Saturday, April 6, 2019

நீருக்குள் மூழ்கிய புத்தகம் - 14



















1:361 என் ஆன்மாவின் வசந்தம்

      ”எவர் தானம் வழங்கி பயபக்தியுடன் நடந்து நன்மைகளை உண்மை ஆக்குகின்றாரோ அவருக்குப் பேரின்ப வழியை இலகுவாக்குவோம்” (92:5-7).

      உனக்குக் கஷ்டங்கள் கரைந்து போகும், அற்புதங்களை நீ காண்பாய். அவற்றை மட்டும். பல வழிகளை நீ கண்டறிவாய். அவை உனக்கு தெளிவாகவும் திறந்தும் இருக்கும்.

      மீண்டும் நான் என் ஆன்மாவினுள் பார்க்கிறேன். ஒவ்வொரு துளியிலும் இறைமை நிரம்பி இருக்குமொரு சுனை அது. ஒவ்வொரு துளியும் தனக்கே உரிய முறையில் தனித்தன்மை வாய்ந்தது. இந்த எனது ஆன்மாவின் சுனையைப் போலவே முழு உலகையும் நான் பார்க்கிறேன். முழு பிரபஞ்சத்தையும்கூட. ஒரே மூலம். அதிலிருந்து பல கிளைத்தல்கள். அவற்றிலிருந்து பிற திரவ கோடுகள். பின்னர் அவை ஒவ்வொன்றிலும் இருந்து தனித்தன்மை கொண்ட துளிச்சரங்கள்.

      ஒவ்வொரு கணமும் புதிய நிற பேதங்களுடன் இதழ்கள் விரிக்கின்றன வகை வகையான மலர்கள். செங்காந்தள், ஆம்பல், வெண் முல்லை, மௌவல், மஞ்சள் கொன்றை, வாகை, நீலக் குறிஞ்சி, சங்கு மலர். இதெல்லாம், படைப்பை இறைவன் புத்துயிர் ஆக்கிப் புதுப்பொலிவு செய்தல். அருளும் அரவணைப்புமாகத் தொடர்ந்து நிகழும் புதிய புதிய சங்கதிகளை ஒருவர் தன்னிலேயே நோட்டமிட வேண்டும். அவற்றின் அர்த்தங்களை அறிய வேண்டும்.

      ஒளியின் அர்த்தம் என்ன என்று யோசி. வன்முறையின், பிரிவின் அர்த்தம்? துயரத்தின், கலவியின்பத்தின் அர்த்தம்? இவை எல்லாம் நமக்கான அருட்கொடைகளே. ஆனால், காமத்தின் இன்பமும் அழகிய முகத்தை நோக்குவதும் இறைவனிடமிருந்து நேரடியாக மனித ஆன்மாவுக்குள் வருவது போல் தோன்றுகிறது. அத்தகைய உச்சமான பரவசத்தின் நடுவிலும்கூட அதைப் பரிசளிக்கும் இறைவனை நீ நினைவுகூர வேண்டும்.

      இறை பிரசன்னத்திற்கு வெளியே நின்றுவிட விரும்புவோரைப் பொருத்த வரை நீ அவர்களுக்கு எச்சரிக்கை செய்தாலும் செய்யாவிட்டாலும் ஒன்றுதான். ”நிராகரிப்போரை நீர் எச்சரித்தாலும் எச்சரிக்காவிடினும் சரியே. அவர்கள் இறை நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்” (2:6). நமது கட்டளையாலும் அவர்கள் தேர்ந்தெடுத்ததாலும் அவர்கள் ஓர் திரைக்குப் பின்னால் இருக்கிறார்கள். அவர்களின் முன் இருக்கும் மதில் அவர்களின் உடல்களால் ஆனது. திரைக்குப் பின்னால் இருப்பது யார் என்று நீங்கள் அறிய முடியாது. பார்வைக்குப் படாமல் நின்றபடி நீங்கல் உங்கள் நண்பர்களை அழைக்கலாம். பதில் அளிப்பவர்கள் பூர்வீகத்திலேயே கண்டுகொண்டவர்கள் மட்டுமே. ஆனால், அழைப்பதும் அதனைத் தொடர்வதும் உமக்கு நல்லது. நீவிர் கடலுக்குள் மூழ்கிச் செல்பவனை ஒத்திருக்கிறீர். சில சமயம் விலை மதிப்புள்ள கல்லுடன் வருகிறீர். சில சமயம் சாதாரணக் கல்லுடன். உமது மூழ்குதல் ஒன்றை மற்றொன்றாக மாற்றி விடாது.

      உலகில் நீர் செல்லும்போது, பிற உலோகங்கள் எடுக்கப்படும் சுரங்கங்களை விடவும் தங்கச் சுரங்கங்களை அதிகம் சென்று பாருங்கள். ஒன்றை இன்னொன்றாக மாற்றுவது உங்கள் வேலை அல்ல. மரத்தை உலுக்குவதே உங்கள் வேலை. பழுத்த கனிகள் உதிர்கின்றன. காய்கள் அவற்றின் இடத்திலேயே இருந்துவிடுகின்றன. உங்களின் செயல் ஒவ்வொன்றும் இது போன்ற நல்லுதவிச் சேவையே. அஃதல்லாத வேலைக்குச் செல்ல வேண்டாம்.

      சில துரோகிகள் சொல்கிறார்கள், இறைவன் ஆதமுக்குள் முழுமையாக வந்துவிட்டான், அதனால்தான் வானவர்கள் சிரவணக்கம் செய்தார்கள்; ஏசுவுக்குள் வந்துவிட்டான், அதனால்தான் மரித்தவர்களை உயிரூட்டி எழுப்பினார்; ஹழ்ரத் அலீக்குள் வந்துவிட்டான், உலகை அடையாளம் கண்டு முஹம்மது (ஸல்) அவர்களுக்கு உதவுவதற்காக என்று. ”ஹுவல் அலிய்யுல் அழீம் - அவன் மிக உயர்ந்தவன், மகத்தானவன்” (2:255) என்பதை வேறு ஓதிக்காட்டி, இடி இடிக்கும்போது அலீயின் கர்ஜனையே பூமிக்கு மழை தருகிறது என்பதே அதன் உட்பொருள் என்று வேறு சொல்கிறார்கள். தாம் என்ன செய்ய வேண்டுமென்று விண்மீன்கள் தமக்குச் சொல்வதாகக் கூறும் சோதிடர்களுக்கு ஒப்பானவர்கள் இவர்கள்.



























1:367 பிறரிடம் செல்லாதே

      காதலர்கள் பிரியும்போது ஏகப்பட்ட அழுகைகள், பிரிவுக்கான கலையம்சங்கள் மொத்தமும். ஆனால் இறை ரகசியத்தின் மீது கவனம் வைத்த ஒருவன் பிறகு அந்த நேர்வழியை விட்டும் பாராமுகம் ஆகும்போது? அந்தப் பிரிவு எவ்வளவு சோகமானது? இறை இருப்பை ஒருபோதும் அறியாமலே இறந்து போகின்ற ஒருவனின் நிலை எப்படி?

      அந்த இருத்தல் சில நேரங்களில் பேரழிவின் கோலத்தை எடுக்கும். அல்லது ஆழப்பட்ட விழிப்பாக, அல்லது அதனினும் மறைவான ஒன்றாக. நீ வீட்டில் உனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் அமர்ந்திருக்கும்போதோ, உன் வேலையில் சிரத்தையுடன் மூழ்கி இருக்கும்போதோ அது வரலாம்.

      உள்ளே நகர்ந்து முடிந்த அளவு அதனருகில் நெருக்கமாக வாழ்ந்திருக்க முயற்சி செய். ஒருவேளை அதை விட்டும் நீ விலகி நகர்வதாக உணர்ந்தால், வேறு எவரிடமும் சகவாசத்திற்குச் செல்லாதே. தாய் வரும்வரை சேய் அழுகிறது. அந்தக் குரலாக இரு. உன் தெய்வீக நட்பு புத்துயிர் பெறும் வரை பக்தியின் இசையும் பாடலும் கேட்டிரு. வேதனையுடன் இறைவனுக்காக ஏங்குவோரின் குரலைக் கேட்டிரு. நூஹ் (அலை) ஒரு நபியாக இருந்தார். ஏனெனில், நெருக்கத்தை இழந்துவிடுதல் பற்றி எப்போதுமே அஞ்சிக் கொண்டிருந்தார்.





















1:368-369 ஆதாரங்களின் சங்கிலி

      நாடோடியும் சித்தனுமான கிளேவு ஒரு புதிய ஊருக்கு வருகிறான். அவ்வூரின் நுழைவாயில் சில போக்கிரிகளால் அதிகாரம் செலுத்தப்படுகிறது. அந்த நகருக்குள் நுழைய வேண்டாம், நம் ஊருக்கே திரும்பி விடலாம் என்று அவன் முடிவு செய்கிறான்.

      திரும்பிப் போறதுன்னா ஒரு தீனார் கொடுக்கணும் தம்பீ.

      அப்படியெனில் நான் இந்த ஊரில் தங்கிச் சுற்றிப் பார்க்கிறேன்.

      அதுக்கு ரெண்டு தீனார் ஆகும்.

      ஓஹோ, நீதிபதியிடம் சென்று வழக்குரைப்பேன்.

      அதுக்கு மூனு தீனார் ஆவுமே பரவாயில்லியா?

      எனவே அவன் இரண்டு தீனார்களைக் கொடுத்து ஊருக்குள் வந்து நேராக நீதிமன்றத்தை நோக்கிச் செல்கிறான். இடையில், பொதுச் சதுக்கத்தில் ஒரு மனிதன் ஒரு கரடியின் வாலை வெட்டிக் கொண்டிருக்கிறான். வேடிக்கை பார்ப்பவர்களுடன் கிளேவும் சேர்ந்து நிற்கிறான். ஒரே தள்ளுமுள்ளும் அக்கப்போருமாக இருக்கிறது. அதில், வெட்டுபவனின் மனைவியான கர்ப்பினி கீழே விழுந்து கருக் கலைந்து விடுகிறது.

      அதிர்ச்சி அடைந்த கிளேவு இதையும் ஒரு வழக்காக உரைக்க எண்ணி நீதிபதியிடம் செல்கிறான். அங்கே ஏற்கனவே ஒரு வழக்கு விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தச்சனிடம் ஒருவன் நஷ்ட ஈடு கோருகிறான். அவனது வீட்டில், அபாயமாக இற்று ஆடிக் கொண்டிருந்த கதவைச் செப்பனிடும் பணியில் அந்தத் தச்சன் ஈடுபட்டிருந்தான். அதன் பாரமான பலகை விழுந்ததில் அந்த இளைஞனின் தந்தை அங்கேயே செத்துவிட்டார்.   

      தச்சன் அழைக்கப்படுகிறான். அவன் சொல்கிறான், தெருவில் ஓர் அழகிய பெண் சென்றுகொண்டிருந்தாள். அவளால் தனது கவனம் சிதறிவிட்டது. அதனால்தான் வேலையில் தவறு நிகழ்ந்தது. (முறுக்க வேண்டிய திருகாணியைக் கழட்டிவிட்டான் போலும்!)

      அந்த யுவதியை அழைத்து வந்து விசாரிக்கிறார்கள். அவளோ தனது எஜமானிதான் தனது காலணியைப் பழுதுநீக்கி வருமாறு தன்னை அந்த நேரத்தில் சக்கிலியனிடம் அனுப்பினாள் என்று சொல்கிறாள். சக்கிலியன் முன்பே அதனைத் தரமாகத் தயாரித்திருந்தால் இந்தப் பிரச்சனையே வந்திருக்காது.

      சக்கிலியன் விசாரணைக்கு அழைக்கப்படுகிறான். அவன் சொல்கிறான், குற்றம் கருமானின் மீதுதான். அவன் கொடுத்த குறடும் ஊசியும் தரமாகவே இல்லை. அதனால் தனது வேலை பாதிக்கப்பட்டுவிட்டது.

      குறை தன்னிடம்தான் இருக்கிறது என்று கருமான் ஒப்புக்கொள்கிறான். ஆனால், தான் தண்டிக்கப்பட்டால் அந்த நகர மக்கள் எல்லோருமே சிரமப்படுவார்கள் என்றும் சொல்கிறான். ஏனெனில், அந்த ஊரிலேயே மற்றுமொரு கருமான்தான் இருக்கிறான். ஆனால் இரண்டு பேருக்கும் மிக அதிகமாகவே வேலை இருக்கிறது. அத்துடன் ஓர் ஆலோசனையும் சொல்கிறான். அதாவது, அந்த ஊரில் இரண்டு வண்ணார்கள் இருக்கிறார்கள். ஆனால், ஒருவருக்கான சலவை வேலைகூட போதிய அளவில் இல்லை.

      இந்த ஆலோசனையை தர்க்க ரீதியாகச் சிந்தித்து நீதிபதி ஒரு தீர்ப்பு சொல்கிறார். வண்ணார்களில் ஒருவன் சிரச்சேதம் செய்யப்பட வேண்டும்!

      இப்போது, கரடியின் வால்வெட்டியும் கருக்கலைந்த மனைவியும் அழைத்து வரப்படுகிறார்கள். முந்திய வழக்கில் ஆதாரத் தொடரின் தர்க்கப்படித் தீர்ப்பு சொன்ன அனுபவத்தில் இந்த வழக்கையும் நீதிபதி அணுகி மிக விரைவாகத் தீர்ப்பு உரைக்கிறார். வால் மீண்டும் வளரும் வரை வாலிழந்த கரடியை அந்த வால்வெட்டி பராமரிக்க வேண்டும். அதேபோல், வால்வெட்டியின் மனைவி மீண்டும் கர்ப்பமாகும் வரை அவளை அந்தக் கரடியின் எஜமான் பராமரிக்க வேண்டும்!

      நீதிமன்றம் கலைந்தது.


















 1:369 சுய உதவி

      எனது நடத்தையை நான் எப்படி மேம்படுத்துவது, எப்படி என்னை மேலும் கலகலப்பான ஒருவனாக, உடனிருக்க மகிழ்ச்சியானவனாக ஆக்குவது என்று நேற்றைய நள்ளிரவில் சிந்தித்துக் கொண்டிருந்தேன். ஆனால் உண்மையில், அப்படிப்பட்ட சிந்தனைகள் மேலும் அதிகப் பணம் அல்லது சமூக மதிப்பு சேர்ப்பதற்காகத் திட்டமிடுவதற்கு மாற்றமானவை அல்லவே? இந்த மேம்பாடுகள் எல்லாமே தன்னைக் காட்டுவதுதான்.

      நான் செய்வது அனைத்தும் இறைவனுக்காகவே என்றிருந்தால் எப்படி இருக்கும்? அனைத்திலும் பரவி நிறைந்திருக்கும் மெய்யுள்ளமையைத் தெளிவாக உணர்வதற்காகவே என்னுடைய எல்லா லட்சியங்களும் இருந்தால்?

      அந்த நள்ளிரவுச் சிந்தனையால் தலைவலி வந்துவிட்டது. என்னால் உறங்கவோ, ஓர்மையுடன் தொழவோ அல்லது என் பணியில் ஈடுபடவோ இயலாமல் ஆனது.

      இந்த உதிப்பு: என்னைப் பற்றி அதிகமாகச் சிந்திக்காதே. நீ மிக இயல்பாக நடைபோடுகின்ற காதலின் ராஜ்ஜியத்தில் வாழ்ந்திரு. இந்தத் தத்துவச் சிக்கல்களை எல்லாம் முடிச்சவிழ்த்துக் கொண்டிருப்பது உன் வேலை அல்ல.

      குவாரஸ்ம் நகரில் ஒரு சூஃபி இருந்தார். அவரின் தாய் யாவருடனும் யாதுடனும் அன்பாக இருப்பதில் பிரபலம். ஒரு மனிதனையோ அல்லது விலங்கையோ துன்புறுத்துகின்ற எதனையும் அவர் செய்ய மாட்டார். அவர் இறந்து கொண்டிருந்தபோது அவரின் பிள்ளைகள் கட்டிலைச் சூழ்ந்து நின்றார்கள்.  

      திடீரென்று, அப்பெண்மணி அவர்களை வெளியேற்றினார். ‘அதோ தூயவர்கள் வருகிறார்கள். வழிவிடுங்கள்’ என்றார். அவரின் பிள்ளைகள் அறைக்கு வெளியே வந்து கதவருகில் நின்றார்கள். அவரின் நாசியில் ஒரு லேசான நடுக்கம் தெரிந்தது. அவர் இறந்துவிட்டார். அதன் பின் மூச்சு இல்லை. ஆனால், சிறிது நேரம் வரை ஒரு பிரகாசம் அவரைச் சூழ்ந்திருந்தது.

(தொடரும்...) 

No comments:

Post a Comment