Thursday, August 17, 2017

நீருக்குள் மூழ்கிய புத்தகம் - 2



மொழிபெயர்ப்புப் பற்றிய ஒரு குறிப்பு
– ‘சமா’ பற்றிய வரிகளுடன்
Image result for nusrat fateh ali khan
 
எந்த ஒரு ஆன்மிக அறிதலையும் மொழிக்குள் கொண்டு வருவதில் பெரும் போதாமைகள் உள்ளன. பிரசன்னத்தில் பரிமாறப்படுவது, பேசப்படுகையில் நீர்த்து உருமாறிப் போகிறது. காதிதத்தில் காய்ந்த மையெழுத்தாய் அது மாறும்போது நிலைமை இன்னும் மோசாமாகிறது.

மேலும், இந்தக் குறிப்புக்கள் தனிப்பட்ட நிலையில் எழுதப்பட்டதிலிருந்து இன்று அவை அமெரிக்க ஆங்கிலத்தின் வடிவத்தை எடுத்துக்கொண்டு இருபத்தொன்றாம் நூற்றாண்டின் வாசகர்களுக்காகப் பதிப்பாவதற்கும் இடையே எண்ணூறு ஆண்டுகள். சிரமங்கள் பல்குகின்றன. எனினும் இம்முயற்சி செய்யப்படத்தான் வேண்டும்.

செயல்முறை இதுவே: பஹாவுத்தீனின் பாரசீக மூலப் பிரதியிலிருந்து சில தேர்ந்த பத்திகளை ஜான் மொய்ன் ஆங்கிலத்தில் பெயர்த்துச் சில விளக்கக் குறிப்புக்கள், அர்த்தச் சாத்தியங்கள் ஆகியவற்றையும் எழுதுகிறார். மேலும், பொதுவான ஆங்கில வாசகர்களுக்கும் புரிவதற்காக அதன் தொன்மொழியையும் சமயக் கலைச்சொற்களையும் சற்றே மாற்றியமைக்கிறார்.

அதன் பின்னர், நீங்கள் இங்கே படிக்கின்ற “இரண்டாம் மொழிபெயர்ப்பு” செய்யப்படுகிறது. அது ஆன்மிகச் சுவை கொண்டதாகிறது. அதனைச் செய்பவர் கோல்மன் பார்க்ஸ். தோற்றங்கள் மற்றும் கருத்துக்களுக்குள் அசைகின்ற ஒரு பிரசன்னத்தை அவர் ஆழ்ந்துணர முயல்கிறார். மொழிபெயர்ப்பின் இந்தப் பகுதி சரிப்பட்டு வரும்போது, மனத்தால் செய்யப்படுவது அல்ல, ஆன்மாவின் வெறுமையால் செய்யப்படுகிறது. ஆன்மிகப் பனுவலில் பணியாற்றுவது என்பது அறிவார்ந்த கல்விப் பணி அல்ல. அது பிற பிரசன்னங்களுக்கு ஒருவர் தம்மை சுருதி சேர்த்துக்கொள்வது. படிப்பதைப் போன்றதினும் அது காதலிப்பதைப் போன்றது. மெனுவைப் படித்தல் என்பதினும் அது உணவைச் சுவைப்பதைப் போன்றது. எனவே இது வார்த்தைக்கு வார்த்தை ஆன ‘விசுவாச’மான மொழிபெயர்ப்பன்று. இது பஹாவுத்தீன் எழுதியதன் பெருக்கம், அர்த்தப்படுத்தல் மற்றும் அனிச்சையான தியானமும் ஆகும். ஓர் ஞானி பரிமாற்றத்தையே எதிர்நோக்குகிறார்.

தனது தந்தையின் குறிப்பேட்டை ரூமி பயன்படுத்துவதைக் கவனிக்கவும் – உதாரணமாக, நான்கு பறவைகள் பகுதி (1:121-123). மனித உளவியலில் வாழும் நான்கு பறவைகளைப் பற்றி பஹாவுத்தீன் சில வரிகள் எழுதினார் (மஆரிஃப்: 1:221-223). அதில் அவர் குர்ஆனின் வசனம் ஒன்றை விளக்குகிறார் (2:260-62). அவ்வசனம் அந்நான்கு பறவைகள் யாவை என்று சொல்லவில்லை. தனது தந்தை முன்வைக்கும் ‘கொல்வதும் மீண்டும் உயிரூட்டுதலும்’ என்னும் அடிக்கருத்தை ரூமி விரிவடையச் செய்கிறார். மஸ்னவியின் ஐந்தாம் நூலில் அது பறவை-நஃப்ஸ் அடையும் நிலைமாற்றம் குறித்துப் பேசுகிறது. அந்த அடிக்கருத்தை அவர் ஆயிரம் வரிகளுக்குச் சுற்றிச் சுற்றி வருகிறார்: அவசரம் என்னும் வாத்து, சுயமோகம் என்னும் மயில், இச்சை என்னும் சேவல், மற்றும் உடைமைப்பித்து என்னும் காகம். ஐந்தாம் புத்தகத்தின் 4338 கண்ணிகளும் இச்சா சக்தியை ஆன்மிக ஆற்றலாகவும் கருணையாகவும் மடைமாற்றம் செய்வது என்னும் இந்த அடிக்கருத்தையே பெருக்குகின்றன என்று முடிவாகச் சொல்லலாம்.

(இவ்விடத்திலிருது இரண்டு பக்கங்களுக்கு ஜான் மொய்ன் செய்யும் முதல் மொழிபெயர்ப்பையும் அதுகொண்டு மேம்படுத்தி கோல்மன் பார்க்ஸ் செய்யும் இரண்டாம் மொழியாக்கத்தையும் தந்திருக்கிறார்கள், நாம் ஒப்புநோக்குவதற்காக. அது இங்கே தமிழாக்கத்திற்குத் தேவையற்ற ஒன்றாகிறது. எனினும் ’சமா’ என்னும் சூஃபித்துவ இசை தியானம் பற்றித் தேர்ந்த ஒன்பது குறிப்புக்களை அவர்கள் தந்திருக்கிறார்கள் என்பதால் கோல்மனின் ஆங்கில ஆக்கத்தினடியாக அவற்றை மட்டும் இங்கே தருகிறேன். – ரமீஸ் பிலாலி.)

Image result for sufi music painting

#1: சமா – ஆழ்நிலை கேட்டலுக்கு ஒரு நாடியுண்டு. அது துடிக்க வேண்டும். இல்லை எனில் அதில் உயிர் இல்லை.

#2: சமாவின் சொற்களும் இசையும் நண்பர்களின் உரையாடல் போன்று மிக இயல்பாக பாய்ந்து தொடர வேண்டும்.

#3: விதைகளைத் தூவும் கிண்ணம் போல் கேட்டலின் வாளியில் இசை பொழிகிறது. அழுகிய விதைகள் சில இருக்கக்கூடும், சரியற்ற வார்த்தைகள். அதற்காகக் கிண்ணத்தை ஏசாதே.

#4: கண்ணாடி வேலைப்பாடு பல வடிவங்கள் எடுக்கிறது. ஒளிரும் மஞ்சளுடன் கூடிய பக்தாதின் உட்குழிவு, சமர்கந்தின் செந்தூரம், புஃகாராவின் ஸ்படிகக் கோளக் குடுவைகள். இசை மற்றும் கவிதைக்கும் அப்படித்தான்: சமாவுக்கு அழகிய வகைமைகள் வேண்டும்.

#5: மேலும் சில மேசைகள் இட்டு விருந்தினர்களை அழைக்க நாம் கதவு திறக்கும்போது அவர்களுக்கு நாம் ஊசிப்போன உணவைப் பரிமாறுவதில்லை. நடப்பது போல் அப்படி நடக்கும் எனில் அது விபத்துதான். ஆனால் ஒருவர் வேண்டுமென்றே கெட்டுப்போன இறைச்சியை அல்லது பானத்தைப் பரிமாறினார் எனில் அப்படிச் செய்ததன் சாபம் ஒருபோதும் நீங்காது, அவர் பின்னர் எத்தனை நல்லறங்கள் ஆற்றினும். சமா புத்தம் புதிதாகவும் அன்புடன் செய்யப்படுவதாகவும் இருக்கட்டும்.

#6: இசை மற்றும் அசைவுகளுடன் பேசப்படும் கவிதை வசந்த காலத்தின் இடியைத் தொடர்ந்து செல்வது போல் இருக்க வேண்டும்: அழுத்தம், ஒரு மென்மையான இழுப்பு, மௌன இடைவெளி, மேலும் இடி, உடனே மறைவு. அது ஒருபோதும் நீண்டு செல்வதில்லை.

#7: சமாவின் அடியிலும் உள்ளேயும் சிரிப்பு இல்லை எனில், பிரகாசமான தற்பணிவின் ஹாஸ்யம் இல்லை எனில், புகழ்ச்சியில் உண்மையும் உயர்வும் பெருமிதமும் இரா. நகைச்சுவை இல்லாது சமா சுமையும் இறுக்கமும் ஆகிறது.

#8 & #9: உடலின் ஒவ்வொரு பாகத்திற்கும் ஓர் இசைத் தேர்வு உள்ளது. ஒவ்வொன்றும் தனித்த முறையில் சமாவைத் துய்க்கிறது. இதயம் போல் அல்லாத வேறு வகையில் காது இசையை உள்வாங்குகிறது. சுண்டப்படும் நரம்பின் இசையுடன் பேசப்படும் சொற்கள் காதுக்குத் துன்பமாகவும் இதய மையத்திற்கு இன்பம் தருவதாகவும் இருக்கக்கூடும். அல்லது நேர் மாறாக. மிக மென்மையான ஒன்று உங்களது ஆன்மாவின் பேரறிவுக்குக் குமட்டுவதாக இருக்கலாம். விரல்களின் தாளத்தைச் சிறுநீர்க் காய்கள் வெறுக்கின்றன. மத்தளம் அவற்றைப் பதறச் செய்கிறது. எனினும், விரல்கள் செய்யும் எதுவும் நுரையீரலுக்கு இதமாக இருக்கிறது.

சமாவில் இந்த ஒன்பது படிமங்கள் உமக்கு வழிகாட்டும்: இதயத் துடிப்புத் தாளம், நண்பர்களின் உரையாடல், கிண்ணத்திலிருந்து விதைத் தூவல், கண்ணாடி வேலைப்பாட்டின் அழகிய வகைமை, விருந்துணர்வு, வசந்த கால இடி, காற்று வெளியிடை சிரிப்பு. மனித உடலின் உறுப்புக்கள் போன்று சமா என்பதும் தனது பல ஒத்திசைவு முறைகளுடன் இயங்க வேண்டும். அவற்றுக்குத் தனித்தனியே பிரத்யேக இயக்கமும் ஆனந்தமும் உண்டு. அதே வேளை அவை அனைத்தும் ஒன்றாய், தேகம் இதயம் ஆன்மா மற்றும் ஒளிமிகு அறிவு அனைத்தாலும் ஆன முழுமையான மனித இருப்பைச் சுமக்கின்றன.

இந்த குறிப்பேடுகளின் பத்திகளை வைத்துக்கொண்டு கோல்மன் பார்க்ஸ் செய்வதெல்லாம் விரிவாக்கம்தான். எனினும், ரூமியின் ஞான உயரங்கள் வரை எதுவும் விரிவடைவதில்லை.

இந்த ஏட்டின் குறிப்புக்கள் ஒரு தேர்ந்த கலைஞரால் செய்யப்படும் பரிசோதனை விரிவுரைகள் என்று யாம் புரிந்துகொள்கிறோம். மொழியியற் பிரதியாக்கத்தில் எமக்கு அவ்வளவாக ஆர்வம் இல்லை. ஆனால் பஹாவுத்தீனின் அகப்பார்வையை அறிந்து அடைவதையே ஆர்வப்படுகிறோம். சமா என்பதன் சூழல் எப்படி இருக்கும் என்பது பற்றி அவர் பேசுகிறார். ஒரு குழுவாக ஒன்றிணைந்து ஆழ்ந்து கேட்கும் இப்பயிற்சி பல்வேறு கலாச்சாரங்களால் நேசிக்கப்பட்டுப் பன்னூறு ஆண்டுகளாகச் செம்மைப்படுத்தப்பட்டு வந்துள்ளது. வருடப்படும் நரம்புகளின் மொழி மற்றும் கற்பனை பிரக்ஞையையும், நாணற்குழல் மற்றும் மத்தளத்தின் வெறுமையையும் தம்முள் உருவாக்க விரும்பும் அனைவரது திறக்கும் இதயங்களின் வழியே இறைமை இயங்குவதை ஊக்குவிப்பதற்காக அது உருவாக்கப்பட்டுள்ளது. சமா என்பது படைப்பாளன் தனது படைப்பில் ஊடாடும் லீலை.
 Related image

சூஃபிப் பள்ளிகளில் நடத்தப்பெறும் மரபார்ந்த கட்டமைவுடன் கூடிய சமா மிக ஆழமாக பாதிக்கும் சடங்குகளில் ஒன்றாக இப்பூமியில் நிகழ்ந்து வந்துள்ளது. ரூமி மற்றும் ஷம்ஸின் சந்திப்பிலும் பிரிவிலும் நிகழ்ந்த அகத் திறப்பின் ஆழமான நினைவூட்டல் அது. ரூமியின் ஆன்மிகக் குழாம் பற்றி அன்னார் மறைந்து இரண்டு நூற்றாண்டுகளுக்குப் பின் அஃப்லாக்கி (இறப்பு: 1356) எழுதிய “மனாக்கிபுல் ஆரிஃபீன்” (இறைஞானியரின் நிகழ்வுகள்) என்னும் பதினான்காம் நூற்றாண்டின் வாய்மொழி வரலாற்றுப் பெருநூலில், ரூமியின் தலைமையில் நிகழ்ந்த ஒரு சமா தொடங்கும் முறையை அவர் இவ்வாறு சொல்கிறார்:

இறைவன் முழுவதும் ஆனந்தக் களிப்பு. பரவசத்தை அனுபவித்திராத எவரும் இறைவனை அறிவதில்லை. நான் அந்த ஆனந்தக் களிப்பாகவும் அதில் முழுமையாய் மூழ்கியவனாகவும் இருக்கிறேன். இறைநம்பிக்கை என்பது முழுவதும் ஆனந்தக் களிப்பும் உணர்வெழுச்சியுமே. இவ்விடத்தில் அவர் (மவ்லானா ரூமி) ஒரு பெருங் கூச்சலிட்டு சமாவைத் தொடங்கினார்.

அந்த அகப்பார்வையிலிருந்து இறங்கி வருகின்ற பாரம்பரியத்தை நாம் மதிக்கிறோம். ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன் மேற்குலகில் ஒருவருக்கும் பாரசீக ஞானிகளைப் பற்றித் தெரியாது. பின்னர் கதே, எமர்சன், விட்மன் மற்றும் பிறர் அவர்களைக் கண்டறிந்தனர். 1950-களில் கவிஞர் கேரி ஸ்னைடர் பீரங்கி வண்டிக்குள் ரூமியைப் படித்துக்கொண்டிருந்தார். எனவே, அச்சிந்தனைகள் தகுந்த தலைவாசல்கள் வழியே வடிகட்டத் தொடங்கியது. சமீபத்தில் தோன்றித் தொடர்ந்து வருகின்ற, பாரசீக ஞானியர் மீதான பேரார்வம் இதற்குமுன் சம்பவித்திராத ஒன்று. ரூமிதான் அமெரிக்காவில் மிக அதிக அளவில் படிக்கப்படும் கவிஞர் என்று சொல்லப்படுகிறது. இத்தகைய கணக்கெடுப்பில் நிச்சயமாக ஷேக்ஸ்பியரையும் அவரின் பெருங்கவித் தொகுதியையும் விட்டுவிடலாம். எனினும், ரூமி மூன்றாவது அல்லது நான்காவது அல்லது இருபதாவதாக இருந்தாலும் அப்போதும் அது குறிப்பிடத்தக்கதே.

Image result for america sufi music 
 
சமாவின் ஒரு பிரதி இருக்கிறது, அப்படி நாம் அழைக்கலாம் எனில், இந்நாட்டில் (அமெரிக்காவில்) பல்வேறு வடிவங்கள் எடுக்கத் தொடங்கியுள்ளது. எந்த ஒருங்கிணைப்பான மதத்தின் துணையும் இன்றி இந்தச் சந்திப்புக்கள் நிகழ்ந்து வருகின்றன. அமெரிக்காவின் பெருநகர் ஒன்றில் – ஹுஸ்டன், போஸ்டன், வாஷிங்டன், கலமஸூ, பவுல்டர், மின்னியா போலிஸ், சாண்ட்டா ஃபே, லூயிவில், சியாட்டில், மிஸ்ஸோலா, சார்ல்ஸ்டன் அல்லது ஏதென்ஸ், ஜார்ஜியா – உள்ள கலையரங்கம் அல்லது தேவாலயத்தில், ஆயிர்க்கணக்கான மக்கள் அமர்ந்து ஆன்மிகக் கவிதைகளை (பெரும்பாலும் ரூமி, ஹாஃபிஸ், கபீர் ஆகியோரை) இசையுடன் இரண்டு மணிநேரம் கேட்கின்ற ஒரு ’வியாழன் மாலை’ அல்லது ஒரு ’வார முடிவிரவு’ நடைபெறுவது என்பது வழக்கமான ஒன்றாகிவிட்டது. இவற்றில் பாப்பிசை நிகழ்வுகளின் உணர்ச்சி இருப்பதில்லை. மாறாக இச்சந்திப்புக்கள் பெரிதும் அக மற்றும் தியானத் தன்மை கொண்டுள்ளன. பெரும்பாலும் கைத்தட்டல்கள் இருக்காது. இப்பரிசோதனையின் தலைமையிடமாக இருந்த சான் ஃப்ரான்சிஸ்கோ பே ஏரியாவில், ஜோ மில்லர் உயிரோடிருந்த போது, இந்நிகழ்ச்சிகளுக்கு வந்து பார்வையாளர்களின் முதல் வரிசையில் அமர்ந்து கவனித்துக்கொண்டிருப்பார். நிகழ்வின் முடிவில் அவர் எழுந்து நின்று, சூஃபிகளிடம் உள்ள இறைநாமங்களில் ஒன்றான ”யா ஃபத்தாஹ்” (திறப்பாளன்) என்பதை முழங்குவார். அனைவரும் அவரிடம் யா ஃபத்தாஹ் யா ஃபத்தாஹ் என்று எதிரொலிப்பார்கள். இந்த மாலைகளுக்குப் பெரிய வரவேற்பு இருப்பதாகவும் இதற்கு ஆழமான போஷாக்கு ஊட்டப்பட்டு வருகிறதாகவும் படுகிறது. இந்நிகழ்வை நாம் மிகைப்படுத்த விரும்பவில்லை. அதே நேரம் இதனைக் குறைத்துச் சொல்லிவிடவும் கூடாது. கடந்த பத்தாண்டுகளில் (கோல்மன் இதனை 2005-ல் எழுதுகிறார்), அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும், மேலும் போலந்து ஜெர்மனி ஃப்ரான்ஸ் ஃபின்லாந்து தைவான் இஸ்ரேல் மற்றும் இதர நாடுகளில் சற்று குறைந்த அளவிலும் ரூமி ஒரு திடீர் அசாதாரண நடப்பாகி இருக்கிறார்.

இந்தப் புதிய சமா நிகழ்வுகள் எல்லாம், 1950களில் சான் ஃப்ரான்சிஸ்கோவில், சிறந்த கவிஞர்களான ஆலன் கின்ஸ்பெர்க், கென்னத் ரெக்ஸ்ராத், லாரன்ஸ் ஃபெர்லிங்கெட்டி, கேரி ஸ்னைடர் முதலியோரிடையே நிகழ்ந்த பரிசோதனையின் நீட்சியே. மேலும், 1960கள் மற்றும் 1970களில் ராபர்ட் ப்ளை, ஈத்தரிஜ் நைட், ஆன் செக்ஸ்டன் மற்றும் பிறரால் அது தொடர்ந்தது, வாசிப்பு பாடல் மற்றும் மந்திரங்களுடன் பல்வேறு இசைக்கருவிகளின் கலவையமைப்பைப் பரிசோதித்தபடி. வலுவான செல்டிக் தொனியை டைலன் தாமஸ் உள்ளே கொண்டுவந்தார். ஆஃப்ரிகா, இந்திய உபகண்டம், மற்றும் அமெரிக்கப் பழங்குடி மரபுகள் எல்லாம் இந்தக் கலவைக்குப் பங்காற்றி வருகின்றன. லியோனார்ட் கோஹன், கர்ட் கோபைன் மற்றும் வில்லியம் பர்ரோஸ். ஒரு கிரகப் பண்பாடாக மனித மனத்தின் மகத்தான பிராந்தியத்திற்கு நெடுவழி மீள்வதாக நாம் உணர்கிறோம். சமா, சூஃபித்துவம் தானும், மற்றும் திக்ரு (என்னும் ”இறை ஞாபகம்”) ஆகியவை மத தேச பண்பாட்டு வரையறைகளை எல்லாம் கடந்து மிக அவசியமான மனித சாராம்சத்தைக் கண்டறிய முயல்கின்றன – ஆன்மாவிலிருந்து நாம் எப்படிச் செய்திகளைப் பெற்று பதில் வினையில் இயங்குகிறோம் என்பதை.

ஒரு அச்சு அசலான கவியரங்கத்திற்கு வரும் அமெரிக்கக் கூட்டத்திடம் ஒருவர் அவர்கள் எதைக் கேட்க விரும்புகிறார்கள், சொந்த அனுபவங்களைச் சொல்லும் தனிநபர்க் கவிதைகளையா அல்லது பொதுமையான ஒளிமயமான ஞானக் கவிதைகளையா என்றால் ஞானத்தைப் பற்றியெல்லாம் அலட்டிக்கொள்ள வேண்டாம் என்று அவர்கள் சொல்லக்கூடும். ஒரே அமர்வில் அதனை அவ்வளவாக நம்மால் உள்வாங்க இயலாது. ஆனால் உங்கள் ஆளுமை (Personality) எதுவாக இருப்பினும் அதனை அனுமதிக்கலாம். சமாவின் இந்த அமைப்படையாளம் அற்ற நிகழ்வுகளில் இது ஒரு பிரச்சனை அல்ல. அந்தப் பார்வையாளர்கள் எந்த வகைக் கவிதையாக இருந்தாலும் – புறவயம், ஆளுமையின் புறவுலகம், அரசியல் ஆகியன ஒன்று; உள்நிலை, இறையொளி நுண்மை ஆகியன இன்னொன்று; கனவுலகம், துறவுலகம், தூய லீலை ஆகியன இன்னொன்று – பலதரப்பட்ட கேட்புலகங்களுக்குள் செல்லத் தயாராக இருக்கிறார்கள். சமாவின் ஆழ்ந்த கேட்டலுக்கு வருகின்றவர்களை விட நிகழ்த்துக் கச்சேரிகளுக்கு வருவோர் அதிக இடைவெளியைப் பேணுகிறார்கள்.
Image result for coleman barks sema

இந்த மாலைக் கூட்டங்களை விமரிசனம் செய்வோர் இவற்றில் உண்மையான பயிற்சிகளைத் தவிர்த்தல், அபாயகரமான சௌகரியம் மற்றும் ஆறுதல் ஆகியன இருப்பதாகக் கருதுகின்றனர். இறுதி ஊழி நம் மீது கவிந்திருப்பது போன்ற இக்காலக் கட்டத்தில் நாம் தாங்கிக்கொண்டு முழுமையான உடனடியான ஆன்மிக மாற்றத்திற்கு உழைக்க வேண்டும் என்று ஆண்ட்ரூ ஹார்வி சொல்கிறார். சகோதரர் அண்ட்ரூவுடன் நமக்கு எந்த விவாதமும் இல்லை. அவரது மதத்தன்மையான அவசரத்தை நாம் ஒப்புக்கொள்கிறோம். கவிதையும் இசையும் கேட்டலும் எல்லாம் இன்னும் மேலான மாற்றத்திற்குப் பரிணமித்து வருகின்றன என்று நம்புகிறோம். மேலும், அவர் எதன் பக்கம் அழைக்கிறாரோ அது ஒவ்வொரு தனிநபருக்குள்ளும் நிகழ வேண்டும். இந்த மாலைகள் அதனைத் தடுப்பதில்லை. அவற்றிலிருந்து சில மெல்லுணர்வுப் புழுதி எழலாம், சில சுயவசியப் பரவசம் தோன்றலாம், மற்றும் நினைவறும் நிலைகளை நோக்கிய அதீத கவனம் உருவாகலாம். நாம் எப்போதும் ரூமியின், ஒழுங்கும் நியமமும் கொண்ட கடுமையான பக்கத்தை நினைவில் நிறுத்த வேண்டும், எப்போதும் இரக்கமற்ற நிதர்சனத்தைக் கொண்டுவர வேண்டும். நமக்கு எதிராகவே. “காதல் கத்தியுடன் வருகிறது” என்பதை நாம் கொஞ்சும் குரலில் வாசிக்க முடியாது.

சமாவின் ஆன்மிக விளைவு உண்டாகும்போது உள்ளத்தை மொழி சுமந்து செல்ல முடியும் என்னும் சாத்தியத்தில் இருக்க வேண்டும், ஏனெனில் சில நேரங்களில் கவிதைகளுக்கு உள்ளேயும் நூற்களுக்கு உள்ளேயும் பிரசன்னங்கள் உருவாகி வருகின்றன. இந்த ஆழமான காரணத்திற்காகத்தான் நாம் நூற்கதைகள், கவிதை வாசிப்புக்கள் மற்றும் புத்தகங்கள் தம்மையும் மிகவும் நேசிக்கிறோம். அவற்றுள் நாம் மகத்தான தீவிரமான உயிருள்ள ஆன்மாக்களின் தோழமைக்குக் குறைவாக எதனையும் எதிர்பார்ப்பதில்லை. சில நேரங்களில் நமக்குக் கிடைக்கவும் செய்கிறது. இது ஒரு சபல எண்ணம் அல்ல; ஆனால், இது ஓர் அனுபவம். மர்மம் என்னவெனில், வார்த்தைகள் தமது பணியைச் செய்யும் போது ஷம்ஸும் ரூமியும் தமது சுயங்களைக் கொண்டே நம்முடன் உரையாடுகிறார்கள் என்பதுதான்.

கவிதைகளின் உள்ளிருக்கும் பிரசன்னங்களுக்குச் செவிகொடு
அவை விரும்பும் இடத்திற்கு உன்னை எடுத்துச் செல்லட்டும்.
அந்த அந்தரங்கக் குறிப்புக்களைப் பின்தொடர்ந்து போ
ஒருபோதும் அந்தச் சன்னிதியை விட்டு விலகாதே.

சமா குறித்த மிகத் தூய மற்றும் பெருங்கவனம் கோருகின்ற விரிவுரை பத்தாம் நூற்றாண்டின் சூஃபி ஞானியான மன்சூர் ஹல்லாஜிடமிருந்து வருகிறது. சமா என்பது இல்மு(அறிவு)டன் இணைக்கப்பட்டுள்ளது என்று அவர் சொல்கிறார். கேட்டல் இன்றி நீங்கள் ஞானத்தின் கடலுக்குள் நுழைய முடியாது என்கிறார். உயிர் நிம்மதி மற்றும் நறுமணக் காற்று (அர்-ரூஹ் வ-ர் ராஹத் வ-ர் ராஇஹத்) ஆகியன இன்றி நீங்கள் ஒருபோதும் இறைஞானம் (மஃரிஃபா) அடைய முடியாது என்கிறார். சமா என்பது எப்போதும் காதலுடன் காதலுக்குள் இருந்து செய்யப்பட வேண்டும். ஆன்மிக நிலைகள் மற்றும் அவற்றின் நியதிகளின் ஏணி பற்றிய தனது விளக்கத்தில் ஹல்லாஜ் மேலும் சொல்வது போல், ஏக்கம் (ஷவ்க்) இல்லாது உங்களுக்கு காதல் (முஹப்பத்) கிடைக்காது, அல்லது உவப்பு (வலாஹ்) இல்லாது உங்களுக்கு ஏக்கம் உண்டாகாது. மேலும், உவப்பு இல்லை எனில் அல்லாஹ்வின் பிரசன்னத்தை நீங்கள் அனுபவிக்க மாட்டீர்கள். அந்த உண்மையான நல்ல மனிதர் பில் மோயர்ஸ் ஒரு தொலைக்காட்சிப் பேட்டியில் (PBS Show) கோல்மன் பார்க்ஸிடம் கேட்டார், “ஏங்குவது என்பதென்ன?” தன் பால்ய வயதில் தான் கண்ட சட்டனூகாவின் வசந்தகால அந்திப்பொழுதுகளின் தங்க ஒளி பற்றிக் கோல்மன் ஏதோ சொன்னார். “உவகை என்றால் என்ன?” என்று இப்போது மோயர்ஸ் கேட்டால் கோல்மன் என்ன சொல்வார் என்று வியப்புடன் நினைக்கிறோம்.

கோல்மன் பார்க்ஸ் & ஜான் மொய்ன்.

No comments:

Post a Comment