Sunday, June 11, 2017

பிரியமுள்ள முஹம்மதுக்கு... - part 6


4. இதயக் கண்ணாடி
அன்புள்ள மீம்,
      சமயச் சரிதைகளில் மட்டுமே நான் பார்த்த, உம் வாழ்வின் மிகவும் வினோதமான சங்கடமான ஒரு நிகழ்வு பற்றி உம்மிடம் கேட்க விரும்புகிறேன். உம் இருதயம் உமது உடலை விட்டு வெளியே எடுக்கப்படும் நிகழ்வு.
      ஒரு பிரதியில், அது ஒரேயொரு முறை மட்டும் நிகழ்கிறது. ஒரு பிள்ளையாக நீங்கள் மற்ற இரு சிறுவருடன் விளையாடுகையில். ஜீப்ரீல் வருகிறார், உம்மை மல்லாத்தி உம் நெஞ்சிலிருந்து இருதயத்தை எடுக்கிறார். அப்புறம், உம் தூய இதயத்தில் கருந்துண்டமாக இருக்கும் “சாத்தானின் பங்கு” என்பதை வெளியே எடுத்துவிட்டு, பொற்கிண்ணத்தில் வைத்து உம் இதயத்தைப் பனி அல்லது நீரால் கழுவுகிறார். பின் அதனை உம் உடலுக்குள் வைக்கிறார். இச்செய்முறையில் பெரிதும் மயக்கமாய் இருந்த நீங்கள் அதிலிருந்து வெளிறிப்போய் எழுகின்றீர். (இதையெல்லாம் யார் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் என்பது தெளிவில்லை). பயந்து பார்த்துக்கொண்டிருந்த உமது நண்பர்கள் தமது பெற்றோர்களிடம் ஓடிச்சென்று நீங்கள் கொல்லப்பட்டீர்கள் என்று சொல்கிறார்கள்.
Image result for the sacred heart detail
      இக்கதையின் வேறு பிரதிகளில், உம் இதயம் மீண்டும் மீண்டும் நீக்கப்படுகிறது: இரண்டு மூன்று ஏன் ஐந்து தடவைகள் வரை. இதன் தர்க்கம் புரிகிறது எனக்கு: நான்கு அல்லது பத்து வயது முதல் நீங்கள் இறைவெளிப்பாட்டை முதன்முதலாகப் பெற்ற நாற்பது வயது வரை, உமது வாழ்வின் முக்கியமான தருணங்களில் எல்லாம் உமது இதயம் கழுவப்பட வேண்டியிருந்தது. பிறகு உம் இரவுப்பயணத்தின் (மிஃறாஜ் என்னும் விண்ணேற்றத்தின்) முன் ஒரு முறையும். ”அது அல்லாஹ்வின் முன் அவர் நின்று அவனுடன் மிக அணுக்கமாக உரையாடுவதற்கு அவரைத் தயார் செய்யும் முறை” என்றே பெரும்பான்மை வைதீகமான சரிதக்காரர்கள் சொல்கிறார்கள். நான் இதை உளவியல் நோக்கில் விளங்குகிறேன். அதாவது, பொதுவாக மனித மனம் (நஃப்ஸ்) ஆதிக்கம் கொள்கின்ற நிலைகளில் உமது மனத்தில் ஆழமான விசுவாசத்தைத் தூண்டுகின்ற செயல்முறை என்று. முதலில், ஒரு குழந்தை தன்னைத் தனிப்பட்ட “நான்” என்பதாகக் காணும் வயதில்; அடுத்து பாலியல் பக்குவமுறுகையில், ஒரு பையன் ஆணின் உடலியலுடனும் உத்வேகங்களுடனும் தன்னை அடையாளம் காணும் வயதில்; இறுதியாக, உலக லட்சியங்களை ஆன்மிக நோக்கம் மிகைக்கத் தொடங்கும் வயதில்.
      ஆனால் இது வெறும் குறியீடு மட்டுமா? சமயச் சரிதைகளில் ஒன்றில், ஹாஃபிழ் அல்-கலஸ்தானீ சாடி மறுக்கிறார், “நெஞ்சத் திறவு, இருதயம் வெளியே எடுக்கப்பட்டது மற்றும் பிற மீவியற்கை நிகழ்வுகள் என்று அறிவிக்கப்பட்டுள்ளவை அனைத்தும் அவ்ற்றின் நேர்ப்பட்ட அர்த்தங்களை நீக்கும் முயற்சி எதுவுமின்றி அப்படியே ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். ஏனெனில், இறைவன் சர்வ வல்லமை கொண்டவன், அவனால் இவையனைத்தையும் செய்ய இயலும், அதில் எதுவும் முடியாததல்ல.”
      இந்த நம்பிக்கை மேற்கல்லாத அறிவியலற்ற நபருடையது மட்டுமே என்று நான் சொல்லமாட்டேன். இப்பெருவழியில், நானுமே கூட ஒருவித ஆன்மிக “திறந்த அறுவை சிகிச்சையை” அனுபவித்திருக்கிறேன். என் அனுபவம் அப்படித்தான் படுகிறது என்க. சஹ்ருதயர்களான சிலரை (நீங்கள் உட்பட!) நான் நினைக்கையில் அல்லது அவர்கள் பற்றிப் பேசுகையில், அல்லது அவர்களுடன் ஒத்திசைகையில் என் விலா எலும்புகள் பலமாகப் பிரித்துக் கிழிக்கப்படுவது போல் என் நெஞ்சு விரிவதான தீவிர உணர்வை அடைகிறேன். அவ்வப்போது, அந்தத் திறவுணர்வுடன் சேர்ந்து எரிக்கும் வெய்யிலின் சூட்டையும் உணர்கிறேன். ஆரம்பத்தில் இஃதொரு உருகுதல் போல் தெரிந்தது. “பற்றவைக்கப்பட ஆயத்தமாய் உம் இதயத்திலொரு மெழுகுவத்தி உள்ளது” என்று மௌலானா ரூமி சொல்வதை அது நினைவூட்டியது. ஆனால் சமீப காலமாக அந்த எரிதலானது ஒளியை விடவும் நெருப்பாகவே தோன்றுகிறது. அதன் வெம்மையை நான் அடிவயிறு வரை, முதுகிலும் தோள்களின் நடுப்பகுதி வரை உணர்கிறேன். (சொல்லப்போனால், ரூமிக்கும் கூட இந்த உணர்வு பரிச்சயமானதுதான்: “நான் ஒரு தீ; உமக்கிதில் ஐயம் இருந்தால் ஒருகணம் என் முகத்தில் உன் முகத்தை வை”)
      இது நான் எதிர்பார்த்த ஒன்றல்ல. நேர்மையாகச் சொல்வதெனில் இது சற்றே சங்கடமாகவும் இருந்தது. விரிவு என்பது வேறொன்று: போதையாக்குவது, காற்றில் மிதப்பது போன்றது, பறப்பதன் இனிய உணர்வு அது. ஆனால் எரிதல் என்பது வேறு. காதலில் வீழ்வதில் நான் சுகமாயிருந்தேன் என்று, மப்பாக இருந்தேன் என்று, அதிர்ந்திருந்தேன் என்று என்னால் சொல்லமுடியுமா? தெரியவில்லை. ஆனால் எனது சிந்தனைகளும் உணர்வுகளும் சுற்றியிருக்குமொரு நபரை நான் கண்டடைந்துவிட்டேன் என்பதான உணர்வு இருந்தது. எப்பொருளும் இன்றிக் காதலில் வீழ்வதாகவே அது பெரிதும் தோன்றியது. பொறி வைத்தவுடன் பற்றிக்கொண்டு எரியுமொரு தழல் போல காதல் என்பது காதலிப்பது என்றான நிலை. இச்செயல்முறைக்கு தனதானதொரு விசை உண்டு: நிச்சயமாக நான் என் வசத்தில் இல்லை.
Related image
      என் நஃப்ஸ் (தன்முனைப்பு) அதனை விரும்பவில்லை. ஏனெனில் நஃப்ஸ் வேறு எதனை விடவும் தான் கட்டுப்பாட்டில் இருக்க விரும்புகிறது. (என் கனவுகளில் அது திருப்தியைக் கோரி நிற்கும் உருவங்களெடுத்து வந்து நிற்பதை நான் கண்டுகொண்டேன்: அஜானுபாகுவான விடுதி மேலாளராக அல்லது பாடாய்ப் படுத்துமொரு கிழவியாக). ஒருவேளை நஃப்சுக்குத் தெரியும்போலும், இதயத்தில் உண்மையில் காதல் நெருப்புப் பிடித்துக்கொண்டால் தனது நாட்டாண்மை நாட்கள் எண்ணப்படுகின்றது என்பது (இன்–ஷா-அல்லாஹ்!)
      அண்மையில், நம் குழு, தாதாவின் ஆன்மிகத் தோழியுடன் அமர்ந்தது. ”நான் / எனது” என்னும் சுயாதீனம் கொண்டு வரும் பிரிவுத்துயரைத் தான் ஒருபோதும் அறிந்ததில்லை என்று அவர் சொன்னார். தனது வாழ்வு முழுவதையும் மனத்திரை இன்றி, இறைவனுடனான தொடர்ந்த இணைவில் அவர் வாழ்ந்திருப்பதாகச் சொன்னார். உமக்கும் அப்படித்தானா? அல்லது உமது இருதயம் எடுக்கப்பட்ட நிகழ்வுகள் படிப்படியான விழிப்படைதலின் வெளிப்பாடுகளா?
      உம் இதயம் எப்போதுமே உணர்வுள்ளது என்றுதான் நினைக்கிறேன். குர்ஆன் உம் வழியே பேசுவதற்கு முன், உமது சமூகத்தின் அறியாமைக் காலத்தில் செல்வந்தர்களும் பலமுள்ளோரும் வறியோரையும் எளியொரையும் நடத்திய விதங்களைப் பார்ப்பது உமக்குப் பெரிதும் வேதனையாகவும் அதிர்ச்சியாகவும் இருந்திருக்கும். ஒரு குழந்தையாக, அன்றாட வன்செயல்களால் நான் எப்படி ஆடிப்போனேன் என்பதறிவேன். விளையாட்டுத்திடலில் சிறார்கள் சண்டை போடுவது என்னை அழச்செய்தது. அமெரிக்காவில் பல்வேறு வடிவங்களிலான குரூரங்களால் அயர்ந்தேன்: ஒவ்வொருவரும் தமது தனி வாகனங்களில் பெருஞ்சாலைகளில் விரைவது; காடுகளையும் பண்ணைகளையும் அழித்தெழும் ராட்சத கட்டடக் கூட்டம்; வெடிப்புப் பேச்சும் ஒழுங்கற்ற அசைவுமாய் மக்கள் உலவுவது. அனைத்தும் சீர்குலைவையே காட்டின. அலங்கோலம். கண்ணியமும் செம்மையும் மதிக்கப்பட்ட  பண்பாடு ஒன்றிலிருந்து இங்கே வந்து விழுந்துவிட்டதோர் அகதியாகவே என்னை உணர்ந்தேன். உலகம் இத்தனை அசிங்கமாய் இருக்கவேண்டியதில்லை என்றறிவேன். ஆனால் அதன் அர்த்தம் என்ன என்பதும், நான் உணரும் ஒத்திசைவு நிலைக்கு எப்படி மீள்வது என்பதுமான குழப்பத்தில் நான் செய்த பிழை என் இதயபூர்வமாய் நிகழ்ந்தது: சமூகத்தையும் என் மனதினுள் கூச்சலிடும் மாந்தரையும் பிரிந்து செல்ல முயன்றேன்.
      இவ்வழியில் என் பணி, அத்தகைய கரிய கசடுகளை விட்டும் எனது இதயத்தைத் தூய்மையாகவும் தெளிவாகவும் ஆக்குவது மட்டுமல்ல, ஆனால், என் இதயத்தை திறந்ததாக்கி மீண்டும் முழுமையாக உணர வைப்பதுமாம். கருணை என்பது பிறருக்காக உணர்வது என்பதினும் பிறருடன் உணர்வதே என்பதைக் கற்றுக்கொண்டேன். விமானகத்தில் கடுகடுத்த முகங்களைப் பார்த்து நகரும்போதும் அல்லது அங்காடியினுள் பொருட்குவிந்த அடுக்குகளினிடையே கலைத்துச் செல்லும் போதும் ஒவ்வொரு மனிதரினுள்ளும் ஒளியையும் தூய்மையையும் நோக்கவும் கற்றிருந்தேன்.
      என் வாழ்வில், என்னிலிருந்து சாத்தானின் பங்கை நீக்க வானவர் இறங்கி வந்த தருணங்கள் மிகவும் சாதாரணமானவையே. ஒருமுறை, பயிற்றுவித்து முடிந்த யோகா வகுப்பில், சவாசனத்தில் மல்லாந்து ஓய்வெடுத்திருந்த எனது மாணாக்கரின் உடல்களை நோக்கினேன். அவர்களின் மற்றும் எனதின் நிலையற்ற வாழ்க்கையின் பலகீனம் பற்றிய மெல்லிய அதிர்வலை ஒன்று என்மேல் படர்ந்தோடிற்று. இன்னொரு சமயம், துருக்கியில் ஒரு விடுதியின் பின்புறத்தில், பெரும்பாலும் வாலிபர்கள் இருந்த கூட்டத்தில், தீமூட்டிக் குளிர் காய்ந்தபடி அவர்கள் கூறும் பயணக் கதைகளைக் கேட்டிருந்தேன். முதியவர் ஒருவர் தனது அதிவேகப் பயண சாகசம் பற்றிப் பெருமிதப்பட்டபோது, அதனடியில் அவருக்குள்ளிருக்கும் வியாகூலத்தை நான் உணர்ந்தேன். அத்தகு முதிய வயதில் அவர் சொன்னது போல் அவர் செய்தால் அவர் நோய்ப்படுவார், அல்லது இறந்தும்விடலாம் – நான் ஒரு தூண்டலில் அவரின் கையைப் பற்றினேன், “பயப்பட ஏதும் இல்லை. பதட்டப்படாதீர்கள்” என்றேன். அவர் திரும்பி என் கண்களுக்குள் பார்த்தபோது என் வார்த்தைகளை நம்பவே அவர் விரும்புகிறார் என்று தெரிந்தது.
Image result for caring the old man
      என் அன்பே, அத்தருணத்தில் நான் நடந்துகொண்டது பற்றி நீங்கள் பெருமைப்பட வேண்டுமென விரும்புகிறேன். எனினும், என் இதயம் திறந்து மாற்றத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டிய நேரங்களில் திறக்காமல் போனதையும் நான் ஒப்புக்கொள்கிறேன். அடிக்கடி என் நினைவில் எழுந்து துயர்தரும் நிகழ்வு ’டீ’ (என் கணவர்) தனது தந்தை இறந்துவிட்டதை அறிந்த நேரமாகும். அதற்குச் சில மாதங்களுக்கு முன்புதான் எமக்குத் திருமணமாகியிருந்தது. அமெரிக்காவில் எமது புதிய வாழ்வை அமைத்துக்கொள்ள நாங்கள் போராடிக்கொண்டிருந்தோம். எமக்கிடையிலான உறவும் நன்றாகவே இருந்தது. தொலைபேசி வந்தபோது பெரும் அதிர்ச்சியாக இருந்தது (அவரின் தந்தை 52-தான். முதல் மாரடைப்பிலேயே போய்விட்டார்). ஆனால், டீ உடனே செயல்திட்டத்தில் இறங்கினான்: இந்தியாவுக்கு டிக்கெட் பதிந்தான், தனது அம்மாவுக்கும் சகோதரிகளுக்கும் தொலைபேசினான். ஒரு தருணத்தில் செயலற்று நாற்காலியில் அமர்ந்தபடி எமது ஸ்டுடியோவின் மதிலை வெறித்துக்கொண்டிருந்தான். நான் அங்கே தயங்கியபடி நின்றிருந்தேன். அவன் முதுகுக்குப் பின்னிருந்தும் அவனது வலியைக் காண முடிந்தது. ஆனால் என்ன செய்வதென்று தெரியவில்லை. நான் செய்வதற்கு ஒன்றுமில்லை என்றே என்னால் யூகிக்க முடிந்தது. நடந்து போய் அவன் தோள்களைத் தொடுவதற்கு மூன்று காலடிகளே எடுத்திருக்கும். ஆனால் அப்போது எனது சொந்த அச்சங்கள் எமக்கிடையே பாலமிடவியலாத தூரத்தை உண்டாக்கியிருந்தது. அவனைத் தனிமையில் விட்டுவிட்டேன்.
      அதை இப்போது நினைத்தாலும் என்னை எரிக்கின்றது. “பேரதிர்ச்சி” (ஸில்ஸால்) என்னும் அத்தியாயத்தில் சொல்லியிருப்பதன் உண்மையை அது உணரச்செய்கிறது: ”எவர் ஓர் அணுவளவு நன்மை செய்திருந்தாலும் அதனைக் கண்டுகொள்வார்; எவர் ஓர் அணுவளவு தீமை செய்திருந்தாலும் அதனைக் கண்டுகொள்வார்”. ஆனால், நமது வாழ்வின் பரிசீலனையால் நாம் பேரதிர்ச்சி கொள்வதற்கு மறுமை நாள் வரை காத்திருக்க வேண்டும் என்பதில்லை.
      அதற்கென வருந்தினும் எனது கடந்த காலத்தை நான் மாற்றிவிட முடியாது. இங்கே, இந்தப் பாதைக்கு, உம்முடனான உறவெனும் இந்த உன்னத அன்பளிப்புக்கு என்னை அழைத்து வந்ததற்கு நான் நன்றியுடன் இருக்க மட்டுமே முடியும். உம் வழியே வருவதாக நான் காணும் ஒளியும் தூய்மையும் கொண்டு, அளவற்ற அருளாளன் எனது இதயத்தின் கண்ணாடியைத் துடைத்து, அதனை மூடியிருக்கும் மேகங்களை இல்லாமலாக்கி, மேலும் மேலும் தெய்வீகப் பேரொளியைப் பிரதிபலிக்கச் செய்வான் என்று நான் நம்புகிறேன், பிரார்த்திக்கிறேன்.
      நீங்கள் பயன்படுத்திய நீர் கொண்டு அங்கசுத்தி (ஒளூ) செய்தவளாக...

அன்னா.

No comments:

Post a Comment