Monday, October 28, 2019

ரூமியின் வாழ்வில்... - 6


26
குருதியின் அற்புதம்

      அக்காலத்தில் மருத்துவ உலகில் ஒரு பெரும் விவாதம் கிளம்பிற்று. மனிதன் அவனது நாளங்களில் இரத்தம் இருப்பதால் வாழ்கிறானா அல்லது இறைவனின் அருளால் மட்டுமே வாழ்கிறானா என்பதுதான் அது. மருத்துவர்கள் இயல்பாகவே தமது துறையைச் சார்ந்து வாதிட்டார்கள். மனித உடலின் சாரம் குருதிதான். அது வெளியேறி வடிந்துவிட்டால் மனித உயிர் நின்றுவிடும் என்றார்கள்.

      ஆன்மிக நெறியினரின் சிந்தனை அதற்கு முரணாக இருந்தது. அவர்கள் இவ்விவாதத்தை மௌலானாவிடம் தெரிவித்தனர்.

      மருத்துவத்தைப் பொருத்த மட்டில் மனித உடலில் குருதி இருக்க வேண்டியது மிகவும் இன்றியமையாத ஒன்றுதான் என்று அவர் சொன்னார். “ஆனால் நமது சிந்தனை என்னவென்றால் மனிதனின் இருப்பு என்பது இறைவனின் நாட்டத்தின் படியே ஆகும். ஒருவரும் அதனை மறுக்க முடியாது, கூடாது” என்றும் சொன்னார். இதனைக் கூறிவிட்டு ஒரு பணியாளரை அழைத்துத் தனக்கு இரத்தம் குத்தச் சொன்னார். சராசரி மனிதன் செத்துப் போயிருப்பான் என்று சொல்லும் அளவுக்கு அவரது உடலில் இருந்து குருதி வெளியேறிவிட்டது. எவ்வளவு இரத்தம் வெளியேறிற்று என்றால் அவரது உடலே சற்று மஞ்சள் நிறமாக மாறிவிட்டது. அதனை மருத்துவர்களிடம் சுட்டிக் காண்பித்து மனிதன் இறைவனின் அருளால்தான் இருக்கிறான், இரத்தத்தால் மட்டுமன்று என்று அவர்கள் ஒப்புக் கொள்கிறார்களா என்று மௌலானா கேட்டார்.

      அவர்கள் அனைவரும் ஒப்புக்கொள்வதாகத் தலையைச் சாய்த்தனர். அவர்கள் மௌலானாவின் சீடர்கள் ஆயினர். மௌலானா எழுந்து சென்று குளித்துவிட்டு வந்தார். ஓதுதலும் ஆன்மிக வரிகள் பாடப்படும் இசையும் தொடங்கிற்று. எதுவுமே நடந்திராதது போல் மௌலானா அதில் கலந்து கொண்டார்.


27
சான்றோர் ஏன் ஞானியரைப் பற்றிப் பேசுகின்றனர்?

      மௌலானா ஷம்ஸுத்தீன் மாலத்தி ஒருமுறை மௌலானா ரூமியின் வீட்டிற்கு வந்தார். அவர் தனிமையில் அமர்ந்திருப்பதைக் கண்டார். தன்னருகில் வந்து நெருக்கமாக அமருமாறு அவரிடம் மகான் சைகை காட்டினார். எனவே மாலத்தி அவர்கள் மௌலானாவின் பக்கம் வந்து நெருங்கி அமர்ந்தார். இன்னும் நெருக்கமாக, இன்னும் நெருக்கமாக என்று மௌலானா மீண்டும் மீண்டும் சொன்னார். மாலத்தியின் முழங்கால் மௌலானாவின் முழங்காலைத் தொட்டது. அதன் பிறகு மௌலானா அவர்கள் சையது புர்ஹானுத்தீன் மற்றும் மௌலானா ஷம்ஸி தப்ரேஸ் ஆகியோரது ஆன்மிகப் படித்தரங்களைப் பற்றிப் பேசினார். அதனால் மௌலானா மாலத்தி மிகவும் ஆட்கொள்ளப் பட்டார். எனவே மௌலானா அவர்கள் மேலும் விளக்கமாக உரைத்தார்:

      ”நீங்கள் ஏன் இப்படி உணர்கிறீர்கள் தெரியுமா? எங்கெல்லாம் இறை நேசர்களின் மேன்மைகள் பேசப்படுகின்றனவோ அங்கெல்லாம் இறைவனின் அருள் ஒரு மழையைப் போல் பொழிகிறது. அதுவே மனதிற்குப் புத்துணர்ச்சி ஊட்டுகிறது.”

      இன்னொரு நிகழ்வும் அறிவிக்கப் படுகிறது. எப்போதெல்லாம் மௌலானா குளியலறைக்குச் செல்வார்களோ அப்போதெல்லாம் மௌலானாவின் மனைவி அவரின் சீடர்களிடம் ஒரு பட்டுத் துவாலையைக் கொடுத்து அனுப்புவார்கள், வெந்நீர்க் குளியலின் பின் அவருக்குக் கபம் கட்டிவிடக் கூடாது என்பதற்காக.

      ஒருநாள் அவர்கள் பட்டுத் துவாலையை விரித்தபோது அதனைக் கண்டு காரணத்தை ஊகித்துவிட்ட மௌலானா அவர்கள் குளிர்ப் பருவத்தின் தாக்கத்திலிருந்து தன்னைக் காத்து வரும் தனது ஆடைகளை உடனே களைந்துவிட்டு கடும் பனியில் வெளியே தோட்டத்திற்குச் சென்றார்கள். கதகதப்பான ஆடைகளால் தன்னைப் போர்த்திக் கொள்ளாது பனி பொழிந்து மூடிய புல் பரப்பில் மௌலானா நிற்பதைச் சீடர்கள் பார்த்தனர். மௌலானா தனது தலையின் மீது பெரிய பனிக்கட்டி ஒன்றை வைத்திருந்தார். தனது சீடர்களுக்கு அவர் விளக்கிச் சொன்னார்:

28
குளிரால் பாதிப்பில்லை

      ”நண்பர்களே! எனது ஸ்தூல சுயம் அரவணைக்கப்பட வேண்டாம். நான் ஃபிர்-அவ்ன்களின் குலத்தில் வந்தவன் அல்லன். ஆனால் தர்வேஷ்களின் பேரரசன் ஆகிய அந்த அரசனின் இனத்தைச் சேர்ந்தவன்.’ இதனைச் சொல்லிவிட்டு அவர் தனது தொப்பியை அணிந்துகொண்டு அப்பால் நடந்தார்.

29
சண்டி மனம்

மௌலானா ரூமியின் மகன் சுல்தான் வலத் அவர்கள் அறிவிக்கிறார்: மௌலானா அவர்களுக்கு ஐந்து வயதாக இருந்த பிள்ளைப் பருவத்திலேயே இச்சைகளும் ஆசைகளும் அற்றுப் போயின. ‘என் தந்தை இளமைப் பருவத்தை எய்தினார். பின்னர் நடு வயதும் அடைந்தார். தொடர்ந்து தன்னை வழிபாட்டில் பிழிந்தார். ஆணவத்தை அகற்றுவதன் அடையாளமாக உடலுக்கு இதம் நல்கும் வசதிகளைத் தள்ளினார், உலக இச்சைகளை நசுக்கினார். இளம் வயதிலேயே உலக ஆசைகளை எல்லாம் களைந்த பின்னரும் இப்போதும் ஏன் உடல் தேவைகள் மற்றும் ஆசைகள் பற்றி விழிப்புடன் கண்காணித்து வருகின்றீர்? என்று நான் என் தந்தையை வினவினேன். மனம் ஒரு மாபெரும் ஏமாற்றுக்காரன் என்று அவர் சொன்னார். ‘தீமை ஒருவரை மிகைத்து விடாமல் எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும்’ என்றார்.

“சண்டி மனத்தின் கடிவாளத்தை
கண்டிப்புடன் நீ இழுத்துப் பிடி.
உலகின் ஏமாற்றுப் பூக்கள் உன்னை
எளிதில் மயக்கும், எச்சரிக்கை!
நீள அங்கியும் தியான மாலையும்
கோலம் காட்டிடும் மனம் கொள்ளாதே!
அதனுடன் ஒட்டி உறவாடாதே
அதனுடன் பயணம் செல்ல நாடாதே!”

30
சீடன் ஒருவனுக்கு தீட்சை

      ஷெலபி ஹுசாமுத்தீன் இந்நிகழ்வை அறிவிக்கிறார். சையது ஷரஃபுத்தீனுக்குக் கோன்யா நகரின் பிரமுகர் ஒருவர் நண்பராக இருந்தார். அந்தச் செல்வருக்கு அறிவும் நற்பண்பும் மிக்க மகன் ஒருவன் இருந்தான். மௌலானாவின் பக்தி மற்றும் நற்பண்புகளால் கவரப்பட்ட அந்த இளைஞன் அவ்விளம் வயதிலேயே மௌலானாவின் சீடனாக வேண்டும் என்று ஆசைப்பட்டான். மௌலானாவின் போதனைகள் எல்லாம் தன் பையனுக்கு மிகவும் அதிகம் என்று நினைத்த செல்வர் தனது அனுமதியை ஒத்திப் போட்டு வந்தார். அந்த மகா ஞானியின் சீடன் ஆவதற்குத் தன்னை அனுமதிக்கவில்லை என்றால் தான் தற்கொலை செய்துகொள்ளப் போவதாக அவன் மிரட்டினான். வேறு வழியின்றி அனுமதி தந்த செல்வந்தர் அவ்விசயத்தில் சையது ஷரஃபுத்தீனின் உதவியை நாடினார். எதிர்நிலையான பதிலைச் சொல்லாமல் ஷரஃபுத்தீன் ஒரு திட்டத்தை வகுத்துத் தந்தார். அதன்படி, அந்தத் தந்தையே மௌலானாவிடம் சென்று தனது மகன் சொர்க்கத்துக்குச் செல்வானா இல்லையா என்று கேட்க வேண்டும். அந்தத் துடுக்கான கேள்வி மௌலானாவைக் கோபப் படுத்தும். அதனால் அவரது மகனுக்கு மௌலானா தீட்சை வழங்குவது தடைப்பட்டுப் போகும்.

      எனவே ஒருநாள் அந்தச் செல்வர் ஊரில் உள்ள மாபெரும் அறிஞர்கள் அனைவருக்கும் பெரு விருந்து அளித்தார். வழக்கப்படி, விருந்து முடிந்தபின் ஆன்மிகச் சுழல் நடனமும் இசையும் நடைபெற்றது. இசையும் சுழற்சியும் உச்ச நிலையில் நிகழ்ந்து கொண்டிருந்த போது மௌலானாவிடம் தான் கருதியிருந்த கேள்வியைச் செல்வர் கேட்டார். சற்றும் தயக்கமின்றி மௌலானா அவர்கள் அந்த இளைஞன் சொர்க்கத்திற்குச் செல்வான் என்றும் இறைவனின் திருக்காட்சியைப் பெறுவான் என்றும் சொன்னார். நகரில் உள்ள அவனது வயதினரைப் போன்றவன் அல்லன் அவன். ஏனெனில், அவன் ஆன்மிகத்தால் ஈர்க்கப்பட்டிருக்கிறான், ஆனால் மற்ற இளைஞர்கள் ஈர்க்கப்படவில்லை. அதனைக் கேட்ட அந்தச் செல்வரும் தனது மகனுடன் சேர்ந்து மௌலானாவிடம் தீட்சை பெற்றுச் சீடர்கள் ஆயினர்.


31
சீடர்களின் தரமின்மை


      ‘மௌலானா அவர்கள் பயபக்தியில் மிக உன்னத நிலையை அடைந்தவர். பல தலைமுறைகளாக அவரைப் போன்ற ஒருவர் பிறந்ததே இல்லை’ என்று சொல்லி, ஆனால் அவரது சீடர்கள் மிகவும் மட்டமான தரத்தினராகவும் சுயமோகம் கொண்டவர்களாக இருப்பதாகவும் மொய்னுத்தீன் ஒருநாள் குறைப்பட்டுக் கொண்டார்.

      அவருடன் இருந்த ஒருவர் அச்செய்தியை மௌலானாவிடம் எற்றி வைத்தார். சீடர்கள் அனைவரும் அதனைக் கேட்டு மன வேதனைப் பட்டனர்.

      எனவே மௌலானா அவர்கள் மொய்னுத்தீனுக்கு ஒரு குறிப்பெழுதி அனுப்பினார். ’எனது சீடர்கள் எல்லாம் ஏற்கனவே பக்குவப்பட்டவர்களாக இருந்திருப்பார்கள் என்றால் நானே அவர்களின் சீடனாக ஆகியிருப்பேன், அவர்கள் எனது சீடர்கள் ஆகியிருக்க மாட்டார்கள். அவர்கள் தம்மிடம் குறைகள் இருப்பதாக அறிந்ததால்தான் தாம் தூய்மை அடைய அவர்கள் என்னிடம் வந்துள்ளனர்’ என்று அதில் குறிப்பிட்டிருந்தார். மேலும், ‘எனது கண்ணியமிக்க தந்தை மீது ஆணையாகச் சொல்கிறேன், எனது சீடர்கள் எல்லாம் நேர்வழி பெற வேண்டும் என்று நாடி இறைவனே அவர்களது பாதுகாவலனாக இருப்பதால்தான் அவர்கள் எனது சீடர்களாகப் பதிவு செய்யப் பட்டுள்ளனர்’ என்றும் மௌலானா குறிப்பிட்டிருந்தார். மேலும், அவர் கவி படித்தார்:

      ”திரிகின்றனர்
      அவர்கள் அலைகின்றனர்
      இறைவனின் பாதையில்தான்!
      அவர்களைக் காக்கவே
      வந்துள்ளோம் யாம்!
      அல்லும் பகலும்
அவர் பணி செய்வாம்!”

மௌலானாவின் மடலை மொய்னுத்தீன் கண்ணுற்ற போது அதன் வாதத்தால் உள்ளம் உருகியவராகி உடனே வந்து மௌலானாவிடம் தானும் தொண்டனாகச் சேர்ந்து அதன் பின் எப்போதும் அவருக்கு நன்றியுடன் சேவை புரிபவர் ஆனார்.

32
அகப்புலச் சந்திப்பு

      மௌலானாவின் சமயக் கல்லூரிக்கு அருகில் இளம் வணிகன் ஒருவன் வசித்திருந்தான். மௌலானாவின் போதனைகள் அவனைப் பெரிதும் ஈர்த்தன. அவ்விளைஞன் எகிப்திற்குப் பயணிக்க வேண்டுமென்று பேராவல் கொண்டிருந்தான். அவனது நண்பர்களோ அவன் எகிப்துக்குப் போக வேண்டாம் என்று அறிவுரை கூறினர். அவனது திட்டத்தை அறிந்தபோது மௌலானாவும் அவன் செல்ல வேண்டாம் என்றே ஆலோசனை நல்கினார். ஆனால், தனது திட்டத்தில் அந்த வணிகன் மிக உறுதியாக இருந்தான். ஓரிரவு அவன் சிரியா நோக்கிப் புறப்பட்டான். அண்டகியாவை அடைந்ததும் அங்கிருந்து எகிப்துக்குச் செல்லும் கப்பல் ஒன்றில் ஏறிக்கொண்டான். ரோம அரசின் விளிம்பில் வாழ்ந்த குலத்தினரான ஃபிராங்குகளால் அக்கப்பல் கைப்பற்றப் பட்டது. அவ்வணிகன் பாதாளச் சிறை ஒன்றில் வீசப்பட்டான். அவனுக்கு மிகச் சொற்பமான உணவே கொடுக்கப்பட்டது. நாற்பது நாற்கள் முழுமையாக அந்த இருட்டுச் சிறையில் அவன் கிடந்தான். மௌலானாவின் அறிவுரையைப் புறக்கணித்ததால்தான் தனக்கு இக்கதி நேர்ந்தது என்று அவன் புலம்பிக் கொண்டிருந்தான்.

      நாற்பதாம் நாளிரவு தனது கனவில் அவன் மௌலானாவைக் கண்டான். அடுத்த நாள் காலை ஃபிராங்குகள் அவனை விசாரணை செய்யும்போது அவனிடம் கேட்கப்படும் ஒவ்வொரு கேள்விக்கும் அவன் உடன்பாடாகவே பதில் உரைக்க வேண்டும் என்று மௌலானா அவனிடம் சொன்னார். அவன் திடுக்கிட்டு எழுந்தான். கனவின் மீது உறுதி கொண்டான். காலையில் ஃபிராங்குகள் அவனை விசாரணை செய்ய ஒரு துபாஷியுடன் வந்தனர். அவனுக்கு மருத்துவம் ஏதாவது அறிவானா என்று கேட்டனர். தனது கனவை நினைவுகூர்ந்து அவன் ”ஆம்” என்று கூறினான். தானொரு மருத்துவ நிபுணர் என்று சொன்னான். ஃபிராங்குகள் மிகவும் மகிழ்ந்தவர்களாக அவனை உடனே தமது அரசனிடம் அழைத்துச் செல்ல வேண்டும் என்றனர். அரசன் நோய்ப்பட்டுக் கிடந்தான். அவனுக்கு உடனே மருத்துவ சிகிச்சை செய்ய வேண்டியிருந்தது.

      ஃபிராங்குகள் அவனுக்கு உயர்தரமான ஆடைகளை அணிவித்துத் தங்கள் அரசனைக் காண அரண்மனைக்கு அழைத்துச் சென்றனர். ‘திறன்மிகு மருத்துவன்’ என்று அறிமுகஞ் செய்தனர். செல்லும் வழியில் அவனுக்கு ஓர் உள்ளுதிப்பு ஏற்பட்டிருந்தது. அதன்படி, அவன் அரசனைச் சோதித்துப் பார்த்துவிட்டு ஏழ்வகைக் கனிகளைச் சாறு பிழிந்து ஒன்று கலந்து அவருக்குப் புகட்ட வேண்டும் என்று பரிந்துரைத்தான். இறைவனின் அருளால் சற்று நேரத்திலேயே அரசனின் உடல்நலத்தில் நல்ல மாற்றம் தெரிந்தது. அரசன் அகம் மகிழ்ந்தான். அவ்விளைஞன் அரச விருந்தாளி ஆனான். மருத்துவ அறிவு கிஞ்சிற்றும் இல்லாதவன் என்றபோதும் அவ்வணிகனுக்கு உதவி தேடி வந்தது:

      ”ஒடுங்கினார் உள்ளத்து அழுகுரல் தம்மை
      அடைகின்ற போது அருளாளர் நெஞ்சம்
      உதவி புரிந்திட விரைந்து வருமே”

      அரசன் முழு நலம் அடைந்தவுடன் அவ்விளைஞனை அழைத்து அவனுக்கு என்ன சன்மானம் வேண்டும் என்று வினவினான். தன்னை விடுதலை செய்து தனது ஊருக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என்றும் ஆன்மிக குருவான மௌலானாவின் முன் தான் மண்டியிட்டு மரியாதை செலுத்த வேண்டும் என்றும் அவன் சொன்னான். அவன் விடுதலை செய்யப்பட்டுப் பரிசுகளும் கொடுக்கப்பட்டன. அவன் தனது கதையை ஃபிராங்குகளிடம் இப்போது சொன்னான். மௌலானாவின் உதவியையும் ஆன்மிக ஆற்றலையும் எண்ணி அவர்கள் வியந்தார்கள்.

      கோன்யாவை அடைந்த வணிகன் நேராக மௌலானாவின் வீட்டிற்குச் சென்றான். அவரின் பாதங்களை முத்தமிட்டு நன்றியுடனும் மரியாதையுடனும் அவற்றைக் கைகளால் பற்றிக் கொண்டான். இளம் வணிகனை மீண்டும் பார்த்ததில் தனது மகிழ்ச்சியை மௌலானா வெளிப்படுத்தினார். தன் சீடனது முகத்தை அன்புடன் முத்தமிட்டுச் சொன்னார், “ஃபிராங்குகளைச் சமாதானப் படுத்தி உன்னைக் காப்பாற்றி விடுதலையும் வாங்கித் தந்துவிட்டேன். இனிமேலாவது நீ போதும் என்ற மனத்துடன் நேர்மையான வழியில் பொருளீட்டி இங்கேயே இரு. போதும் என்னும் மனமே இறைவனின் அருட்கொடை. பேராசையோ இருட்டறைக்கு இழுத்துச் செல்கிறது.”

33
செல்வரும் ஏழையரும்


       கோன்யாவின் பிரமுகர்கள் மௌலானாவைச் சந்திக்க வராமல் அவரினும் கீழான படிப்பும் பயபக்தியும் கொண்டோரைச் சந்திக்கச் செல்கின்றனர் என்று மௌலானாவின் தீவிர சீடர்கள் ஆதங்கப் பட்டனர். மௌலானாவின் உயர்வை அக்குடிமக்கள் முழுமையாக அனுபவிக்கவில்லை என்று கருதினர். இதனை அறிந்த மௌலானா, செல்வர்களைத் தாம் அழைத்து உறவாடத் தொடங்கினால் ஏழையர் தமது சகவாசத்தை இழந்து வாட நேரிடும் என்று அவர்களிடம் சொன்னார்.

      மௌலானாவிடம் அவரது சீடர்கள் செய்த முறையீடு கோன்யாவின் செல்வச் சீமான்களின் காதுகளை எட்டிற்று. மறுநாள் காலையிலேயே கோன்யாவின் செல்வர்கள் எல்லாம் மௌலானாவின் ஆசி பெறும் பொருட்டு அவரது வீட்டின் முன்னே குழுமிவிட்டனர். செல்வ வளம் மிக்கோரான ஃபக்ருத்தீன், மொய்னுத்தீன், ஹலாலுத்தீன் முஸ்தஃபா மற்றும் அமீனுத்தீன் மியாக்கயல் ஆகியோர் அவருள் இருந்தனர். மௌலானா வீட்டின் மேல் மாடி செல்வந்தரால் நிரம்பி வழிந்தது. அமர்ந்து மௌலானாவின் ஞான போதனையைக் கேட்க ஏழைகளுக்கு இடமில்லாமல் ஆயிற்று.

      அதன் விளைவாக ஏழைகள் எல்லோரும் வீட்டிற்கு வெளியே நின்று கொண்டிருந்தனர். மௌலானாவின் கவனம் அவர்கள் மீது போதுமான அளவு பட முடியாமல் ஆனது. உலகப் பொருள் வளம் இல்லா ஏழைகளுக்கு அது மிகவும் மன வேதனையைத் தந்தது. நிகழ்ச்சி முடிந்து செல்வரெல்லாம் சென்ற பின்பு ஏழைகள் அனைவரும் மாடிக்கு ஏறிச் சென்று மௌலானாவிடம் தமக்கு நேர்ந்த துயரத்தை முறையிட்டனர். அவர்களே தமது உண்மையான தோழர்கள் என்று சொல்லி மௌலானா அவர்களை அமைதிப் படுத்தினார். பொருள் குறைவாகவும் பணிவாகவும் உள்ளோர்க்கே தனது ஞான போதனைகள் அர்ப்பணம் என்று சொன்னார். ஏழைகட்கு வழங்கியது போக இருந்த மிச்சத்தையே பணக்காரர்கள் பெற்றுச் சென்றுள்ளனர் என்று சொன்னார். அதாவது, கன்றுகள் வயிறு நிரம்ப அருந்திய பின்னுள்ள மிச்சப் பாலினையே மக்கள் கறந்து கொள்வது போல. மிச்ச ஞானமே செல்வந்தருக்கு. நிறைந்த ஞானம் எல்லாம் ஏழைச் சீடர்களுக்கே. செல்வர்கள் வருவதே இல்லையே என்று ஏழைச் சீடர்கள் முறையிட்டதுதான் இத்தனை இடையூறுகளுக்கும் காரணம் ஆனது என்பதை அவர்களுக்கு மௌலானா உணர்த்தினார். அவர்களை அழைத்தது தான் அல்ல என்பதைப் புரிய வைத்தார். எனவே சீடர்கள் தம் மீது குறை எண்ணலாகாது என்று தெளிய வைத்தார். செல்வர்களும் செவ்வழிச் செல்ல வேண்டும் என்றும் தர்வேஷ்களுக்கு இடையூறு தராமல் அவர்கள் வாழ வேண்டும் என்றும் தமது செல்வங்களை அவர்கள் நேர்மையாக உழைத்து போதும் என்னும் மனநிலையில் ஈட்ட வேண்டும் என்றும் அவர்களுக்காகப் பிரார்த்திக்குமாறு ஏழைச் சீடர்களுக்கு வழி காட்டினார்.

34
ஓர் ஊரின் பெயர்

      ஷைகு ஜியாவுத்தீன் அவர்களின் வீட்டில் ஒருமுறை மௌலானா அவர்கள் ஞான சபையில் கலந்து கொண்டார். அப்போது ஜியாவுத்தீன் பின்வரும் குர்ஆன் வசனத்தை ஓதினார்:

      ”முற்பகல் மீதாணை!
      மூடும் இரவின் மீதாணை
      எப்போதும் உம்மை உமதிறைவன்
      கைவிடவுமில்லை, கைத்திடவும் இல்லை”
      (93:1-3)

      அவ்வசன ஓதல் மௌலானாவை மிகவும் பாதித்தது. எனவே, அதனை ஓதியவர் தெளிவாக ஓதாமல் ஓசைப் பழுதுடன் ஓதினார் என்று மௌலானாவிடம் ஷெலபி ஹுசாமுத்தீன் மன்னிப்புக் கோரினார்.

      மௌலானாவுக்கு கதை ஒன்று நினைவுக்கு வந்தது. அதை அவர் சபையில் சொன்னார். ஓர் ஊருக்குள் புதிதாக வந்த இலக்கணப் புலவனொருவன் தான் தேடி வந்த ஊர் அதுதானா என்று உறுதி செய்யும் பொருட்டு அங்கிருந்த பாமரன் ஒருவனை அழைத்துக் கேட்டான். உள்ளூர் வழக்கில் சொல்லப்படும் ஓசையுடன் அந்த இலக்கணப் பண்டிதனின் தெள்ளிய உச்சரிப்பு ஒத்துப் போகவில்லை. எனவே அந்தப் பாமரன் தான் அப்படி ஓர் ஊரைப் பற்றி அதுவரை கேள்விப்பட்டதே இல்லை என்று பதில் சொல்லிவிட்டான்.

      இதன் பொருளாவது, குர்ஆனின் பிரதி என்பது மௌலானாவுக்கும் ஓதியவருக்கும் மற்ற அனைவருக்கும் அதேதான். ஆனால் ஓதுவார் செய்த பிழையால் அதில் உயிரோட்டம் இல்லாமல் போனது.

      தான் உச்சரித்த முறைதான் சரியானது என்று அக்கதையில் இலக்கணப் புலவன் பிடிவாதம் செய்தான். ’இலக்கணப்படி உங்களுடைய உச்சரிப்பு சரியானதாக இருக்கலாம், ஆனால் இந்த ஊர் மக்கள் எல்லாம் இப்படித்தான் சொல்கிறார்கள். அதனால் நீங்கள் குறிப்பிடுவது வேறோர் ஊரை என்றுதான் விளங்குவார்கள்’ என்று அவரிடம் அந்தப் பாமரன் சொன்னான்.

     
35
ஏணியும் கயிறும்
  
    ஒருமுறை மௌலானா அவர்கள் ஆன்மிகத்தின் உயர்ந்த அம்சங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார். தனது விரிவுரையில் ஒரு கதையைச் சேர்த்துக் கூறினார். தர்வேஷ் ஒருவர் பாலைவனத்தில் நடந்து போய்க்கொண்டிருந்தார். வழியில் கிணறு ஒன்று இருந்தது. நள்ளிரவில் அவ்வழியே சென்று கொண்டிருந்த இலக்கணப் புலவர் ஒருவர் அதனுள் வீழ்ந்து கிடந்தார். அவர் உதவிக்காகக் கதறிக் கொண்டிருந்தார். கிணற்றுக்குள் கிடக்கும் அவரை வெளியே எடுப்பதற்காக கயிறும் ஏணியும் கொண்டுவருமாறு அந்த தர்வேஷ் மக்களைக் கூவி அழைத்தார். கிணற்றுக்குள் கிடந்த புலவர் அந்த தர்வேஷை அழைத்து இலக்கணப்படி முதலில் ஏணியைச் சொன்ன பிறகே கயிற்றைக் குறிப்பிட வேண்டும் என்று பாடம் நடத்தினார். அவரிடம் அந்த தர்வேஷ், “அப்படியானால் நான் முறையாக இலக்கணம் படித்துக்கொண்டு வரும் வரை நீங்கள் கிணற்றுக்குள்ளேயே இருங்கள்’ என்று சொல்லிவிட்டு அப்பால் போய்விட்டார்.
  
    இக்கதை மூலம் மௌலானா தனது சீடர்களுக்கு ஒன்றைப் புரியவைத்தார்கள். வாணாளெல்லாம் மயிர் பிளக்கும் விவாதங்களில் செலவழித்து ஆன்மிக ரகசியங்கள் எதனையும் வெளிப்படுத்தாத மக்கள் கிணற்றில் கிடக்கும் புலவனை ஒப்பர். தாமே பீற்றிக் கொள்கின்ற கல்வியறிவின் சிரமங்களில் அவர்கள் சிக்கிக் கிடக்கின்றனர். உயர்வான ஆன்மிக இலக்கிற்கு அவர்களை அழைத்துச் செல்கின்ற ஞான குருவையும் அவர்கள் தேடி அடைவதில்லை.
  
    இதே போல் இன்னொரு நிகழ்வும் சொல்லப்படுகிறது. ஞானி சலாஹுத்தீனுக்குச் சீடன் ஒருவன் இருந்தான். அவன் மௌலானாவிடம் மிகவும் நெருக்கமாக இருந்தான். பொருள்கள் வாங்கி விற்கும் வணிகம் செய்து வந்தான். இஸ்தான்பூலுக்குச் சென்று காண வேண்டும் என்னும் ஆசையை அவன் வெகு காலமாக அடை காத்து வந்தான். அதற்கான ஏற்பாடுகளை எல்லாம் அவன் ஆயத்தம் செய்துவிட்டு அவன் மௌலானாவிடம் சொல்லிக் கொண்டு அவர்களின் ஆசியையும் அன்பையும் பெற வந்தான்.

36
துறவியும் அற்புதமும்

      அவன் இஸ்தான்பூலில் இருக்கும்போது, உலகைத் துறந்துவிட்டு அவ்வூரில் தனிமையில் வாழ்ந்து வரும் கிறித்துவத் துறவி ஒருவரைச் சென்று காணுமாறும் அவரிடம் தனது முகமன்களைத் தெரிவிக்குமாறும் அந்த வணிகனிடம் மௌலானா சொன்னார்கள். துருக்கியரின் அந்நகரை அடைந்ததும் முதல் வேலையாக அந்தக் கிறித்துவத் துறவியைப் போய் அவன் கண்டான். அவர் ஆழ்ந்த தியானிப்பில் அமர்ந்திருந்தார். அவரைச் சுற்றி ஒருவித அமைதியும் உண்மையின் ஒளிவட்டமும் இருந்தன. மிகுந்த மரியாதையுடன் அவன் அவரிடம் மௌலானாவின் முகமன்களைத் தெரிவித்தான். நட்பின் அந்த வெளிப்பாடுகளைப் பெற்றுக் கொள்ள அவர் மரியாதையுடன் எழுந்து நின்றார். பிறகு அந்தத் துறவி பிரார்த்தனை செய்து மண்டியிட்டார்.

      அவர் இருந்த சிறிய அறையில் அவ்வணிகன் தனது பார்வையை ஓடவிட்டான். அங்கே ஒரு மூலையில் மௌலானாவும் தியானத்தில் அமர்ந்திருப்பதைக் கண்டு மருண்டு போனான். கோன்யாவில் அவன் விடை பெற்றுக்கொண்ட போது அணிந்திருந்த அதே ஆடைகளை, தலைப்பாகையை இப்போதும் அணிந்திருந்தார். அப்போதிருந்த அதே சாந்தமான புன்னகை அவரின் உதடுகளில் இருந்தது. இக்காட்சியால் மிகவும் அதிர்ச்சி எய்தி அவ்வணிகன் மயங்கிச் சரிந்தான். அவன் விழித்தெழுந்த போது துறவி அவனை அமைதிப் படுத்தினார். ’விடுதலை’ அடைந்திருப்போரின் ரகசியங்களை அவன் அறிந்து கொண்டால் அவனால் ஆன்மிகத்தின் உயர்வான தளங்களை எட்ட முடியும் என்று அவனிடம் அவர் சொன்னார். அவ்வணிகனின் பயணங்களிலும் அலுவல்களிலும் அவனுக்குத் தேவைப்படும் அனைத்து வசதிகளையும் செய்து தருமாறு அதிகாரிகளுக்குப் பரிந்துரைத்து கடிதம் ஒன்றை அந்தத் துறவி அவனிடம் தந்தார்.

      வணிகன் அந்தக் கடிதத்தை இஸ்தான்பூலின் அரசரிடம் எடுத்துச் சென்றான். அவர் அவனை ராஜ மரியாதையோடு வரவேற்று அவனத் தேவைகளை எல்லாம் நிறைவேற்றித் தந்தார். அதன் பின் அவன் சொல்லிக்கொண்டு கிளம்புவதற்காக அந்தத் துறவியைக் காணச் சென்றான். மௌலானா சொல்லி அனுப்பியதைப் போன்றே அத்துறவியும் தனது முகமன்களை மௌலானாவுக்குச் சொல்லுமாறு அவனிடம் சொன்னார். மௌலானா தனக்கு முகமன்கள் அனுப்பிட மறக்கக்கூடாது என்று தாம் கேட்டுக் கொண்டதாகவும் அவனிடம் சொல்லி அனுப்பினார். ஆனால், வணிகன் கோன்யாவுக்குத் திரும்பியவுடன் இந்தச் செய்திகளை எல்லாம் ஷைகு சலாஹுத்தீனிடம் சொன்னான். ஞானிகள் சொல்வன எல்லாம் சரியாகவே இருக்கும் என்றாலும் இந்தச் செய்திகளை எல்லாம் ஆன்மிகப் பள்ளியைச் சாராதோரிடம் சொல்லிக் கொண்டிருக்க வேண்டாம் என்று அவர் அவனுக்கு அறிவுறுத்தினார். பிறகு அவர் அவ்வணிகனை மௌலானாவிடம் அழைத்துச் சென்றார். இஸ்தான்பூலின் கிறித்துவத் துறவியின் முகமன்களை அவன் மௌலானாவிடம் சொன்னான். மௌலானா அந்த வணிகனிடம், ”பார், நீ ஓர் அற்புதத்தைக் காண்பாய்!” என்று சொன்னார்.

      வணிகன் மௌலானாவின் அறையில் நோட்டம் விட்டான். மூலை ஒன்றில் அந்தக் கிறித்துவத் துறவி தியானத்தில் அமர்ந்திருப்பதைக் கண்டு வியப்படைந்தான். இஸ்தான்பூலில் தான் கண்ட அதே ஆடைகளை இப்போதும் அவர் அணிந்திருந்தார்.

      அக்காட்சி அளித்த பரவசத்தில் அந்த வணிகன் தனது ஆடைகளைக் கிழித்துக் கொண்டான். அந்தக் காட்சி மனிதப் பகுத்தறிவுக்கு அப்பாற்பட்ட ஒன்றாக இருந்தது. மௌலானா அவனை அப்பால் அழைத்துச் சென்று சொன்னார், “நீ எதையெல்லாம் கண்டாயோ, ஆன்மிக ரகசியங்களைக் கண்டு விட்டாய். இப்போது நீ எமது நம்பிக்கையாளரில் ஒருவன். தகுதி பெறாதோரிடம், ஆன்மிக அறிவு மிகச் சொற்பமாகவே உள்ளோரிடம் நீ இதையெல்லாம் சொல்லிக் கொண்டிருக்காதே.” அதன் பின் மௌலானா கவி படித்தார்:

      ”அரச ரகசியத்தை வெளிப் படுத்தாதவன்
      எறும்புகளுக்குச் சீனியைத் தூவாதவன்.
      அவனுக்கே ரகசியங்கள் சொல்லப்படும்
      இல்லை எனில், மாடுகளின் முன்னே
      நல்ல நகைகளை வீசியது போலாம்.”

      இதனால் அவ்வணிகன் பெருந் தாக்கம் அடைந்தான். அவன் தனது உடைமைகளை எல்லாம் ஏழைகளுக்கு வழங்கிவிட்டு, உலகப் பணிகளைத் துறந்து மௌலானாவிற்கு அர்ப்பணமான சீடன் ஆகிவிட்டான்.

      இன்னொரு நிகழ்ச்சி. ஒருநாள், மௌலானா அவர்கள் தனது பள்ளிவாசலை விட்டு ஊருக்குள் சென்று கொண்டிருந்தார். தாடி வைத்த துறவி ஒருவரைக் கண்டார். அவரது வெண் தாடி அவரை விடவும் வயதில் மூத்ததா என்று அவரிடம் கேட்டார். அதற்கவர் தனது இருபது வயதிலிருந்து தான் அந்த தாடியை வளர்த்து வருவதாகச் சொன்னார்.

      ’அப்படியானால் நீங்கள்தான் உங்கள் தாடியை விட மூத்தவர்’ என்றார் மௌலானா. தொடர்ந்து சொன்னார், “உனக்குக் கைசேதமே! உன்னை விட வயதில் இளையவனான உனது தாடி தனது பண்பிலும் தூய்மையிலும் வெள்ளையாகி விட்டது. ஆனால் நீயோ வாழ்வின் இருட்டில்தான் இன்னமும் இருக்கிறாய். உன்னுடைய தாடி தேர்ந்தெடுத்த பாதையை நீ இன்னமும் தேர்ந்தெடுக்காமல் இருக்கிறாய்.’

      மௌலானா சொன்னதன் உட்பொருளை விளங்கிக் கொண்ட அந்தத் துறவி உடனே தனது ஜெப மாலையை அறுத்தெறிந்துவிட்டு மார்க்கத்தைத் தழுவி மௌலானாவின் சிறந்த சீடர்களில் ஒருவரானார்.

      அதேபோல் ஒருமுறை அவர்கள் கறுப்பு அங்கி அணிந்த சிலரைக் கண்டனர். மெய்வழியை விட்டுப் பிறழ்ந்து போய்விட்டார்களே என்றும் ஆன்மிக வாழ்க்கையும் மெய்ஞ்ஞான உணர்வும் அவர்களிடம் இல்லையே என்றும் அவர்களை நோக்கி மௌலானாவின் சீடர்கள் கவலைப்பட்டனர். வழிகாட்டுதலின் சூரியன் அனிச்சையாகவேனும் அந்தக் கறுப்பாடைக் காரர்கள் மீது தனது வெளிச்சத்தைப் பாய்ச்சும் எனில் அவர்கள் நேர்வழி அடைவார்களே என்று சீடர்கள் சொல்லிக் கொண்டனர். மௌலானாவின் பார்வையில் அந்த மனிதர்கள் வந்த போது ‘சூரியன் அவர்கள் மீது சுடர் வீசிற்று’. அக்கணமே அவர்கள் மௌலானாவின் வழிக்கு வந்து விட்டனர்; அர்ப்பணமான சீடர்கள் ஆகிவிட்டனர். வெண்மைக்குள் இருளை இறைவன் மறைத்து வைக்கிறான் என்றும் இருளிலிருந்து வெண்மையை வெளிப்படுத்துகிறான் என்றும் சொல்லப்படுகிறது. மௌலானா இதனைச் சொல்லக் கேட்டபோது அவர்கள் அனைவரும் தமது தலைகளைத் தாழ்த்தி அதனை ஏற்றனர்.


37
அகத்தைச் செம்மை செய்தல்


      மௌலானா இஃக்தியாருத்தீன் என்றொரு பிரபலமான மார்க்கச் சட்ட வல்லுநர் இருந்தார். தனது வீட்டிற்கு வருமாறு பன்முறை அவரை மௌலானா அழைத்திருந்தார்கள். ஒரு வெள்ளிக்கிழமை அன்று தொழுகைக்குப் பின் அவர் மௌலானாவின் வீட்டிற்கு மிகத் தாமதமாக வந்து சேர்ந்தார். தாமதத்திற்கான காரணத்தை மௌலானா வினவினார். ஃகுஜந்த் நகரின் போதகர் ஒருவர் வந்திருந்ததாகவும் அவரது சொற்பொழிவிலிருந்து எழுந்து வரத் தாமதம் ஆகிவிட்டது என்றும் இஃதியார் கூறினார். அந்த போதகர் என்ன பொருண்மை பற்றிப் பேசினார் என்று மௌலானா வினவினார். தானும் அங்கே கூடியிருந்தோரும் எத்தகைய அருட்கொடையில் இருக்கிறோம் என்பதை ஃகுஜந்தின் முல்லா எடுத்துச் சொல்லி இறைவனுக்கு அனைவரும் அதிகமதிகம் நன்றி செலுத்த வேண்டும், ஏனெனில் நம்மை எல்லாம் அவன் தனது மார்க்கத்தில் பிறக்க வைத்துள்ளான், அதற்கு வெளியே நம்மை அவன் ஆக்கவில்லை என்று சொன்னார் என்றார். மௌலானா லேசாகப் புன்னகை செய்தார். ”அந்த அப்பாவி முல்லா தனது பேச்சாலும், அவர்கள் மட்டுமே உயர்ந்தவர்கள் என்ற உணர்வாலும் தன்னை இறைத்தூதர்கள் மற்றும் இறைநேசர்களை விடவும் மேலே உயர்த்திவிட்டார். அத்தகைய மனிதர்கள் ஒருபோதும் தமது அகத்தைக் காண்பதே இல்லை (அதாவது, இந்த மனிதர்களே பெரும்பாவிகள். அவர்களுக்கு ஆன்மிக உணர்வு கிஞ்சிற்றும் இல்லை. அவர்கள் தமது உள்ளத்தையும் மேலோட்டமாகவே காண்கின்றனர். அதாவது தங்கள் சுயத்தின் ’புறம்’ மட்டுமே அவர்களுக்குப் படுகிறது. அகமியத்தை அவர்கள் அறிவதும் உணர்வதும் இல்லை.) தங்களது அகத்தை மெய்ஞ்ஞான ஒளியால் செம்மை செய்திருப்போரின் மேன்மையை இவர்கள் ஏற்றுக் கொள்வதில்லை” என்று சொன்னார். பிறகு மௌலானா பின்வரும் கவிதையைப் படித்தார்:

      ”இறைவனின் விதானத்தில் 
      சிறகடிப்போர் இருக்கின்றனர்;
      வானவரும் ஞானியரும்
      ஏகன் அவனைக் காதலிப்போர்.”

(to be continued...)

1 comment: