Friday, June 9, 2017

பிரியமுள்ள முஹம்மதுக்கு... -part1

ஆங்கில மூலம்
அன்னா ருஹ்லிதர்
தமிழாக்கம்

ரமீஸ் பிலாலி
மொழி பெயர்த்தோன் உரை
      இச்சிறு நூல் அமெரிக்காவில் வாழும் ஒரு பெண் எழுதியது. அவரின் பெயர் அன்னா ருஹ்லிதர். ஃபோர்ப்ஸ் என்னும் பிரபலமான வணிக இதழில் நிருபராகப் பணியாற்றுகிறார். சில காலம் இவ்விதழின் இந்தியப் பிரிவிலும் பணியாற்றியுள்ளார். தற்போது கென்ட்டக்கி என்னும் நகரில் வசிக்கிறார். 
Image result for anna rohleder
      கிறித்துவக் குடும்பத்தில் பிறந்து மிகச் சிறு வயதில் பெற்றோரை இழந்த அன்னா செவிலித்தாயின் அரவணைப்பில் வளர்ந்தவர். எனவே, குழந்தைப்பருவம் காணும் தனிமையின் அனுபவமும் அது உருவாக்கும் தனித்த மனநிலையும் கொண்டவர். திருச்சபையில் ஒரு கன்னிகாஸ்த்ரீ ஆகி இறையூழியம் செய்ய வேண்டும் என்பதே அவரின் பால்யகாலத்துக் கனவாக இருந்திருக்கிறது.
      பின்னாளில் அவரின் தனிப்பட்ட வாழ்வின் அலைக்கழிப்புக்கள் அவரைக் கொண்டு வந்து சேர்த்த இடம் இஸ்லாம். 13-ஆம் நூற்றாண்டில் ஆஃப்கானிஸ்தானின் பல்க் என்னும் இடத்தில் பிறந்து துருக்கியின் கோன்யா நகரில் வாழ்ந்து மறைந்த சூஃபி ஞானி மவ்லானா ரூமி அவர்களின் ஆன்மிக நெறி எண்ணூறு ஆண்டுகள் கழித்து அமெரிக்காவில் கிளை பரப்பிற்று, குரு பரம்பரையாக. அவ்வழியே இஸ்லாத்தை சூஃபிப் பரிமாணத்துடன் அன்னா அடைந்துகொண்டார்.
      அமெரிக்காவில் ரூமியின் ஆன்மிக நெறியில் குருவாக (முர்ஷித், ஷைஃகு, தாதா என்றெல்லாம் அழைக்கப்படும் ஸ்தானம்) இருப்பவர் கபீர் ஹெல்மின்ஸ்கி. அவர் “Threshold Society” (பெருவாயிற் சமூகம்) என்றொரு அமைப்பை நடத்திவருகிறார். இணையத்தின் வழி சூஃபித்துவச் செய்திகளை வெளியிடுவதும், சூஃபித்துவம் சார்ந்த நூற்களைப் பதிப்பிப்பதும் இவ்வமைப்பின் செயல்பாடுகள். அத்துடன் இவ்வமைப்பினர் அமெரிக்காவில் ஆன்மிகக் கொண்டாட்டங்கள் மற்றும் பயிற்சிகளை நிகழ்த்தி வருகின்றனர். கபீர் ஹெல்மின்ஸ்கியுடன் அவரது மனைவி கமில் ஹெல்மின்ஸ்கியும் இணைந்து நூற்கள் எழுதியிருக்கிறார். அன்னாவின் இந்த பதினொரு கட்டுரைகளும் பெருவாயிற் சமூக இணையத்தளத்தில் வெளிவந்தவை.
Image result for anna rohleder
with kabeer helminski
      ”Love Letters to Muhammad” என்னும் தலைப்புக்கொண்ட இந்நூலில் பதினொரு கடிதங்கள் உள்ளன. அவை அனைத்தும் நபிகள் நாயகத்திடம் உரையாடுவது போன்ற பாவனையில் எழுதப்பட்டுள்ளன. ஆங்கில மூலத் தலைப்பை நேரடியாக மொழிபெயர்த்தால் “முஹம்மதுக்குக் காதல் கடிதங்கள்” என்றே வரும்.
இக்கடிதங்கள் ஒவ்வொன்றும் நபி (ஸல்) அவர்களை அவர்களின் இயற்பெயரான முஹம்மத் என்பதை விளித்து, அதனையும்கூட அன்பின் உரிமை பற்றி இக்கால மேற்கத்திய நடைமுறைக்கு ஒப்பச் சுருக்கி “Dear M” என்று விளிப்பதாகவே தொடங்குகின்றன. M என்பது ஆங்கிலத்தில் முஹம்மத் என்பதன் முதலெழுத்து. தமிழில் ”அன்புள்ள மு” என்று அதனை மொழியாக்கம் செய்யலாம் எனில் அதன் தொனிப்பு அத்தனை இனிமையாகப் படவில்லை. எனவே, முஹம்மத் என்னும் அரபிப் பெயருக்கு அரபியின் முதல் எழுத்தான மீம் என்பதையே தமிழில் பயன்படுத்தி ஒவ்வொரு கடிதமும் ‘அன்புள்ள மீம்’ என்று தொடங்குவதாக அமைத்தேன். மீம் என்பதே ஒரு பெயர் போன்று அல்லது பெயரின் சுருக்கம் என்பதான தொனிப்புடன் தித்திப்பாக ஒலிக்கிறது.
கிழக்கின் பெருஞ்சமயங்கள் என்று கருதப்படுபவை அனைத்தும் சென்ற நூற்றாண்டில் அமெரிக்காவை நோக்கிச் சென்றிருள்ளன என்பது நவீன வரலாற்றில் மிகவும் முக்கியமான, அடிக்கோடிட வேண்டிய செய்தி. இந்து, பௌத்தம், இஸ்லாம் ஆகியவற்றின் புற மற்றும் அகப் பரிமாணங்கள் சார்ந்த பழஞ்சுவடிகளும்கூட ஆங்கிலத்தில் பெயர்க்கப்பட்டு அமெரிக்காவில் கல்விக்கூடங்களிலும் பொது மக்களிடமும் சென்றடைந்தன. சூஃபி ஜென் யோகா கப்பாலா மற்றும் தாவோ என்று ஆன்மிக நெறிமுறைகள் இயங்கும் மையங்கள் அமெரிக்கா முழுதும் பரவின. கிறித்துவக் குடும்பங்களில் பிறந்து வளர்ந்த பலரும் இச்சமயங்களால், குறிப்பாக அவற்றின் ஆன்மிகப் பரிமாணத்தால் ஈர்க்கப்பட்டு அச்சமயங்களைத் தழுவியுள்ளனர். அவர்களில் ஒருவர் முஸ்லிமாக மாறிய அன்னா ருஹ்லிதர்.
Image result for anna rohleder
with Amina Wadud.
      அன்னாவின் இக்கடிதங்கள் அமெரிக்கக் கலாச்சாரத்தில் வளர்ந்த ஒருவர், அதிலும் குறிப்பாக ஓர் அமெரிக்கப் பெண், இஸ்லாத்தை உள்வாங்குவது எப்படி இருக்கிறது, நபியின் வாழ்க்கையை அவர் எப்படிக் காண்கிறார் என்பதன் காட்சியை நமக்கு வழங்குகிறது. நெடுமரபில் வேர் பிடித்துள்ள கிழக்கத்திய முஸ்லிம் ஒருவருக்கு, அவர் புரிதிறன் அற்றவராய் இருக்கும்பட்சத்தில், அன்னா வெளிப்படுத்தும் அணுகுமுறைகள் சற்றே அதிர்ச்சியளிக்கக்கூடும். அப்படியான அம்சங்கள் இக்கடிதங்களில் இருக்கின்றன.
      முன்னுரையின் இறுதியில் நபிகள் நாயகம் பற்றி அவர் எழுதும் வரிகளே போதும், அது கிழக்கத்திய மரபிலிருந்து எத்தகையதொரு தாவல் என்று காட்டும். பாசாங்கற்ற அன்பின் பீறிடல் அதில் இருப்பதை உணர்ந்து கொண்டால் போதுமானது. அன்னா சொல்கிறார்: “அவரொரு மனிதரும் இறைத்தூதரும் ஆவார். அவரை இங்கே நான் ”மீம்” என்று அழைப்பேன். அந்த முஹம்மதின் மீது நான் காதலானேன்.”
      முஹம்மத் என்னும் பெயரைக் கேட்டவர் உடனே அவர்களின் மீது வாழ்த்து வாசகத்தை ஓத வேண்டும் என்பது சமயச்சட்டம். அதனைத் தழுவியே மார்க்க அறிஞர்கள் அப்பெயரை ஏட்டில் எழுதும்போது அத்துடன் ஸல்லல்லாஹு அலைஹி வ சல்லம் என்று அவ்வாழ்த்தினை எழுதவேண்டும் என்று வழிச்சட்டம் இயற்றியுள்ளனர். மேலும், அடைப்புக்குறியிட்டு (ஸல்) என்றெல்லாம் சுருக்கி எழுதக்கூடாது, முழுமையாகத்தான் எழுதவேண்டும் என்று உபச்சட்டமும் இயற்றியுள்ளனர். மரபு இப்படி இருக்க இந்த அமெரிக்கப் பெண்மணி நபிக்குச் செல்லப் பெயர் வைத்து மீம் என்று அழைப்பதாகச் சொல்கிறார்!
      ”நபிக்காதல்” (இஷ்கே ரசூல்) என்பதுதான் இஸ்லாத்தின் உயிர்நாடி என்பதாக சூஃபிகள் விளக்கம் தருகின்றனர். “நபி கொண்டு வந்த வணக்க வழிபாட்டு முறைகள் மீது வைக்கும் நேசத்தைவிட அதிகமதிகம் அவர்களின் சுயத்தின் மீது ஒருவன் நேசம் வைக்க வேண்டும். அவர்கள் தந்த வழிபாடுகளை மட்டும் ஒருவன் நேசித்தால் அவன் நயவஞ்சகன் (முனாஃபிக்) ஆகிவிடுவான். அவர்களின் ’தாத்’ என்னும் சுயத்தின்மீது தன் உயிரைவிட மேலான நேசம் வைப்பவனே உண்மையான இறைநம்பிக்கை உள்ளவன் ஆகமுடியும்” என்பார்கள் எனது குருநாதர்.
      இக்கடிதங்களில் அந்த நபிக்காதல் இருக்கிறது. நபிக்காதல் என்பதன் அடையாளம் அவர்களின் சுன்னத் என்னும் வழிமுறையைப் பேணுவதுதான், இந்தப் பெண்மணியிடம் அதெல்லாம் இருக்கிறதா என்று தீர்ப்புரைக்கும் நோக்கில் அணுகாமல் மௌனமாய் வாசிப்போருக்கு இதில் நபிக்காதல் என்னும் விஷமுறிவு ஔடதம் கிடைக்கும்.
      இரண்டு விஷயங்கள் இக்கடிதங்களில் புத்துணர்வூட்டும் அம்சங்களாக நம்மை ஈர்க்கின்றன. ஒன்று, நபிகள் நாயகத்தின் ஆளுமையை அன்னா ருஹ்லிதர் ஒரு பெண்ணாக அணுகுகின்றார். மற்றொன்று, அவர் ஓர் அமெரிக்கப் பெண்ணாக அணுகுகின்றார்.
      “அவரொரு மனிதரும் இறைத்தூதரும் ஆவார்” என்று அவர் சொல்வதன் அர்த்தம் ஒரு பெண்ணாக இருந்து இதனை அவர் சொல்லும் நோக்கில் அவதானிக்கும்போது தனிவிரிவு கொள்கிறது. அன்னாவின் ஆன்மா நபியை இறைத்தூதர் என்னும் பரிமாணத்தில் பேரான்மாவாகக் கண்டு அதனுடன் ஒன்ற முனைகிறது. உடலால் தானொரு பெண்ணாக இருப்பதால் அவரின் உள்ளம்  நபியை மனிதப் பரிமாணத்தில் அவர்கள் ஓர் ஆண் என்று கண்டு இவ்வுலகில் அவர்களின் மனைவியருள் ஒருவராய் ஆகும் பேறு கிடைக்க வேண்டுமென்று அவாவுகிறது. அது இப்போது இம்மண்ணில் சாத்தியம் இல்லை என்பதையும் அறிகிறது. அப்படி ஆசைப்படுவதில் தனது தகுதியின்மை நினைந்தும் துயர் கொள்கிறது. நபியின் பேரன்பு தன்னைத் தூய்மை செய்து தகுதிப்படுத்தும் என்றும் நம்பிக்கை வைக்கிறது. இங்கே இவ்வாழ்வில் இப்போதே அவர்களின் ஆன்மாவுக்காவது தான் ஜோடி ஆகியிருக்க வேண்டுகிறது.
      இப்பகுதிகளில் எல்லாம் எனக்கே என்னைக் காட்டும் கண்ணாடி போல் அவரின் கடிதங்கள் இருக்கின்றன. என்ன தகுதி இருக்கின்றது என்று நான் நபியை நேசிக்கிறேன்? என் மனத்தின் கள்ளமும் கசடும் நானறியேனா? புழுதியின் ஒரு துகளும் இதுவரை ஒட்டவே ஒட்டாத தூய மனம் எனது என்று கோர முடியுமா என்னால்? ஆனாலும் அந்த நபியை நான் நேசிக்கிறேன் அல்லவா?... இப்படியாக, சுயப் பரிசீலனை செய்துகொள்ளும் வாய்ப்புக்களுடன் அன்னா எழுதும் வார்த்தைகளை வாசித்துச் சென்றேன்.
      அமெரிக்க நவீனக் கலாச்சாரம் என்று வளர்த்தெடுக்கப்பட்டுள்ள கோட்பாடுகளின் ஏமாற்றையும் தீங்கையும் அன்னா சுட்டிக்காட்டத் தவறவில்லை. ஒரு பத்திரிக்கையாளர் என்னும் முறையில் அவற்றை அவர் நன்கறிவார். அப்பகுதிகளில் இஸ்லாத்தையே அவர் நவீனச் சீரழிவுகளுக்கான தீர்வாக முன்வைக்கிறார்.
      ஹதீஸ்களைக் கையாள்வதில் அன்னா ஒரு புனைவு எழுத்தாளரின் சுதந்திரம் அவரிடம் இருக்கிறது. அதுவே அந்த ஹதீஸ்களின் உணர்வாம்சத்தைத் துலக்கிக் காட்டும் கருவியாகச் செயல்படுகிறது. வெறுமனே நபிமொழிகளை அறிவிப்புச் செய்யும் ஏடு அல்ல இது. ஒரு வாசகனாக நபிமொழியை உள்வாங்கிக் கிரகிக்கும் செயல்பாட்டினை இந்தக் கடிதங்கள் காட்டுகின்றன. உப நினைவின் தளத்தில் ஒவ்வொருவரின் மனத்திலும் நடப்பதுதான், ஹதீஸை காட்சிப்படுத்திக் காணலும் அதில் தனது மனோதர்மங்களைக் கொண்டு வர்ணம் தீட்டலும். அதனை இங்கே எழுத்தில் வெளிப்படுத்தியிருக்கிறார். நபியின் சரிதை கூறும் நூற்களில் இவ்வம்சத்தைக் காணலாம். அது இங்கே சமகால நிகழ்வுகளின்மீது பிரதிபலித்துச் சொல்லப்படுவதால் நபியின் காலத்தில் நாம் வாழ்கிறோம் அல்லது இன்னும் சரியாக, இப்போது நம்முடன் நபி வாழ்கிறார்கள் என்னும் உணர்வைத் தருகிறது.
      இலக்கிய மற்று பல்சமய நோக்கில் காண, ஆண்டாள், மீரா, புனிதவதியார், மேரி மக்தலீன், அவில்லாவின் தெரஸா போன்ற பக்தைகளின் சாயல் அன்னாவில் இருப்பதைக் காண்கிறோம்.
      இவ்வருட ரமலானில் கிடைத்த ஓர் நபிக்கொடை என்று இந்தச் சிறு நூலை நினைக்கிறேன். நற்பெருஞ் சோலையில் செத்த எலியைத் தேடித் திரியும் காகம் போல் ஆகிவிடாது மலர்கள் தோறும் தேனெடுக்கும் தேனீ என நம்மை இறைவன் ஆக்கி வைத்து யாவரிலும் யாவற்றிலும் நன்மையைக் காண அருள் செய்வானாக.
      ”அனைவர்க்குமாம் அன்பு; எவரிடத்தும் இல்லை பகை” என்று சூஃபி மகான் ஃக்வாஜா மொய்னுத்தீன் சிஷ்தி அவர்கள் காட்டிய கண்ணோட்டம் பெற்றுப் பேரமைதி கண்டு வாழ்வோம்.
இறைநிழல்...
ரமீஸ் பிலாலி.
திருச்சி-20, 08.ஜூன்.2017.   

                                              

No comments:

Post a Comment