Thursday, November 15, 2018

நீருக்குள் மூழ்கிய புத்தகம் - 9
























குறிப்பு: 
சென்ற ஆண்டு சூஃபித்துவம் சார்ந்த இரண்டு நூற்களின் மொழிபெயர்ப்பை அவ்வப்போது பதிவிட்டுக்கொண்டிருந்தேன் என்பது உங்களுக்கு நினைவிருக்கலாம். நீருக்குள் மூழ்கிய புத்தகம் மற்றும் ஒரு சூஃபியின் டைரி. ஒரு கட்டத்தில் மொழிபெயர்ப்புப் பணியை நிறுத்தி விட்டேன். இன்று நண்மதியம் அலைபேசியில் ஓர் அழைப்பு. மெல்லினம் பதிப்பகத்திலிருந்து உவைஸ் அஹ்மத் பேசினார். சூஃபித்துவச் செவ்வியல் நூற்கள் பற்றிக் கொஞ்சம் உரையாடினோம். அப்போதுதான் இந்தப் பதிவுகள் பாதியிலேயே நின்று கொண்டிருப்பதை நினைவு கொண்டேன். பழைய இடுகைகளில் தேடிப் பார்த்தால் சரியாக ஓராண்டு இடைவெளி! நவம்பர் 2017-இல் இருக்கிறது இத்தொடரின் எட்டாம் பாகம். தொடர்ந்து இந்நூலின் மொழிபெயர்ப்பை முழுமையாக முடிக்க எண்ணம், இன்ஷாஅல்லாஹ்.




















1:200-201: கொசுக்கள்
      அழகிய அத்தியாய ஆரம்பத்தை வாசித்துக்கொண்டிருந்தேன்: ”விடிகாலையின் இறைவனிடம் நான் காவல் தேடுகிறேன்” (113:1). என்மேல் கடுஞ்சினம் கொண்டு தனது நாளெல்லாம் வேலை செய்கின்ற துருக்கியனுக்காக அது என்னை அழ வேண்டும் போல் ஆக்குகிறது. ”இருள்கின்ற இரவின் தீங்கை விட்டும்” (113:3). பகைமை பரவும் இருள் அது. ஒளிகளைப் படைத்த இறைவனிடம் காவற் தேடாத, வெறுமையான, சுயாதீனமற்ற, போதையேறிய இரவு-மனிதன் அவன். அவனின் இரக்கமற்ற அதிகாரத்தையும் ஆதரவையும் நான் அஞ்சுகிறேன்.

      வைகறை ஒளியின் தெளிந்த கடலில் நாமொரு முதலையை அல்லது கடற்சிங்கத்தை ஏதோ செல்ல நாயைப் போல் சந்திக்கலாம். ஒரு முத்தினையோ வெற்றுச் சிப்பியையோ கண்டடையலாம். நாள் வளர்ந்து ஓய்கையில் இரண்டு விளைவுகளுமே சாத்தியம்தான்.

      யாரோ கேட்கிறார், இறைவன் ஏன் ஒரு வழியைச் செழிக்கவிட்டுப் பிறகு இன்னொன்றை ஓங்க வைக்கிறான்? நான் சொல்கிறேன், நாம் அதனை அறியவோ அதில் தலையிடவோ முடியாது. எல்லாப் புகழும் இறைவனுக்கே என்று சொல்லிக்கொண்டிருக்கும் வரை நாம் செல்வதற்கான பாதை ஒன்று இருக்கிறது என்பது மட்டுமே எமக்குத் தெரியும். நமது திட்டமிடுதலின் எல்லை இதுவே.

      நிகழ்வுகளும் நோக்கங்களும் அவ்வவற்றின் நியதிப்படி ஒழுங்குறும். பகலில் ஒரு மந்தை வெளியில் பரவி மேய்கிறது. அந்தியில் குறுகி அடைகிறது. கொசுக்கள் வேட்டையாடி முடித்த பின் தேங்கிய நீரின் கூட்டிற்குத் திரும்புகின்றன. நீயும் நானும்கூட மீட்கப்படுகின்றோம். “அவன் நிச்சயமாக உங்கள் அனைவரையும் மறுமை நாளில் ஒன்று சேர்ப்பான்” (4:87).

1:207-208 நிலைமாறாமை
      
 இறைத்தூதர்களுக்கும் இறைநேசர்களுக்கும் ஓர் உள்ளார்ந்த களங்கமின்மை உண்டு. ஆனால் அனைவர்க்கும் நிகழ்கின்ற விளைவுகளே அவர்களுக்கும் நிகழ்கிறது. கழுதை ஒன்று சண்டித்தனம் செய்தால் அதற்குப் பிரம்படி விழும். நீ தவறு செய்தால் தண்டிக்கப்படுவாய். நிலைமாறாமையே மைய நற்பண்பு என்று அபூபக்கர் சொன்னார்கள். மனத்தின் உறுதியிலிருந்தே நற்செயல் பிறக்கிறது. அது நுண்ணறிவை சமனப்படுத்துகிறது.

      இறைத்தூதர்களுக்கு இடர்ப்பாடுகள் கொடுக்கப்பட்டது ஏன் என்று என்னைக் கேட்கிறார்கள். நான் சொன்னேன், தெளிவான அடையாளங்களைக் காண அவை உதவுகின்றன. பிறகு எனக்கு நானே சொல்லிக்கொண்டேன், இன்னும் பணிவுடன் இரு, சிறைப்பட்டவனைப் போல. உனக்கு விடுதலை நல்க வல்ல ஒருவரிடம் பணிந்துபோ.

            ”அதன் நறுமணம் எட்டும் எல்லைக்கு அப்பாலும்
             இந்த ஏக்கத்தை நினைந்து எடுத்துரைக்க முயல்கிறேன்”




















1:210-211 மாபெரும் வேரமைப்பு

      இறையச்சம் பற்றி யாரோ கேட்டார்கள். அந்த அச்சமே அடைக்கலதம் கேட்கும் நினது பிரார்த்தனை. பிற அச்சங்கள் எல்லாம் வேறானவை. அவை நீ உனது பலவீனத்தை உணருமிடத்தில், மாபெரிய உடலும் வேரமைப்பும் கொண்ட மரத்தின் மெலிந்த கிளைகளைப் போல.

      பாம்புக் கழியினை பயமறப் பற்றும்படி மூசா நபியிடம் இறைவன் பகர்ந்தான். ”அதனைப் பிடியும், அஞ்சற்க” (20:21). பிணி, இறப்பு, மன அழுத்தம், பழக்கப் பிழை, அழகின்மை, ஆசையின்மை ஆகிய எனது அச்சங்களை விட்டும் அடைக்கலம் கேட்கிறேன் நான். அவற்றை எல்லாம் அழகாகவும் ஆர்வமாகவும் மாற்றித் தா. உனக்கும் எனக்கும் இடையில் யாதொன்றும் வராதிருக்கட்டும், பிள்ளைகளும் குடும்பமும்கூட. எனது பார்த்தல் திரையற்றதாகட்டும். ஏனெனில், “அந்நாளில் அவர்கள் தமது இறைவனை விட்டும் திரையிடப்பட்டவர்கள் ஆவர்” (83:15)

      மரணத்தை அஞ்சியபடி வெற்றுப் பரபரப்புடன் ஏனிங்கே அமர்ந்திருக்கிறோம்? நண்பர்களே! நாம் இத்தனை கவலைப்படுதல் தகாது. மாறாக, அடைக்கலத்தின் மாபெரும் மரத்திற்கும் அதன வேர்களுக்கும் நம்மை அழைக்கின்ற அகத்துடிப்பினுள் நாம் ஒன்றாகப் பணிவோம்.























1:212-213 ஒவ்வொரு உற்சாகம்
      
 பரம்பொருளிடம் எனது பிரார்த்தனை இதுதான்: உன்னை ஆசைப்படுவதற்கான பல வழிகளை என்னில் படைத்தருள்வாய். அவற்றின் விளைவுகள் ஒவ்வொன்றையும் தெளிவாக்கு. ஏனெனில், என் உடலில் அனைத்து பாகங்களும் அவ்வதிசயத்தில் பங்கெடுக்க வேண்டும். மேலும் வேண்டுகிறேன், எனது இறைத்தேடல் இன்னும் சக்தி மிக்கதாகட்டும். பிற ஆசைகள் என்னைப் பீடிக்கும்போது இது என் கண்களிலும் கேள்வியிலும் ஒளியேற்றட்டும்.

      ஒவ்வொன்றும் மேலும் துல்லியப்படுகிறது. மேலும் சக்தியான இச்சைகளின் சிறகுகளை எனக்குத் தா. அச்சிறகுகள் அவற்றின் பறவைகளுக்கு உதவும்போது எனது ஆசையே இந்த ஏக்கத்தைப் போஷிக்கட்டும். இப்பருவுலகில் என் கண்களால் நான் உன்னைக் காண்பேனா? அல்லது மறைவுலகில் வேறு வழியில் உன்னை அறிவேனா?

      விடை வருகிறது: நின் எலும்புகளும் தோலும், நின் உறுப்புக்களும், நின் முழு உடலமைப்பும் நினது பிரசன்னத்தால் உயிருடனுள்ளன. பஹாவுத்தீனாகிய நீ எவ்வொரு எல்லையிலும் இருக்கிறாய், நினது இதயத்தின் துடிப்பில், நின் மூளையில், நெஞ்சாக்கூட்டில். ஒவ்வொரு பகுதியிலும் நீ இடையறாது பாய்கின்றாய். அப்பகுதிகள் உன்னைப் பார்க்கவில்லை. எனினும் நீ அவற்றில் நிச்சயமாக இருக்கிறாய். அதுபோல், இவ்வுலகின் ஒவ்வொரு பாகத்திலும், தட்பவெட்ப மாற்றங்களிலும், நீ உணரும் ஒவ்வொரு உற்சாகத்திலும், மெல்லுணர்விலும் யாம் இருக்கிறோம். ஒவ்வொன்றும் இப்பிரசன்னத்திலிருந்தே நேரடியாக வருகின்றன.

      நான் இவ்வுரையாடலைத் தொடர்ந்தேன். ஒவ்வொரு நபரும் தமது வாழ்க்கையில் நடந்தவற்றின், இழப்புக்கள் மற்றும் இன்பங்கள், அளவுக்கு உன்னை அறிவார்கள் என. இப்போது நான் முப்புலனங்கள் கொண்டு என்னையே வழிநடத்துவேன்: ஒன்று, உனது மகத்துவத்தைப் புகழ்வது; இரண்டு, நின் ரகசியத்திற்கான எனது ஏக்கமும் காதலும்; மூன்று, நின்னிடம் அடைக்கலம் பெற்றமைக்கான நன்றியுணர்வு. சிதைந்து உடைந்த எண்ணங்களால் ஆன நிகழ்வுகளில் நகர்ந்து செல்லும் என் ஆளுமையின் மையம் இவை மூன்று மட்டுமே. அந்தச் சிதைந்த எண்ணம் ஒவ்வொன்றிலும் இம்மூன்றும் கொஞ்சமாவது இருக்கும், உன்னைப் புகழ, உன்னைக் காதலிக்க, உன் பிரசன்னத்தின் அடைக்கலம் அடைய.

1:221-222 நான்கு பறவைகள்
     
 ”அன்றி இப்றாஹீம், ‘என் ரட்சகனே! இறந்தோரை நீ எவ்வாறு உயிர்ப்பிக்கின்றாய் என்று எனக்குக் காட்டு’ எனக் கூறியபோது, அவன் ‘நீங்கள் நம்பவில்லையா?’ என்று கேட்டான். அவர், ‘ஆம் (நம்புகிறேன்), எனினும் என் உள்ளம் அமைதி அடைவதற்காக!’ என்றார்” (குர்ஆன்:2:260)

      ஒவ்வொரு மனித உடலிலும் நான்கு பறவைகள் வாழ்கின்றன. ஒவ்வோர் இரவும் அவை கொல்லப்பட்டு நான்கு உடல்கள் கலக்கின்றன. ஒவ்வொரு காலையிலும் அவை உயிர்ப்பிக்கப்பட்டு தனித்தனிக் கூண்டுகளில் அடைக்கப்படுகின்றன. அவசரம் மற்றும் பேராசை என்னும் வாத்து; உயர் வான் வரை குரல் கேட்கும்படிக் கூவும் சேவல் என்னும் காமம்; புகழ்ச்சி நாடித் தோகை விரிக்கும் மயில் என்னும் தற்பெருமை; எங்கும் தனது கரைதல் கேட்கக் கரையும் காக்கை என்னும் சுயநலம்.

      இறந்தோரை இறைவன் எப்படி உயிர்ப்பிக்கிறான் என்று நீ கேட்கிறாய். ஆனால் எப்போதுமே நீ உயிர்ப்புள்ளவற்றின் உயிர்மையை மங்கச் செய்கின்றாய். உயிர்கள் இருக்கும் இடத்தில் கடவுள் இருக்கிறார். நாம் நடைபோடும் இப்பூமி மரணத்தின் வயல்.

      இறைவன் சொல்கிறான், நான் துகள்களுக்கு உயிரூட்டுகிறேன். பறவைகளை அப்பால் பறக்கும்படிச் செய்து பின்னர் கூட்டமாகத் திரும்ப வைக்கிறேன். தெய்வீகத்திற்கான உனது தேடலைத் தொடங்கு. கதகதப்பான பூவிதழ்கள் உன் முகத்தில் விழுந்து அதன் விறைப்பைத் துடைக்கும்.

      தற்கொலை செய்வது போல் விட்டில் விளக்கில் வீழும்போது அது ஏமாறுகிறது என்று சிலர் எண்ணுகிறார்கள். முன்பே வீழ்ந்து மடிந்த விட்டிலின் பிணத்தை அது மெழுகுவத்தியின் காலடியில் காண்பதில்லையா? அது இப்படி உள்ளது: உலகின் பகுதிகள் தீயால் ஒளியூட்டப்பட்டுள்ளன. தழல்களுக்கு மக்கள் தம்மையே உணவாக ஊட்டுகின்றனர். அதன் பின், சிலர் பொன் போல் வறுபடுவதாகத் தெரிகிறார்கள். ஆனால் அவர்கள் மௌனமாகவும் உள்ளுக்குள் பிரகாசிப்பவர்களாகவும் இருக்கிறார்கள்.

      ”காதல் இந்த ஓய்வினுள் ஒளிந்துள்ளது
      காதலின் ரகசியம் மறைந்துள்ளது
      முக்காட்டினுள் ஒரு ராஜாளி போல.
      அந்த மெழுகுவத்தி கொளுத்தப்பட்டால்
      ஆயிரம் காதலர் எரிந்து போகிறார்கள்”
 

1:224: ஒரே நுகர்வோன்

      ”நிச்சயமாக அல்லாஹ் நம்பிக்கையாளரின் உயிர்களையும் உடைமைகளையும் வாங்கிக் கொண்டான், அவர்களுக்குச் சுவனபதி என்பதற்காக” (குர்ஆன்:9:111)

       உன் அன்பையும், உன் சுயநலமற்ற உணர்வுகளையும் நான்தான் வாங்கிக் கொள்கிறேன். உன்னைச் சுற்றியுள்ளோர் அல்லர். அவர்கள் அக்கறை காட்டவேண்டும் என்று நீ எதிர்பார்க்கிறாயா? நானும் அவர்களும் என்று இரண்டு நுகர்வோர் வேண்டுமா உனக்கு? பிரபலமடைய நீ எதைச் செய்தாலும் அது கால விரயமே. அவர்கள் பார்க்கிறார்கள், முகம் திருப்பிக் கொள்கிறார்கள். அது உன்னை வருத்தப்படுத்துகிறதா? அப்படி இருக்காதே. என்றைக்கும் உனக்கான நுகர்வோன் நான் ஒருவன் மட்டுமே.

1:228 கண்ணியமும் தேர்வும்

      ”பூமியை வசிப்பிடமாக்கி, அதனிடை ஆறுகள் ஓட்டி, மலைகளை முளைகளாய் நாட்டி, இருகடல் இடையே தடுப்பு வைத்தோன் யார்?” (குர்ஆன்:27:61)

      தாதுக்களை அவற்றின் அனுமதி இன்றியே நாம் பல்வேறு வடிவங்கள் ஆக்குகிறோம். நீரும் மரமும் போலன்றி மனிதர்க்குத் தேரும் வாய்ப்பு உள்ளது. அவர்களுக்கு கண்ணியமும், நுண்ணறிவும், மரணத்திலிருந்து புது வாழ்வுக்கு நகர்ந்து மீண்டும் அதனினும் மேலான இருத்தல் நிலைக்காக மீண்டும் மரணிக்கின்ற பரிணாம ஞானமும் வழங்கப்பட்டுள்ளன. நீங்கள் வாழ்ந்து உழைத்து மாறி இருப்பதற்கான பல்வேறு வாய்ப்புகள் உள்ளன. நீங்கள் கடலில் வீழ்வதாக வைத்துக்கொள்வோம். நீங்கள் கைவிட்டு மூழ்கிப் போகலாம் அல்லது முயன்று நீந்திக் கரை சேரலாம். ஈடேற்றம் என்பது நீங்கள் முடிவு செய்வதே.




















1:232-233 முரட்டுக் காதல் பித்தன்

      நான் ‘அல்லாஹு அக்பர்’ இறைவன் மிகப்பெரியவன் என்று சொல்லிக்கொண்டிருந்தபோது எனக்கோர் உண்மை உணர்த்தப்பட்டது. கண்டங்களும் கடல்களும் அவற்றுள் வாழ்ந்திருக்கும் அனைத்தும் எல்லாம் அந்தப் பிரசன்னத்திலேயே வைக்கப்பட்டுள்ளன. அந்த சுயங்களும் செயற்பாடுகளும் இல்லாமல் ஆனால் இறைவன் காட்சியாவான்.

      எனது பிரார்த்தனை இதுவே: மேய்ச்சல் நிலங்கள் மீது எனக்கு அதீத ஆர்வம் கொடு, வேகமாய்ப் பாயும் நீரோடையின் மருங்கில் உள்ள பச்சை வெளியின் மீது. வைக்கோலும் சாணக்குவியலும்கூட எனக்குப் பசிய காய்கறிகளாய்த் தோன்றும் அளவு ஆர்வம். எவ்வொரு தெரு மனிதனும் என்னை நோக்கி வருகின்ற வானவர் என்பது போல் நான் காண்பதற்கான பிரகாசமான ஆர்வத்தை என்னுள் நிரப்புவாயாக!

      ஒரு கவளம் பழையது என் நாவில் நெய் பெய்து வடித்த புத்தம் புது அக்கார அடிசிலாய் சுவைக்குமாறு எனக்குப் பசி அளிப்பாயாக. இதுவெல்லாம் ஒரே பிரார்த்தனைதான்: ஒரு முரட்டுக் காதல் பித்தனை எது விரட்டி ஏதுமற்றதைத் தேடச் செய்கிறதோ அதே ஏக்கத்தை எனக்குத் தருவாயாக.

      என் பச்சையான ஆசை என்னில் ஒரு தெளிவென வாழ்கிறது. நான் செய்த தவறுகள் எல்லாம் இப்போது நான் நுழைந்துகொண்டிருக்கும் பெருங்கருணையால் மூடப்பட்டுவிடும் என்று அது என்னை உணரவைக்கிறது. “அல்லாஹு அக்பர்” என்பதன் அர்த்தம் அதுவே.

1:233-234 அசைவும் அசைவின்மையும்

      ஹாஜி சித்தீக் செய்த அட்டூழியத்தை நான் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால், நான் எதற்கு அதை இறைவனிடம் சொல்ல? எது நடப்பினும் அது அவனின் நாட்டத்தால் அவனின் பிரசன்னத்தில்தான் நடக்கிறது. அது எதுவாயினும், ஹாஜி சித்தீக்கின் கொடுமை என்றாலும் எனது துயரப்பாடு என்றாலும். அவை ஒன்றுதான்.
      
 உள்ளுதிப்பு: நீ குர்ஆன் ஓதும்போதும் இந்த வெளிப்படையான புலம்பலிலும் உனக்கு நிவாரணம் வழங்குவது நானே. தம் துயரை அழுது புலம்ப உன்னைப் போல் ஆயிரமாயிரம் பேர் என் வாசலுக்கு வருகிறார்கள். அவர்கள் உதவப்படவில்லை எனில் மீண்டும் மீண்டும் வருவார்களா? எனது பெயர் அல்லாஹ் அல்லவா? அப்பெயரின் அர்த்தமே அநீதத்தையும் அழிவையும் விட்டு அடைக்கலம் அல்லவா? உன் துயர் விட்டு அடைக்கலம் பெறு. நீ வேண்டும்போது திரும்பு. எனது பெயரினுள் அடைக்கலம் இல்லை எனில் அது மறுக்கப்பட்டு மறக்கப்பட்டு விடும். அதில் வருவது குணப்பாடு மட்டுமல்ல, பெரும் பொக்கிஷமும் சன்மானமும், ஏழ் வான அடுக்குகள் (71:15) கூட.

      நான் பதிலுரைத்தேன், எங்களுக்கு இந்த ஏழு வானங்கள் தெரியவில்லை. அவை எப்படி இருக்கும் என்று எம்மால் அறியக்கூடாது. நீ எங்களுக்குக் காட்டவில்லை. எனவே நாங்கள் அவற்றை அல்லது எம் மூலத்தை அல்லது எம் விதியைப் பார்க்க முடியவில்லை. இந்த வானுலக அடுக்குகள் எமக்குக் காட்டப்படுவதில்லை. எனவே, எமக்கு நீ தருவதுதான் என்ன?
       
இது மிகவும் துயரமானது. எனது ஆன்மா எனது உடலை விட்டு வெளியே வந்து இறைவனின் அற்புதங்களைக் காணத் தவிக்கிறது. ஆனால் அடர்ந்த படைப்புச் சங்கமத்தின் வழியாக, மரணத்தின் வழியாக, மேலும் இறைஞானத்தின் வழியாகப் பயணப்படல் சால மிகச் சோர்வு தரும். நான் சொன்னேன், எங்கே இருக்கின்றேனோ அங்கேயே தங்கிவிடுகிறேன். இங்கே நான் பிரசன்னத்தின் அண்மையை உணர்கிறேன். இங்கே ஒளியையும் திருப்பண்புகளையும் காண முடிகிறது. நான் அதைச் சொன்னவுடன், மேலும் அதிக ஒளியையும், பரவசம் பீறிட எங்கெங்கும் இதழ் திறக்கும் மலர்களால ஆன தோட்டங்களையும் கண்டேன்.

      என் ஆன்மாவில் இரு தன்மைகள் உள. அசைவும் அசைவின்மையும். அந்த அசைவு இறைவனை நோக்கிப் பாய்ந்து நெருங்குகின்றதொரு மென்மையான காதலின் சக்தியால் நிரம்பியுள்ளது. அசைவின்மை நான் சோரும்போதுள்ள ஓய்வாகும். அதில் நான் பேரமைதி நிறைவு ஆகியவற்றால் நிரம்பி செயலின்மை அமர்வு மற்றும் மௌனத்தை நேசித்தல் ஆகியன கொண்டிருக்கிறேன்.

      இதனை நான் எனக்கு மட்டும் சொல்லிக்கொள்கிறேன்: நீ நசுக்கப் பட்டிருக்கும்போது உன்னைச் சுற்றி உள்ளோர் உடைந்தோராகத் தெரிகின்றார். நீ ஒளிரும்போது இருள் கரிய ஒளியாக மாறுகின்றது. நீ துன்புறுத்துகையில், நீ நல்கும் சௌகரியங்கள்கூட காயப்படுத்துகின்றன. நீ துலங்கும்போது உன் தோல்விகள் கூட சரியாக, கச்சிதமாக இருக்கின்றன.

















1:236-237 விகடன் உக்லூல்

      ”அல்லாஹ்வின் பாதையில் கடினமாக முயற்சிக்க வேண்டியவாறு முயலுங்கள். அவன் உங்களைத் தேர்ந்துகொண்டான்” (22:78)

      விகடன் உக்லூலுக்கு எல்லா விஷயங்களுமே விகடம் செய்வதற்கான காரணம்தான். அவனிடம் சொன்னேன், உன்னுடைய காய்கறிகளை நீ சற்றே சத்தமின்றி விற்பனை செய். அப்போதுதான் மக்கள் நீ எப்போதுமே விகடம் செய்வாய் என்று எதிர்பார்க்கமாட்டார்கள். அதை நீ செய்யமாட்டாயா என்று அவர்கள் ஏங்குவார்கள். அவ்வழியில் நீ இன்னும் எளிமையாகவும் நேர்மையாகவும் வாழலாம்.

      உன் பாத்திரத்தில் இன்னும் அதிகமாக உணவு விழ வேண்டும் எனில் நீ அதைக் கழுவிச் சுத்தமாக வைத்திரு என்கிறார் ஒரு ஹிந்து குரு.

1:237-238 இஸ்லாம் என்பது நண்பர்களைப் பெறுவதே
      
 இஸ்லாமிய மார்க்கம் என்பது நண்பர்களை அடைந்துகொள்வதாகும். சகவாசத்தின் ஆனந்தத்தை உணர்வதாகும். தனியாக இருக்கும் ஒருவனை விட நண்பனுடன் இருக்கும் ஒருவன் மகிழ்ச்சியாகவே இருப்பான். அதில் ஐயம் இல்லை. நமது துக்கத்தைச் சொல்ல, அக்கணத்தில் வலிப்பது எதுவென்று கூற, அல்லது வெட்டியாகவேனும் வெறுமனே பேசிக்கொண்டிருக்க நமக்கு ஒருவர் இருப்பதையே நாம் விரும்புகிறோம். சொத்துக்கள் வாங்குவது, கட்டடங்கள் கட்டுவது என்னும் இந்த வியாபாரங்கள் அனைத்தின் மையப் புள்ளியிலும் நம்மை ஒரு நண்பனிடம் அல்லது பல நண்பர்களிடம் பகிர்ந்துகொள்கின்ற ஆசையே அமைந்துள்ளது. கடவுளுடன் தனித்திருந்து பாழ்நிலத்தையும் மதிய வானத்தையும் ரசித்துக்கொண்டிருக்க ஒரு ஞானியால் மட்டுமே முடியும்.

      பாமியானில் செய்வதைப் போலவே இங்கும், இந்நகருக்கு அஃப்ஸல் வருவதற்காக அவருக்கு ஆண்டொன்றுக்கு ஆயிரம் தீனார்கள் தரப்பட வேண்டுமென்று அரசர் ஆணையிட்டிருப்பதாக அறிகிறேன். எனக்கு ஒருவரும் ஒரு பை ரொட்டி தருவதில்லை, அஃப்சலுக்கு ஆயிரம் தீனார்கள். மக்களிடம் அவருக்குள்ள தகுதியை அவதானித்துப் பிறகு எனதையும் கவனிக்க.

      இதை நான் சொல்லும்போதே உள்ளுதிப்பு வருகின்றது: நீ இறைத்தூதரின் பாதையில் இருக்கின்றாய். எந்த ஓர் இறைத்தூதருக்கும் ஒருபோதும் ஊக்கத்தொகை வழங்கப்பட்டதில்லை. அதற்கு முரணாக, பெருங்கூட்டங்கள் அவர்களை எதிர்த்திருந்தன. அவர்கள் மருத்துவமோ வானியலோ அல்லது தத்துவமோ பயில்வதற்காக அவர்களுக்கு எந்த உதவித்தொகையும் கொடுக்கப்பட்டதில்லை. புரக்க ஆளின்றி, தந்தையோ தாயோ குடும்பமோ இன்றி தூதுப்பணியின் கடுமையான நிலைகளில் அவர்கள் இறைவனிடமே பிரார்த்தித்தார்கள். அந்நிலையை ஆசிப்பதாக இன்று பல பேர் பேசுகிறார்கள்.

      உன் துயரத்தை அணியத்
தகுதி அற்றவன் நான்.

      என் கண்களோ வெறும் சுமைதூக்கிகளாக
      உன் மீதான எனது
      பக்தியையும் விசுவாசத்தையும்
      எடுத்துச் செல்கின்றன

(to be continued...)

No comments:

Post a Comment