Sunday, October 25, 2020

காதற் சுருதி











    சூஃபி ஞானி ஹாஃபிஸ் எழுதிய கவிதை வரிகளை இன்றைய நவீன அமெரிக்க ஆங்கிலத்தில் ஆக்கி ”காதற் பரிசு” (The Gift of Love) என்னும் பெயரில் நூலாக வெளியிட்டார் தானியேல் இலேடின்ஸ்கி (Daniel Ladinski) என்பார். அந்நூலின் குறுங்கவிதைகள் பலவும் மேற்குலகில், இன்னும் சரியாகச் சொல்வதெனில், இணையவுலகில் மிகப் பிரபலம்.

    அவற்றுள் இவ்வரியும் ஒன்று: "The heart is a thousand stringed instrument that can be tuned only with love".

    இவ்வரியை இப்படித் தமிழ் ஆக்கினேன்:

    ”காதலால் மட்டுமே
    சுருதி கூடும்
    ஆதி யாழ்
    உன் ஆன்மா”

    ஆங்கிலத்தில் உள்ள “thousand stringed instrument" என்பதை “ஆதி யாழ்” என்று தமிழாக்கினேன். இதற்கு ஒரு பின்னணி உண்டு.

    ஆங்கிலத்தில் harp என்னும் சொல் யாழினைக் குறிக்கும். ஆனால், இலேடின்ஸ்கியின் ஆங்கில வரியில் அச்சொல் இல்லை. ”thousand stringed instrument" என்று அவர் எழுதியிருப்பதை அப்படியே மொழி பெயர்ப்புச் செய்தால் “ஆயிரம் நரம்புடை (இசை)க் கருவி” என்று வரும். மொழி பெயர்ப்பு சிக்கல் ஏதுமின்றி முடிந்து விடும். ஆனால், யான் அப்படிச் செய்யவில்லை.

    ஆயிரம் நரம்புகள் கொண்ட இசைக் கருவி என்று ஹாஃபிஸ் குறிப்பிடுவது ஒரு கவித்துவ உருவகம் மட்டுமே என்று கொள்ளலாம். இல்லை, அப்படிப்பட்ட இசைக் கருவி எதார்த்தமாகவே ஏதேனும் இருந்ததா? அதைத்தான் அவர் உவமை உரைக்கின்றாரா? இப்படி ஆய்ந்து பார்க்கலாம்.

    நரம்பிசைக் கருவியில் அறபு மற்றும் பாரசீக உலகில் ரபாப் என்னும் கருவியே பெரிதும் கொண்டாடப் படுவது. தமிழுலகில் யாழ்.

    இன்றைக்கு மேற்குலக மேடைப் பாடகருள் சிலர் வாசித்துக் கொண்டே பாடுவதற்குத் தேரும் கருவி கிதார். அதுபோல், சங்க காலத்தில் (இருபத்தைந்து நூற்றாண்டுகட்கு முன்) பண்ணறிஞர்கள் ஆன பாணர் தம் கையில் ஏந்தி இருந்த நரம்பிசைக் கருவி யாழே.

    தமிழர் இசை குறித்துக் “கருணாமிர்த சாகரம்” என்னும் பெருநூல் எழுதியவர் தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் என்பதை அனைவரும் அறிவர். அவரின் மகன் மருத்துவர் ஆ.அ.வரகுணப் பாண்டியன் அவர்கள் “பாணர் கைவழி எனப்படும் யாழ்நூல்” என்று ஒரு சிறு நூல் எழுதியுள்ளார். அதிற் சில குறிப்புகள் கிடைத்தன.

    யாழ்கள் நான்கு வகைப்படும் என்று சிலப்பதிகாரத்து அரங்கேற்றுக் காதைக்கான அடியார்க்கு நல்லார் உரை. அவை, பேரியாழ் மகரயாழ் சகோடயாழ் மற்றும் செங்கோட்டியாழ். இன்றுள்ள வீணை என்பது செங்கோட்டியாழ் என்னும் வகையைச் சேர்ந்தது என்று வரகுணப்பாண்டியன் இந்நூலில் நிறுவியுள்ளார்.

    பேரியாழ் என்னும் வகையில் ஆக அதிகமான நரம்புகளைக் கொண்டது ஆதியாழ் என்பதாகும். அது ஆயிரம் நரம்புகளை உடையது. “ஆயிர நரம்பிற்று ஆதியாழ் ஆகும்” என்று அடியார்க்கு நல்லார் தமது உரைப்பாயிரத்துள் மேற்கோள் காட்டுகிறார். இதனையே பிங்கல நிகண்டும் கூறுகிறது.

    எனவே, 'thousand stringed instrument" என்பதை ”ஆயிரம் நரம்புடைப் பேரியாழ்” என்றும் பெயர்க்கலாம். அதை விட இன்னும் சுருக்கமாகவும் செறிவாகவும் “ஆதி யாழ்” என்று கூறிவிடலாம்.

    அச்சொல்லினைத் தேர்ந்ததில் ஓசையின் கோணத்திலும் சிறப்பு உள்ளது. காதல் என்பதற்கு எதுகையாகவும் ஆன்மா என்பதற்கு மோனையாகவும் அமைந்து ஓசை வழியிலும் கருத்திற்கு வலிமை ஏற்றி விடுகின்றது.

       இன்னொரு சுவையான செய்தி. ஃபாரசீக சூஃபி உலகில் சிகரமாக நிற்பவர் மௌலானா ரூமி. அவர் மனித ஆன்மாவிற்குக் குறியீடாக எப்போதும் புல்லாங்குழலையே குறிப்பிடுகிறார். அவருக்குப் பின் வந்த சூஃபிக் கவி ஹாஃபிஸ் இதயத்தின் குறியீடாக யாழினைக் கூறுகிறார். “குழல் வழி நின்றது யாழே” என்கிறது சிலப்பதிகாரம் (3:149)


    


1 comment: