Thursday, November 19, 2020

கூட்டிக் கழித்துப் பார்

 


வீடு கூட்டணும், பாத்திரம் தேய்க்கணும்…” – வேலையாள் சேர்க்கும்போது ஆரம்பத்திலேயே சொல்லிக்கொள்ளும் நிபந்தனைகள்தான்.

வீடு கூட்டுவது என்னும் சொலவடையின் மீது சிந்தனை ஊன்றிற்று. “வீடு பெருக்கணும்” என்று சொல்லப்படுவதுமுண்டு.

கூட்டுதல், பெருக்குதல் – இரண்டுமே கணிதச் செயல்பாடுகள்தாம். எல்லாமே இங்கே இதில் ஒரு கணக்குதானே?

சரி. என்ன வேறுபாடு?

பெருக்குவது என்பது அதிகப்படுத்துவது.

கூட்டுவது என்பது ஒன்று சேர்ப்பது.

வீடு பெருக்குவது என்பதில் எது அதிகப்படுத்தப் படுகிறது? வீடு கூட்டுவது என்பதில் எது ஒன்று சேர்க்கப்படுகிறது?

வீடு கூட்டுவது என்பதில் துடைப்பம் (விளக்குமாறு, தூர்மாறு) கொண்டு வீட்டில் உண்டாகிக் கிடக்கும் குப்பைகளை, தூறுகளை, தூசுகளை எல்லாம் ஒன்று சேர்க்கிறோம், பிறகு நீக்குகிறோம் என்பது விளங்குகிறது. ஆனால் ’வீடு பெருக்குவது’ என்று ஏன் சொல்கிறோம்? குப்பைகளை, தூறுகளை, தூசுகளை நாமா பெருக்குகிறோம்?

ஆம். உண்மைதான். அவற்றை நாம்தானே உண்டாக்கினோம்? நம் புழக்கம்தானே அவற்றை உருவாக்குகிறது. அதை ஒப்புக்கொள்ளும் நேர்மை தமிழ் வாழ்வியலில் இருக்கிறது. எனவேதான் “வீடு பெருக்குதல்” (அதாவது, வீட்டில் பெருகிக் கிடக்கும் தூசு தும்புகளை வாரிச் சேர்த்தல்) என்னும் சொலவடை உண்டாகியிருக்கிறது!

சரி. பெருக்கிய தூசு தும்பு குப்பைகளை எல்லாம் கூட்டிச் சேர்த்து முறத்தில் அள்ளி மூலையில் கொட்டி ஆயிற்று. இனி என்ன?

வீட்டிலேயே வைத்திருக்கவா அது? கழித்துவிட வேண்டியதுதான். அதாவது, அதனை நீக்கி விட வேண்டியதுதான். நீக்குதல், கழித்தல்  என்பதும் ஒரு கணக்குத்தான்.

இப்படி, பெருக்கிக் கூட்டிக் கழிப்பதை எப்போதெல்லாம் செய்ய வேண்டும். அன்றாடம் செய்ய வேண்டும். தினப்படி வேலைதான் இது. முடிந்தால் நாளொன்றுக்கு இரண்டு மூன்று முறை செய்தாலும் நல்லது. இப்படி ஒரு வாழ்க்கை முறையை ’வகுத்து’ வைத்திருக்கிறது பண்பாடு. அதுவும் ஒரு கணக்குத்தான்!

இதெல்லாம் புறத்திலே இருக்கும் வீட்டில் நிகழ்வதுதானா?

வீடு என்பதற்குத் தமிழில் இன்னொரு பெயர் அகம் அல்லவோ?

அகம் என்றால் மனம் அல்லவோ?

அப்படியானால், மனத்திலும் இந்தக் கணக்கெல்லாம் நிகழும்தானே?

ஆம். நிகழ்கிறது.

மனத்தில் சிந்தனைகள் – எண்ணங்கள் பெருகுகின்றன.

சிதறிக் கிடக்கும் சிந்தனைகளைக் கூட்டுபவன் சிந்தனையாளன் ஆகிறான். (அதாவது, சிந்தனையை ஆளத் தெரிந்தவன்). சிந்தனைகளை அவன் தொகுத்துக் கொள்கிறான். வகைமைப் படுத்துகிறான். கூறு கட்டுகிறான். அப்படிச் செய்யத் தெரியாதவனைத்தான் “உனக்கு கூறு இருக்கா?” என்று வைவது.

தியானம் என்பதே மனதை அன்றாடம் பெருக்கிக் கூட்டும் வேலைதான் என்று ஞானியர் சொல்கிறார்கள். அது ஒரு துப்புறவுப் பணிதான். ஆன்மிகவாதி என்பவன் அகத் துப்புறவுத் தொழிலாளிதான்.

”காதலியின் அழகு” என்று பொருட்படும் “ஹுஸ்னே ஜானா” என்னும் தலைப்பில் 1997-இல் முசப்பர் அலி அவர்கள் இசைப்பேழை ஒன்றை வெளியிட்டார். 13-ஆம் நூற்றாண்டு முதல் 18-ஆம் நூற்றாண்டு வரை வாழ்ந்த சூஃபி ஞானிகளின் கவிதைகள் சிலவற்றுக்கு அவர் இசையமைத்திருந்தார். அதில் மீர் தகீ மீர், நாசிர் அக்பராபாதி, குலி குதுப்ஷா மற்றும் அமீர் குஸ்ரோ ஆகியோரின் கவிதைகல் அதிலிருந்தன. எழுதியவர் யாரென்று தெரியாத பழம்பாடல் ஒன்றும் அதில் இருந்தது. “நிகுரே நிகுரே புகாரோ ஆங்கனுவா ஓ கோரியா நிகுரே” என்னும் அந்தப்  பாடல் “தும்ரி” என்னும் இசை வடிவிலானது. வீடு பெருக்கிக் கொண்டிருக்கும் காதலியை வருணிப்பது அப்பாடலின் கருத்து. இக்காட்சி ஒரு சூஃபிக் குறியீடாகப் பயன்படுத்தப் படுகிறது. இறைவனின் ஒளி தியானிப்போனின் மனத்தைத் தூய்மை செய்வதாக அதனைப் பொருட்படுத்தலாம். துடைப்பம் கொண்டு அக வீட்டைத் தூய்மை செய்யும் வாலைக் குமரி!

பெருக்கிக் கூட்டிய குப்பைகளை எல்லாம் எப்படிக் கழிப்பது? என்றொரு கேள்வி எழுகிறது.

சும்மா கொண்டு போய் ’அந்தண்டை’ போட்டுவிடலாம். தெருவுக்குத் தெரு முக்கில் மாநகராட்சிக் குப்பைத் தொட்டிகள் முன்பெல்லாம் இருந்தன. இப்போது குப்பை சேகரிப்பு வாகனம் வருகிறது. ஆட்கள் வாங்கிக் கொண்டு போகிறார்கள். அப்படிக் கழித்து விடலாம்.

செத்தைக் குப்பைகள் சேர்ந்தால் என்ன செய்கிறோம்? கொளுத்தி விடுகிறோம். அதுவும் ஒரு கழித்தல் முறைதான்.

தமிழில் இச்சொல்லும் அறிவுடன், ஞானத்துடன் தொடர்பு கொண்டுள்ளது. அறிவு கற்பித்தலை “அறிவு கொளுத்துதல்” என்று சொல்லும் வழக்கம் தமிழில் உண்டு.

தேவையில்லாத எண்ணங்களை கூட்டிச் சேர்த்துக் கொளுத்தி இல்லாமல் ஆக்கும்போதுதான் உண்மை அறிவு வாய்க்கும் என்று இது சுட்டுகிறது.

இப்பொருளில்தான் சூஃபி ஞானி மவ்லானா ரூமி அவர்கள் “நூறு நூல்களையும் நூறு தாள்களையும் கொளுத்தி விடு” (சத் கிதாபோ சத் வரக் தர் நார் குன்) என்று பாடியுள்ளார்கள.



painting on top

A girl with hookah and broom by Raja Ravi Varma

No comments:

Post a Comment