Saturday, November 16, 2019

ரூமியின் வாழ்வில் - 7



38
மாணிக்கம் ஆகும் கல்


      மாபெரும் அறிஞர்களில் ஒருவரும் மௌலானாவின் சிறந்த சீடர்களில் ஒருவருமான ஹிசாமுல் மில்லா வ தீன் அமாசி அவர்கள் அறிவிக்கிறார்கள்: கணிதம் வானியல் வேதியல் மற்றும் வரலாறு ஆகியவற்றில் திறன் மிக்கவரான பத்ருத்தீன் தப்ரேஸி அவர்கள் சொன்னார்கள், ஒருமுறை ஷெலபி ஹுசாமுத்தீனின் இல்லத் தோட்டத்தில் விடியும் வரை இரவெல்லாம் நடைபெற்ற இசை நிகழ்வில் மௌலானாவுடன் கலந்து கொண்டோருள் தானும் இருந்தார். விடிந்த பின் மௌலானா தனது சீடர்களைச் சற்று நேரம் உறங்குவதற்கு அனுமதி அளித்துவிட்டு அவர் மட்டும் தியானத்தில் ஆழ்ந்தார். பத்ருத்தீன் சொல்கிறார், ‘நானும் ஓய்வெடுப்பதற்காகச் சாய்ந்தேன். ஆனால் எனது மனம் வேலை செய்து கொண்டிருந்தது. ஷீது, ஈசா, இத்ரீஸ், சுலைமான், லுக்மான் மற்றும் கிள்று போன்ற இறைத்தூதர்கள் எல்லாம் பற்பல அற்புதங்களை நிகழ்த்தும் ஆற்றல் பெற்றிருந்தார்கள். அவர்கள் எல்லாம் உயர்ந்த குணங்களும் அசாதாரணமான திறமைகளும் மேதைமையும் கொண்டிருந்தனர். உதாரணமாக, தோல்களைப் பதனிடுதல், செப்பு இரும்பு போன்ற கீழான மாழைகளைப் பொன்னாக மாற்றுதல் முதலியவற்றைச் சொல்லலாம். அவை எல்லாம் சராசரி மனித ஆற்றல்களுக்கு அப்பாற்பட்டவை. அத்தகைய ஆற்றல்களில் ஏதாவது மௌலானாவுக்கு அருளப்பட்டுள்ளதா என்று நான் எண்ணிக் கொண்டிருந்தேன். 

      ’இவ்வாறு நான் எண்ணியதுதான் தாமதம், என் மீது புலி ஒன்று பாய்ந்தது போல் மௌலானா அவர்கள் எனது பெயரை மிக உரத்து அழைத்தார்கள். எனது இடது கையில் கல் ஒன்றை வைத்துச் சொன்னார்கள், “போ. இறைவனுக்கு நன்றி சொல்.” நான் அந்தக் கல்லைக் கூர்ந்து நோக்கினேன். நான் எந்த அரசனின் கருவூலத்திலும் கண்டிராத அளவுக்குப் பெரியதொரு மாணிக்கமாக அது மாறிப் போயிருந்தது. இந்நிகழ்ச்சியின் தாக்கத்தால் நான் கதறினேன். தூங்கிக் கொண்டிருந்த எனது நண்பர்கள் எல்லாம் எழுந்தோடி வந்தனர். அத்தகைய அமைதியான நேரத்தில் நான் ஏன் அப்படிப் பத்துப் பேர் சேர்ந்து அழுவது போல் சத்தமிடுகிறேன் என்று கேட்டனர்.’

      மௌலானாவால் என்ன அற்புதங்கள் நிகழ்த்த முடியும் என்று அப்படிச் சிந்தித்த பிழையை எண்ணி அவரின் மன்னிப்பை யாசித்து தான் வெகு நேரம் அழுததாக பத்ருத்தீன் சொன்னார். மௌலானா அவரை மன்னித்தார். மாணிக்கமாக மாறிய அந்தக் கல்லினை மீண்டும் பெற்றுக் கொண்டார். அதனை அவர் தனது மகளுக்கு அன்பளிப்பாகத் தந்துவிட்டார். அப்பெண் அதனை உடனே விற்றுப் பணமாக்கினார். ஒரு லட்சத்து எட்டாயிரம் திர்ஹம்கள். அத்தொகை முழுவதையும் சீடர்கள் மற்றும் தேவையுள்ள ஆண்கள் பெண்கள் ஆகியோரின் தேவைகளுக்காகச் செலவு செய்தார்.

      இந்நிகழ்வைப் பற்றிப் பின்னர் கருத்துரைத்த மௌலானா அவர்கள் பட்ட மரத்துக் கிளை ஒன்றைச் சொக்கத் தங்கமாக மாற்றிய தர்வேஷ் பற்றிய கதையைத் தாம் கேள்விப் பட்டதில்லையா என்று சீடர்களைக் கேட்டார். அத்தகைய மனிதர்கள் தமது நண்பர்களாக இருந்தனர் என்று சொன்னார். கற்கள் காய்கள் போன்ற உயிரற்ற பொருட்களை அப்படி விலை உயர்ந்த உலோகங்களாக மாற்றுவது மிகப் பெரிய அற்புதமே என்றாலும் வாழும் மனிதர்களின் மனத்தையும் ஆன்மாவையும் ஆன்மிகத் தங்கமாக மாற்றுவதே அதனை விடவும் பேரற்புதமாகும். பின்னர் அவர் கவி படித்தார்:

      ”ரசவாதக் கல்லினால்
      செம்பைப் பொன் செய்தல்
      நிசமான அற்புதம்தான் எனினும்
      இன்னும் பெரிய அற்புதம் அல்லவோ
      ஒவ்வொரு நிமிடமும் செம்பொன்று
      ரசவாதக் கல்லாகவே மாறுவது!”

 
39
இரும்புக் காலணிகள்



      இறையருள் பெற்ற மௌலானா ஷம்சுத்தீன் மாலத்தி அறிவிக்கிறார்கள்: ஷைகு சைஃபுத்தீன் பஃகர்ஸி அவர்களின் மகனார் ஷைகு மழ்ஹருத்தீன் அவர்கள் கோன்யாவை அடைந்தபோது பெருந்திரளான அறிஞர்களும் உயர் மக்களும் அவரை வரவேற்கக் குழுமினர். அவரது ஞானம் மற்றும் பக்திக்காக அவருக்கு மிகவும் கண்ணியமும் கவனமும் அளித்தனர்.

ஏதேசையாக, அன்றைய தினம் ஷைகு தங்கியிருந்த விருந்தினர் இல்லத்தின் வழியே மௌலானா தனது சீடர்களுடன் நடந்து போனார். தான் வந்திருக்கும் செய்தி இன்னும் மௌலானாவின் காதுகளை எட்டவில்லை போலும் என்று ஷைகு மழ்ஹருத்தீன் அப்போது சொன்னார். அதாவது, விருந்தாளியான தன்னை மௌலானா வந்து நேரில் காணவில்லை என்பதை அப்படி மறைமுகமாகச் சுட்டிக் காட்டினார்.

இது சீடன் ஒருவனது காதில் விழவே அவன் சென்று மௌலானாவிடம் கூறினான். அப்போது மௌலானா சொன்னார்கள், ‘உண்மையான விருந்தினன் நான்தான், கோன்யாவுக்கு வந்திருக்கும் அவர் அல்லர்.’ எனவே, ஷைகுதான் முதலில் மௌலானாவை வந்து பார்த்திருக்க வேண்டும், மௌலானா போய் ஷைகைப் பார்ப்பதற்கில்லை. மௌலானாவின் இந்தக் கருத்து சீடர்களுக்குப் புரியவில்லை. அதனை விளக்கியருளும்படி அவர்கள் வேண்டினர். ‘யாம் இங்கே அனைத்திலும் அனைத்தான அந்த ஏகன் என்னும் பாக்தாதிலிருந்து இங்கே வந்திருக்கிறோம். ஆனால் நமது அந்தச் சகோதரரோ வெறுமனே (கல்லும் மண்ணுமான) பாக்தாதின் ஒரு தெருவிலிருந்து இங்கே வந்திருக்கிறார். எனவே, நாமே இங்கே வந்திருக்கும் ’உண்மையான’ விருந்தினர், அவர் அல்லர்.”
இந்த விளக்கம் ஆன்மிகம் சார்ந்தது. அதாவது, ஆன்மிக நிலைகளில் தோய்ந்து போயிருப்போர் எப்போதும் எதிலும், ஒவ்வொரு கல்லிலும் இலையிலும் இறைவனையே காண்கின்றனர். இருப்பவை அனைத்தின் ’ஒருமை’யில் அவர்கள் இறைவனின் ’ஒருமை’யை அனுபவிக்கின்றனர்.
மௌலானா உரைத்த விளக்கம் அந்த ஷைகின் காதுகளை எட்டிற்று. அவரும் அகத்துறை முற்றிய அறிவினர் ஆகையால் உட்பொருள் உணர்ந்தார். மௌலானாவிற்குத் தனது மரியாதையைத் தெரிவிக்க நேரில் வந்தார். பிறகு மௌலானாவின் சிறந்த சீடர்களில் ஒருவரானார். தனது தந்தை தன்னிடம் உரைத்தவை எல்லாம் உண்மையே என்று அந்த ஞானி மேலும் சொன்னார்: மௌலானாவைப் போன்ற ஒரு குருநாதர் கிடைபப்தற்காக ஒருவர் இரும்புக் காலணிகளை அணிந்து கொண்டு கையில் இரும்புக் கைத்தடியை எடுத்துக் கொண்டு செல்ல வேண்டும். (அதாவது அவை எளிதில் உடைந்து விடாது அல்லவா? அத்தகைய உறுதியான நம்பிக்கையுடன் குருவைத் தேடி மிக நீண்ட பயணங்கள் செல்ல வேண்டும் என்பது கருத்து.)

40
இறைவன் நாடினால்...

      ஒருநாள் மௌலானா அவர்கள் ஷைகு முஹம்மது என்னும் பெயர் கொண்ட தனது பணியாளனை அழைத்து வேலை ஒன்றை ஏவினார். அப்பணியாளன் “சரி, இன் ஷா அல்லாஹ் (இறைவன் நாடினால்…)’ என்று பதிலுரைத்தான். உடனே மௌலானா அவனிடம் சத்தமாகச் சொன்னார்கள், “மடையனே! இறைவனின் வெளிப்பாடு அல்லாமல் வேறு யார் உனக்குக் கட்டளை இட்டது?” மௌலானா அவர்கள் தான் தெய்வீகமானவர் என்று கோருவதாக இதனைத் தவறாகப் புரிந்துகொள்ள வேண்டாம். ஆன்மிக நெறியின் சிந்தனைப்படி இறைவனின் திருப்பண்புகள் மனிதனின் செயற்பாடுகளில் பிரிக்க முடியாதபடி நெருங்கியுள்ளன, மனிதன் எந்த அளவுக்கு இறைவனின் ஆளுமையில் இருக்கிறான் என்றால் அவன் இறைவனது வெளிப்பாடுகளின் கருவியாகவே இருக்கிறான். ‘படைப்புக்களில் சிறந்தவன்’ மனிதனே. இருப்பன அனைத்தின் ஒருமையானது ஏக இறைவனை முக்காலத்திலும் இருந்தன இருப்பன இருக்கப் போவன அனைத்துடனும் ஒன்றாக்கியுள்ளது. மௌலானாவின் ஆன்மிக ஆணை அந்தப் பணியாளனை மிகவும் தாக்கிற்று. அவன் உடனே மன்னிப்புக் கேட்டுக் கொண்டான்.


41
ஆன்மிகக் களிப்பு


      ஒருநாள் மொய்னுத்தீன் அவர்கள் ஊரின் பிரமுகர்கள் அனைவரையும் அழைத்திருந்தார். அங்கே அரசரும் இருந்தார். மௌலானாவே சிறப்பு விருந்தினர். நள்ளிரவு தாண்டும் வரை ஆன்மிக இசை நிகழ்வு நடந்தது. இசையை நிறுத்தினால் விருந்தினர்கள் சிறிது நேரமாவது உறங்க அவகாசம் கிடைக்கும் என்று சீடன் ஒருவன் மொய்னுத்தீனின் காதில் சொன்னான். அவன் அப்படிச் சொன்னது மௌலானாவுக்குத் தெரியாது. ஆனால், சரியாக அதே கணத்தில் மௌலானா அவர்கள் இசையை நிறுத்தும்படி உத்தரவிட்டார். எல்லோரும் உறங்கச் சென்றுவிட்ட பின்னும் அப்துர் ரஹ்மான் சய்யது என்பவர் ஆன்மிகக் களிப்பில் கத்திக் கொண்டிருந்தார். ’அப்துர் ரஹ்மான் வினோதமாக நடந்துகொள்கிறார். எல்லோரும் தூங்கப் போய்விட்டார்கள். ஆனால் இவர் மட்டும் ஏன் இப்படிக் கத்திக் கொண்டிருக்கிறார்?’ என்று ஒருவரிடம் அரசர் சொன்னார். மேலும், “இசையால் இவ்வளவு உணர்ச்சி அடைவதற்கு அந்த தர்வேஷ் என்ன மௌலானாவை விடப் பெரிய ஆளா? மௌலானாவே மிக அமைதியாகத்தான் இருந்தார்” என்றும் குறிப்பிட்டார். அதற்கு மௌலானா சொன்னார்கள், ’சிலருடைய உள்ளங்களில் உலக இச்சைகள் பெரும் பிசாசுகளைப் போன்று இருக்கின்றன. சீடர்களைப் போல் ஆன்மிகத் தூய்மை அடைவதற்கு அவர்கள் முன்வர அந்த ஆசைகள் அனுமதிப்பதில்லை. அந்தப் பிசாசு அவர்களை அப்பால் இழுத்துச் சென்றபடி உள்ளன.’ மௌலானாவின் இந்தச் சொற்கள் அரசரின் உள்ளத்தை ஆழமாகத் தாக்கிற்று. அவர் மன்னிப்புக் கேட்டதோடு தன்னையும் ஒரு சீடனாக ஏற்கும்படி வேண்டினார்.

42
மௌலானாவை அழைத்தல்

      செல்ஜூக்கியர்களின் அரண்மனை கொஞ்சம் கொஞ்சமாகப் பிரிக்கப்பட்டுப் போனது. அதற்கான காரணம் இப்படிச் சொல்லப்படுகிறது. சுல்தான் (அரசன்), மௌலானாவின் பணிவான சீடன் ஆனான். மௌலானாவைத் தனது ஆன்மிகத் தந்தையாகப் போற்றினான். ஆனால் அந்த நிலை விரைவிலேயே மாறத் தொடங்கிற்று. ஆன்மிக அற்புதங்கள் நிகழ்த்திக் காட்டுவதாக நடித்துக் கொண்டிருந்த ஒரு போலி குருவிடம் சுல்தான் தனது கவனத்தைத் திருப்பத் தொடங்கினான். மார்க்க ரீதியில் சிறுமைப் பட்டுப் போயிருந்த கூட்டமொன்று அந்தப் பொய் ஞானியை ஏற்றிப் போற்றி விளம்பரப் படுத்தியிருந்தது. சுல்தான் அவர்கள் பக்கம் சாய்ந்துவிட்டான்.

      ஒருநாள் இதற்கொரு முடிவு வந்து சேர்ந்தது. நாட்டின் பிரமுகர்கள் அனைவரையும் தனது அரண்மனைக்கு சுல்தான் அழைத்திருந்தான். மௌலானாவும் சென்றிருந்தார். தனக்கொரு புதிய குருநாதர் கிடைத்திருப்பதாகவும், ஷைகு பாபா மர்வீஸி என்னும் பெயர் கொண்ட அவரே அன்றைய நாளிலிருந்து தனது ஆன்மிகத் தந்தை என்றும் ஆன்மிக வழிகாட்டி என்றும் சுல்தான் அறிவித்தான்.

      பொது இடத்தில் வைத்து அப்படி அவமதிக்கப்பட்டது மௌலானாவுக்குச் சற்றே வருத்தம் அளித்தது. சுல்தான் இன்னொருவரைத் தனது ஆன்மிகத் தந்தை ஆக்கிக் கொண்டதால் தானும் இன்னொருவரைத் தனது ஆன்மிகப் பிள்ளை ஆக்கிக் கொள்ள வேண்டியதுதான் என்று சொல்லிவிட்டு மௌலானா அங்கிருந்து வெளியேறினார். ஷெலபி ஹுசாமுத்தீன் சொல்கிறார், ‘நானும் மௌலானாவுடன் வெளியேறினேன். அப்போது எனக்கோர் அகக் காட்சி தோன்றியது. அதில் சுல்தான் தலை இல்லாமல் நின்று கொண்டிருந்தான். அவனது தலையை யாரோ வெட்டி விட்டதைப் போல் இருந்தது.’ அறிஞர் பலரும் பின்னாலேயே ஓடிச் சென்று மௌலானவை அழைத்தபோதும் அவர் மீண்டும் அக்கூட்டத்திற்கு வர மறுத்துவிட்டார்.

      சிறிது நாட்களில் மங்கோலியப் படை தனது நாட்டினை நோக்கி வருவதாக சுல்தானுக்குத் தகவல் கிடைத்தது. ஊதுவத்திச் சடங்கு நிகழ்த்தி அந்த ஆபத்தை விட்டுத் தப்ப வேண்டும் என்று அவன் மிக முக்கியமான ஞானிகளை அரண்மனைக்கு வரவழைத்தான். அந்தச் சடங்கு முடிந்த பின்னர், மங்கோலியரை எதிர்கொள்ள மௌலானாவின் ஆசியை நாடி வந்தான். அவன் செல்ல வேண்டாம் என்று மௌலானா அறிவுறுத்தினார். ஆனால், படையெடுப்பு உறுதியாகத் தெரிந்ததால் தான் போருக்குச் செல்வதைத் தவிர வேறு வழி இல்லை என்று அவன் பிடிவாதம் செய்தான். ஆனால் அவன் வெகு தூரம் செல்வதற்குள் அவனது விதியைச் சந்தித்தான். அக்சராய் என்னும் இடத்தில் அவன் தனது வில்லில் கணை பூட்டிக் கொண்டிருந்தபோது எதிரிகள் அவனை வளைத்துப் பிடித்தார்கள். அவன் மௌலானாவை உதவிக்கு அழைத்துக் கதறினான். அதே சமயம் மௌலானா அவர்கள் ஆன்மிக இசை நிகழ்வில் பரவச நிலையில் இருந்ததாகவும் உடனே இரண்டு யாழ்களை எடுத்துவரச் செய்து அவற்றின் முனைகளால் தனது இரண்டு செவிகளையும் அடைத்துக் கொண்டதாகவும் சொல்லப்படுகிறது. சிறிது நேரம் கழித்து அவர் தனது போர்வையை எடுத்து வாசலில் வைத்துவிட்டு அரசனுக்காகவும் போரில் இறந்துபட்ட வீரர்களுக்காகவும் இறப்புத் தொழுகை நடத்த தனது சீடர்களை அழைத்தார். அதெல்லாம் முடிந்த பின்னர், அவர் ஏன் தனது காதுகளை அடைத்துக் கொண்டார் என்றும் எதற்காக இந்த இறப்புத் தொழுகை என்றும் சீடர்கள் ஆர்வத்துடன் கேட்டனர்.

      மௌலானா சொன்னார்: “வேந்தின் கூக்குரல் கேட்டேனால் யாதொரு ஓசைப்படாது என் செவி அடைத்தேன். அவன் என்னிடம் உதவி கோரினான். அவனுக்கு என்னால் உதவ முடியாமல் போயிற்று. ஏனெனில், அவன் அப்போது சாக வேண்டும் என்பது இறைவனின் முடிவாக இருந்தது. அவனது ஆன்மாவுக்காகவே நான் இறப்புத் தொழுகை நடத்தினேன்.” (பொது மன்றில் வைத்து அவன் மௌலானாவைத் துறந்து வேறொரு குருவைத் தேடிக் கொண்டான் எனினும் மௌலானா அவனைத் தனது ஆன்மிகப் புதல்வனாக முன்பு ஏற்றிருந்த காரணத்தால் அவனது மறுமை வாழ்வு ஈடேறல் வேண்டி இறைவனிடம் பிரார்த்தித்தார்கள்.)
     

43
மர்மப் பறவை




  
    மேற்சொன்ன நிகழ்வு நடப்பதற்குச் சில காலம் முன்பு ஒருநாள் மௌலானா தனது சீடர்களுடன் சேர்ந்து ஆன்மிக இசை நிகழ்வு ஒன்றை நடத்தினார்கள். முற்பகலில் தொடங்கிய அந்நிகழ்வு நள்ளிரவு வரை தொடர்ந்து கொண்டிருந்தது. அதனால் சற்றே சோர்ந்த ஷெலபி ஹுசாமுத்தீன் நிகழ்ச்சி முடியும் தருணத்தில் உறக்கம் மேலிடச் சொக்கினார். அதனை கவனித்த மௌலானா அவருக்குத் தனது விரிப்பைத் தந்து அதில் சாய்ந்திருக்குமாறு சொன்னார். ஷெலபி ஹுசாமுத்தீன் சட்டென்று உறக்கத்தில் ஆழ்ந்துவிட்டார். அதில் கனவொன்று கண்டார். மாபெரிய வெண் பறவை ஒன்று வந்து அவரைத் தனது கால்களால் பற்றியெடுத்துக் கொண்டு பூமியொரு சிறு புள்ளியாய்த் தோன்றும் வண்ணம் மிக மேலே உயர்ந்து பறந்து சென்றது. மலைச் சிகரமொன்றின் மீது போய் இறங்கிற்று. சாலப் பெரிய மரகதக் கல் ஒன்றைக் கொண்டு இறைவன் அதை இயற்றினான் என்று இயம்பும்படியாக அந்த மலை பச்சைப் பசேலென்று வளம் கொழித்துத் திகழ்ந்தது. அந்த மலையின் உச்சியில் மனிதத் தலையைப் போன்ற ஒன்றை ஷெலபி கண்டார். அப்பறவை அவரின் கையில் வாளொன்றைக் கொடுத்து அந்தத் தலையின் கழுத்தைத் துண்டிக்குமாறு சொல்லி அஃது இறைவனின் ஆணை என்றும் கூறிற்று. ‘நீ யார்?’ என்று ஷெலபி அப்பறவையை வினவினார். தான் ஜிப்ரீலின் தோழருள் ஒருவன் என்று அப்பறவை பகர்ந்தது. தனக்குத் தரப்பட்ட பணியை ஷெலபி செய்து முடித்தவுடன் மீண்டும் அவரைத் தூக்கிக் கொண்டு வந்து புறப்பட்ட இடத்திலேயே பூமியில் விட்டுவிட்டது. ஷெலபி தூக்கத்திலிருந்து விழித்தபோது தன்னருகில் மௌலானா நின்றிருக்கக் கண்டார்.

44
பெரிய முழுமையின் ஒரு பகுதி
      சூஃபி ஞானியருள் ஒருவரான ஷைகு மஹ்மூது நஜ்ஜார் ஒரு நிகழ்வை அறிவிக்கின்றார். ஒருமுறை மௌலானா அவர்கள் உயர்ந்த தத்துவங்கள் மற்றும் ஆன்மிக ரகசியங்கள் பற்றி உரையாற்றிக் கொண்டிருந்தார். அப்போது அங்கே மகா ஞானி ஷம்சுத்தீன் வருகை நல்கினார். மௌலானா அவருக்கு முகமன் உரைத்து அவரை வரவேற்றுச் சொன்னார், ‘அவர் எப்போதும் இறைவனையும் அவனது வெளிப்பாடுகளையும் பற்றிப் பேசுகிறார். ஆனால், இப்போது அவர் இறைவனின் குரலை (இல்ஹாம் என்னும் உள்ளுதிப்பால்) நேரடியாகவே கேட்பார். ஒரு நாள் வரும், ஷைகு என்னும் பெயர்ப்பாளர் இடையில் இல்லாமலேயே இறைவனின் வார்த்தைகள் நேரடியாகக் கேட்கப்படும். ஏனெனில், உண்மையில் இறைவனே ஷைகு. அவன் அவனே. அவனும் ஷைகும் ஒன்றுதான். இந்த ஒருமை என்பது யாதெனில் சீடர்களும் ஷைகும் பெரிய முழுமை ஒன்றின் பகுதிகளாக இருக்கின்றனர். அது இது அவன் எவன் என்பதெல்லாம் சொற்களும் குறிப்புகளுமே அன்றி வேறல்ல.’ பின்னர் மௌலானா பின்வரும் கவிதையைப் படித்தார்:
      ”அவனே, அரசருள் மிக்க மேலோன்;
      இருத்தலின் பூட்டிய இல்லத்தின் உள்ளே
      இருக்கின்றான் அவன் என எண்ணினர் மாந்தர்;
      தர்வேஷின் ஆடைகள் அணிந்தபடி வந்து
      ’யாதினும் மேலோன்’ என்பதன் பொருளை
      ஓதி உணர்த்தினன் எமக்கே!” 
   
      ஷைகு மஹ்மூது சொன்னார்: ஷைகு சத்ருத்தீனின் கல்லூரியில் ஒருநாள் ஆன்மிக இசைக் கூடுகை நிகழ்ந்தது. மௌலானா அதில் கலந்து கொண்டார். உணர்ச்சிச் சூழலை உயர் நிலைகளுக்கு எழ வைத்து மிக அரிதான தளத்தில் இசை இயங்கிற்று. கமாலுத்தீன் என்பார் அப்போது ஒன்று சொன்னார். ’மௌலானாவின் உன்னதமான உயர்வுக்குப் பொருந்தாதபடி, அவரது சீடர்கள் எல்லாம் தச்சர்கள், தையல்காரர்கள், கைவினைஞர்கள் முதலிய குறுந்தொழிலாளர்களாக மட்டுமே இருக்கின்றனர். பெருஞ் செல்வர்கள் எவரும் மௌலானாவின் சீடர்களாக இல்லை’ என்றார். இச்செய்தி மௌலானாவின் காதுகளை எட்டியபோது அவர் கமாலுத்தீனை உரக்கக் கூவியழைத்துக் கூறினார், “அப்படி என்றால், மன்சூர் ஹல்லாஜும் செல்வத்தின் நோக்கில் பெரிய மனிதராக இல்லையே? ஷைகு அபூபக்கர் ஒரு தச்சர்தானே? ஆனால் இவர்களின் பெயர்களைச் சொல்லும் போதெல்லாம் ‘அவர்கள் மீது இறையருள் உண்டாவதாக!’ என்று பிரார்த்தனை செய்கிறீர்கள் அல்லவா? அவர்கள் எல்லாம் ஆன்மிகத்தில் மிக உன்னதமான படித்தரங்களை அடைந்தோர் என்பதால்தானே? அவர்களின் எளிய உலக வாழ்க்கையும் தொழில்களும் அவர்களின் ஆன்மிக உயர்வுகளை எந்த வகையிலே பாதித்தது?’ இதனைக் கேட்டதும் கமாலுத்தீன் மிகவும் வெட்கமுற்றார், மன்னிப்புக் கோரினார்.

45
அதிர்ச்சிகள்

      மௌலானாவின் சபை ஒன்றில் கமால் என்று பெயர் கொண்ட ஒருவர் மௌலானாவின் எளிய சீடர்களுக்கு முதுகைக் காட்டிக் கொண்டு, அவர்களை அலட்சியம் செய்தவராக அமர்ந்திருந்தார். (கமால் என்றால் முழுமையானவர் என்று பொருள்.) மௌலானாவுக்கு அது பிடிக்கவில்லை. எனவே அவரை நோக்கி, “ஓ பே-கமால்!” என்று கூவினார்கள். (ஃபார்ஸி மொழியில் பே என்பது எதிர்மறை முன்னொட்டு. எனவே ‘பே கமால்’ என்றால் கமால் இல்லாதவன் – முழுமை அடையாதவன் – அறை குறை என்று பொருள்படும்.) மௌலானாவின் சிம்மக் குரல் அவனுக்கு நல்கிய அதிர்ச்சியில் அவன் கருங்கற் தரையில் விழுந்து மண்டை உடைபட்டுப் போனது. அவன் மன்னிப்புக் கோரினான். மௌலானா அவனை மன்னித்து அவனுக்குத் தனது அங்கியையும் தலைப் பாகையையும் தந்தார். அவன் மிகப் பணிவான சீடன் ஆனான்.

46
அடக்கம்

      மௌலானா தனது ஆன்மிக உரை ஒன்றில் பணிவு கொண்ட வாழ்வின் மேன்மையையும் தேவையையும் வலியுறுத்தினார். ”ஓங்கி உயர்ந்து வளர்ந்து காற்றில் தமது கிளைகளை நீட்டித் தமது உயரத்தால் மட்டுமே பெருமை அடித்துக் கொள்ளும் மரங்களில் பெரும்பாலும் கனிகள் இருப்பதில்லை. ஆனால், கனிகளைத் தாங்கும் மரங்கள் அவற்றின் சுமையால் தமது கிளைகள் தாழ நிற்கின்றன. அவற்றுக்கே கண்ணியம் உண்டாகிறது. இக்காரணம் பற்றியே எம்பெருமானார் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மிக உச்சமான நிலையில் பணிவும் கனிவும் கொண்டிருந்தனர். இப்பண்பில் ஏனைய இறைத்தூதர்களை விஞ்சி நின்ற நபி (ஸல்) அவர்கள் ஓர் உண்மையான தர்வேஷாகத் திகழ்ந்து, ‘எப்போதும் மக்களை கண்ணியமாகவும் பணிவுடனும் நடத்துங்கள். (நாவாலும் கையாலும்) எவரும் உங்களால் புண்பட்டுவிடாது பார்த்துக் கொள்ளுங்கள்’ என்று அருளினார்கள். போர் ஒன்றில் எதிரிகள் தாக்கியதில் நபியின் பல் ஒன்று பெயர்ந்து விட்டது. அப்போதும் அந்த எதிரிகள் நேர்வழி அடையும்படி அருள வேண்டும் என்றே இறைவனிடம் வேண்டியதோடு, “ஏனெனில் அவர்களுக்கு சத்தியப் பாதை தெரியவில்லை” என்றும் உரைத்தார்கள். அவர்கள் நாடியிருந்தால் இறைவனின் முனிவு (சாபம்) தமது எதிரிகளின் மீது இறங்க வேண்டும் என்றும் பகைவர் பாழ்பட வேண்டும் என்றும் கேட்டிருக்கலாம். ஆனால், அருளாளரான அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்விடம் அன்ன்னம் கேளாமல் பகைவரைத் தாம் மன்னித்து விட்டதோடு அவர்களுக்கும் நேர்வழி அருளப்படல் வேண்டும் என்றே அவாவினார்கள். எனவேதான், நபிகள் நாயகத்திற்கு முன் வேறெந்த இறைத்தூதரும் அத்துணை அளவு மனிதகுலத்திற்கு அமைதி தேடியதில்லை என்று சொல்லப்படுகிறது.” அதன் பின், மௌலானா ஒரு கவி படித்தார்:

      ”மனிதன் மண்ணால் படைக்கப்பட்டான்;
      எனினும், மண்ணே இல்லை என்றால்
      எதனால் படைக்கப்பட்டிருப்பான்?”

      இங்கே ‘களிமண்’ என்று குறிப்புக் காட்டுவது அஃது கீழான பொருள் என்பதற்காகவே. காற்றும் ஒளியும் வெளியும் போன்று அது மேலே இருப்பதில்லை. அது மிகவும் அடக்கமான நிலையில் வைக்கப் பட்டுள்ளது. அடங்கியே கிடக்கிறது. பெருமையும் கர்வமும் கொண்டு எற்றி எழுகின்ற தீயைப் போல் அது இல்லை. கருத்து யாதெனில், களி மண்ணால் படைக்கப்பட்டவன் ஆதலால் மனிதன் எப்போதும் தன்முனைப்பை அடக்கியே வைத்திருத்தல் வேண்டும். பெருமையும் கர்வமும் எழுந்தாட அனுமதிக்கக் கூடாது. இன்னனம், அடக்கம் என்பது மனிதப் படைப்பின் இயற்கை நிலையாகவும் பண்பாகவும் இருக்கின்றது. எனினும், அடக்கம் என்பது சுய இழிவு அன்று, தன்னழிவு அன்று. ஏனெனில் சுயத்தின் தனித்தன்மை பேணப்பட வேண்டும். நெடு மரங்கள் தமது உயரத்தைப் பேணுவதைப் போல். ஆனால், நெடுமை மட்டுமே நற்பண்பு ஆகிவிடாது. எனவே உயரத்தில் கனிகளும் தோன்றவே சூஃபி நெறியில் எண்ணத்திலும் செயலிலும் பணிவு போதிக்கப்படுகிறது.

(தொடரும்...)

No comments:

Post a Comment