Saturday, July 22, 2017

ஒரு சூஃபியின் டைரி (introduction)

Image result for ruzbihan baqli

ரூஸ்பிஹான் பக்லி

ஆங்கில ஆக்கம்
கார்ல். டபிள்யூ. எர்ன்ஸ்ட்

தமிழாக்கம்
ரமீஸ் பிலாலி

Image result for javad nurbakhsh
Javad Nurbaksh.

ஹுவல் ஹக்
      பனிரண்டாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஷீராஸ் நகருக்கு அருகில் பாசா என்னுமிடத்தில் ரூஸ்பிஹான் என்றொரு ராஜாளி பிறந்தது. இறை சுயத்தின் வானில் அப்பறவை மிக மிக உயரத்திற்குப் பறந்து போய் தனது முன்னோர்களை வென்றுவிட்டது. சூஃபி வழியின் சொல்லாடலில் நாம் ஜுனைத் அவர்களை சூஃபியறிவின் பேரரசர் என்று சொன்னால், ரூஸ்பிஹானை நாம் சூஃபித்துவக் காதலின் தீர்க்கதரிசி என்றே சொல்ல வேண்டும். காதலின் அனுபவத்திற்கும் பகுத்தறிவின் இயக்கத்திற்கும் இடையில் விண்ணுக்கும் மண்ணுக்கும் இடையிலான வேறுபாடு இருப்பது நிதர்சனமே. ஃகுராசானின் மாபெரும் ஞானியர் சூஃபித்துவக் காதலின் விதையை நட்டு வைத்தனர். ராபியா, ஹல்லாஜ், ஷிப்லி முதலியோர் அது மரமாகும் வரை நன்னீர் வார்த்தனர். அம்மரம் ரூஸ்பிஹானின் ஆன்மிக உள்ளெழுச்சிகளின் வழியே கனிகளை அளித்தது.
      சூஃபித்துவம் பற்றி ரூஸ்பிஹான் சொன்ன வாக்குகள் எல்லாம் மிகவும் ஆழமானவை. எந்த அளவிற்கெனில், அவருக்குப் பின் சொல்லப்பட்டவை எல்லாம் அவர் சொன்னவற்றுக்கான அடிக்குறிப்புக்கள் போலவே காட்சி அளித்தன. அவரின் கூற்றுக்களைப் பெரும்பாலான சூஃபிகளாலேயே விளங்கிக்கொள்ள முடியவில்லை எனுமளவு அவை ஆழமாக இருந்தன. எனவே அவர் ”ஃபார்சிகளின் ஷத்தாஹ்” (பரவசப் பேச்சாளர்) என்று அழைக்கப்பட்டார். அவரது காட்சியின் தொலைதூர எல்லைகளையும் உயர் நிலைகளையும் ஒருவர் அடைய வேண்டும் எனில் இந்த இறைக்காதலரின் எழுத்துக்களைப் படிக்கத்தான் வேண்டும். அவரின் எழுத்துக்களைப் படிக்கின்ற ஒருவன் அனைத்து வெற்று நம்பிக்கைகளின் நூலகங்களை விட்டும் வெளியேறியவன் ஆவான்.
                                                டாக்டர் ஜவ்வாத் நூர்பக்‌ஷ்
                                                லண்டன், 3 ஜூலை 1996.

Image result for carl w ernst 
Carl W Ernst.

முகவுரை
      சூஃபித்துவம் என்னும் இஸ்லாமிய ஆன்மிகத்தைப் பற்றிய வாசிப்பு இன்னமும்கூட மேற்குலகில் மிகவும் குறைந்த அளவிலேயே அறியப்பட்டுள்ள ஒரு பொருண்மை. மாபெரும் பாரசீக சூஃபி ஜலாலுத்தீன் ரூமியின் கவிதைகள் தற்போது ஆங்கில ஆக்கங்களில் மிகவும் பிரபலமாகி வருகின்றன. எனினும், சூஃபிகள் பலரின் பெயர்கள் இன்னமும் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் அறியப்படவில்லை. ஷீராஸ் நகரில் வாழ்ந்த ரூஸ்பிஹான் பக்லி (இறப்பு: 1209) அந்த சூஃபிகளில் ஒருவர். தனது வாழ்நாளிலும், அதன் பின் பல நூற்றாண்டுகளுக்கும், மத்தியக் கிழக்கு மற்றும் இந்தியாவில் ரூஸ்பிஹான் சூஃபி மரபின் ஆழமான ஆளுமைகளில் ஒருவராக அறியப்பட்டிருந்தார். மகாகவி ஹாஃபிஸ் (இறப்பு: 1389), ரூஸ்பிஹானின் குடும்பத்தினர் தொடங்கிய சூஃபி நெறியின் உறுப்பினர் என்பது வெளிப்படை. இருப்பினும், ரூஸ்பிஹானின் புகழ் மங்கிற்று. அவரது நூற்றாண்டின் திருப்பத்தில் அவரது சொந்த மண்ணில் அவரின் பெயரை எவரும் அறிந்திருக்கவில்லை. ஷீராஸில் அவரது அடக்கத்தலம் பாழடைந்தது.
அண்மைக் காலத்தில், ஈரான், இந்தியா, துருக்கி மற்றும் ஐரோபாவில் ஒரு சிறு அறிஞர் குழு அவரின் எழுத்துக்களை மீண்டும் கண்டடைந்தது. அதன் பின் அவரது அரபி மற்றும் பாரசீக எழுத்துக்கள் பலவும் வெளிவந்தன. 1972-இல் ஈரானிய தொல்லியல் துறை அவரது அடக்கத்தலத்தைப் புதுப்பித்துக் கட்டியது. (1996-இல் அங்கு செல்லும் பேறு பெற்றேன்). அண்மையில், ரூஸ்பிஹானின் வாழ்க்கை மற்றும் போதனைகள் பற்றிய அறிமுகக் கண்ணோட்டத்தை வழங்குமொரு நூலினை நான் எழுதினேன் (”Ruzbihan Baqli: Mystical Experience and the Rhetoric of Sainthood in Sufism”, Curzon Sufi Series, London, 1996). அவருடைய ஆன்மிக நாட்குறிப்பான “கஷ்ஃபுல் அஸ்ரார்” (ரகசியங்களின் திரைநீக்கம்) மற்றும் அவரது வழிவந்தோர் எழுதிய இரு சரிதைகள் ஆகியவற்றின் மீது கவனத்தைக் குவித்து எழுதப்பட்ட நூலது. அதன் முற்பிரதிகளை வாசித்தவர்கள் “ரகசியங்களின் திரைநீக்கம்” நூலிலிருந்து தேர்ந்த பகுதிகளைப் படித்து வியந்துபோய் அந்நூலை முழுமையாக மொழிபெயர்க்குமாறு என்னை ஊக்கினார்கள். இதுவே ஆங்கிலத்தில் வெளிவரும் ரூஸ்பிஹானின் முதல் மொழிபெயர்ப்பு நூல். அவரது வாழ்வு மற்றும் எழுத்துக்கள் பற்றி மேலும் விவரம் பெற விரும்புவோர் ”ரூஸ்பிஹான் பக்லி” என்னும் அந்த நூலில் காண்க. இங்கே இனி தொடர்வன அந்நூல் தரும் விவரங்களின் போதுமான சுருக்கக் குறிப்புக்கள் மட்டுமே.
      ”ரகசியங்களின் திரைநீக்கம்” ஆன்மிக வரலாற்றின் ஆற்றல்மிகு ஆவணங்களில் ஒன்று. பெரும்பான்மை சூஃபி நூற்களைப் போலல்லாது இது தன்மைக் குரலில் எழுதப்பட்டுள்ளது. இறைவன், வானவர்கள், இறைத்தூதர்கள் மற்றும் சூஃபி ஞானியருடனான தனது சந்திப்புக்களை ரூஸ்பிஹான் பதிவு செய்திருப்பதில் இதனைக் காணலாம்.
ரூஸ்பிஹான் இந்நூலை 1181-இல் எழுதத் தொடங்கினார். அப்போது அவருக்கு ஐம்பத்தைந்து வயது. பாசா நகரில் தனது பிள்ளைப் பருவத்தில் தொடங்கித் தனது ஆன்மிக அனுபவங்களின் தன்வரலாற்றுப் பதிவுகளைக் கொண்டு அந்நூலினை அவர் எழுதத் தொடங்கினார். அவர் ஒரு காய்கறிக்கடை வைத்திருந்தார் (பக்லி என்றால் காய்கறி வியாபாரி என்று பொருள்). தனது பதினைந்தாம் வயதில் அவர் பெற்ற ஓர் அனுபவம் அவர் தனது காய்கறிக் கடையைத் துறந்து செல்லும்படிச் செய்தது. ஓராண்டு காலம் பாலைவனத்தில் அலைந்த பின்னர் பல வருடங்கள் தியானப் பயிற்சிகள் மேற்கொள்ள சூஃபிகளுடன் இணைந்தார். இறுதியாக ஷீராஸ் நகரில் அமைந்தார். கட்டடக்காரர்களாக இருந்த பெரும்பான்மை சீடர்கள் அவருக்கு அந்நகரில் 1165-இல் ஓர் தியானக்கூடத்தைக் கட்டித் தந்தனர்.
Related image

பெரும்பான்மை ஆன்மிக இலக்கியவாதிகளைப்போல் அல்லாது, ரூஸ்பிஹான் தனது குடும்ப உறுப்பினர்களைப் பற்றி அடிக்கடி எழுதுகிறார், தன்னொரு ஆசை மனைவி மரணித்ததன் வலியை வெளிப்படுத்துபவராக, ப்ளேக் நோய் பரவியபோது காய்ச்சலுக்கு ஆளான தனது மகன் நலம் பெற வேண்டி இறைவனிடம் கெஞ்சுபவராக. இல்லை எனில் ரூஸ்பிஹான் தனது புற வாழ்வின் நிகழ்வுகள் பற்றி மிகவும் சொற்பமாகவே சொல்கிறார். அக்காலத்தில் ஷீராஸை ஆண்டு வந்த துருக்கிய இளவரசர்களைப் பற்றிப் போகும் போக்கில் ஒரு குறிப்பை மட்டுமே சொல்லிச் செல்கிறார். முற்காலப் பெருஞ் சூஃபிகளின் தரிசனச் சந்திப்புக்கள் பற்றி ருஸ்பிஹான் எழுதினாலும் தனது சமகால சூஃபிகளில் ஒரே ஒரு நபரை மட்டுமே அவர் பெயர் குறிப்பிடுகிறார், உடனிருந்து ஆன்மிகப் பயிற்சிகள் நிகழ்த்திய ஒரு சக சீடர் (முரீது) அவர்.
ரூஸ்பிஹானின் மூலப் பிரதியில் எவ்விதப் பத்தியமைப்போ மேற்கோள் குறிகளோ இல்லை. எனவே, ஓரளவு தன்னிச்சையாக நான் அப்பிரதியை மொத்தம் 210 பகுதிகளாகப் பகுத்திருக்கிறேன். அப்பகுதியின் பொருண்மைக்கேற்ப ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு தலைப்பையும் தந்திருக்கிறேன். முதற்பகுதியான தன்வரலாற்று நினைவு “ரகசியங்களின் திரைநீக்கம்” நூலின் ஐந்தில் ஒரு பங்காகவே அமைகிறது. அதன் தொடர்ச்சித் தன்மையால், அப்பகுதி குறிப்பிட்ட அடிக்கருத்துக் கொண்ட பல பகுதிகளாகப் பகுக்கப்பட முடியும். அப்புள்ளியில் அதன் மொழிபு முறை மாறி, இரண்டாம் பகுதி ஏதோ ஒரு நிகழ்கால நாட்குறிப்புப் போல் தொனிக்கத் தொடங்குகிறது. அது 1189 வரை எட்டு ஆண்டுகளுக்கு நீள்கிறது. அந்த நாட்குறிப்பின் உள்ளடக்கம், திகைப்பூட்டும் பற்பல பொருண்மைகளின் நிரல் கொண்டு அமைகிறது: ரமலான் மாதத்தில் நீளும் காட்சி வரிசைகளில் மட்டுமே அவதானிக்க முடிவதான புலனங்கள் (#128-159), ஷீராஸில் ப்ளேக்கின் கொள்ளை நோய்ப் பரவலைப் பேசும் அதன் இறுதிப் பக்கங்கள் (#200-209; பதிவு#206-இல் 1189 என்னும் ஆண்டு குறிப்பிடப்பட்டுள்ளது).
இந்நூல் அரபி மொழியில் எழுதப்பட்டுள்ளது. பதின்மூன்றாம் நூற்றாண்டின் மங்கோலியப் படையெடுப்புக்கு முன்பு அரபியே சூஃபித்துவத்தின் பிரதான மொழியாக இருந்தது. (ரூஸ்பிஹான் எழுதியதாகக் கருதப்படும் நாற்பது நூற்களுள் காற்பகுதி பாரசீக மொழியில் உள்ளன). பெயர் அறியா ஓர் அணுக்கச் சீடரின் கோரிக்கையை ஏற்று, நேரடியான தீவிர உணர்ச்சி கொண்ட உரைநடையில் இந்நூலை ரூஸ்பிஹான் எழுதினார். ஈரானிய அறிஞர் முஹம்மது முயீன் சொல்வதைப் போல், ”அவரின் மொழி, கையில் எடுத்தவுடனே பறந்து போய்விடுகின்ற ஒரு ரோஜா மலரைப் போன்றது; அல்லது, மித சூட்டிலேயே சட்டென்று ஆவியாகி மறைந்துவிடுகின்ற ஒரு ரசவாதப் பொருளைப் போன்றது. அவரது மொழி தரிசனங்களின் மொழி. அவர் அழகையும் அழகானவரையும் போற்றுகிறார். இரண்டையுமே அவர் நேசிக்கிறார்”  
      ரூஸ்பிஹானின் ஆன்மிகம் மிகவும் ஆழமாகவே, இஸ்லாமியமாகும். குர்ஆனுக்கான மிக முக்கியமான விரிவுரைகளில் ஒன்றை இயற்றியவர் அவர். எனவே, அவரின் நாட்குறிப்புக்களின் மொழி குர்ஆனின் மேற்கோள்களால் நிரம்பியிருப்பது வியப்பான ஒன்றல்ல. பல பதின் முறைகள் குர்ஆன் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. இறைத்தூதர் முஹம்மது நபியின் ஆன்மிக மொழிகளையும் அவர் அடிக்கடி சுட்டிக்காட்டுகிறார். ஆன்மிக அனுபவத்திற்கான அவரது கலைநுட்ப மொழி மிகவும் வளர்ச்சியடைந்த ஒன்று. அரபிக் கலைச்சொற்களின் சக்தியையும் துல்லியத்தையும் ஓரளவேனும் தெரிவிக்கின்ற ஆங்கிலச் சொற்களைத் தேர்ந்து பயன்படுத்துவது இம்மொழிபெயர்ப்பிற்கான சவால்களில் ஒன்றாக இருந்தது.

Image result for ruzbihan baqli
      இந்த நாட்குறிப்பில் அவரின் முதன்மைப் புலனம் காட்சி என்பதே. “பிறகு நான் கண்டேன்...” என்பதாகவே பெரும்பான்மைக் குறிப்புக்கள் தொடங்குகின்றன. இறைவனின் சுயம், பண்புகள் மற்றும் செயல்களை விளக்க அவர் இஸ்லாமிய இறையியல் மொழியைப் பயன்படுத்துகிறார். (இம்மூன்றும் முறையே அரபியில் தாத், சிஃபாத் மற்றும் அஃப் ஆல் எனப்ப்படும்). இருத்தலின் படிநிலைகளை அவர் வானவருலகம், மறைவுலகம், ஆற்றலுலகம் மற்றும் ராஜியம் (ஆலமுல் மலக்கூத், ஆலமுல் ஃகயால், ஆலமுல் ஜபரூத், ஆலமுல் லாஹூத் அல்லது முல்க் என்று அரபியில் குறிப்பிடுவர்) ஆகியவையாகச் சொல்கிறார். “அல்-ஹக்” (பேருண்மை, சத்தியம்) என்று அழைக்கப்படுகின்ற கடவுள் பல நேரங்களில் ’வெளிப்படுதல்’ மற்றும் ’தோற்றம்’ ஆகிய நிலைகளிலும் (Modes), பெருமை, பிரம்மாண்டம், கீர்த்தி, மகத்துவம், ஆற்றல், அன்பு, வல்லமை மற்றும் அழகு ஆகிய தோற்றங்களிலும் ரூஸ்பிஹானுக்குத் தன்னைக் காட்டிக்கொள்கிறது.
      முன்னூழி, ஊழி மற்றும் பின்னூழி என்று அவர் அழைக்கின்ற முடிவற்ற எல்லைகளாகப் பரவசக் கணங்கள் நீள்கின்றன. சூஃபி ஆசிரியர்கள் பலரும் அறிந்த நிலைகள் மற்றும் படித்தரங்கள் (ஹால் வ மகாம்) என்பதாக விரிவாக வகைப்படுத்தப்பட்டுள்ள இந்த ஆன்மிக அனுபவங்கள் அவரது கைவண்ணத்தில் ஒரு நுட்பமான நிகழ்வியலாகத் துலக்கப்பட்டுள்ளன. இறைவன் தன்னை வெளிப்படுத்திக்கொள்ளாத இந்த அரிய வெறுமைக் கணங்கள் ‘கப்ளு’ என்னும் இதயச் சுருக்கத்தை ஏற்படுத்துகின்றன. தனக்குப் புதிய தரிசனங்கள் தருமாறு நடுநிசித் தொழுகையில் அவர் இறைவனிடம் கெஞ்சுகிறார். கண்ணீராகவும் பெருமூச்சாகவும் அழுகைகளாகவும் கதறல்களாகவும் அப்போது அவர் உருக்கொள்கிறார். இறைவன் தனது தெய்வீகப் பண்புகளைத் திரை நீக்குகையில் ரூஸ்பிஹான் பெரு விரிவையும் (’பஸ்த்’) திகைப்பையும் ஏக்கத்தின் காதலின் நிறைவையும் உணர்கிறார். இறைவனுடன் மிகப் பரிச்சயமாகவும் நெருக்கமாகவும் அந்தரங்கமாகவும் அவர் உணரும் அந்நிலையில் அவரின் தன்முனைப்பு இறைவனில் கரைந்துவிடுகிறது, மனிதனில் இறைப்பண்புகள் வெளிப்படுகின்றன.
திரையிடல் மற்றும் திரை நீக்கம் என்னும் தொடரியக்கம் இந்த நாட்குறிப்பின் முதன்மைப் படிமமாக அமைகிறது. எது திரை நீக்கப்படுகிறது? அது உள் பிரக்ஞை, இதயத்திற்குள் இறைவனுக்கு மிக அருகில் இருக்கின்ற ரகசியம் (சிர்ரு). இறைத்தூதர் முஹம்மது (ஸல்...) சொன்னது போல், இறைவன் தன்னை ஒளியாலான எழுபதாயிரம் திரைகளால் திரையிட்டுக்கொண்டான். இறைவனுடனான இணைவு (வஸ்ல்) என்பது முதலில் அத்தகைய பேரொளிவான திரைகளின் படிப்படியான திறப்பாகவே அனுபவமாகிறது. இருந்தும், தெய்வீக சுயம் என்பது கற்பனைக்கும் கட்புலனுக்கும் எட்டாத ஒன்றாகவே இருக்கின்றது (’தன்ஸீஹ்’). இறைவனை அவனது எல்லையற்ற நிலையில் அறிதல் என்பது மனித இயற்கைக்கு இயலாத ஒன்று. எனினும், இறைவனின் கருணை மிகவும் தாராளமானது என்பதால் அவன் தனது காதலர்களுக்குத் தானே வடிவங்களைப் போர்த்திக்கொண்டு தோன்றுகிறான். அவையே தெய்வீகத்தின் வடிவங்கள் எனப்படுகின்றன. அவ்வாறுதான் ரூஸ்பிஹான் பக்லி தன்னிடம் இறைவன் மனிதக் கோலத்தில் தோன்றுவதைக் காண்கிறார், அதுவும் அன்றாடப் பழக்கமாக!
இஸ்லாமிய இறையியலின் மரபான முன்வைப்புக்களுடன் பரிச்சயம் கொண்டவர்கள் இவ்விடத்தில் கேட்கக்கூடும்: மனிதவுருவேற்றம் (Anthropomorphism) என்பதை இஸ்லாம் முற்றும் மறுக்கின்ற நிலையுடன் இந்த இறைக்காட்சிகளை எல்லாம் எவ்வாறு நாம் சமாதானப்படுத்த இயலும்? இக்கேள்விக்கு நாம் முதலில் சொல்லக்கூடிய பதில் யாதெனில், இறைவனின் ஒப்புவமையற்ற நிலை என்பது இஸ்லாமியச் சிந்தனையில் மிகவும் சிக்கலான ஒன்றாகும். ஏனெனில், முற்றும் மனிதம் போலல்லாத ஓர் இறைவனைக் கருதுதல் இயலாது. இறைவனின் கைகள், இறைவனின் முகம் முதலிய புலனங்களைக் குர்ஆன் பேசுகையில், அதனைத் தூய குறியீடாக ஏற்றல் என்பதற்கும், எப்படி என்று கேள்வி கேட்காது அப்படியே நேர்பொருளில் ஏற்றல் என்பதற்கும் இடையில் முஸ்லிம் சிந்தனையாளர்கள் ஊசாடியிருக்கிறார்கள். மனிதப் பண்புகளுடன் உவமையான நிலையில் கிரகிக்கக் கூடியதான முதன்மை இறைப்பண்புகளை (ஜீவன், அறிவு, நாட்டம், சக்தி, கேள்வி, பார்வை மற்றும் பேச்சு ஆகிய ஏழு திருப்பண்புகளை), அறியவியலாத அப்பாலான இறை சுயத்தை விட்டும் இஸ்லாமிய இறையியல் தனித்தன்மையான முறையில் வேறுபடுத்திக் காண்கிறது. தெய்வீகச் செயல்கள் (அஃப்ஆல்) என்பவை இவ்விறைப் பண்புகள் படைப்புக்களுடன் தொடர்புகொள்ள வழி கோலுகின்றன.
பொதுவாக, இறைப்பண்புகளின் முழுப் பரப்பும் குர்ஆனில் சொல்லப்படும் ‘அஸ்மாவுல் ஹுஸ்னா’ என்னும் தொண்ணூற்றொன்பது அழகிய திருநாமங்களாகக் காட்டப்படுகின்றன. அவை, பெருங்கருணைத் திருநாமங்கள் (ஜமாலி) மற்றும் வல்லமையான திருநாமங்கள் (ஜலாலி) என்று இரண்டு வகைகளாக்கப்படுகின்றன. இறைவனின் இந்தத் திருநாமங்களை மீண்டும் மீண்டும் உச்சாடனம் செய்வதும் தியானிப்பதும் சூஃபித்துவத்தின் ஆதாரப் பயிற்சிகளில் ஒன்று. படைக்கப்பட்ட ஒரு மனிதனுடன் இறைவனை ஒப்பிடுகின்ற (Anthropomorphism) விக்ரஹ நிலைக்கும் அனைத்து மனித ஒப்புமைப் பண்புகளையும் இறைவனை விட்டு நீக்கிக் காண்கின்ற அதீத சூக்கும (abstractionism) நிலைக்கும் இடையிலான இறுக்கம் (tension) பற்றி ரூஸ்பிஹான் எப்போதும் முழு விழிப்புடன் இருக்கிறார். தெய்வீக அப்பாலை நிலையின் ஆற்றல் (Transcendence) எங்ஙகனம் தெய்வீக வெளிப்பாட்டின் வடிவங்களுடன் உடனுறைகிறது என்பதை விளக்குவதற்கு ரூஸ்பிஹான் செய்யும் முயற்சிக்குப் பின்வரும் காட்சிப்பதிவு நல்லதோர் உதாரணமாகும்:
நள்ளிரவுக்குப் பின் அவனை நான் கண்டேன், ஒப்பிலா உயர் ஏகன், அழகின் ஆயிரம் வகைகளில் அவன் தோன்றிவிட்டது போல், அவற்றில் ஓர் உன்னதமான ஒப்புமையின் மேன்மையைக் கண்டேன், “வானங்களிலும் பூமியிலும் மிக உயர்வான ஒப்புவமை அவனுக்குரியதே. மேலும், அவன் வலிமை மிக்கவன், ஞானம் மிக்கவன்.” (குர்ஆன்: 30:27). அது ஓர் சிவந்த ரோஜாவின் மேன்மையைப் போல் இருந்தது. இதுவோர் ஒப்புவமையாகும். ஆனால், இறைவன் தனக்கோர் உவமை இருப்பதைத் தடை செய்திருக்கிறான்! ”அவனைப்போன்று எப்பொருளும் இல்லை” (42:11). எனினும், நானொரு வெளிப்பாட்டினால அன்றி அதனை விளக்க முடியாது. இந்த வருணிப்போ எனது கண்ணோட்டத்தின் பலஹீனம், எனது திறனின்மை, மற்றும் சாஸ்வதத்தின் பண்புகளைக் கிரகித்துக்கொள்வதில் எனது குறைப்பாடு ஆகியவற்றிலிருந்து வருகின்றது. முன்னூழியின் ஆற்றுப்படுகையில் இவையெல்லாம் ரௌத்திரத்தின் பாம்புகள் உறையும் பாலைகளும் தரிசுகளும் ஆகும். அவற்றுள் ஒன்று வாய் திறப்பினும் படைப்புக்களில் எதுவுமோ அல்லது காலமோ தப்பாது. முன்னூழி இறைவனை வருணிக்கும் ஒருவரை நீங்கள் அஞ்சிக்கொள்ளுங்கள். ஏனெனில் அவனின் ஏகத்துவத்தின் பெருங்கடல்களில் அனைத்து ஆன்மாக்களும் பிரக்ஞைகளும் மூழ்கிப்போய், அவனது மேன்மை மற்றும் வல்லமையின் நுட்பங்களில் அவை மறைந்துவிடுகின்றன. (#87)

Image result for ruzbihan baqli
persian calligraphy of name RUZBIHAN BAQLI.

ரூஸ்பிஹானின் காட்சிகளை தனியதிர்வு கொண்டனவாக மாற்றுவது யாதெனில் அவற்றை சூஃபித்துவம் மற்றும் இஸ்லாமிய இறையியலின் சிக்கலான கலைச்சொற்களின் அடிப்படையில் விளக்கம் தருகின்ற அவரது திறனேயாகும். இறைவனின் கோபம் என்பது அவனது அப்பாலை நிலை மற்றும் வல்லமை, மேன்மை, தனிச்சுயத்தை அழிக்கின்ற அவனது ஆற்றல் ஆகிய பண்புகளுடனும், அவனது கருணை என்பது அழகு, அருள், மற்றும் மனிதனில் இறையிருப்பைத் துலக்கும் காதல் ஆகிய பண்புகளுடனும் தொடர்புறுத்தப்படுகின்றன. சூஃபிகளைப் பொருத்தவரை, இறைவனின் இப்பண்புகள் எல்லாம் வெற்று அறிவால் கிரகிக்கப்பட இயலாது; அவை ஆன்மிக அறிவால் மட்டுமே எய்தப்பெற முடியும்.
ரூஸ்பிஹான் தனது காட்சிகளை மிகவும் அழுத்தமான, அரிதான அழகு கொண்ட வடிவங்களில் வெளிப்படுத்துகிறார். அஃதொரு பிம்பங்களின் கிடங்காகிறது. பிற்காலக் கவிஞர்கள் அச்சுரஙத்திலிருந்து தொடர்ந்து அள்ளியபடி இருந்திருக்கிறார்கள். பிரபஞ்ச விளைவுகள் கொண்ட தீட்சானுபவங்களை அவர் பெறுகின்றார். ஒன்றில், வெண்ணிற ஆடையணிந்த இரு ஷைஃகுக்ள் அவருக்குக் கரடிக்குட்டியின் பாலைப் புகட்டுகின்றனர். (கரடிக்குட்டி என்பது துருவ வின்மிண் கூட்டம். அது அச்சு என்றும் பொருள்படும். ஞானிகளின் தலைவரை அவ்வாறு கூறுவர்). விண்மீன்களில் உள்ள சுவர்க்கத்து ஜன்னல்களின் வழியாக இறைவன் அவரைப் பார்க்கிறார். ஏகாதிபத்தியக் குறியீட்டியல் நிரம்பிய காட்சிகளில் இறைவன், ரூஸ்பிஹானை ‘பூமியில் தனது பிரதிநிதி’ (ஃகலீஃபத்துல்லஹ்) என்று பறைசாற்றுகின்றான். மரணமற்ற இறைத்தூதரான ஃகிள்ரு மற்றும் ‘பதிலிகள்’ (அப்தால்கள்) என்னும் சிறப்புத் தரத்தில் உள்ள ஞானியர்கள் முதலிய ஆளுமைகளிடமிருந்து ருஸ்பிஹான் பிரத்யேகமான தீட்சை பெற்றுக்கொள்கிறார்.
நீள் கூந்தல் கொண்ட பெண்களாகவும், அதே சமயம், வாளேந்திய துருக்கி வீரர்களாகவும் ஒரே சமயத்தில் பேரழகும் கொடூரமும் காட்டி நிற்கும் கோலங்களில் வானவர்களை அவர் காண்கிறார். அப்பாலான நிலவெளிகளின் எல்லையற்ற பாலைகளிலும் முடிவற்ற பெருங்கடல்களிலும், சிலநேரங்களில் மதுக் கடல்களிலும்கூட, ஆதம் முதல் மூசா மற்றும் முஹம்மது (ஸல்...) வரையிலான இறைத்தூதர்கள் ருஸ்பிஹானைச் சந்திக்கின்றார்கள். இறைவன் ரூஸ்பிஹானின் மீது ரோஜாக்களைத் தூவி அவரைத் தனது காதலன் என்றழைக்கும் நெருக்கமும் போதையும் ஆன காட்சிகளை முற்காலத்து இறைநேசர்கள் தரிசிக்கின்றனர். அவர் இறைத்தூதர்களுடன் மது அருந்துகிறார், சூஃபித்துவக் குறியீட்டில் இறைக்காதலின் போதையைக் குறிக்கும் சின்னமாக இருக்கின்ற மது அது. இஸ்லாமியச் சட்டத்தில் தடை விதிக்கப்பட்டுள்ள மண்ணகத்து மதுவன்று. ரூஸ்பிஹானின் அரபி உரைநடையின் சந்த ஆற்றலையும் பிரதியின் திடத்தையும் மொழிபெயர்ப்பில் போலச்செய்வது சாத்தியமில்லை எனினும் ஆங்கிலப் பிரதியில் அந்த மூலத்தின் அசல் சக்தியையும் உத்வேகத்தையும் ஓரளவு காட்ட முனைந்திருக்கிறேன்.  
ரூஸ்பிஹானுடைய காட்சிகளின் படிமங்கள், இறை பிரசன்னத்தின் சன்னிதானத்திற்கு உயர்தல் என்னும் வகைப்பட்ட ஆன்மிக அனுபவத்தில் அடங்குவதாகும். வானங்களில் வழியே ஆன்மா உயர்தல் என்பது மத்திய தரைக்கடல் மற்றும் மத்தியக் கிழக்கின் ஆவணங்கள் பலவற்றில் பதிவாகியுள்ள போதும், சூஃபித்துவத்தில் இந்தப் படிமத்தொகுதி, அனைத்துக்கும் மேலாக இறைத்தூதர் முஹம்மது (ஸல்...) அவர்களின் விண்ணேற்றத்துடனேயே சிறப்புத் தொடர்பு கொண்டுள்ளது. “ரகசியங்களின் திரைநீக்க”த்தில் அன்னாரின் பணி பல வகைகளில் முக்கியமானது எனினும் விண்ணேற்றம் என்னும் குறியீடே ரூஸ்பிஹானின் காட்சிகளுக்கோர் அடித்தளமாக அமைகிறது. இறைத்தூதரின் விண்ணேற்றம் என்பது சூஃபித்துவத்தில் ஆன்மிக அனுபவத்திற்கான ஒரு முன்மாதிரி ஆகிவிட்டது. அதிலும் குறிப்பாக, மாபெரும் பாரசீக சூஃபி அபூயஜீதுல் பிஸ்தாமி அவர்களின் ஆளுமையில்தான் இறை சன்னிதிக்கான இறைத்தூதரின் பயணம் மிக விரிவாக அகமிய மறுநிகழ்வாக்கம் பெறக் காண்கிறோம். அபூ யஜீதின் விண்ணேற்றத்தில் உள்ள பல மையக்கருத்துக்கள் ரூஸ்பிஹானின் காட்சிகளில் மீண்டும் எதிரொலிக்கின்றன.

Related image

இந்நூல் சூஃபி மரபின் மிகவும் ஆற்றல் வாய்ந்த குரல்களில் ஒன்றை பரவலான வாசகர்களுக்கு அறிமுகஞ் செய்ய விரும்புகிறது. ருஸ்பிஹான் அவரது சொந்த நாடான பாரசீகத்திற்கு அப்பாலும் நன்கு அறியப்பட்டவர். வட ஆப்ரிக்கா, மத்திய ஆசியா மற்றும் இந்தியாவின் சூஃபிகள் அவரை “ஷைஃகுல் ஷத்தாஹ்” (பரவசப் பேச்சின் தலைவர்) என்பதாக அறிவார்கள். அவரது காதல் மற்றும் உணர்வெழுச்சி பற்றிய கதைகள் இப்னு அரபி மற்றும் இராக்கீ போன்றோரால் சொல்லப்பட்டுள்ளன என்றபோதும் ஆன்மிகக் காதல் குறித்த அவரது எழுத்துக்கள் இன்னும் அதிக வீரியம் உள்ளவை. கிறித்துவ ஆன்மிக ஞானியருள் தூய அகஸ்டின் மற்றும் பிஞ்செனின் ஹில்திகார்த் ஆகியோருடன் அவரை ஒப்பிடலாம். அகஸ்டினைப் போல் ரூஸ்பிஹான் ஒரு வேத விரிவுரையாளரும் திறன்மிகு பேச்சாளரும் ஆவார். பல்லாண்டுகள் ஷீராஸின் பள்ளிவாசலில் அவர் வாரமிருமுறை உரையாற்றியுள்ளார். ஹில்திகார்தைப் போல், இயற்கையின் கோலங்களில் பிரிகையாகி வரும் தீவிரமான இறைதரிசனங்களை ரூஸ்பிஹான் பெற்றுள்ளார். இப்பண்புகளுக்கு ருஸ்பிஹான் ஒரு கவித்துவ அழுத்தத்தையும் பிரகாசமான பரவசத்தையும் சேர்த்திருப்பது எந்த மரபிலும் ஒப்புக் காணவியலாத ஒன்றாகும். அவரே சொல்வது போல், “எனது விடலைப்பருவம் முதல் இப்போது வரை, இப்போது எனக்கு ஐம்பத்தைந்து வயதாகும் நிலையில், இறைவன் நாட்டத்தால், ஒரு பகலோ ஓர் இரவோ கடந்துபோனதில்லை, மறைவுலகின் ஒரு திரைநீக்கமாவது இல்லாமல்.” (#56).
இம்மொழிபெயர்ப்பு நன்கு அறியப்பட்ட இரண்டு முழுமையான அரபிப் பிரதிகளிலிருந்து செய்யப்பட்டுள்ளது. அவற்றுள் ஒன்று, ஈரானில் இமாம் ரஜாவின் அடக்கத்தலத்துடன் இணைந்துள்ள நூலகத்திலிருந்து பெறப்பட்டது. மற்றொன்று, பாரிசில் லூயி மாசிக்னான் அவர்களின் சேகரிப்பிலிருந்து கிடைத்தது. முனைவர் அமீர் முஅஸ்ஸி, பேராசிரியர் ஜேம்ஸ் மோரிஸ், பேராசிரியர் ஹெபர்ட் மேசன் மற்றும் முனைவர் தானியல் மாசிக்னான் ஆகியோருக்கு, இப்பிரதிகள் எனக்குக் கிடைக்க எடுத்துக்கொண்ட தாராளமான முயற்சிகளுக்காக நன்றி நவில்கிறேன். துருக்கியில் நஸீஃப் ஹோஜாவும் இராக்கில் பால் நவியாவும் பதிப்பித்துள்ள இந்நூலின் சுருக்கப் பதிப்பு அத்துனை முக்கியமானதல்ல எனினும் அவற்றையும் கலந்து நோக்கியுள்ளேன். ருஸ்பிஹான் எழுதிய மற்றும் அவர் மீதான பல பிரதிகளை இதற்கு முன் பதிப்பித்துள்ள முனைவர் ஜவ்வாது நூர்பக்‌ஷ் “ரகசியங்களின் திரைநீக்கம்” நூலின் அரபிப் பிரதியின் பாரசீக மொழிபெயர்ப்பை விரைவில் வெளியிடத் திட்டமிட்டுள்ளார். எனது மொழிபெயர்ப்பினை மறுவாசிப்புச் செய்கையில், எனது சகா முனைவர் பால் பாலன்ஃபாத் அவர்கள் சமீபத்தில் வெளியிட்ட “ரகசியங்களின் திரைநீக்கம்” நூலின் ஃப்ரெஞ்சுப் பிரதியை வாசிக்கும் பேறு பெற்றதில் பெரிதும் பயனடைந்தேன். பிரதிகளுக்கிடையிலான சிறு சிறு வேறுபாடுகளைக் கவனிப்பதில் ஆர்வமுள்ள வாசகர்கள் பாலன்ஃபாத்தின் அற்புதமான மொழிபெயர்ப்பில் உள்ள அடிக்குறிப்புக்களைக் காணலாம்.
இங்கே முன்வைக்கப்படும் பிரதி எவ்விதத்திலும் சூஃபித்துவம் மற்றும் இஸ்லாமிய வரலாறு பற்றிய பிரத்யேக அறிவு எதனையும் கோரவில்லை. ஆன்மிக அனுபவத்திலும் அதனை வார்த்தைகளில் வடிப்பதற்கான உணர்வெழுச்சி அவஸ்தைகளிலும் நாட்டம் கொண்டுள்ள யாவரையும் நோக்கியே இந்நூல் பேசுகிறது. அடிக்குறிப்புக்களின் தேவை இல்லாமலேயே அனைவருக்கும் புரியும்படியாக இந்நூல் வடிவமைக்கப்பட்டுள்ளது. தேவை எனும் இடங்களில் அடைப்புக் குறிகளுக்குள் விளக்கங்கள் தரப்பட்டுள்ளன. ஒருவேளை, வாசகர் இன்னும் அறிந்துகொள்ள விரும்புகிறார் என்னும் இடங்களில் எல்லாம் சுட்டல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன: (1) ரூஸ்பிஹானின் இந்நூலிலிருந்து எடுக்கப்பட்டு எனது இன்னொரு நூலான “ரூஸ்பிஹான் பக்லி” என்பதில் விளக்கப்படுகின்ற பத்திகளுக்கான சுட்டல்கள், (2) ரூஸ்பிஹான் மேற்கோள் காட்டும் குர்ஆன் வசனங்கள் மற்றும் ஹதீஸ்களுக்கான சுட்டல்கள், (3) பெயர்கள் மற்றும் கலைச்சொற்கள் கலந்த சுட்டல்கள். தனது மொழிபில் ரூஸ்பிஹான் பின்னிச் செல்லும் அடிக்கருத்துக்களை வகைப்படுத்திக் காண்பதற்கு இந்தச் சுட்டல்கள் உதவும். சில வாசகர்கள் வெறுமனே ஆரம்பத்தில் தொடங்கி அப்படியே கடைசி வரை வாசித்துச் செல்வதை விரும்புகிறார்கள். ரூஸ்பிஹான் முன்வைக்கும் அனுபவங்கள் மற்றும் படிமங்களின் தொகுப்புப் பார்வையை இத்தகைய வாசிப்பு முறை அளிக்கக்கூடும். தேர்ந்து படிக்க விரும்புவோர் முதலில் ரூஸ்பிஹான் தனது பிள்ளைப் பருவம் பற்றிக் கூறும் சுயசரித நினைவுகளைச் சொல்லும் பகுதியை (#7-13) வாசிக்க வேண்டும். அதன் பின் அவரது ஆரம்ப ஆன்மிகக் காட்சிகளைச் சொல்லும் பகுதியை (#14-40) வாசித்தால் அவரது காட்சிகளின் சார்புலன் விளங்கும். முதற்பகுதிகளில் (#1-3) அரபி மொழியின் சந்த உரைநடையின் அணியிலக்கணக் கூறுகள் பற்றிய பொதுவான அறிமுகத்தையே ரூஸ்பிஹான் சொல்கிறார் என்பதை வாசகர் தெரிந்திருக்க வேண்டும். அல்லது ஒருவர் கைப்போக்கில் நூலைப் புரட்டிச் செல்லலாம், அவரின் மனதைத் தூண்டுமொரு பத்தி துருத்தும் வரை, அல்லது ருஸ்பிஹான் சொல்வது போல், ‘உருவெளிப்பாடு கொள்ளும்’ வரை.

Image result for carl w ernst
carl w ernst at jaipur festival.

நான் ரூஸ்பிஹானை முதன்முதலில் படிக்கத் தொடங்கியது இருபது வருடங்களுக்கு முன். ஆரம்பம் முதற்றே அவர் தனது செழுமையான படிமங்கள், தடையற்ற புலப்பாடு மற்றும் சந்த நடை ஆகியவற்றால் என்னைக் கவர்ந்தார். இந்நூலின் வாசகர்கள் மீது நான் பொறாமை கொள்கிறேன். முதன் முறையாக ஓர் உண்மையான பேராளுமையின் எழுத்துக்களைப் படிக்கும்போது ஒருவர் அனுபவிக்கும் பரிச்சய அதிர்வுகளை அவர்கள் பெறுவார்கள்.
மொழிபெயர்ப்பில், மூலப் பிரதியின் செய்திக்கும் ஆங்கில மொழியின் தனி மரபிற்கும் இடையில் நான் பெரிதும் போராடினேன். இலக்கிற்கு அது எத்தனை தூரம் விலகி விழுகின்றது என்பதை என்னால் உணர முடிந்தது. பொதுவாக அறிஞர்கள் மொழிபெயர்ப்பில் சொற் துல்லியத்தைக் குறிவைப்பர். அதனால், அன்னிய வார்த்தை ஒன்றைக் குறிக்க ஆங்கிலத்தில் அதற்கிணையான ஒற்றை வார்த்தையைத் தேடிப் பிடிப்பர். தோராயமான முதற்பிரதியை உருவாக்குவதற்கே இந்தச் செய்முறை உதவும். மூலப் பிரதியைப் படிக்க விரும்புவோருக்கு அது ஓர் உசாத்துணையாக இருக்கும். ஆனால் பரந்துபட்ட வாசகர் வட்டத்தை எட்ட வேண்டுமெனில் பிரதியின் அடியில் மறைந்திருக்கும் குறியீட்டுத் தர்க்கத்தைக் கண்டறிவதும் மொழிபெயர்ப்பின் வாசகருக்கு அதன் தாக்கத்தை இயன்ற அளவு மறுவுருவாக்கம் செய்வதும் மொழிபெயர்ப்பாளர் எதிர்க்கொள்ளும் உண்மையான சவாலாகும். இல்லையெனில், தொழில்நுட்பத் துல்லியம் என்பது தெளிவின்மை ஆகிவிடும் அபாயம் உள்ளது. சிலநேரம் இன்னும் மோசமாக, அது அலங்கோலமாகவும் அமைந்துவிடும். லத்தீன் மூலச் சொற்களைப் பெய்து எழுத முனையும் கல்விப் புலம்சார் அணுகுமுறை எப்போதுமே உரைநடையின் அளவீடுகளின்படி மிக மோசமான விளைவுகளையே தந்திருக்கிறது.
மேலும், செவ்வியல் அரபியின் சொற்தொகுதிப் பரப்பு நவீன ஆங்கிலத்திலிருந்து வெகு தொலைவில் உள்ளது. உதாரணம் காட்டுதும். ஒன்று என்னும் எண்ணைக் குறிக்கின்ற அரபி வேரிலிருந்து கிளைத்து வருகின்ற சொற்கள் பலவற்றைப் பொதுவாக நாம் ஆன்மிகப் பிரதிகளில் காணலாம். மொழிபெயர்ப்பில் அவற்றை அடையாளம் காண்பது மிகக் கடினம். வஹ்தத் என்னும் சொல் எண்ணியல் ஒருமையைக் குறிக்கும். தவ்ஹீத் என்பது இறைவனின் ஏகத்துவத்தைக் குறிக்கும். வஹ்தானிய்யத் என்பது மெய்யியல் ஒருமையைக் குறிக்கும். இத்திஹாத் என்பது இறைவனுடன் ஒன்றுவதைக் குறிக்கும். “unity” மற்றும் “oneness” ஆகிய ஆங்கிலச் சொற்களில் அத்தகைய துல்லியமான அர்த்த விகிதங்கள் இல்லை. எனவே அத்தகயை மூலச் சொற்களின் அர்த்தங்களை மொழிபெயர்ப்பில் எய்த சில நேரங்களில் சார்புலன் விளக்கத்தையோ அல்லது பெரும் பத்தியையோ எழுத வேண்டிய அவசியம் நேர்கிறது. சிக்கல் தந்த இன்னொரு சொல் ”ப(க்)கா”. நிலைத்தல் அல்லது இருத்தல் என்னும் தோராயமான சொற்களால் அது மொழிபெயர்க்கப்படுகிறது. பெரும்பாலும் அச்சொல் ஃபனா (முற்றழிவு) என்னும் சொல்லுடன் ஜோடி சேர்க்கப்படுகிறது. வரம்புற்றதும் படைக்கப்பட்டதும் மறைந்தொழிகையில் துலங்கும் தெய்வீக சாஸ்வத இருப்பைச் சுட்டுவதற்கு அச்சொற்கள் பயன்படுகின்றன. தன்முனைப்பு அல்லது வரம்புற்ற தனி சுயம் அழிந்த பின் எஞ்சுவது யார்? என்னும் கேள்விக்கு இச்சொற்களில் தெளிவான விடை இல்லை என்பது வாஸ்தவம்தான். இதிலும்கூட நான் இறைவனின் இருத்தலைச் சொல்வதற்கு ஒற்றைச் சொல்லைத் தேராமல் பத்தியாக விளக்கி எழுதுவதையே கைக்கொண்டேன்.

Image result for sufi cloth
green is the color of investiture in qadiriyyah sufi order.

இவற்றையெல்லாம் விடவும் ஆகக் கடினமான சவாலை முன்வைத்த சொல் “இல்திபாஸ்” என்பதாகும். ரூஸ்பிஹானிடம் இது ஒரு தனித்தன்மை கொண்ட ஆன்மிகக் காலைச்சொல்லாக இருக்கிறது. அவரது ஞானத்தின் மையக் கருத்தாக இருக்கின்ற ”திரையிடல் மற்றும் திரைநீக்கம்” என்பதற்கான குறிப்புச்சொல்லாக அது இயங்குகிறது. அதன் நேரடி அர்த்தம் “ஆடையணிதல்” அல்லது “போர்த்துதல்”. எனவே, அரசின் பிரதிநிதிகள் மற்றும் இளவரசர்களால் தமது அரசவை மாந்தருக்கு வழங்கப்படும் பதிவியேற்பு ஆடைகள், மற்றும் சூஃபி குருமார்களால் தீட்சை நிகழ்வில் தமது சீடர்களுக்கு வழங்கப்படும் துணி ஆகியவற்றை அது நினைவுறுத்துகிறது. அத்தகைய சடங்குகள் இல்லாத சமூகங்களில் அதன் அர்த்த விகிதங்களை வெளிப்படுத்துவது மிகவும் கடினமாகிறது. திருச்சபை குருமார்களின் சடங்குகளில் ஆடை போர்த்துதலைக் குறிப்பதற்கு மத்திய நூற்றாண்டுகளில் பயன்படுத்தப்பட்ட சொல்லான “investiture” என்னுஞ் சொல்லோ அரதப் பழசாக இருக்கிறது. ”இல்திபாஸ்” என்பதற்கு “shrouding” (துணிச் சுற்றுதல்) என்னும் பொருளுமுண்டு. மறைத்தல் அல்லது மூடுதல் என்னும் அர்த்த விகிதங்களை அது தருகின்றது. ரூஸ்பிஹானிடத்தில் இச்சொல் கொள்ளும் இன்னும் மேம்பட்ட ஆன்மிக அர்த்தங்கள் அற்புதமானவை. இறைவன் தன்னைத் தோற்றப்படுத்திக்கொள்ள முன்வைக்கும் ஒருவித ஒளித்திரையை அது குறிக்கிறது. அல்லது, இறைவன் தன் அருளால் ஒரு மனிதனைத் தனது திருப்பண்புகளைக் கொண்டு அலங்கரிப்பதை அது குறிக்கின்றது. இவ்வாறு அச்சொல் ஏககாலத்தில் சக்தி, மறைத்தல், தெய்வீகப் பண்புகளின் ஒளிமயமான வெளிப்பாடு ஆகியவற்றைக் குறிக்கின்றது. சார்புலத்திற்கு ஏற்ப அதனை நான் பல்விதங்களில் மொழிபெயர்த்துள்ளேன். அவை அனைத்திலும் போர்த்துதல் மற்றும் நிரல்படுத்தல் என்னும் குறியீட்டு அர்த்தங்கள் தொனிக்குமாறு கவனம் எடுத்திருக்கிறேன்.
இந்நூல் பரந்த வாசகர் வட்டத்தை நோக்கி எழுதப்படுவதால், இந்த அக்கறைகளை மனதில் நிறுத்தி எனது முந்தைய நூலான “ரூஸ்பிஹான் பக்லி: பாரசீக சூஃபித்துவத்தில் ஆன்மிக அனுபவமும் இறைநேசத்தின் அணியியலும்” என்பதில் உள்ள பல பத்திகளை சுவையான வாசிப்பிற்கேற்ப மறு மொழிபெயர்ப்புச் செய்திருக்கிறேன். அந்நூலில் இருந்த பத்திகளைப் போலல்லாது இந்நூலில் பிரார்த்தனை/ வாழ்த்து மொழிகள் எல்லாம் அடைப்புக்குறிகளுக்குள் முழுமையாகத் தரப்பட்டுள்ளன, முழுமைத் தன்மை கருதி. இறைவனின் பெயரை குறிப்பிடும் போதெல்லாம் அரபிப் பிரதிகள் சில குறிப்பிட்ட வருணிப்புக்களை இணைத்துச் சொல்கின்றன. அவை இங்கே “மிக்க மேலான இறைவன்” என்பதாகவோ ”இறைவன் (அவனுக்கே மகிமை)” என்பதாகவோ குறிப்பிடப்பட்டுள்ளன. இறைவனைக் குறிப்பதில் அல்லாஹ் என்னும் பெயரையும் அல்-ஹக்கு என்னும் பெயரையும் ரூஸ்பிஹான் மாற்றி மாற்றிப் பயன்படுத்துகிறார். அந்த தனித்தன்மை அப்படியே கொடுக்கப்பட்டுள்ளது. நபி முஹம்மது (ஸல்...) அவர்கள் மீதான வாழ்த்தும் பிற ஆளுமைகளின் மீதான வாழ்த்தும் மூலப் பிரதியில் அதன் எழுத்தர்களால் சுருக்கக் குறியீடுகள் கொண்டே அவ்வப்போது குறிப்பிடப்பட்டுள்ளதால் அவற்றை இம்மொழிபெயர்ப்பும் விரிவாகக் குறிப்பிடவில்லை. இறைவனுக்கான அடைமொழிகள் சிற்றெழுத்தாகவும் இறைவனின் திருநாமம் பேரெழுத்தாகவும் அச்சிடப்பட்டுள்ளன. அனுமானத்தால் அறிய முடிந்த ஆனால் ஸ்பஷ்டமாகக் குறிப்பிடப்படாத அர்த்தங்களும் குறிப்புக்களும் இப்பிரதியில் கூடுதலாகச் சதுர அடைப்புக்குறிகளுக்குள் தரப்பட்டுள்ளன.
இனி, நான் எனது நன்றிகளைக் குறிப்பாக பர்வர்திகார் பதிப்பகத்தின் வெளியீட்டாளரும் எனது மனைவியுமான ஜுடித் எர்ன்ஸ்ட் அவர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். இம்மொழிபெயர்ப்பை நான் நிறைவு செய்ய அவரே பெரிதும் எனக்கு ஊக்கமளித்தார், இப்பிரதியின் உருவாக்கத்தை ஒவ்வொரு கட்டத்திலும் மிக நுணுக்கமாக அவதானித்தும் வந்தார். ஓர் ஆன்மிகப் பிரதியை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பதற்குரிய கச்சிதமான பாணி குறித்து மதிப்புமிக்க ஆலோசனைகளை எனக்கு வழங்கிய பதிப்பாசிரியர் மவ்ரா ஹை பல தத்தியான வெளிப்பாடுகளை விட்டும் என்னைக் காப்பாற்றியிருக்கிறார். எனினும், அவரது அறிவுரையை நான் எல்லா இடங்களிலும் பின்பற்றவில்லை என்பது என் தவறுதான். இந்நூலின் வடிவமைப்பை ‘காஷர்கிஸ் நூல் வடிவமைப்பு’ உரிமையாளர்கள் ஜாய்ஸ் காஷர்கிஸ் மற்றும் ஆன் தெய்ல்கார்ட் மிகவும் அழகியலுடன் செய்தளித்திருக்கிறார்கள். நிஃமதுல்லாஹி சூஃபிப் பள்ளியின் தலைவரான டாக்டர். ஜவ்வாது நூர்பக்‌ஷ் மிக அருளுடன் ரூஸ்பிஹான் பக்லி பற்றியதொரு குறிப்புரையை இந்நூலுக்கு அளித்துள்ளார். இச்செயல்திட்டத்தில் எனக்கு உறுதுணை செய்த அனைத்து நல்ல நண்பர்களுக்கும், குறிப்பாக லின் ஒட் மற்றும் ஜான் புஸ்ஸானிக் ஆகியோருக்கு, எனது நன்றிகள். இந்நூலின் முகப்புப் படம், பாரிஸ் நகரத்து தேசிய நூலகத்தின் கனிந்த அனுமதியுடன் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்நூல், ரூஸ்பிஹான் பக்லி என்னும் மாபெரும் சூஃபியை மேற்குலகிற்கு முதன்முதலாக அறிமுகஞ் செய்த இரு பெரும் ஃப்ரெஞ்சு அறிஞர்களின் நினைவிற்குச் சமர்ப்பணம்: லூயி மாசிக்னான் மற்றும் ஹென்ரி கார்பின்.

சேப்பல் ஹில், நார்த் கரோலினா.
நவம்பர், 1996.


No comments:

Post a Comment