆங்கிலப் பெயர்ப்பைத் தழுவியதாக இருக்க வேண்டும். ஏனெனில் இந்தக் கவிதை மவ்லானா ரூமியின் எந்த ஆதாரப் பூர்வமான கிரந்தத்திலும் இல்லை என்கிறார் ஓமித் சஃபி! இது மவ்லானா ரூமியின் கவிதையே அல்ல! இதைக் கேட்டதும் பெரிய நிம்மதியாக இருந்தது! ஏனெனில், கவிதையில் ஒரு சொற்றொடர் உறுத்துகிறது: “முஸ்லிமோ அல்ல நான்…” இதை வளைத்து நெளித்து எப்படியெல்லாமோ வியாக்கியானங்கள் சொல்லிக் கொண்டிருந்தார்கள். எல்லாம் ஒரே அடியில் பொட்டென்று போய்விட்டது. இடமற்றது தடமற்றது என்று இயைபுச் சந்தங்கள் எல்லாம் பிரமாதமாகத்தான் இருக்கிறது – தமிழ் மொழிபெயர்ப்பில். ஆனால், கவிதை ஆதாரம் அற்றதாமே? என்ன செய்வது நாகூர் ரூமி அவர்களே? ரெனால்டு நிக்கல்சன் நம் தலையில் பெல் பெப்பர் அரைத்திருக்கிறார். இதற்கான ஃபார்சி மூலம் என்றும் அவர் கொடுத்திருக்கிறார். எனில், அதை எழுதியதும் நிக்கல்சன்தானா?

            மவ்லானா ரூமியின் எழுபத்தாறு ருபாயியாத்களைத் தமிழாக்கம் செய்து ”ரகசிய ரோஜா” என்னும் பெயரில் 2007-இல் வெளியிட்டோம். (’ஆஸியா பதிப்பகம்’, திருச்சி, பதிப்பாளர்: பேராசிரியர் ஷே.நாகூர் கனி.) ஏ.ஜே.ஆர்பெரி செய்த ஆங்கில பெயர்ப்புத்தான் துணைமை. ஆனால், ஃபார்சி மூலம் எழுபத்தாறு பாடல்களுக்கும் சொல்லுக்குச் சொல் அர்த்தங்களுடன் வழங்கப்பட்டிருந்தது. அதனால் என் மொழிபெயர்ப்புச் சரியானது என்று எண்ண இடம் இருக்கிறது என்பதில் ஒரு நிம்மதி.  

            எல்லாரும் எல்லா சமய ஞான நெறிகளைப் பற்றியும் அறிந்து கொள்கின்ற, வாசிக்கின்ற வாய்ப்புக்களைத் தகவல் தொடர்பு ஊடகங்கள் உலகம் முழுவதும் சாத்தியப்படுத்தியிருக்கின்றன. ஜென் தாவோ யோகா ஹசித் என்று பற்பல ஞானத் துறைகள் குறித்தும் பல்வேறு ஞானிகள் குறித்தும் நான் நூல்ளை வாசித்திருக்கிறேன். அப்படித்தான், சூஃபி ஞானிகள் குறித்தும் உலகத்தினர் அனைவரும் வாசிப்பது நல்ல சூழ்நிலைகளை உண்டாக்கும். ஆனால், இதில் சமய நீக்கம் செய்து தவறான பிம்பத்தை, தோற்றத்தைக் கொடுப்பது என்பது மீண்டும் மீண்டும் சூஃபி ஞானிகளைக் குறி வைத்தே செய்யப்படுகிறது.



இந்தியாவில் காஜா நாயகத்தின் சிஷ்திய்யா தரீக்கா ஆயிரம் ஆண்டுகளைக் கடந்து செழித்துள்ளது. இங்கிருந்து வெளிநாடுகளுக்கும் பரவியுள்ளது. காதிரிய்யா மற்றும் சிஷ்திய்யா ஆகிய இரண்டு கொடிவழிகள், சூஃபி நெறிகள் இணையும் நெறியில் கடந்த இருபது ஆண்டுகளாக நான் சீடனாக இருக்கிறேன். லட்சக் கணக்கான சிஷ்திய்யா சீடர்களையும் நூற்றுக் கணக்கிலேனும் குருமார்களையும் கொண்டது தமிழகம். ஆரணி பாவா எம்.ஜே.கமாலுத்தீன் பாகவி (ரஹ்) என்னும் மாபெரும் குரு மொழிபெயர்த்ததும் எழுதியதுமான சிஷ்திய்யா தரீக்காவின் நூற்கள் பத்துப் பன்னிரண்டாவது என்னிடம் இருக்கின்றன. ”சிஷ்திய்யா ஷெய்குமார்கள் வரலாறு” என்பது அவற்றுள் ஒரு பெருநூலின் தலைப்பு. “காஜா மொய்னுத்தீன் சிஷ்தி” என்னும் தலைப்பில் ஞானியின் வரலாற்றை ஆர்.பி.எம்.கனி பி.ஏ.பி.எல் அவர்கள் அரை நூற்றாண்டுக்கு முன்பே எழுதி வெளியிட்டார். மறுபதிப்பு வந்திருக்கிறது. ஆனால் இங்கே தமிழின் முன்னணி எழுத்தாளர் ஒருவரின் இணைய தளத்தில் ஒருவர் “குவாஜா மொய்னுதீன் சிஷ்டி பாடல்கள்” என்று தலைப்பிட்டு ஞானியின் பாடல்களைப் பெயர்க்கிறார். Chisti என்று ஆங்கிலத்தில் எழுதுவதுண்டு, முஹம்மத் என்னும் பெயரை Mohamed அல்லது Mahomet என்று ஆங்கிலேயர்கள் – ஓரியண்டலிஸ்ட்டுகள் – வேண்டுமென்றே ஓசை திரித்து எழுதுவது போல. அதை தமிழ் மண்டூகம் அப்படியே ’சிஷ்டி’ என்று வழங்குகிறது. ’சிஷ்தி’ என்று சரியாக ஓசைப்படுத்தி எழுத இக்காலத்தில் மெனக்கெட வேண்டியதில்லை – எவ்வளவோ யூடியூப் காணொளிகள் உண்டு, கவ்வாலி இசைப் பாடல்கள் உண்டு. ஒருவேளை இது ’தாதா ஹிந்தல் வலி’ என்றும் ’கரீப் நவாஸ்’ என்றும் ‘ஃக்வாஜா பியா’ என்றும் கோடிக்கணக்கான சிஷ்தி முரீதீன்கள் (சீடர்கள்) அழைக்கும் எஜமான் ஃகாஜா மொய்னுத்தீன் சிஷ்தி (ரஹ்) அவர்களை இஸ்லாமிய நீக்கம் செய்யும் முயற்சியா? டேனியல் லேடின்ஸ்கி வகையறாக்கள் போல் இங்கே சுபஸ்ரீ வகையறாக்கள் கிளம்புகின்றனவா? சூஃபி ஞானிகளின் பெயர் ஓசைகளை, உச்சரிப்பைச் சிதைத்தல் என்பதும் கூட வேண்டுமென்றே செய்யப்படும் காழ்ப்புதானா? உமர் ஃகய்யாம் என்னும் பெயரை வேண்டுமென்றேதான் ‘உமார் கய்யாம்’ என்று கவிமணி தே.வி.பிள்ளை எழுதினாரா? சிந்தையில் ஆயிரம் வினாக்கள்.  

               ஒருபக்கம் சூஃபி மரபு இது போன்ற அக்கப்போர்களை எல்லாம் மறுதலித்துவிட்டு முன்னகர்ந்து போய்க்கொண்டே இருக்கிறது. உண்மையான சூஃபிகள் இருக்கிறார்கள். மூல மொழியிலேயே ரூமி, ஹாஃபிஸ், ஜாமி, சாஅதி முதலிய சூஃபிகளின் கவிதைகளை வாசித்து ஆழங்காற்பட்ட ஞானிகள் அவர்கள். ரூமியின் மஸ்னவி காவியத்துக்கு, என் அறிவுக்கு எட்டிய வரையில் சொல்கிறேன், நான் சார்ந்திருக்கும் சூஃபி நெறியில் இப்போது இரண்டு குருமார்கள் (ஷைகுகள்) தொடர் விரிவுரை நிகழ்த்தி வருகிறார்கள், ஒருவர் உருது மொழியில், மற்றொருவர் தமிழில். இது தொடர்ந்து வரும் மரபு. இங்கே “தாகங்கொண்ட மீனொன்று” என்று நூல் வெளிவருவதெல்லாம் அவர்களுக்கு ஒரு பொருட்டே அல்ல. அதெல்லாம் சிறு பிள்ளை விளையாட்டுக்கள். அந்த மரபுக்குள் இருந்தபடியேதான் எனது அடுத்தடுத்த பங்களிப்புக்களை நான் செய்ய விரும்புகிறேன், அவை எனக்கேயும் ஆன்மிகப் பயிற்சிகளாக அமையும் என்றால் மட்டும். அந்த நிலையில், மவ்லானா ரூமியின் “ஃபீஹி மா ஃபீஹி” என்னும் ஞான உரைத் தொகுப்பு நூலினை ஃபார்சி மூலம், உருது மொழிபெயர்ப்பு மற்றும் ஆங்கில மொழிபெயர்ப்பு ஆகியவற்றை ஒப்பிட்டுத் தமிழாக்கி வருகிறேன்.  


1 comment:

  1. ”இசுலாமியச் சட்டங்களுக்குள் அடங்காத ஷம்ஸ்..” இது தவறு. “இஸ்லாமியச் சட்டங்களுக்குள் அடங்காதவர் போல் தோன்றுகின்ற ஷம்ஸ்…” இது உண்மை. ஒரு சூஃபி ஞானி இஸ்லாமியச் சட்டங்களின் அந்தரங்கத்தையும் அறிந்து பேணுபவரே தவிர அவற்றைக் கைவிடுபவர் அல்லர். ஷரீஅத் என்னும் சட்டவியலின் ஏவல் விலக்கல்களைத் தன் வாழ்வில் பேணாதவர் சூஃபித்துவத்தின் கீழான நிலையில் கூட நிற்க முடியாது, அதில் மேனிலைகளை அடைவது பற்றிப் பேச்சே இல்லை.


    பளிச்சென்று வெளுத்து வாங்கிய வரிகள்.
    ஷரிஅத்தின் மீது தான் அனைத்து தரீகத்துகளும் கட்டமைக்கப்பட்டிருக்கின்றன.

    அவ்வாறு அல்லாதவைகள் எப்படி தரீக்காவாகவோ, அவற்றை பின்பற்றுபவர்கள் சூபியாக்களாகவோ கருத முடியும்.

    ReplyDelete