Monday, May 6, 2019

நீருக்குள் மூழ்கிய புத்தகம் - 19


















2:22-23 உரையாடலின் பருப்பு மணிகள்
      காய்ச்சல் நோய் கண்டிருக்கும்போதும் கூட பிரக்ஞையுடன் இருப்பதன் இன்பம் எனக்கு இருக்கிறது என்று நண்பர்களிடம் சொல்கிறேன். நான் வாந்தி எடுப்பதோ அல்லது குளிரில் நடுங்குவதோ ஒரு பொருட்டே அல்ல. இங்கே இருப்பதை அப்போதும் அனுபவிக்கிறேன். பயணிப்பதோ வீட்டில் தங்குவதோ, இரண்டுமே களிப்புதான்.  தனித்திருப்பது, ஊரார் என்னைத் தூற்றுவது, எந்த நிலையானாலும் அந்நிலையைப் பொருந்தித் தெளிவாக இருக்கிறேன். எப்போதாவது என்னை நானே அழமாகக் கண்டிக்க நேரும் கழிவிரக்கத்தில் மட்டுமே எனக்குள் நானே பேசுவதில் அடங்கி விடுகிறேன்.

      நான் பிணிபட்ட அல்லது மனம் துவண்ட நாட்களில் இங்கே வருகின்ற பார்வையாளர்கள் கூட நோயைப் பற்றியோ துக்கத்தைப் பற்றியோ ஒன்றுமே குறிப்பிடுவதில்லை. அவர்கள் இன்னும் தாராளமாக இருக்க வேண்டும். இங்கே நீங்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். எனது மனநிலையை கவனிக்க வேண்டாம். உரையாடலே நிலத்தை உழுது பயிர்களை வளரச் செய்கிறது. கத்திரி, முள்ளங்கி, பட்டாணி, முட்டைக்கோஸ், கீரை. தடைகள் ஏதும் இன்றி உரையாடல் தனது வழியைக் கண்டுகொள்ளட்டும். உரையாடலின் பருப்பு மணிகள் நமக்கு ஊட்டப்பட நீள் நெற்றுகள் அவற்றின் உடனடித் தண்டுகளில் முளைக்கட்டும்.

















2:23-24 மையம்
      திளைப்பு மற்றும் புகழ்ச்சியின் மையம் நட்புதான். ஒரு தோட்டத்தில் அல்லது ஒரு தோப்பில் நீ எப்படி வேலை செய்வாய், அல்லது ஒரு பாடலைப் பாடுவாய், அல்லது வேகமாகப் பாய்கின்ற நீரோடையின் அருகில் எப்படி வெறுமனே அமர்ந்திருப்பாய் என்பதையும் உன் அருகில் ஒரு நண்பன் இருந்தால் இவை ஒவ்வொன்றும் எப்படிப் பன்மடங்கு சிறக்கிறது என்பதையும் கவனி. தோழமையில் வலி ஆறத் தொடங்குகிறது, மகிழ்ச்சி பெருகுகின்றது.

      ஆன்மாவினுள் செல்லும்போது இரண்டு எதிரிகள் அல்லது இரண்டு அந்நியர்கள் ஒருவரை ஒருவர் அடையாளம் காண முடியாது. உன் வாழ்வின் இந்தப் புள்ளியில் இருந்து மேலும் நண்பர்களைத் தேடி அடைய முடிவெடு. நீ உனது நண்பர்களுடன் எதையாவது அல்லது எதையாகிலும் பகிர்ந்திருக்கும்போது இறைவன் உன் மேல் மகிழ்ச்சி அடைகிறான்.

      ஒரு நபர் சந்திக்கும் யாரிலோ காதலரை அடைகிறார். இன்னொருவர் அதே நபரைக் கண்டு அப்பால் நகர்ந்து விடுகிறார். ஈர்ப்பில் உள்ள இந்த வேறுபாடுகள் உங்களது உடல்களில் இருந்தோ பண்பாட்டில் இருந்தோ வருவன அல்ல. அவை ரகசியமான சார்புகளுடன் படைப்பினுள் வாழ்கின்றன. ஒருவருக்குப் பன்றிகளை விடவும் குதிரைகளையே மிகவும் பிடித்திருக்கிறது. ஆனால், பன்றிகளுக்கும் ரசிகர்கள் உண்டு. பன்றிகளுக்கும் நேசர்கள் உண்டு!


2:24 இருவகைப் பணியாற்றல்
      நான் நோயப் பட்டிருந்த போது, வேலைக்கு இரண்டு அணுகுமுறைகள் இருப்பதை அறிந்தேன். ஒன்று வலியதாகவும் விரைவானதாகவும், செயற்பாட்டில் அச்சமற்றதாகவும் இருக்கிறது. மற்றது, ஏதாவது தவறு நேர்ந்து விடுமோ என்று சதா கவலைப்பட்டு இறுக்கமாக இருக்கிறது. பதற்றத்தில் இருந்து வேலை வெளிப்பட்டால் அது கலங்கலாகவும் குழப்பமாகவும் இருக்கிறது. ஆனால், செயற்பாடு இன்பத்துடனும் துணிச்சலுடனும் விரையும்போது உலகம் அதன் தடைகளை அகற்றிக்கொண்டு முழுமையாக வளர்கிறது.


























2:26-27 நாம் ஒருபோதும் அடைந்து முடிக்க முடியாத சுகம்

      எனக்கு நோய் என்றும் எனது நோயைப் பற்றிப் பேச வேண்டாம் என்றும் மக்களிடம் நானேதான் சொல்கிறேன். ஆனால், யாருக்கு அக்கறை இருக்கிறது என்று பார்ப்பதற்காகத்தான். திறக்கும் இதயங்களை நான் தேடுகிறேன். ஆனால் அதனை அரிதாகத்தான் அடைகிறேன். வெகு காலத்திற்கு முன்பே நான் எனது இதயத்தைக் காற்றில் வீசிவிட்டேன். உண்ணவோ காணவோ இயலாத சிலைகளுக்கே மக்கள் காணிக்கை செலுத்துகின்றனர். நான் உண்பதையோ பிறரைப் பார்ப்பதையோ நிறுத்தி விட்டால் மக்கள் என்னை ஒரு சிலையை விடவும் தாழ்வாகவா மதிப்பிட்டு விடுவார்கள்? 

      எனது ஒவ்வொரு உரையாடலையும் செயலையும் நான் எனது இதயத்தை வீசியெறிந்த அந்தக் காற்றின் ஊளையாகவே கருதுகிறேன். ‘உமக்கு அது கேட்கிறதா?’ என்று என்னைச் சுற்றியுள்ள அனைவரிடமும் கேட்கிறேன். ஜன்னலுக்கு வெளியே தலையை நீட்டுமொரு குருடன் கேட்பதைப் போல் நீங்கள் கேட்கிறீர்கள். ஆனால், நீங்கள் கேட்பது உங்களுக்கு விளங்குகிறதா? 

      நிரந்தரமா? தற்காலிகமா? எவ்வகைப் பணியைத் தேடுகிறார்கள் என்று எனது மாணவர்களை நான் கேட்கிறேன். விடைகளை எங்கே தேடுகிறீர்கள்? அவர்கள் குர்ஆன் என்கிறார்கள். எது தற்காலிகம் எது நிரந்தரம் என்று காட்டப்பட வேண்டும் என்று கேட்கும்படி அவர்களிடம் நான் சொல்கிறேன். இறைவனின் அமைதி, முகத்தில் ஒளி. அலுத்துப் போய்விடும் இன்பங்கள் உள்ளன. எவ்வளவு கிடைத்தாலும் போதவில்லை என்று தோன்றுகின்ற இன்பங்களும் உள்ளன. அத்தகைய ஓர் இன்பம்தான் தூர்சீனா மலையில் மூசா நபிக்கு அருளப்பட்டது. அவர் தூய உள்ளமையில் விழுந்தார். அவரின் காலடியில் இறைவன் மலையைத் தூளாக்கினான். அவர் இன்னொரு வகையான ஞானத்தினுள் மூழ்கினார் [காண்க: குர்ஆன்: 7:143]





















2:29 உருளும் பட்டுப் பந்து

      தாஷ்கந்தின் பிரமுகரான நஜிம் சாச்சியிடம் நான் இதைத்தான் சொன்னேன்: நீ உனது அன்றாட அலுவல்களில் மூழ்கிக் கிடக்கிறாய். பெரிய வேலைகளில் கவனம் செலுத்துவதற்கு உனக்கு அவகாசம் வாய்ப்பதில்லை. நான் ஏன் இங்கிருக்கிறேன்? நான் மிகவும் ஆழமாக நேசிப்பது எதனை? மீதமுள்ள காலத்தை நான் எப்படிப் பயன்படுத்தப் போகிறேன்?

      இக்கேள்விகளும் அவை கொண்டு வரும் விடைகளும் உனக்கு சோகம் தரலாம் அல்லது உனது வாழ்வையே தலைகீழாகப் புரட்டிப் போட்டு விடலாம். உனது பரபரப்பான மூளை செயல்களையே தேடுகிறது, தியானத்தை அல்ல. நீ ஏதேனும் செய்யவில்லை எனில் உனது வேலை திட்டமிட்டபடிச் செல்லாது என்று நினைக்கிறாய். பிறருக்கு உதவுவதைப் பொருத்தவரை, ஒருவனுக்கு உன்னுடைய கவனிப்புத் தேவை என்றும் இன்னொருவனுக்கு அவனது பிரச்சனைகள் தொடர்ந்தால்தான் அவன் ஒழுங்காகச் செயல்படுவான் என்றும் நீ முடிவு செய்கிறாய். உன் மனம் தனது செயற் திட்டத்தை வலியுறுத்துகிறது. ஆனால் உன் இதயம் சொல்கிறது: இரண்டு பக்கங்களையும் கவனத்தில் எடு, நடுவிலும் இரு.

      இதோ இப்படித்தான் உன் வாழ்க்கை தோற்றம் அளிக்கிறது, நஜிம் சாச்சி. அனைவரின் கவனமும் உன் மீதும் உன் வேலைகளின் மீதும் இருக்க வேண்டும் என்று நீ எதிர்பார்க்கிறாய். ஆக, சிகரத்தின் உச்சியில் அதோ நீ அமர்ந்திருக்கிறாய். அடிவாரத்தில் உள்ள ராட்டைகளிலிருந்து நீண்டு மேலே வரும் பட்டு இழைகள் உன் கையில் இருக்கின்றன. உனது உருளும் பட்டுப் பந்தில் இருந்து எல்லாத் திசைகளிலும் நாடாக்கள் வழிகின்றன. ஏதோ ஒரு பெரிய சாதனை செய்துவிட்டதாக நீயும் அந்த வண்ண வண்ண இழைகளை எடுத்து பெரிதாகும் பந்தில் சுற்றுகிறாய்.

2:30-31 உன் வேலையின் உள்ளே

      இன்றைய உரையாடல் இதுவே: நீ கடைப்பிடிக்காத சில குறிப்பிட்ட தேவைகள் உன் வேலையில் உள்ளன. ஆனால் நீ முழுச் சம்பளம் எதிர்பார்க்கிறாய். அது உனக்கு வழங்கப்படாத போது உன்னை அவமதித்து விட்டார்கள் என்று கோபப்பட்டு வேறு வேலைக்குத் தாவுகிறாய். அங்கே ஒரு கைப்பிடி. பிறகு இன்னொரு வேலைக்கு. இப்படியே தொடர்வாயாக! கடைசியில் நீ அதிக அனுபவம் கொண்டவனாக இருப்பாய். ஆனால் வேலையற்றவனாக, வேலை கொடுக்கப்பட தகுதி அற்றவனாக இருப்பாய். வாழ்ந்து முடித்தாக வேண்டிய ஒரு ரகசியம் ஒவ்வொரு பணியிலும் உண்டு. ஒவ்வொரு காலையிலும் எழுந்து உன் வேலைக்கு உள்ளே செல், மேலும் ஆழமாக உள்ளே செல்.




















 2:31-32 புதினா
      புதினாவும் கொத்துமல்லியும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவை என்று பொதுவாகச் சொல்லப்படுகிறது. ஆனால் புதினா நறுக்குகளில் இருந்து வளர்கிறது. கொத்துமல்லி விதைகளில் இருந்து முளைக்கிறது. புதினாப் பூக்களில் விதைகள் இல்லை. புதினா வளர்க்க, ஒரு நறுக்கினை ஈர மண்ணில் நடுக. ஐந்து அல்லது ஆறு நாட்கள் கழித்து நீர் பொழிக. அதன்பின், பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை நீர் பாய்ச்சுக. அதன் இலைகளை நனைத்துவிடாமல் கவனமாக நீர் விடவும். இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை செடிகளைப் புதிய மண்ணுக்கு மாற்றி நடவும். வழக்கமாக, ஜூன் மாதத்தின் இறுதியில் புதினாச் செடி இறந்துபோகும். மீண்டும் மார்ச் கடைசியில் அல்லது ஏப்ரில் மாதத்தில் வளரத் தொடங்கும்.

      இலவங்க பத்திரி, வெங்காயம், பூண்டு ஆகியவற்றின் அருகில் புதினாவை நட வேண்டாம். பயிர்கள் எல்லாம் தமது வேரினைச் சுற்றியுள்ள மண்ணிலிருந்தே ஊட்டம் பெறுகின்றன. புதினாவுக்கு அருகில் அவை நடப்பட்டால் அவற்றின் சத்தும் சுவையும் குன்றிப் போகும். புதினாவை விடவும் அவற்றின் நலம் முக்கியமானது. அதீத குளிர் அல்லது அதீத வெப்பம் மிக்க பருவ நிலைகளிலும் இலவங்கம், வெங்காயம், பூண்டு ஆகியவை நீர் பாய்ச்சப்பட்டால் தாக்குப் பிடித்து நின்றுவிடும். முடிந்தால், அத்தகைய காலங்களில் அச்செடிகளின் அடியில் நீர் தேங்கி நிற்கும்படிச் செய்யவும். ஆண்டு முழுவதும் அவை வளரும் என்பது இல்லைதான். பொதுவாக நன்னீர்ச் செடிகள் கோடை வெப்பத்தில் இறந்துவிடும். இளவேனில் ஆரம்பத்தில் இருந்து ஜூன் மாதத்திற்கு இடையில் நடப்படும்போது கத்திரி நன்றாக விளைகிறது. எவ்வளவு முந்தியோ அவ்வளவு நன்று.

2:34 என் கண்ணிமை முடிகளில் சேற்று நீர்த் துளிகள்

      உயிருடன் இருப்பது பற்றிப் பதற்றமும் கவலையும் கொண்டிருப்பது கரிசல் சேற்றையும் குப்பைகளையும் உன் தலை மேல் போட்டுக்கொள்வது போன்றது. களிமண் உன் கண்கள் மீது வழிகிறது. கசடு உன் கண்களை பாதிக்கிறது. நீ பார்க்க முடியாமல் போகிறது. நீ நோயாளி ஆகிறாய். ஒவ்வொருவரும் ஏதோவொரு காலத்தில் இதைச் செய்கிறார்கள். நீ இதைச் செய்வதை நிறுத்த முயற்சி செய். உன்னைச் சுற்றிலும் உள்ள அழகை தரிசிக்க உன் கண்களைத் தெளிவாக்கி வை.

      கவலையும் துன்பமும் தருபவனே! என்னை எனது இருப்பிலிருந்து நீக்குவாயாக! இல்லாமல் இருப்பதன் இன்பத்தை எனக்குக் கொடு. இந்தப் பிரார்த்தனையை உன்னால் செய்ய முடிந்தால் அது உன் தலையிலிருக்கும் களிமண்ணை அகற்றித் தூய்மையாக்கும். காதலனின் தலை மீது சேற்று நீரைக் கொட்டும் ஒரு காதலி இருக்கிறாள். என் கண்களால் உன்னைப் பார்க்க முடியவில்லை, ஆனால் என் கண்ணிமை முடிகளில் உள்ள சேற்று நீர்த் துளிகள் உன் முகத்தின் ரோஜா வாசத்தால் நிரம்பியுள்ளன என்று சொல்லுமொரு காதலனும் இருக்கிறான்.

























2:35-36 கருணையும் இடையின் வளைவும்

      ஞானிகள் மற்றும் தமது ஆன்மிக வாழ்க்கையைப் பேணியபடித் தனிமையில் வாழ்வோர் ஆகியோரின் அழகைப் பற்றி யாரோ ஒருவர் பேசக் கேட்டேன். நான் சொன்னேன், அவர்கள் மீதான உமது இந்த நேசம் உமது ஆன்மாவின் நிலத்தைப் வளமாக்குகிறது. அங்கே வளர்வதன் உயிர்ப்பை மேம்படுத்தும் உரம் அது.

      அதேபோல், நாங்கள் பெண்களை நோக்கும்போது, இடையின் வளைவும் அழகிய கால்களும்கூட கருணையின் சின்னங்களே. அதில் நீ மேலும் ஊறிப் போகும்போது சுவனத்தின் கன்னிகளை நீ காணத் தொடங்குகிறாய். நீ முற்றும் கடந்து போகும் வரை பெண்ணின் மதுவைப் பருகு. அதன் பிறகு நீ உன் தொழுகையைத் தொடங்குவது நல்லது.

      பிற்பகலில், சத்தியம் மற்றும் நல்ல காரியங்கள் பற்றி ஒருவருடன் ஒருவர் உரையாடுவோரைத் தவிர ஏனையோர் யாவரும் நட்டம் அடைகின்றனர் [காண்க: குர்ஆன்: 103:1-3]


(to be continued...)

No comments:

Post a Comment