Sunday, June 11, 2017

பிரியமுள்ள முஹம்மதுக்கு... - part 5

3. பெண் என்று இருக்க
அன்புள்ள மீம்,
   ஒரு சிறுமியாய் நான் கன்னியாஸ்த்ரீ ஆக விரும்பினேன் என்பதை அறிந்தால் உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும் அல்லவா? 1940களில் கத்தோலியப் பள்ளிக்குச் செல்வது பற்றி, அங்கே கன்னியாஸ்த்ரீகள் எல்லாம் பேரதிகாரம் கொண்டவர்களாகவும் உள்ளங்கை பழுக்கப் பிரம்படி தரும் கொடூரராகவும் இருப்பது பற்றி என் அம்மா எனக்குச் சொல்லியிருந்த திகில் கதைகளைத் தாண்டி அவர்களைப் பற்றி ஈர்ப்பானதாகவும் அழகானதாகவும் ஏதொவொன்று இருக்கக் கண்டேன்.
Image result for modern nun dress
   நானொரு சிறுமியாய் இருந்தபோது கன்னிகாஸ்த்ரீகள் அவர்களுக்குரிய ஆடைகளின் ’நவீன வடிவத்தை’ அணிந்திருந்தார்கள். அஃது ஏதோ அஞ்சல்துறையின் சீருடை போன்றிருந்தது: ஆடுசதை தெரியும்படியான நீல நிறப் பாலியஸ்டர் குட்டைப் பாவாடைகளும் நீளம் குறைந்த தலைமுக்காடும். அதுவரை, என் அம்மா வருணித்த மாதிரிதான் அவர்களை நான் கற்பனை செய்திருந்தேன்: தரை வரை நீண்ட கருநிற அங்கிகளும், கையில் மணிமாலையும், கழுத்துடன் சேர்த்து முகத்தின் பெரும்பகுதியை மறைத்த முக்காடுமாக. அதற்கொரு பயன் இருந்ததை ஒரு சிறுமியாக இருக்கும் நிலையிலும் நான் உணர்ந்திருந்தேன். அவர்களை யாரும் அணுகமுடியாதவர்களாக அந்தச் சீருடை ஆக்கும். அக்கம்பக்கத்தில் நான் பார்த்த தாயரும் என் பள்ளியின் ஆசிரியைகளும் 1970-களின் பிற்பகுதிக் காலகட்டத்தில் அணிந்த உடைகளின் இழுவைத் துணிகளால் அவர்களது அங்கங்களின் வடிவத்தை எடுத்துக் காட்டியிருந்தது போல் அல்லாது கன்னிகாஸ்த்ரீகளின் தேகங்கள் பிறருக்குக் கிடைப்பனவாய் இல்லை. அவை, ஆண்கள் கொஞ்சுதற்கோ குழந்தைகள் தொத்திக்கொள்வதற்கோ, இன்னும் சொல்வதெனில் பிற பெண்கள் பார்ப்பதற்கோ கூட அல்ல. அன்றாட உலகிலிருந்து அவர்களின் தேகங்கள் நீக்கப்பட்டு ஓர் உயர்ந்த நோக்கிற்காக நேர்ச்சையாகியிருந்தன.
   அத்தகைய நியமனமான தனிமை அப்போதே என்னை ஈர்த்திருந்தது, பல பெரியவர்களால் நான் அத்துமீறப்பட்டிருந்த நிலையில். அத்துடன், கன்னிகாஸ்த்ரீகளைச் சுற்றியிருந்த ஒரு மர்மச்சூழலால் நான் கவரப்பட்டுமிருந்தேன். ’பாதிரியாள்’ (priestess) என்னும் சொல்லை நாம் இப்போது இழந்துவிட்டோம். எனினும், வழமையான திருமணப் பாதையிலிருந்து விலகி ஆன்மாவின் பெருவழியைத் தேர்ந்து செல்லும் ஒரு பெண்ணைக் குறிக்க அதனினும் சிறந்த சொல் ஏது?
   என் பதினான்காம் பிராயத்தில் நான் எனது கருப்பு அங்கிகளை அணியத் தொடங்கினேன். நவீன மேற்கிசைக் கூட்டத்தின் மேனிலைப் பள்ளியில் நானொருத்தி மட்டும் திருவாதிரக்களியளாய் இருந்தது என் மீது ஐயமும் அச்சமும் எழுப்பலாயிற்று. அவ்வப்போது யாரேனும் கேட்பார்கள், “நீ ஒரு சாத்தானியக்காரியா?” என்று. ஆனால் அதைவிட வேறெதுவும் உண்மைக்குத் தூரமாய் இருந்திருக்காது. அப்போதும் என் அம்மாவுடன் ஒவ்வொரு ஞாயிறும் தேவாலயத்துக்குப் போய்க்கொண்டிருந்தேன். கருணைச் சகோதிரிகளின் டி-ஷர்ட்டை நான் ஒருமுறை அணிந்து சென்று தேவாலயத்தில் முன்வரிசையில் அமர்ந்திருப்பதைக் கண்ட பாதிரியார் மிகவும் வியந்து பார்த்தபடி ஒரு கணம் தயங்கியே எனக்கு அப்பமும் பிறவும் அளித்தார். (ஏசு மற்றும் மரியாளின் சங்கிலி எனக்கு மிகவும் பிடித்தமான பொருளாயிருந்தது).
Related image
    ஒரே வருடத்தில் அல்லது கொஞ்சம் கழித்து, எல்லாம் மாறிற்று. என் அன்பே, அப்போதே நான் உம்மை அறிந்திருக்க வேண்டுமென விரும்புகிறேன். என் வாழ்வின் நங்கூரங்கள் அனைத்தும் கழன்றுகொண்ட அந்த நாட்களில் நான் பற்றிக்கொள்ள ஏதுவாக, உம்மைப்போல் தெளிவும் உறுதியும் கொண்ட ஒருவர் என் வாழ்வில் இருந்திருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். முதன்மையான பேரதிர்ச்சிகளில் ஒன்று, எனது சிறந்த தோழி தனது நண்பனுடன் பாலுறவு கொள்ளத் தொடங்கியிருந்தாள். அவள் என் பால்யகாலம் தொட்டே எனது மறுபாதியாய் இருந்தவள், என் சிந்தனைகளை முழுமை செய்தவள், தொலைபேசி சினுங்கிச் சொல்லும் முன்பே அவளின் அழைப்பை நான் உணர்ந்துகொண்டு எடுத்து விடுவேன் என்னும் அளவுக்கு இருந்தவள். ஆனால், அவள் தனது கன்னிமையை இழந்துவிட்டதாக என்னிடம் சொல்லிய கணத்தில் எங்களுக்கிடையே ஒரு பெரும் பிளவு உண்டாயிற்று. உயிரற்ற அந்த வெறுமையின் அடுத்த பக்கத்தில் அவளை மீண்டும் சந்திக்க நான் செய்த முயற்சியில் விரைவிலேயே எனது கன்னிமையை நானும் தொலைத்தேன். அந்த உத்தி வேலை செய்யவில்லை. நானும் என் நெருங்கிய தோழியும் பிரிந்தோம். நான் தனிமையிலாகி முன்பு அறிந்திராத வழிகளில் அலைக்கழிந்தேன்.
   பின்னர் வந்ததொரு ஞாயிறில் பாதிரிக்குப் பதிலாக மணியக்காரர் ஒருவர் தேவாலயத்தில் பிரசங்கித்தார். “உம் உடல் பரிசுத்த ஆவியின் ஆலயம்” என்றவர் பேசியபோது அவர் நேரடியாக என்னை நோக்கியே பேசுவதாக உணர்ந்தேன். ஓர் அறத் தீர்ப்பால் குற்றஞ்சுமத்தப்பட்டவளாக உணர்ந்தேன். அதற்கும் அப்பால், நானொரு ஒதுக்கப்பட்டவளாகவும், அதற்கும் அப்பால், மன்னிப்பிற்கே இடமற்றவளாகவும் என்னை உணர்ந்தேன். ஏனென்று கூறாது, இனி ஒருபோதும் தேவாலயத்திற்கு வரப்போவதில்லை என்று என் அம்மாவிடம் சொன்னேன்.
   என் அன்பே, இங்கே ஒரு கணம் நிறுத்துகிறேன். எத்தனை விசித்திரம் இது! கன்னிகாஸ்த்ரீ அல்லது துறவி ஆவது பற்றி என்னில் மீண்டும் மீண்டும் எழுந்துகொண்டிருந்த ஆசைகளைப் பற்றிச் சொல்லத் தொடங்கிய இந்த கடிதம் பாலியல் பற்றிய உரையாடலாக மாறிவிட்டது. ஆனால், பார்ப்பதற்கு எதிரானதாய்த் தோன்றும் அவ்விரு ஆசைகளும் எப்படி என் வாழ்வில் இணைந்திருந்தன என்பதை இதை எழுதும் இத்தருணத்தில் நான் உணர்கிறேன். பாதுகாப்பும் நெருக்கமும் ஒருங்கிருக்க இயலாது என்று நம்பிக்கொண்டு, நான் சார்ந்திருக்கத் தகுந்த உறவுநிலை என்பது இவ்விரண்டில் ஒன்றாக, அதாவது காமம், ஆன்மிகம் அல்லது உயிர்நட்பு இவற்றில் ஏதேனும் ஒன்றாகத்தான் இருக்க முடியும் என்று நான் முடிவு செய்தேன். மனித இச்சைகளின் சகதியால் அழுக்குப்படாத தூய நிலையில் இருப்பதற்கு அதுவே வழி என்று எண்ணினேன்.
   இஸ்லாத்தில் துறவு மரபு இல்லை என்பது முதலில் எனக்கு ஏமாற்றமாகவே இருந்தது. (சூஃபி கன்னிகாஸ்த்ரீ என்பதாக ஒன்று இருந்திருந்தால் நான் எப்போதோ ஒப்பமிட்டிருப்பேன்). மாறாக, இந்நாட்களில் பெரிதும் விவாதிக்கப்படுவதான திரை (பர்தா/ புர்கா/ ஹிஜாப்) இருக்கின்றது. அதனை ஒருவர் பண்பாட்டுப் புரிதலுக்கான தடையாகப் பார்க்கிறாரா அல்லது தற்காப்பிற்கான இறுதி வடிவமாகப் பார்க்கிறாரா என்பது அவர் எந்த ’நிலை’யில் இருக்கிறார் என்பதைப் பொருத்தது. ஹிஜாப் என்பது என் அடையாளத்தின் ஒரு சின்னமாக இருக்க முடியும் என்பதை நான் அறிவேன். எனினும், தனிப்பட்ட புனித இடவெளியை (personal sacred space) உருவாக்குவதே அதன் உண்மையான பணி என்று நான் உணர்கிறேன்.
Image result for the hijab's space
      தொழுகை போன்ற ஒருவரது சொந்த சமயச் சடங்குகளுக்கு அவரே பொறுப்பாளி என்பதான நிலை இஸ்லாத்தில் நான் மிகவும் சிலாகிப்பாதாகும். மதகுருக்கள் இல்லாத நிலையில் உன் சமனத்தைக் கண்டறிவதில் நீயே உனது ஆன்மிக நெறியாளராய் இருக்கின்றாய். இதுவே இஸ்லாம் என்பதொரு நடுநிலைப் பாதை என்பதை, துறவு மற்றும் கட்டற்ற துய்ப்பு இரண்டுமே கண்டனம் செய்யப்பட்டுள்ளதொரு மிதவாதம் என்பதை நான் புரிந்துகொள்ள உதவிற்று. சூரா ரூம் (குர்ஆன் அத்தியாயம்#30) சொல்கிறது, அல்லாஹ்வின் அடையாளங்களில் ஒன்று அவன் நம் அனைவருக்கும் ஜோடியைப் படைத்திருக்கிறான், “அவர்களில் நிம்மதியுடன் வதிவதற்காக”. நீங்கள் ”திருமணம் இறைநம்பிக்கையில் பாதி” என்றீர்.
   முன்பு சில உள்ளுணர்வாளர்கள் என்னிடம் சொன்னதுண்டு, முற்பிறவிகளில் நானொரு துறவியாகவும் பாதிரியாளாகவும் இருந்ததால்தான் ஆன்மிக வாழ்வு நோக்கி என் மனம் சாய்கிறது என்று. இம்முறை உன் வழி அது அல்ல என்றும் அவர்கள் சேர்த்துச் சொன்னார்கள். ஒரு வாதத்துக்காக, மறுஜென்மத்தை இஸ்லாம் மறுப்பதல், “முற்பிறவிகள்” என்பதைக் குறியீடாக எடுத்துக்கொள்வோம். ஒரு தோராயமான துறவியாக மாறி, இந்த பொருள்சார் உலகை நீங்கியொரு மறைவில் வாழும் நிலை என் வாழ்வின் கடந்த காலங்களில் நிகழவே செய்தது. அது எனக்குப் பாதுகாப்பாகப் படுகிறது. அது மீண்டும் உறுதி தந்து என்னை உயர்த்துகிறது, அது எனது வளர்ச்சிக்கான பாதையாக இல்லாதபோதும்.
   என் அன்பே, இதுவே எனது பெரும் போராட்டங்களில் ஒன்றாக இருந்துள்ளது, இவ்வுடலில் இருக்கத்தான் வேண்டும் என்பது, குறிப்பாக ஒரு பெண்ணாக உடலில் இருப்பது. எப்போதும் என்னை நான் பெரிதும் எனது மனம் மற்றும் ஆத்மாவுடன்தான் அடையாளம் கண்டுள்ளேன். இச்சமூகத்தில் பெண்களை மதிப்பிடும் பிரதான வழியான உடலழகினைப் பேணுதல் என்பது என்ன செய்வது என்பதிலோ அல்லது ஒரு குறிப்பிட்ட தருணத்தில் என்னவாக இருப்பது என்பதிலோ எனக்கு உதவியாய் இல்லை. ஆண்களை நானும் நேர்மையாகப் பாராட்டவே செய்கிறேன். ஆனால், எனது ஆண் நண்பர்கள் சட்டென்று என்னைப் புகழ்பவர்களாய் மாறும்போது அல்லது ஆர்வம் காட்டும் வேறுவகை மறைமுக பாவனைகள் தோன்றும்போது அங்கிருந்து ஓடுவதே எப்போதும் எனது உள்ளுணர்வாக இருந்தது.
   என் இதயத்தின் இனிய நண்பரே! இப்பிரச்சனையில் உமது உதவி வேண்டும் எனக்கு. இவ்வடிவில் நான் இங்கே இருப்பதற்கொரு காரணம் இருக்க வேண்டும். அது என்ன என்று உம்மால் எனக்குச் சொல்ல முடியுமா?
உம் கரம் பற்ற உம்மை நெருங்கி நகரும்,

அன்னா.

No comments:

Post a Comment