Saturday, July 11, 2020

இனிய தயக்கம்


                ஜென் துறவியான ’சேக்யோ’ (1118-1190) தனது வாழ்வின் செம்பாகத்தை அலைந்து திரிவதிலேயே கழித்தவர். 


       














தனது நாடோடிப் பயணத்தில் அப்படி ஒரு நாள் மாலை நேரம் மலை மீதிருந்த ஒரு எளிய குடிசையின் முன் வந்து நின்றார். அதில் முதிய தம்பதியர் இருந்தனர். அன்றிரவு தங்குவதற்கு அவர்களிடம் இடம் கோரினார் சேக்யோ.

                கூரையில் பெரிய ஓட்டை ஒன்று இருப்பதைச் சுட்டிக் காட்டிய கணவர், தமது வீட்டின் அரைகுறையான உபசரிப்பு ஒரு விருந்தாளிக்கு ஏற்றதன்று எனச் சொல்லி மறுத்தார்.

      சேக்யோ ஒரு ஜென் ஞானி என்பதால் அவருக்கு அடைக்கலம் தந்தாக வேண்டும் என்று மனைவி கூறினார்.

      ”கூரையில் உள்ள ஓட்டையை ஏன் நீங்கள் செப்பணிடக் கூடாது?” என்று கேட்டார் சேக்யோ.

      அந்தக் கணவர் விளக்கினார்: “அது அத்தனை எளிதல்ல நண்பரே! இப்போது ஆண்டின் மூன்றாம் பருவம். இலைகள் உதிர்கின்றன. லேசாக மழை பெய்கிறது. கூரை ஓட்டையின் வழியாக நிலவின் ஒளி வீட்டிற்குள் விழுவதை என் மனைவி மிகவும் ரசிக்கிறாள். எனக்கோ அவ்வப்போது கூரை மீது பெய்யும் மழையின் சப்தம் பிடித்திருக்கிறது. எனவே, ஓட்டையை அடைக்க வேண்டாம் என்கிறாள் அவள், அடைத்துவிட வேண்டும் என்கிறேன் நான்.”


      வீட்டை மராமத்து செய்வதில் மரபிற்கு மாற்றமான இந்த கண்ணோட்டத்தை சேக்யோ ஏற்றுக்கொண்டார். அப்போது அந்த முதிய கணவர் சொன்னார்: “எமது எளிய குடிசை – வேயப்பட வேண்டுமா? வேண்டாமா?” 

      இதைக் கேட்டதும், “அடடா! அற்புதமான கவிதை ஒன்று உருவாகிறது!” என்றார். ”நீங்களே அதை முழுமைப் படுத்துங்கள் துறவியே! அப்படியானால் நிலைமை எதுவாயினும் இன்றிரவு நீங்கள் இங்கே தங்கலாம்” என்றார் அந்த முதிய மனைவி.

      சேக்யோ அந்தக் கவிதையை இப்படி முழுமை செய்தார்:

      ”நிலவொளி வழிந்து வர வேண்டுமா?
      மழைத்துளி தெரித்து விழ வேண்டுமா?
      எமது சிந்தனைகள் பிளவுபட்டுள்ளன.
      எமது எளிய குடிசை
      வேயப்பட வேண்டுமா? வேண்டாமா?”

      எத்தகைய இனிய தயக்கம்! எத்தனை கனிவான மனநிலை!

      ”காயமே உன்னுள் ஒளி நுழையும் வாசல்” என்கிறார் மௌலானா ரூமி.

      கூரையில் விழுந்த ஓட்டையை இரண்டு விதமாகவும் பார்க்கலாம். காயம் என்று பார்த்தால் அதைச் சரி செய்ய வேண்டும். வாசல் அல்லது இயற்கையே உண்டாக்கிய ஜன்னல் என்று பார்த்தால் அது ஏற்கனவே சரியாகத்தான் இருக்கிறது! அப்படியே விட்டுவிடலாம். அப்போதுதான் ஒளி நுழையும்.

      இயற்கையுடன் இயன்றவரை ஒத்திசைந்து வாழ்வதை இந்தச் சிறிய நிகழ்வு நமக்கு உணர்த்துகிறது. இயற்கையில் பழுதுகள் இல்லை. இயற்கையைக் கைப்பற்றுவது, வெல்வது போன்ற அபத்தமான கண்ணோட்டங்களால் மனிதர்கள்தாம் பழுதுகளை உண்டாக்குகின்றனர்.
      கூரையில் விழுந்த ஓட்டை இயற்கையாக உண்டான ஒன்று. மழையே கூட அதனை உண்டாக்கியிருக்கலாம். அல்லது ஒரு வலிய காற்று அதனை உண்டாக்கியிருக்கக் கூடும். எப்படியோ, அது பழுது அன்று. எனவேதான் அதனை அடைப்பதில் அந்த முதியவருக்கு ஒரு தயக்கம் வந்துவிட்டது. இயற்கையே ஒப்புதல் தராமல் அதனை அடைக்க முடியாது, கூடாது. அதற்காக காத்திருக்கிறார். இயற்கை சொல்லும் தீர்வு போல் வந்து சேர்கிறார் சேக்யோ. ஆனால் அவரும்கூட இந்தக் கவிதையில் ஒரு தீர்வைச் சொல்லவில்லை. ஏனெனில், மழையும் தேவைப்படுகிறது, ஒளியும் தேவைப்படுகிறது.
      பல நூற்றாண்டுகள் கடந்தும் அந்தக் குடிசை வேயப்படவில்லை. அந்த முதியவரின் தயக்கம் இனிமை மாறாமல் அப்படியேதான் இருக்கிறது!
      வேயப்பட்ட கூரையில்தானே அந்த ஓட்டையே விழுந்தது? அதுதான் செய்தி. மனிதன் வேயும் ஒவ்வொன்றிலும் இயற்கை ஓட்டை போட்டுக்கொண்டே இருக்கும். இயற்கையின் மர்மத்தை முழுமையாக நாம் விளங்கிவிட முடியாது!
      இந்த முழுப் பிரபஞ்சமுமே சேக்யோ அடைக்கலம் தேடி வந்த குடிசைதான்.
      ”ஒவ்வொரு கணமும்
      ஓட்டையும் விழுகிறது
      வேயவும் படுகிறது
      பிரபஞ்சக் குடில்.”

3 comments:

  1. மிக அருமை ஐயா.... (மனிதன் வேயும் ஒவ்வொன்றிலும் இயற்கை ஓட்டை போட்டுக் கொண்டே இருக்கும்)

    ReplyDelete
  2. மிக அருமை ஐயா.... (மனிதன் வேயும் ஒவ்வொன்றிலும் இயற்கை ஓட்டை போட்டுக் கொண்டே இருக்கும்)

    ReplyDelete
  3. ”ஒவ்வொரு கணமும்
    ஓட்டையும் விழுகிறது
    வேயவும் படுகிறது
    பிரபஞ்சக் குடில்.”
    குடிலிக்குள் ஒரு தூசாய் இருந்துவிட வேண்டும் , ஓட்டையின் வழியாய் நுழைந்திடும் ஒளிகீற்றில் மோட்சம் பெற்று விண்ணில் கலந்திட வேண்டும்.

    ReplyDelete