Monday, November 2, 2020

சிறுந்தொகை?


          எம்.ஃபில் என்று ஆங்கிலத்தில் சுருக்கி அழைக்கப்படும் ஆய்வியல் நிறைஞர் பட்டப்படிப்புச் சேர்க்கைக்கான நேர்காணலைத் தொலைபேசி வழி நிகழ்த்திக் கொண்டிருந்தேன். பள்ளி ஆசிரியர் ஒருவர் பேசினார்.

            ”உங்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டால் எதில் ஆய்வு நிகழ்த்துவீர்கள்?” என்று அனைவரிடமும் கேட்கும் வழக்கமான கேள்விகளுள் ஒன்றை அவரிடமும் கேட்டேன்.

            ”தமிழ்லதான்” என்று சொல்லி அசத்தினார்!

            ”தமிழ் இலக்கிய நெடும்பரப்பில் பல வகையான இலக்கியங்கள் இருக்கின்றன. அவற்றில் எது உங்களுக்குப் பிடிக்கும்?” என்று கேட்டேன். புரியாமல் தடுமாறினார்.

            ”சங்க இலக்கியம்னா பத்துப் பாட்டு எட்டுத் தொகை நூற்கள் இருக்கு. அதுல சிலர் ஆய்வு செய்வாங்க. உதாரணமாக, ’குறுந்தொகையில் தமிழர் பண்பாடு’ங்கற மாதிரி செய்வாங்க. நவீன இலக்கியம்னா நாவல் சிறுகதை கவிதை நாடகம்னு வகைகள் இருக்கு. அதுல ஏதாச்சும் ஒன்ன எடுத்து ஆய்வு செய்வாங்க…” என்கிற போக்கில் மூன்று நான்கு நிமிடங்கள் (’ஈ’யப் பாத்திரத்தைப் புளி போட்டுத் தேய்த்து) விளக்கிவிட்டு மீண்டும் கேட்டேன், “இப்ப சொல்லுங்க உங்களுக்கு எதுல ஆய்வு செய்ய ஆர்வம்?”

            ”குறுந்தொகை” என்று ஒற்றைச் சொல்லில் முத்தாய்ப்பாக விடை வந்து செவிக்குள் விழுந்தது.

            ”மகிழ்ச்சி. குறுந்தொகைல உங்களுக்குப் பிடிச்ச பாடல் ஒன்று சொல்லுங்க” என்றேன்.

            எதிர்பாராத இந்தத் தாக்குதலில் அவர் திக்குமுக்காடிப் போய்விட்டார் என்பது தெரிந்தது. “நீங்க எதுல செய்யச் சொன்னாலும் செய்யலாம்ங்கய்யா” என்று பம்மினார்.

            ”எதுல வேண்டாலும்னா?” என்றேன் எரிச்சலுடன். மிகப் பணிவாகத் தோற்றம் தருகின்ற ஆக அவமரியாதையான விடை இது என்பது பலருக்கும் புரிவதில்லை.

            ”இந்த… குறுந்தொகை நாவலு சிறுந்தொகை அப்டீன்னு சொன்னீங்கள்லய்யா… அதுல நீங்க சொல்றதுல பண்ணீர்லாங்கய்யா” என்றார் அதே அடக்கத்துடன். மடமை காட்டும் பணிவைப் போல் எரிச்சலூட்டுவது பிறிதொன்று உண்டோ?

            ”என்னது… குறுந்தொகை நாவல் அப்புறம் என்னமோ சொன்னீங்களே?” என்றேன்.

            ”சிறுந்தொகை ஐயா” என்றார் மீண்டும்.

            சரிதான். தமிழ்ப் பகைவர்கள் வேறு எங்கோ இல்லை. பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஆசிரியர்கள் மற்றும் பேராசிரியர்கள் என்னும் போர்வையில் தமிழ்க் கொலை செய்து கொண்டிருக்கிறார்கள்.

            நெடுந்தொகை குறுந்தொகை என்று இலக்கியங்கள் உண்டு. பெருந்தொகை என்று சொற்றொடர் வரலாம். பெருமை + தொகை = பெருந்தொகை எனில் சிறுமை+தொகை = சிறுந்தொகை என்பதுதானே என்று அந்த தமிழாசிரியர் நினைக்கிறார்.

            பெருமை என்பதுடன் வல்லின முதலெழுத்துச் சொற்கள் வருங்கால் இனவெழுத்து மிகுந்து வரும். பெருமை+கடமை = பெருங்கடமை; பெருமை+சினம் = பெருஞ்சினம்;  பெருமை+தலைப்பு = பெருந்தலைப்பு; பெருமை+பண்பு = பெரும்பண்பு. ஆனால் சிறுமை+கடமை = சிறுகடமையே அன்றி சிறுங்கடமை என்று வராது. அப்படித்தான், சிறுதலைப்பு, சிறுபண்பு என்று வருமே அன்றி சிறுந்தலைப்பு, சிறும்பண்பு என்றெல்லாம் வராது.

            காமராசர் பெருந்தலைவர் ஆகலாம்; ஆனால் இரசினி சிறுந்தலைவர் ஆகார்.

            பெருங்காப்பியம் என்பதைப் போல பாவித்துச் சிறுங்காப்பியம் என்று பேசிய பேராசிரியரை யான் அறிவேன்.

            பெரும்பாணாற்றுப்படை என்பதைப் போல் கருதிக்கொண்டு சிறும்பாணாற்றுப்படை என்று எழுதி வாசிக்கப்பட்டதையும் கேட்டிருக்கிறேன்.

            சிறுகாப்பியம், சிறுபாணாற்றுப்படை என்பதே சரி.

            இலக்கண வகுப்பெடுப்பது இவண் நோக்கமன்று.

            அண்மையில் அருமையான ஓவியம் ஒன்றைக் கண்டேன். ஜெர்மனி நாட்டாரான கேப்ரியல் ரிட்டர் வான் மாக்சு என்பாரால் தீட்டப்பட்டது. ஓவியத்தின் உட்பொருள் கருத்துச் சுவை மிக்கது.

            இரண்டு குரங்குகள் (கவிகள்?) நூல் ஒன்றினை எடுத்து வாசிக்க முயல்கின்றன. அதன் சில பக்கங்களைக் கிழித்துப் போட்டிருக்கின்றன. ஒரு குரங்கு தன் கையில் பெருக்காடி (magnifier glass - லென்சு) ஒன்றை வைத்திருக்கிறது. நிறைய வாசித்ததில் அதன் பார்வை சற்றே மழுங்கிவிட்டது போலும். குரங்குகள் இரண்டும் ஒன்றை ஒன்று பார்க்கின்றன. கையில் ஆடி வைத்திருக்கும் குரங்கின் முகம் கடுகடுப்பாக இருக்கிறது. மற்றொரு குரங்கின் கையை அது பிடித்திருக்கிறது. அந்த இரண்டாம் குரங்கு மிகப் பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு பெருங்குரங்கைப் பார்க்கிறது. இதுவே அந்த ஓவியம் தரும் காட்சி.



            வான் மாக்சு இவ்வோவியத்திற்கு “The Scholars” (அறிஞர்கள்) என்று  பெயர் சூட்டியிருக்கிறார்!

            எனக்குப் பட்டது, அவர் பொதுவாக வைத்துள்ள பெயருக்கு இரத்தினச் சுருக்கமாக ஒரு பொழிப்புரை செய்ய வேண்டும் என்றால் “நெறியாளரும் ஆய்வாளரும்” என்று சொல்லலாம் போலும்!

No comments:

Post a Comment