Monday, February 17, 2020

நிறமற்ற முகம்


      (கோப்புக்களை ஆராய்ந்து கொண்டிருந்தபோது பழைய கட்டுரைகள் சில கிடைத்தன. அவற்றுள் இதுவும் ஒன்று. 2002-இல் எழுதியது. கல்லூரி ஆண்டு மலரில் வெளிவந்தது.)



இறைவனின் வண்ணங்களில் தோய்வீராக. அவனை விட, வண்ணங்கள் வழங்கும் அழகன் யார்? (2:138) என்று ஓவிய மொழி பேசுகிறது திருக்க்குர்ஆன்.

      இறைப்பண்புகளே வண்ணங்கள். அவனைப் பற்றியே நம் எண்ணங்கள்.

      இறைவனை ‘வண்ணன்’ என்று அழைக்கிறது வைணவம். அது, அவதாரங்களின் உடல் வண்ணம் கடல் வண்ணம் என்று சொல்கிறது. இறை வண்ணங்களில் ஆழ்ந்து தோயும் பக்தர்களை ‘ஆழ்வார்கள்’ என்று அழைக்கிறது.

      இறைவனே! நிறங்கள் உன்னைக் காட்டவும் செய்கின்றன, மறைக்கவும் செய்கின்றன. நிறங்கள் வரங்களா? சாபங்களா?

      இறைவனே! நிறங்கள் உன்னை உணரவும் வைக்கின்றன, உணர முடியாமல் திணறவும் வைக்கின்றன. நிறங்கள் நிஜங்களா? பொய்களா?

      ஆதித்தாய் கறுப்புப் பெண் எண்கிறது மரபணு ஆராய்ச்சி. எனவே, முதல் மனிதனின் காதலி ஒரு கறுப்புப் பெண். கறுப்பு இரவின் நிறவின். இரவு – பெண். பகல் – ஆண். பெண் ரகசியமாவாள்.

      மெய் என்றால் உடல் என்று ஓர் அர்த்தம் உண்டு; உண்மை என்றும் ஓர் அர்த்தம் உண்டு. மெய் என்ன நிறம் என்று பெண் பார்த்துக் கைப்பிடிக்கிறார்கள். கறுப்பு இரவில் வெண்ணிலாவைப் பார்ப்பது போல் லைலாவைக் காதலித்தான் மஜ்னூன். அவன், மெய்க்குள் மெய் பார்த்ததால் அவளைக் காதலித்தான்.

      சூரிய ஒளி சுட்டுவிடக் கூடாது என்பதற்காகக் குடை பிடிக்கிறார்கள். உலகிற்கெதிராக மஜ்னூன் பிடித்த கறுப்புக் குடை லைலா. அந்தக் கறுப்புக் குடையே அவனுக்குச் சூரியனாக இருந்தது. அது அவன் மீது எல்லா வண்ணங்களையும் பொழிந்தது.

      மனிதக் காதலும் புனிதக் காதல்தான். அது மனிதன் இறைவனை அடைவதற்குக் கருவியாய் இருக்கிறது. இந்தக் காதலுக்கு எது தேசியக் கொடி?

      இச்சைக் கொடியாகப் பெண்ணைப் பார்க்கும் உலகை எதிர்த்து மஜ்னூன் உயர்த்திய கறுப்புக் கொடிதான் (லைலா) காதலுக்குப் பச்சைக் கொடி.

      வெண்மையில் இருந்துதான் எல்லா வண்ணங்களும் பிறக்கின்றன. எந்தவொரு நிறத்தையும் உள்ளெடுத்துக் கொள்ளாமல் எல்லா வண்ணங்களையும் பிரதிபலிக்கும் பொருள் வெள்ளை நிறமாகத் தெரிகிறது. இது அறிவியல். அதுபோல, இறைவனே எல்லாவற்றையும் படைக்கிறான். ஆனால் எந்தப் படைப்பும் அவனுக்குத் தேவை இல்லை.

      சூரியனின் கதிரிலிருந்து எல்லா வண்ணங்களும் வெளிப்படுகின்றன. எல்லா நிறங்களையும் உள்ளெடுத்துக் கொள்ளும் பொருள் கறுமை நிறமாகத் தெரிகிறது. வெளி சென்று வண்ணங்கள் காண பகலே ஏற்றமானது. உள் சென்று வண்ணங்கள் காண இரவே ஏற்றமானது.

      இறைவா! உன் திருமறையில் நீ சொல்கிறாய்: “எப்பக்கம் திரும்பினும் அல்லாஹ்வின் முகமே இருக்கிறது” (2:115).

மீண்டும் நீயேதான் சொல்கிறாய்: ’பார்வைகள் அவனை அடையா. ஆனால் அவன் பார்வைகளை எல்லாம் பற்றுகிறான்’ (6:103).

இறைவனே! நீதான் வண்ணங்களால் திரை செய்தாயா? இல்லை, நான்தான் எண்ணங்களால் திரை செய்தேனா?

கண்மூடினால் இருள் தெரிகிறது. இருளில் ஒளியும் தெரிகிறது. கறுப்பும் ஒரு நிறம்தான். வெள்ளையும் ஒரு நிறம்தான். இறைவனின் உள்ளமைக்கு நிறம் கிடையாது. நிறமற்ற ஒன்றை நாம் பார்க்க முடியுமா?

No comments:

Post a Comment