Sunday, May 12, 2019

ஒரு சூஃபியின் டைரி - 17


















#122 காய்ச்சல் மகன்

      ஒரு நாள் இரவு நான் என் மகன் அஹ்மதின் பேதி நிலை குறித்து மிகவும் கவலைப் படும்படி ஆனது. இது என்னை மிகவும் சஞ்சலப் படுத்தியதால் இதற்கொரு பகரம் செய்யும்படி நான் என் அன்பனிடம் வேண்டினேன். அஹ்மத் உறங்கியபோது நானும் தூங்கினேன். அவனது அலறல் கேட்டு எழுந்தேன். தூக்கத்திற்கும் விழிப்பிற்கும் இடையில் இருந்தபடி அவனருகில் வந்தேன். எனது வீட்டின் பக்க வழியாக ஒரு நபர் வெளியேறக் கண்டேன். அவர் பசவி பாரசீக மொழியில் சொன்னார்: “உனது இரவு பாதுகாப்பும் அருளும் பெற்றதாகட்டும்”. பிறகு அவர் என் மகனை நோக்கிச் சொன்னார்: “இன்றிரவு அவன் உனக்காகவும் உன் தந்தைக்காகவுமே இறங்கி வருகிறான். சத்தியப் பரம்பொருள் உமதே!” நான் நினைத்தேன், ‘இந்நேரம் நான் மிகவும் நொந்திருக்கிறேன். திரைநீக்கம் எனக்கு எப்படி நிகழ்த்தப்படும்?’ குர்ஆனின் திருவசனங்களில் தேடினேன். மறைவின் கதவுகள் திறக்கப்படும் என்று அறிவிக்கும் நற்செய்தி வந்தது. அப்படித்தான், சில தெய்வீகப் பேச்சு செயலை ஏற்படுத்துகின்றன, உள்ளத்தைத் தூண்டுகின்றன.

#123 சிதறிய நவமணிகள்

      விடியலில் வானவருலகின் கதவுகள் திறக்கப்பட்டன. என் தலைக்கு மேலே கடல்களையும் சிதறிய நவமணிகளால் ஆன வானத்தையும் கண்டேன். மகத்தான இறைவனே அவ்வுலகில் இருந்து என் தலை மீது அந்த நவமணிகளை பொழிவதாகக் கண்டேன். வல்லமையும் அழகும் கொண்டதாக அவன் தனது பொருத்தம் மிகுந்த தோற்றத்தைக் காட்டினான். அந்த நவமணிகளைப் போல் அவனிலிருந்து அடர்த்தியான ஒளி ஒன்று பிரகாசித்தது. சில அருள்களும் அன்புகளும் நிகழ்ந்து நேரம் கடந்த பின் பூமியின் முகத்தில் வானம் விரிக்கப்படக் கண்டேன். இறைத்தூதர்கள், ஞானிகள் மற்றும் வானவர்கள் அனைவரையும் கண்டேன். அவர்களில் சத்தியப் பரம்பொருள் காட்சி நல்கினான். நெருக்கம் மற்றும் விரிவு ஆகிய படித்தரங்களின் பேச்சுக்களை அவன் என்னிடம் பேசினான். என் மீதான அவனது ஏக்கமும் வலிய உணர்ச்சியும் காதலும் குறித்துப் பேசினான்.

#124 இறைவனின் முகம்

      எண்ணங்களின் தடயங்களுக்கு அப்பால், மேலான இறைவனின் முகம் எனக்குத் திரை நீக்கிக் காண்பிக்கப் பட்டது. மிக்க மேலானவனும் புனிதமானவனும் ஆன, நித்திய ஜீவனும் நிலைத்தவனும் (அல்-ஹய்யுல் கய்யூம்) ஆனவனின் முகங்களை விட்டும் நான் ஒளிந்து கொண்டேன். அவன் என்னுள் வெளிப்பட்டான். அவனது முக தரிசனத்தில் இருந்து ஏக்கத்தின் இனிமையும் உயிரின் உருக்கமும் உள்ளுணர்வின் கொந்தளிப்பும் இதயத்தின் சிதறலும் அறிவின் அழிவும் ஏற்பட்டன. இதன் ஓர் அணு உலகின் மலைகள் மீது வீழினும் அவை இனிமையால் உருகிவிடும். நான் மூச்செறிந்து அழுது சுழன்று கேவிக் கொண்டிருந்தேன். இறைவன் என்னை வானவருலகிற்கு அழைத்துச் சென்று நித்தியத்தின் வாசலில் நிறுத்தினான். பிறகு அவன் என்னிடம் மகத்துவமும் பெருமிதமுமாக வெளிப்பட்டான். நான் ஒளியின் மீது ஒளியை, மகத்துவத்தின் மீது மகத்துவத்தை, சக்தியின் மீது சக்தியைக் கண்டேன். அதை என்னால் விவரிக்க இயலாது. அவனது வல்லமை மற்றும் சக்தியின் காரணத்தால் என்னால் ஓரடியும் முன் வைக்க முடியவில்லை. அதை நான் நிரந்தரமாகப் பார்த்துக்கொண்டே இருந்தாலும் அவனது பூர்வீகப் பண்புகளில் எதனின் ஓர் அணுவையும்கூட என்னால் ஒருபோதும் புரிந்துகொள்ள முடியாது. ஏனெனில், இறைவன் எவரது விவரிப்புக்கும் அப்பாற்பட்டவன்.



















#125 மனிதனிடம் இறங்குதல்

      உலகின் நடுவில் ஓர் ஒளிரும் சிலை இருப்பதாக எனது திரை திறப்புக்களில் கண்டேன். இது என்னை மிகவும் சஞ்சலப்படுத்தி சத்தியப் பரம்பொருளிடம் நெருங்கிச் செல்லத் தூண்டிற்று. ஒரு மணி நேரம் கழிந்ததும் நான் மறைவுலகின் மாடத்தைக் கண்டேன். வானவருலகின் கூடாரங்கள் திறக்கப்பட்டன. சக்தி, தெய்வீகப் பிரசன்னம், வல்லமை மற்றும் அழகு ஆகியவற்றுடன் சத்தியப் பரம்பொருள் என்னிடம் தோன்றினான். அவன் தானே என்னிடம் தோன்றித் தனது பண்புகளின் ரகசியங்களை எனக்குச் சொல்லிக் கொடுத்தான். நான் அவனில் ஒரு மகத்துவத்தையும் அழகையும் கண்டேன். அவனின் ஒளி விண்ணுக்கும் மண்ணுக்குமாகச் சுழன்றிருந்தது. நான் அவனைக் கண்டேன். நான் எல்லாத் திசைகளிலும் பார்த்துக் கொண்டிருந்தேன். பிறகு அவன் ஏகத்துவத்தின் களங்களைக் காட்டினான். அவற்றுள் நுழைந்தேன். ஏகத்துவத்தின் கடல் என்னைப் பறித்துச் சென்றது. மூலத்தின் கடலுள் அது என்னை மூழ்கடித்தது. பிறகு அவன் என்னை மனிதப் படைப்பிற்கு மீட்டு வந்தான். பிறகு நான் மனிதகுலத்தில் இறங்குவது பற்றியும் உலகின் போதாமைகள் குறித்தும் எனது காரியங்கள் சிலவற்றைப் பற்றியும் நானடைந்த சில இடர்ப்பாடுகள் குறித்தும் கவலைப் பட்டேன். ஆர்மபமே இல்லாத நித்தியம் எப்படிக் காலத்தினுள் அளக்கப்பட்டு வருகிறது என்பது பற்றி ஆழ்ந்து சிந்தித்தேன். ஆனால், எனது இயல்பு என்னை விட்டும் போனது என்றும் எனது உள்ளுணர்வு மறைவான நிகழ்வுகளின் சோதனைகளை உதிர்த்துவிட்டது என்றும் நான் மிகவும் பூரித்துப் போனேன்.

#126 அவன் அல்லாத அனைத்தையும் அழித்தல்

      வானவருலகின் மத்தியில் ஒரு பேரொளியை என் உயிர் கண்டது. மிகப் புனிதமான பண்புகள், மிக அழகான பேரழகு, மாபெரும் மகத்துவம் ஆகியவற்றுடன் அதிலிருந்து சத்தியப் பரம்பொருள் வெளிப்பட்டு எல்லாம் கடந்த தனது புனித முகத்துடன் என்னிடம் வந்து சொன்னான்: “எவ்வொரு படைப்பையும் இல்லை எனத் தள்ளிவிடும் ஒருவன் என்னை மட்டுமே போதுமாக்கிக் கொள்வது எப்படி?” நான் அவனது வல்லமை மற்றும் அழகில் (ஜலால் வ ஜமால்) இருந்தேன். அதுவே நெருக்கத்தின் நெருக்கம் மற்றும் இணைதலின் இணைவு என்னும் நிலை. அவன் எனது சிந்தனை மற்றும் உணர்வில் அவன் அல்லாத அனைத்தையும் அழித்துவிடும் வரை அந்த நிலை நீடித்தது. நான் அங்கே சுயத்தின் சுயத்தில், எதார்த்தத்தின் எதார்த்தத்தில் தங்கியிருந்தேன். நான் முன்பு குறிப்பிட்ட தோற்றத்தில் சத்தியப் பரம்பொருள் என்னிடம் எனக்காகத் தோன்றினான். ஓர் அழகிய இடத்தில், பெருமூச்சு கண்ணீர் கதறல் மருட்சி நடனம் கைத்தட்டல் மற்றும் சுழற்சி ஆகியன கொண்ட முழுமையான பரவசத்தில் அவன் தனது நெருக்கத்தை எனக்கு வழங்கி, தனது வல்லமை பேரழகு மற்றும் பேச்சை எனக்கு வெளிப்படுத்தினான். எனது அணுக்கம், அவனுக்கான ஏக்கம் மற்றும் அவன் மீதான காதல் ஆகியவை அதிகம் ஆயின.

#127 குறியீடான வசனங்களை அறிந்தோர்

      சத்தியப் பரம்பொருள் நான் விவரித்ததைப் போல் வெளிப்பட்ட பின் விடியல் வரை ஓய்வாக இருந்தேன். ஏகத்துவத்தில் தெய்வீகமும் செயல்களில் இறைவனின் திருப்பண்புகளும் அடையாளம் பெற்றிராத பண்புகளில் அவனது சுயத்தின் ஒளிகளும் போர்த்தப்படுவதை நெடுநேரம் தரிசித்திருந்தேன். அன்று அந்தியில் மறைவின் மறைவனான் இடத்தை நோக்கி எல்லாம் கடந்த இறைவன் ஏகிடக் கண்டேன். சுவனவாசிகளும் வானவர்களும் பிரசன்னத்தின் திருத்தூதர்களும் தமது இடங்களுக்கு அவனுடன் ஏகினார்கள். முதலில் நான் பார்க்கவில்லை, ஆனால் பிறகு எனக்குத் தெளிவாக்கப்பட்டது, அதாவது, இறைவன் இறங்கும்போது (தனது பொருத்தத்தால். இடப்பெயர்ச்சியால் அல்ல) வானவருகத்தைச் சேர்ந்தவர்கள் அவனுடன் இறங்குகின்றனர்; சக்தியின் திரைகளை அவன் கீழிறக்கும் போது அவர்கள் அவனுடன் மறைக்கப் படுகின்றனர். இறைவனை அறிந்த ஞானிகளுள் கழிப்பின் (நஃபீ) வல்லுநர்களை இந்த திறப்புக்கள் தனித்துக் காட்டுகின்றன. அவர்களே மெய்யறிதலின் தகுதியைப் பெற்ற சமீபத்திய ஞானிகள். குர்ஆனின் குறியீடான வசனங்களை விளங்கிக்கொள்ளும் தகுதியை அவர்களுக்கு இறைவன் வழங்கியிருக்கிறான். “அதன் விளக்கங்களை எவரும் அறிய மாட்டார்கள், அல்லாஹ்வையும் அறிவில் ஊன்றப்பட்டோரையும் தவிர” [3:7] என்னும் குர்ஆன் வசனத்தில் குறிப்பிடப்படும் “அறிவில் ஊன்றப்பட்டோர்” (ராசிஃகூன ஃபில் இல்ம்) இவர்கள்தான்.


#128 அழகு மற்றும் வல்லமையின் ஆடை

      ரமலான் திங்கள் முதல் நன்னாளின் நள்ளிரவில் விழித்தெழுந்தேன். சத்தியப் பரம்பொருள் என்னிடம் தனது வசனத்தை ஓதினான், “அவர்களின் ரட்சகன் அவர்களுக்குத் தனது அருளும் உவப்பும் சுவனங்களும் உண்டென நற்செய்தி கூறுகின்றான்” (9:21). இரண்டு விடுத்தம் தொழுத பின் நான் தியானத்தில் அமர்ந்து இறைவனின் அருள்களையும் அவனது வசனங்களையும் சிந்தித்தேன். இருத்தலின் புலங்களில் எனது உள்ளுணர்வு அலைந்தது; என் உயிரோ இருத்தலை விட்டே வெளியேறியது. அழகு மற்றும் வல்லமையின் ஆடையை அணிந்தபடி, மறைவிலிருந்து வெளிப்பட்டது போல், சத்தியப் பரம்பொருள் படைப்புக்களுக்கு அப்பால் என்னிடம் தோன்றினான். அவனது வல்லமையின் தாக்கமும் அழகின் திரை நீக்கமும் அவனைக் காணும் அனைத்து தற்காலிகப் பொருள்களையும் இருத்தலை விட்டும் உருக்கி அழித்துவிடும் போல் இருந்தது அவனின் குணம். இறைவனின் மீது சத்தியமாக! எனது சீடர்களுக்கும் நேர்மையான அடியார்களுக்கும் அவனது திருப்பண்புகளில் நான் தரிசித்தவற்றை விவரித்துச் சொல்ல விரும்பினேன். ஆனால் அது என்னால் முடியவில்லை. ஏனெனில், எல்லாவற்றுக்கும் அப்பால் ஆன இறைவன், ஆதம் மறைக்கப்பட்டிருந்த வடிவத்தில் என்னிடம் தோன்றினான். அதனை அவன் வானவர்களுக்கும் ஜின்களுக்கும் காட்டினான், “அவர்கள் அவருக்குச் சிரம் பணிந்தார்கள்” (வ ஃகர்ரூ லஹூ சுஜ்ஜதா – 12:100), அனிச்சையாக, யூசுஃப் நபிக்கு அவரின் பெற்றோர்கள் சிரம் பணிந்ததைப் போல. எனவே, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அருளினார்கள், “அல்லாஹ் ஆதமைத் தனது தோற்றத்தில் படைத்தான்”.

#129 அவனது பண்புகளின் அற்புத மின்னல்

      காரணத்திற்கு உவமை உரைக்கிறேன் என்று எம்மைக் குறை கூறும் அறிவிலிகள் மட்டும் இல்லை எனில் சத்தியப் பரம்பொருளை நான் தரிசித்ததன் சில குறிப்புக்களை உனக்கு விளக்கிச் சொல்லியிருப்பேன் என்பதைப் புரிந்துகொள். அவனது மகத்துவத்தின் ஒளி, அவனது புனிதத்தின் பிரகாசம், அவனது பெரு மகத்துவம், அவனது நயமிகு அழகு, அவன் தன்னைத் தானே போர்த்திக்கொண்ட பண்புகள், ஆதம் மூசா யூசுஃப் இப்றாஹீம் யஹ்யா மற்றும் முஹம்மத் (ஸல்) ஆகியோருக்கு அவன் அணிவித்த பண்புகள். அவர்கள் இறைப் பேரொளியை பாத்யதை கொண்ட இந்தப் பண்புகளால் உலகை விட்டும் அதிலுள்ள படைப்புக்களை விட்டும் மேலாகி நிற்கிறார்கள். ஏதெனும் ஒன்றில் அவனது திருப்பண்புகளின் பிரகாச மின்னல் வெளிப்படும்போது இருக்கின்ற அனைத்துத் தற்காலிக ஜீவன்களும் அதற்கு அடிபணிகின்றன. அது பூர்விகத்தின் பண்பிலிருந்து வெளியாகிறது. அங்கே பிரிவு, இணைவு, கற்பனை மற்றும் பாவனை எதற்கும் இடமில்லை. நித்திய உலகில் பயணித்த பின் சத்திய இறைவனை அறிபவன் தெய்வீக ரகசியங்களை வெளிப்படுத்தித் தருகின்ற அரிதான அறிவு இயல்களை அறிகின்றான். அவற்றால், இணைவு கொண்டோரின் உள்ளுணர்வுகள் கழித்தல் மற்றும் உறுதிப்படுத்தல் (நஃபீ வ இஸ்பாத்) ஆகியவற்றை விட்டும் தூய்மை ஆகின்றன; இறைவனை மனிதப் பரிமாணங்களில் ஒப்புமைப்படுத்தி விளங்குதல் மற்றும் அவனை ஓர் சூக்குமமாக மட்டும் சுருக்கி விடுதல் ஆகியவற்றிற்கு அப்பால் ஆகின்றன. இருக்கும் யாவும் காலத்தில் உள்ளன; அவனோ காலத்திற்கு அப்பால் இருக்கிறான். அவனை அறியும் உயிர்கள் இந்தச் சந்திப்பிடங்களை அடையும் பயணத்தில் அவற்றின் புனைவுகள் யாவும் அழிக்கப்படுகின்றன. அவை அங்கே சேர்ந்தவுடன் அவற்றுக்கு ஒன்றுமே தெரிவதில்லை, இருக்கும் பொருட்களின் மூல காரணம் பற்றி அவை எவ்வளவு சிந்தித்தாலும். ஏனெனில் சத்திய தரிசனம் என்பது ஆதாரங்கள் காரணங்கள் விளைவுகள் ஆகிய எதனுடனும் தொடர்புடையது அல்ல. 

அருட்பண்பும் நயமிகு அழகும் கொண்டு சத்தியப் பரம்பொருள் என்னிடம் நெருக்கத்தின் தளத்தில் தோன்றினான். அவன் தன் அழகால் எனது இதயத்தைப் பறித்தான். நான் பெருமூச்சு கேவல் அழுகை கைத்தட்டல் பரவசம் அணுக்கம் ஏக்கம் பேரார்வம் கதறல் அரவணைப்பு மற்றும் காதல் ஆகியவற்றால் பீடிக்கப் பட்டேன். பிறகு அவன் மறைந்தான். நான் என்னையே தாழ்த்திக் கொண்டு, அருள் மிகுந்த அவனை மீண்டும் சந்திக்கக் கெஞ்சினேன். குறியீடான திருவசனங்களில் சொல்லப்பட்டுள்ள வகையில் அவன் என்னிடம் ஒரு தோற்றத்தில் வந்தான். பிறகு அவன் என்னை விட்டும் மறைந்து கொண்டான்.

#130 மிக உயர்ந்த 'இல்லிய்யீன்'

      கருணை என்னை உயர்த்தி ’இல்லிய்யீன்’களின் காற்றில் பறக்கச் செய்தது. சுவனப் பூங்காக்களையும் அதில் வசிப்போரையும் வானவர்களின் உடல்கள் கொண்ட பிரசன்னவாசிகளையும் கண்டேன். அனைத்து இறைத்தூதர்களுடன் முஹம்மது (ஸல்) அவர்கள் இருக்கக் கண்டேன். அங்கே சூஃபி குருமார்களும் இருந்தனர். அவர்களின் தாடிகளும் மீசைகளும் பனியைப் போல் வெண்மையாக இருந்தன. அவர்கள் வெண்ணிற அங்கியும் வெண்ணிறத் தலைப்பாகையும் அணிந்திருந்தனர். அவர்கள் மௌமமாகவும் நிம்மதியாகவும் இருந்தனர். அவர்கள் இல்லிய்யீனின் பாலைவனமெங்கும் பரவியிருந்தனர். அவர்களில் ஒவ்வொருவரும் இறை வல்லமையைத் தத்தமது படித்தரத்தில் இருந்து தரிசித்து அதனை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தனர். நான் வாலிபர்கள் அணியுமொரு அங்கியும் தொப்பியும் அணிந்திருந்தேன். எனது நீள் கூந்தல் இரண்டு பக்கமும் வழிந்திருந்தது. எனது கையில் ஒரு யாழ் இருந்தது. நான் சத்தியப் பரம்பொருளை நோக்கி நின்றிருந்தேன். எனது குருமார்கள் தொழுகை விரிப்புக்களில் அமர்ந்திருக்கக் கண்டேன். அவர்களில் ஜுனைது, ருவைம் மற்றும் அபூ யஜீதுல் பிஸ்தாமி ஆகியோர் இருந்தனர். பிற குருமார்களும் அவர்களுடன் இறைவனை நோக்கியபடி இருந்தனர். சூஃபிகளின் மத்தியில் ஜுனைதுல் பக்தாதி (ரஹ்) அவர்கள் விண்மீன்களின் நடுவில் ஒரு முழுமதி போலிருந்தார். பிறகு நான் சுவனங்களுக்கு அப்பாலிருந்து வந்த ஒரு குழுவைக் கண்டேன். அவர்களை நான் பார்த்தபோது எனது குருமார்களையும் சகாக்களையும் கண்டேன். பிறகு ஓர் அறிவிப்பாளர் “இவர்கள் எனது மாகாணத்தைச் சேர்ந்தோர்” என்று கூவினார்.


[குறிப்பு: இல்லிய்யீன் / இல்லிய்யூன் என்பதன் பொருள் உயர்ந்த இடங்கள் என்பதாகும். குர்ஆன் 83:18-இல் சொர்க்கத்தின் உயர்ந்த இடங்களைக் குறிக்க இச்சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. – தமிழ் மொ.பெ-ர்]
 



























#131 ”நீ அவளைப் பறித்துக் கொண்டு என்னை வெறிப்பில் விட்டாய்”

      பிறகு நான் பிரசன்னத்தின் கதவருகில் சென்றேன். சத்தியப் பரம்பொருள் என்னிடம் தோன்றினான். அவனது வல்லமையும் ஆற்றலும் கொண்டு என்னை நோக்கினான். மகத்துவம் வல்லமை பெருமிதம் சக்தி தெய்வீகப் பிரசன்னம் மற்றும் புகழ்ச்சி ஆகியவற்றுக்கு இடையில் காலமும் படைப்பும் இருக்கக் கண்டேன். கடுகு விதைகளைப் போன்று ஏதோ வைக்கப்பட்ட சுருக்குப் பை ஒன்றைக் கண்டேன். அது என்ன என்று யான் அறியேன். என் உள்ளுணர்வில் குரலொன்று கேட்டது, “இப்பொருட்கள் இறையாசனம் (அர்ஷு), காற்பலகை (குர்ஸி), சொர்க்கங்கள் மற்றும் அர்ஷு முதல் பூமி வரை உள்ள அனைத்துப் படைப்புக்கள் ஆகியன மறைவின் பாலைவனங்களில் நொருங்கி உடைந்து ஊசியின் கொண்டை போல் சிறியதாக ஆக்கி வைக்கப் பட்டுள்ளதாகும்.” நான் அறிவும் இதயமும் உயிரும் இன்றி வியப்பில் உறைந்து நின்றேன். முதல் விடியலில் நான் விழித்தபோது நான் மிகவும் கவலை கொண்டேன். ஏனெனில் நான் வழக்கத்தை விடவும் அன்றிரவு அதிகமாகத் தூங்கிவிட்டேன். பிறகு நான் இறந்து போன என் மனைவியை நினைத்தேன் (இறைவன் அவள் மீது அருள் புரிவானாக). நான் அங்கசுத்தி செய்தபோது என் மனதிற்குள் சொல்லிக் கொண்டேன், “என் இறைவா! நீ எனக்குச் செய்துவிட்டதைப் பார்த்தாயா? நீ அவளைப் பறித்துக்கொண்டு என்னை வெறிப்பில் விட்டுவிட்டாய்.” அவன் என்னிடம் ஃபார்ஸி மொழியில் சொன்னான் “அதைச் செய்வதென்பது செய்யாதிருப்பதே.” அதன் அர்த்தம் யாதெனில், அவன் எனக்கு கிட்டத்தட்ட வானவருலகைத் திறந்து காட்டி என்னை அங்கே தங்க வைத்தான் [ஏறத்தாழ நான் இறந்துவிடுமாறும் செய்தான்]. எனவே அது எனக்குப் புரிந்தது. அங்கசுத்திக்குப் பிறகு இறைவன் என்னிடம் ஓதினான், “நீங்கள் அவனுடன் செய்துகொண்ட வர்த்தகம் பற்றி மகிழ்ச்சி அடையுங்கள்” (9:111).

(to be continued...)

No comments:

Post a Comment