Tuesday, August 22, 2017

நீருக்குள் மூழ்கிய புத்தகம் - 4



முதல் நூல்

மஆரிஃப் 1:1: நீல ஆடை

      ”எமக்கு நேர்வழி காட்டுவாயாக” (குர் ஆன்:1:6)

      அழகிற்கான ஒரு ரசனை எனக்கு அருளப்பட்டுள்ளது. என் தேகத்தினுள் பால் ஓடுவது போன்று, கதவுகள் திறக்கின்றன. ஆறு திசைகள் கொண்டு நெய்யப்பட்ட, ஆயிரக்கணக்கான மலர்கள், மஞ்சள் மல்லிகை, வனக் குறிஞ்சி ஆகிய நீர்வண்ண உருவங்கள் அசையுமொரு நீல ஆடை அணிந்துள்ளேன். பழத்தோட்ட நடைப்பாதை, தெருவில் காணும் இன்முகங்கள், நான் இந்த அழகால் ஆகியிருக்கிறேன். நசுக்கப்படும் செடிகளின் நறுநெடி, ரோஜாத் தைலம், அகில் மரப் பிசின்: உயிருள்ள சாரம், பூக்களின் அறிவுச் சாறு நான்.

 Related image

1:2:3: கடவுள் சுவைக்கும் வழிகளில் ஒன்று

      தொழுகையின் நடுவில் மீண்டும் நான் சொர்க்கக் கன்னிகளை நினைத்திருந்தேன்.     கற்பூரம் பாதியும் குங்குமம் பாதியும் ஆன உடலாம், கஸ்தூரியால் ஆன கூந்தலாம் அவர்களுக்கு. சொல்லப்படுகிறது.

      அதன் பின், அவமானத்தால் தலை குனிந்த, ஆனால் உள்ளம் சத்தியத்தில் ஊன்றி நின்ற ஒரு நபரைப் பற்றிச் சொல்லப்படும் பழைய வழக்கு ஒன்றை நினைவுகூர்ந்தேன்.

      அதன் பின், இறைப்பண்புகளை நினைத்தேன்: பெருங்கருணை, வள்ளன்மை, அழகிய நுட்பம், ஒளிமய அறிவு, அருள், அழகு. எனது அளவுக்கேற்பவும் அதற்கு அப்பாலும்கூட, இந்தப் பண்புகளின் ருசியை நான் அறிவேன் என்பதை நினைத்தபோது நன்றி பெருகியவன் ஆனேன்.

      விரிப்புப் போர்த்தியதொரு நீண்ட மேஜையைக் காண்கிறேன். அதில் சக்திகளும் பண்புகளும் படைப்புக்களும் இங்கே நமது இன்பங்கள் வரும் வழியான ஏழு விண்மீன்களும் உள்ளன. எனது நினைவின்மையிலும், இப்பண்புகளின் ருசியுடன் கடவுள் என் ஆசைக்குள்ளும் ஆன்மாவுக்குள்ளும் நுழைகிறார்.

      கடவுள் சுவைக்கும் வழிகளில் ஒன்றாக நானே ஆகி வருவதை உணர்கிறேன்.

Image result for old sufi

1:4: பார்த்தலின் இக்கோப்பை, என் மது
      
 முணகியபடியும், புலம்பியபடியும், புகழ்ந்தபடியும் நான் இறைவனின் முன் அமர்கிறேன், எனது காதலை வெளிப்படுத்தப் புதுப்புது வழிகளைக் கண்டறிந்தபடி. யாழுக்கும், பின்னர் முழவுக்கும், பின்னர் குழலுக்கும், பின்னர் அம்மூன்றின் இசைக்கும் பாடல்கள் பாடப்படுவதைப் போல். 

      பார்த்தலின் இக்கோப்பை ஒவ்வொரு கணமும் காட்சியால் நிரம்புகிறது. இதுவே எனது மது. நான், அருளப்பட்ட இக்கணத்தை அருந்துகிறேன். என் கைகள், தேகம் மற்றும் தலை வழியாக பூக்கள் திறக்கின்றன. இதுவே ஆரோக்கியம். வேறு உணர்வுகள் எல்லாம் நோயும் சாவும் மட்டுமே.

1:8: நித்திரை மரம்

      நான் என்ன செய்ய வேண்டும் என்று வியந்தபடி அமர்ந்திருந்தேன். அப்போது இந்த உள்ளுதிப்பு வந்தது: உன் இதயத்தைத் திற. இறைவனுடனான நெருக்கத்தை உணர். உன்னுள் நோக்கு. அங்கே பிரக்ஞையைத் துலக்கு.

      அது என்னைச் சிந்திக்க வைத்தது. இங்கே இரண்டு சுயங்கள் இருக்கின்றன, இறைவனும் நானும். இறைவன், வியப்புமிகு மர்மம். நான், செத்தையும் கசப்புமானதொரு குழப்பக் கலவை. இறைவனை அடைவதற்கு நான் அதனூடே கடந்து செனறாக வேண்டும்.

      இந்தச் சிந்தனைகளில் சிக்கி, நான் சொக்குகிறேன். உறக்கத்தில் நான், இன்மையில் வேர்கொண்டதொரு இரவு-மௌன மரமாகிறேன். நான் விழிக்கையில் அந்த மரம் கிளைகளும் இலைகளும் கொள்கிறது. கண்பார்வை மீள்கிறது; கைகள் காற்றில் அசைகின்றன. கிளை நெடுக மலர்கள் திறப்பது போல் என் இதயம் உணர்கிறது. தொழுகை விரிந்து செழுங்கனி ஆகிறது. சுயமின்மையே என் வாயில் மொழியின் சுவை ஆகிறது.

1:10: காணாத மலரின் நுறுமணம்

      காணாத அங்கிருந்து இங்கேயும், பின்னர் மீண்டும் அங்கேயேயும் நீர் பாய்வதாக உயிருடனிருத்தலின் சாராம்சத்தை நான் பார்க்கிறேன். இன்மையிலிருந்து அவை வந்தன என்பதையும் இன்மைக்கே அவை மீண்டுவிடும் என்பதையும் என் புலன்கள் அறியும்.

      இருப்பதில் இருந்து இல்லாமைக்கும் இல்லாமையில் இருந்து இருத்தலுக்குமான ஒற்றை அடிவைப்பை நான் கண்டுகொள்கிறேன். எனது புலன்களை நான் மிக ஆழமாக அறிகையில், கடவளின் பாதையையும் வாழ்தலின் நோக்கத்தையும் அவற்றில் அறிகிறேன்.

“யாராலும் காணவியலாது மறைந்திருக்கும் மலர் ஒன்று
இருந்தும், அதன் நறுமணத்தை மறைத்துவிட இயலாது!”

கடவுள் ஒரு காணாத மலர். அம்மலரின் நறுமணமான காதல் எங்கும் தெரிகிறது.

Related image
1:14-15 வைகறை சலாம்கள்

      ஒவ்வொரு அதிகாலையும் பள்ளியில் அமர்கிறேன். உள்ளே வரும் மக்கள் சலாம் உரைக்கின்றனர். இறைவனின் சலாம், இறைவனின் பேரமைதி. பிறகு என் முன் முழுமையாகப் பணிகின்றார்கள். இறைவன் என்ன செய்கிறான் என்று நான் அறிவேன்: இம்மக்களுக்குப் பேரழகாகத் தோன்றும்படி எனது ஆன்மாவை அவன் செம்மை செய்கிறான். இவர்கள் அந்த கைவினையைக் கண்ணியம் செய்கிறார்கள்.
     
 எனது ஏமாற்று, முரணும் உணர்வுகள், என் புகழ் விருப்பம் ஆகியவற்றை எல்லாம் அவர்கள் பார்த்தாலும், அப்போதும்கூட, எனக்கு வழங்கப்பட்டுள்ள தெய்வீக அக்கறையை அவர்கள் கண்டுகொள்ளத் தவறுவதில்லை. சிலநேரங்களில் என் ஆன்மா பிற ஆன்மாக்களுடன் சேர்ந்தும் பிறகு அவற்றை விட்டு விலகியும் செல்லும் நிலைக்கு நான் மிகவும் நன்றியாகிறேன். ஆன்மிக வளர்ச்சிக்கான ஒரு விதிமுறை, புரிதலின் உற்சாகமூட்டும் சாத்தியங்களுடன் இங்கே இருப்பதை அவதானிக்கின்றேன்.

      அது எப்படிச் செயல்படுகிறது என்பதான காட்சிகள் தோன்றுகின்றன: வடதுருவக் கடுங்குளிரில் சிலர். பிறரோ வெப்ப மண்டலங்களில். பெருங்கடல்கள், செங்குத்தான பாலைவனப் பள்ளத்தாக்குகள், காடு செறிந்த சமவெளிகள் எல்லாம் இணை அற்ற ஏகனுடன் ஒத்திசைவில். தூய ஆனந்தத்தில் பாடி அசைந்து செல்லும் குழு ஒன்றுள்ளது; இன்னொன்றோ கடுந்துயர் மற்றும் இனப்படுகொலையின் நடுவே மௌனம் காக்கிறது. முள் மண்டுகின்றது ஒரு மரம்; பொறாமை, குறுமனப் பழிவாங்கல். பின்னர், வெண் மல்லிகை மொட்டுக்கள், பாதி திறந்த போதுகள், தம்மையே அன்பளிப்பாய் உதிர்ப்பன.

      இவையெல்லாம் நமக்கேன் காட்டப்படுகின்றன? முழுமையை அப்படியே நாம் போற்றுவதற்குத்தான். நம்பிக்கை அற்று நான் துயர் காணும்போது, அதனை ஓர் அருளாகவும் நோவின் நீக்கமாகவும் ஏற்றுக்கொள்கிறேன். அது காட்டப்பட்டு, அதனை உள்வாங்கி, இரண்டையுமே நேசிக்கத் தொடங்கும்போது ஓர் ஆழமான அறிதல் ஏற்படுகிறது.

1:27-29 கொதிக்கும் பானை

      ”என் ரட்சகனே! எனக்கும் ஆட்சியைத் தருகின்றாய்” (12:101). இறைவனிடம் நான் சொன்னேன், காணாத ஆத்மவுலகுடன் ஒப்பிடும்போது இப்பருவுலகின் அதிகாரம் அற்பமானது.

      ”மேலும், புலனங்களின் உட்பொருளை விரித்துரைக்கக் கற்பித்தாய்” (12:101). தூக்கத்தில் நான் காணவும் கேட்கவும் தோன்றும் கதைகளை எப்படி விளங்கிக்கொள்வது என்றெனக்குக் கற்பிக்கின்றாய். உறக்கத்திலும் நினைவிலும் நான் தீர விழித்திருக்கிறேன்.

      ”வானங்களையும் பூமியையும் படைத்தவனே” (12:101). அதிதூயதை விட்டும் பருவுலகை நீயே பிரிக்கின்றாய். நான் அமர்ந்து இரண்டு உலகங்களையும் அனுபவிக்கும்படி நீயே திரை ஒன்றைத் திறக்கின்றாய்.

      ”இம்மையிலும் மறுமையிலும் என் பாதுகாவலன் நீயே” (12:101). இரண்டுமே உன்னுடையவைதான். எனினும், இப்போது நான் அந்த மறைவான உலகின் மீது காதல் வயப்பட்டிருக்கிறேன். இந்த வெளியுலகை நீக்கி விடு. வரப்போகும் உலகிற்காகக் காத்திருப்பதில் நான் சோர்ந்துவிட்டேன்.

      இப்போது, இப்படியான நிலையில் நான் என்ன செய்ய வேண்டும்? என் இதயம் என்னை எங்கே இட்டுச் செல்கிறது? கிடைக்கும் சுகங்களின் வகைமைகள் பற்றி, உடலில் ஓய்ந்திருப்பதன் சொகுசுகள் பற்றி, இல்லாமை தரும் இன்ன பிற இன்பங்களைப் பற்றி நான் பரிசீலித்தாக வேண்டும். இரண்டுமே தரப்படுகின்றன. யாது நான் சொலினும் அது இறைவனின் நினைவே.

      மனிதனின் ஆத்மாவைப் பற்றி நான் எண்ணும்பொழுது, கொதிக்கும் பானை ஒன்றை நினைக்கிறேன். ஓய்வில்லாக் குழப்பம். சுகம் உன்னிடமிருந்து வருகிறது. இருத்தலைத் தொடரும் இன்மை. பின் மீண்டும் இருத்தல் வருகின்றது, உன்னால் போஷிக்கப்பட்டுப் பேணப்படுகிறது (11:06).

      பெருவியப்பிலும், நெருங்கிய தோழமையிலும்கூட நான் வழிகாட்டுதலை வேண்டுகிறேன். பரிச்சயமான கலகலப்புடன் பரிசுகள் வந்து சேர்கின்றன. என் காம விழைச்சில் திருப்தியைக் கேட்கிறேன். நீ அதனைத் தருகின்றாய், காமத்தின் மூல ஸ்தானத்தையும். பசிக்கையில், உன்னிடம் உணவு கேட்கிறேன். வேறு யாரிடம் நான் செல்வேன்? எனக்கான வேலையை வேறு எங்கே நான் தேடுவேன்?

      பொழுது கழிக்க உன் கதவுக்கே வருகிறேன். நாம் ஒன்றாக வெளியே நடக்கிறோம். ஐவேளை தொழுகையில், இந்தக் காணிக்கையை ஏற்றுக்கொள் என்றும், தயை செய்து எனது உடலை புதிய புதிய இன்பங்கள் மற்றும் பரிச்சயமான சுகங்களும்கூட இருப்பதாக உயிர்த்துடிப்புடன் வைப்பாயாக என்றும் கேட்கிறேன்.

      நான் எல்லா நேரங்களிலும் என்னைச் சுற்றி அற்புதங்களைக் காண்பதில்லை. சில நேரங்களில், பிரச்சனைகளில், இந்த வாழ்வின் மீது சோர்வும் விரக்தியும் அடைந்து, நான் உனது கதவுக்கு வருகிறேன். என் உணர்வுநிலை எதுவாக இருப்பினும், உன்னிடமே வருகிறேன்.

Image result for syed masoom ali shah malang
Syed Masoom Ali Shah Baba. 

1:29 கையளவு மண் போல

      வாழும் கணங்கள் உன்னிடமிருந்தே வருகின்றன: பார்வை, வடிவம், புரிதல், கூர்மதி, ஆன்மா, அனைத்தும். எனவே, நான் ஏன் மேலும் நேரடியாகப் பேசக் கூடாது? உன் முன்னிலையில் நின்று நான் ஏன் என் உதடுகளை உனதுடன் அழுத்தக் கூடாது? என் வழியே நீ பொழிந்து செல்வதை என்னுடல் உணர விரும்புகிறேன். ஏன் கூடாது?

      பதில் வெளிப்படுகிறது: நீ சொல்வது அவதானிப்பு. உரையாடல் அல்ல. நீ கேட்பது அதனைவிடவும் அனுபவம் பற்றியதாக இருக்கட்டும்.

      நானொரு தாது போலும் நடத்தப்படுகிறேன். உன்னைப் பற்றிய பிரக்ஞையும் இல்லாமல் என்னைப் பற்றிய அறிவும் இல்லாமல், சுழற்றப்படுமொரு கையளவு மண் போல. மாட்சியையும் காதலையும் அறிய நான் மௌனத்தில் அமர்கிறேன்.

      இன்னொரு வெளிப்பாடு: நான் என்னைச் சிறு சிறு அளவுகளில்தான் காட்டுகிறேன். கொஞ்சமான மிடறுகள் பருகு.

      இந்த இடைவெளியில் இப்படியொரு தித்திப்பு இருக்கிறதே! அருகில் இருப்பதென்பது எப்படி இருக்கும்?

No comments:

Post a Comment