Wednesday, November 25, 2020

இல்லை வேறு பிறர்

             அண்மையில் முகநூலில் வந்த இரண்டு இடுகைகள் என்னை மிகவும் கவர்ந்தன.

உண்மையில் அவை இரண்டும் தோற்றத்தில் மட்டுமே இரண்டாக இருக்கின்றன. உள்ளடக்கம் ஒன்றே!

நான் இடுகைகளைப் பற்றித்தான் சொல்கிறேன். ஆனால், இப்படிச் சொல்வதே ஏதோ ஞானச் செய்தி போன்றுதான் தொனிக்கிறது அல்லவா? ஆம். அவ்விரு இடுகைகளும் ஞானச் செய்திதான்.

ஒன்று, ரமண மகரிஷியின் கருத்துக்களைப் பகிரும் குழுவினர் இட்டது. அஃது பின்வருமாறு:

“சீடன்: நாம் பிறரை எவ்வாறு நடத்த வேண்டும்?

ரமணர்: வேறு பிறர் இல்லை.”



இது ஒரு புகழ் பெற்ற உரையாடல் என்று தெரிகிறது. இதற்குப் பலரும் தாம் புரிந்து கொண்ட வகையில் விளக்கங்கள் சொல்கின்றனர்.

பிறர் என்று, நம்மின் வேறு என்று எவரையும் காணாதே. அனைவரையும் அனைத்தையும் தான் என்பதாகவே பார். இருப்பது ஒன்றே. எனவே வேறு பிறர் இல்லை என்று இதனை விளக்கலாம்.

மற்றது, ஷைகு பக்ருத்தீன் உவைசி என்பார் இட்டது. இஸ்லாமிய இறையியல், தத்துவம் மற்றும் ஆன்மிகக் கலந்துரையாடற் குழு (Islamic Theology, Philosophy & Mysticism Discussion Group) என்னும் குழுவில் வந்தது.

சூஃபி குரு (ஷைகு) ஒருவரின் முன் பணிவாக ஒரு சீடன் (முரீது) அமர்ந்திருக்கும் புகைப்படமும் அவ்விடுகையில் இடம் பெற்றுள்ளது. படத்திற்கான செய்தி இது:

“முரீது: ஷைகே! நாம் பிறரை எப்படி நடத்த வேண்டும்?

குரு: என் மகனே! வேறு பிறர் இல்லை!”



ஒரே செய்திதான். இரண்டு வெவ்வேறு ஆன்மிக மரபுகளில் அவரவர் வார்ப்பில், சீருடையில் வெளியாகி இருக்கின்றது. ஞானச் செய்திகள் பலவும் இப்படித்தான் ஒரு மரபில் இருந்து இன்னொன்றுக்கு என்று பயணித்த வண்ணம் உள்ளன. தாவோ ஜென் சூஃபி வேதாந்தம் என்று உலக ஆன்மிக மரபுகளுக்கு இடையே இப்படியான உயர்தள உறவாடலும் உரையாடலும் உண்டு.

இது எமது நுமது என்று சண்டை பிடிக்கும் களம் அன்று. ஞானிகள் இதையெல்லாம் புன்னகையோடு கடந்து போய்க்கொண்டே இருப்பர்.

ஆனால், சில செய்திகளின் மூலப் பிறப்பிடம் நமக்குத் தெரியவே செய்யும். இந்த ஞான உரையாடலின் மூலம் ரமண மகரிஷிதான் என்று எனக்குத் தெரியும்.

ஆனால், சூஃபி குழுக்களில் அவரது பெயரைச் சொன்னால் எல்லாரும் ஏற்பார்களா என்பது ஐயமே. எனவேதான் யாரோ ஒரு புண்ணியவான் ரமண மகரிஷியை சூஃபி ஷைகாக ஆக்கிவிட்டிருக்கிறார்.

ரமண மகரிஷி மீண்டும் மீண்டும் சுட்டிக் காட்டி வந்த ஒரு ஞானப் புள்ளி இது. இச்செய்தியின் மூல முகவரியைத் தேடியபோது “ரமண மகரிஷியுடன் உரையாடல்” (Talks with Ramana Maharishi) என்னும் பதிவுகளில் இருபதாம் உரையில் இச்செய்தி இருக்கக் கண்டேன். அது நிகழ்ந்த நாள் 30 ஜனவரி 1935.

எவான்சு வெண்ட்சு (Evans Wentz) என்பார் “தனித்திருத்தல்” என்னும் பொருண்மை பற்றி ரமண மகரிஷியிடம் நிகழ்த்திய சிறு உரையாடல் அது.

ஞானிகள் தனித்திருப்பதால் யாருக்கு என்ன பயன்? என்றொரு வினாவைத் தொடுத்து அதனை ஒட்டி எவான்சு வெண்ட்சு கேட்கும் வினாவும் ரமணர் பகர்ந்த விடையும் இவை:

”எ.வெ: அவர் பிறருடன் கலந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் அல்லவா?

ர.ம: கலப்பதற்குப் பிறர் இல்லை. ஆன்மா என்பது ஒன்றேயான ஒற்றை உண்மையே. (There are no others to mx with. The Self is one and only Reality).”

மேற்சொன்ன இடுகைகளில் ரமணர் குழுவின் இடுகைக்கு வந்திருந்த பின்னூட்டங்களில் ஒருவர் சொன்னது கவனத்தைக் கவர்ந்தது: “As always, straight to the bull’s eye”.

ஆம், இது நேராக எருதின் கண்ணில் எய்த கணை என்பது சரிதான்.

No comments:

Post a Comment