Wednesday, June 14, 2017

பிரியமுள்ள முஹம்மதுக்கு... - part 10

8. பூனையின் ஆடை
அன்புள்ள மீம்,
      நான் இஸ்லாத்திற்கு வரும் முன்பு உம்மைப் பற்றி நான் கேட்டிருந்த ஒரே கதை உமது பூனையைப் பற்றித்தான். அது உம் தொழுகையாடையில் உறங்கியிருந்தது. அதன் உறக்கத்தைக் கலைக்க விரும்பாமல் நீங்கள் உமது ஆடையின் ஒரு பகுதியைக் கத்தரித்துவிட்டீர்கள்.
Image result for prophet muhammad and cats
      எனது கலாச்சாரத்தில் உம்மைப் பற்றி உடன்பாடாகச் சொல்வதற்கு (ஒரே ஒரு முறை மட்டும்!) உள்ள உதாரணம் அதுவே என்று நான் எண்ணுகிறேன். மனித இனம் மட்டுமல்லாது அனைத்து உலகங்களுக்கும் அனைத்து உயிர்களுக்கும் நீளும் உங்களின் கருணையை விளக்கிக்கூற இது ஓர் அற்புதமான உதாரணம். உமது செய்தியின் இதயத்தில் இருப்பது கருணையே. தாகித்த நாய் ஒன்றிற்கு நீர் புகட்டுதலே சொர்க்கம் வாய்க்கப் போதுமானது என்றும் விலங்குகளிடம் கடுமை காட்டல் நரகம் உய்க்கும் என்றும் நீங்கள் சொன்னீர்கள்.
      துர்லபமாக, இக்காலக் கலாச்சாரத்தில் நாங்கள் இக்கதையின் மையப்புள்ளியைத் தவறவிட்டிருக்கிறோம் என்று நான் உமக்குச் சொல்கிறேன். உமது பூனை மற்றும் தொழுகையாடை பற்றிய இந்நிகழ்வை ஒருவர் படிக்கக் காணும் நூல் நிச்சயமாக உம்மை அல்லது உமது போதனைகளைப் பற்றிய ஒன்றாக இருக்காது. அது இஸ்லாமியச் சமூக மரபுகளை வரையறுத்த அறங்களைப் பற்றிய நூலாகவும்க்கூட இருக்காது. மனித உடனிருப்புக்குப் பதிலாகப் பூனைகளைத் தேர்ந்துகொள்ளும் நபருக்கென்று எழுதபட்ட, பூனைகளைப் பற்றிய நூலாக அது இருக்கும்.
Image result for prophet muhammad and cats
      எமது நவீன முரண்களில் எல்லாம், உம்மைக் குறித்த மிகவும் வினோதமான முரணாக இதனைப் பார்க்கவேண்டும். எனது கலாச்சாரத்தில் செல்லப்பிராணிகள் எல்லாம் ‘கூட்டாளி விலங்குகள்’ (companion animals) என்று சொல்லப்படுகின்றன. மௌன உடனுறைவே அவற்றின் பணி. அவை ஒரு ஸ்தூல இருப்புணர்வைத் தருகின்றன, இடவெளியை நம்முடன் பகிர்கின்றன, எனினும் அதில் உணர்ச்சிப் பிணக்குகளின் அபாயம் இல்லை. எனது கலாச்சாரத்தின் மக்கள் உம்மிடம் சொல்வார்கள்: ‘விலங்குகள் நியதியற்ற அன்பை வழங்குகின்றன’. இதிலொரு சிறிய திருத்தம் சொல்ல விரும்புகிறேன். விலங்குகள் நியதியற்ற ஏற்பை வழங்குகின்றன என்றே நான் சொல்வேன்.
      இதுவும் காதலைப் போன்றதேதானா? எமது நவீன உறவுகள் பலவற்றை உருவாக்கும் திட்டமிட்ட பரஸ்பர அரவணைப்புக்களை விடவும் அது பெரிதான ஒன்றாகத் தெரியலாம். விலங்குகளுக்கு நாம் திருப்பித் தருவதெல்லாம் இதற்கு நேர்மாறான ஒன்றைத்தான். சில விலங்குகளைச் சிலர் உதட்டில் முத்தமிட்டு தம்முடன் படுக்கவும் வைத்துக்கொள்கிறார்கள். பிற விலங்குகளை அச்சமூட்டி வன்கொடுமை செய்து காட்டுமிராண்டித்தனமாகக் கொலையும் செய்கிறார்கள். இதில் அறிவுக்கு ஒப்புவதாய் ஒன்றுமேயில்லை. ஆனால் என்னிடம் ஒரு கோட்பாடு உண்டு.
      ஒருவகையில், விலங்குகளின் உடல்களும் எமது உடல்களும், எனது ஆசிரியர் ஒருவர் சொல்வது போல் “சதையாடை”, கோட்பாட்டளவில் சமன்படுகின்றன. எனவே நாம் அவற்றை ஒன்றுபோலவே நடத்துகிறோம்: ஒருபக்கம் அவற்றை  அணைக்கிறோம் கொஞ்சுகிறோம் உணவூட்டுகிறோம். மறுபக்கம் அவற்றின்மீது வன்கொடுமை செய்கிறோம். இது என்ன, நம்முள் அழுத்திவைக்கப்பட்ட மிருகவுணர்வுகளை, குறிப்பாக பேராசை இச்சை மற்றும் கோபம் ஆகியவற்றை, நாம் விலங்குகள் மீதே செலுத்துகின்றோமா? ஏதோவொரு நிலையில், இதில் இடமாறிவிட்டதொரு ஆன்மிக உத்வேகமும் இயங்கிக்கொண்டுள்ளது: தனது சொந்தச் சதைச் சிறையிலிருந்து விடுதலையாகி இன்னோர் உயிரினுள் கலந்துகொள்வதற்கான ஏக்கம்.
Image result for hermit crabs
hermit crabs
      மனிதன்-விலங்கு உறவுநிலைகளின் இந்த முரண் என்னை வெகுகாலமாக ஈர்த்து வந்துள்ளது. அது எனது குடும்பத்தின் நாயும் பூனையுமா அல்லது சாலையில் நான் சவாரி செய்திருந்த குதிரைகளா அல்லது சிறுவயதில் எனது அறையில் நான் வளர்த்த துறவி நண்டுகளும் மீன்களுமா எதுவென்றறியேன், அவை அனைத்துமே ஒருவகையில் எனக்கொரு மாயாற்புதமாகத் தெரிந்தன: வாழும் சுவாசிக்கும் அழகிய மர்மங்கள். (இதோ இந்தச் சில ஆண்டுகளில் நான் குர்ஆனில் ஓர் அத்தியாயத்தைக் கண்டுவிட்டேன்: தேனீ! இறுதியாக எனக்கொரு ஏற்பு அதில் இருந்தது: பூச்சிகளுக்கும் தமது சொந்தச் சமுதாயங்கள் இருக்கின்றன என்பது மட்டுமல்ல, அவற்றுக்கே உரிய முறையிலான இறைவெளிப்பாடும் இருக்கின்றது!)
      அலட்டிக்கொள்ளாத எளிய இருத்தல் மற்றும் உடனுறைவு ஆகிய இந்தப் பண்புகளே நமது செல்லப் பிராணிகளிடம் நாம் கண்டுணர்ந்து அவற்றைப் போற்றக் காரணம் என்று நினைக்கிறேன். சில சம்பவங்களில் நீங்கள் அவற்றின் வேதனைகளை உள்ளுணர்வதைக் காண்கிறேன். தன் எஜமான் தன்னை மிகையாக வேலை வாங்குவதை ஒட்டகம் ஒன்று உங்களிடம் சொன்னது. சுலைமான் நபிக்குக் கொடுக்கப்பட்டிருந்தது போல் நீங்களும் விலங்குகளின் மொழியை அறிவீர்கள் என்று நான் இதைக் காணவில்லை. ஆனால், எவ்வுயிரின் உணர்வுகளுடனும் தொடர்புறும் வகையில் உமது இதயம் அவ்வளவு திறந்ததாய் இருந்தது என்று எண்ணுகிறேன். மதினாவில் உங்கள் இல்லத்தை (அதுவே அங்கு முதல் பள்ளிவாசலும் ஆகும்) எங்கே அமைப்பது என்பது பற்றி உமது தோழர்கள் சலசலத்ததை நினைவு கூர்கிறேன். நீங்கள் அந்த முடிவை உமது பிரியமான பெண் ஒட்டகைக்கு அளித்தீர்கள். சரியான இடத்தைப் பற்றிய உள்ளுணர்வு அதற்கு இருக்கும் என்பது உங்களுக்குத் தெரியும்.
      இதோ, பூனை பற்றிய கதை. வழமையாய்ச் சொல்லப்படும் பிரதிகள் எனக்கு ஒன்றும் சரியாய்ப் படவில்லை. உண்மையாய் நடந்ததை நான் கற்பனை செய்ய முயல்கிறேன். உமக்கொரு செல்லப் பூனை இருந்தது. எல்லோரும் அறிந்ததுதான். உமது ஆடைகளில் படுத்துறங்கும் பழக்கம் அதற்கிருந்தது. உமது மனைவியருள் ஒருவர் அது பற்றிக் குறைகூறியிருக்கலாம் அல்லது அதனை விரட்ட முயன்றிருக்கலாம். நீங்கள் குறுக்கிட்டு தமாஷாகச் சொல்கிறீர்கள்: “அந்த ஆடையா? அது இப்போது அந்தப் பூனையுடையதுதான்!”
      அதன் பின், ஆடையை நறுக்கிவிடுவதற்குப் பதில் – உம்மிடம் மிகச் சிலவே ஆடைகள் இருந்ததால் நீங்கள் அப்படிச் செய்திருப்பீர்கள் என்று என்னால் நினைக்க முடியவில்லை - ஒருவேளை நீங்கள் அப்படிச் சொல்லியிருக்கக்கூடும், அதனை இடையூறு செய்வதினும் ஆடையை நறுக்கிவிட்டுத் தொழுகைக்கு யாரேனுமொரு தோழரிடம் இரவல் வாங்கிக்கொள்ளலாம் என்பதாக. (உமது தோழர்களில் அப்படி உமக்கு விரைந்து இரவல் தருபவர் வேறு யாராக இருக்கக்கூடும், ”அபூஹுரைரா” – பூனையின் தந்தை என்று நீரே பெயர் சூட்டிய அந்த விசித்திரமான ‘பூனை மனிதரை’த் தவிர?)
Image result for abu hurairah cats
      பூனையை மடியில் வைத்துக்கொண்டு அதன் மென்முடிகளை வருடியபடி, அதன் மீசைக் கன்னங்களைத் தட்டிக்கொடுத்தபடி நீங்கள் உபதேசம் செய்வதைக் காண்கிறேன். பூனைகளை அவற்றின் தூய்மையுணர்வுக்காக நீங்கள் நேசித்தீர்கள் என்று சொல்கிறார்கள். அவற்றின் சுதந்திர சுபாவத்தையும் நீங்கள் போற்றினீர்கள் என்று நான் நினைக்கிறேன். அனைத்து உயிர்களுக்குமான (ஜின்கள் உட்பட, யாம் மறக்கவில்லை!) உமது செய்தியின் ஒரு பகுதி இறைப்படைப்புக்களின் கண்ணியத்தைக் காப்பது என்பதாகும். அவற்றின் ஆன்மா வசிக்கும் சதையுடலைத் தக்கபடி கவனித்துக்கொள்வது என்று நான் இதை விளங்குகிறேன், ஒரு துறவிநண்டு அதன் ஓட்டுக்குள் இருப்பது போல, ஸ்தூலமான அந்த அடையாளத்தினுள் அகப்பட்டுக்கொள்வதோ அல்லது ஒளிந்துகொள்வதோ இல்லாமல். உயிருடன் இருத்தலின் ஆனந்தத்தில் திளைப்பது என்பது ஆகி வருதலின் பெரும்பாடலைப் பாடுவதாகும், இப்பூமியில் இருந்தபடியே சிறகு விரித்துப் பறப்பதாகும், பெரிய திமிங்கிலம் ஒன்று தனது உடலைவிட்டுத் தானே எவ்விக் குதிப்பது போன்றதாகும். ஒருவர் தனது சுய அழகை உணர்ந்து அறிந்து நன்றியுடன் இருக்கவேண்டும் என்பதே படைப்பாளனாகிய இறைவன் நம் ஒவ்வொருவரிடமும் கோருவது என்று நான் எண்ணுகிறேன்.
      உம்மால் அது முடிந்தது அன்பே, ஆனால் முழுமையான மனிதப் பிரக்ஞையுடனும் சுயேச்சையுடனும்: பொக்கிஷமாய் இருப்பதும் அறியப்பட விரும்புவதும். அந்த வாய்ப்பை யாம் ஒவ்வொருவரும் தமக்கே எடுத்துக்கொள்வதற்கான ஊக்கமே உமது செய்தியாகும்; அல்லாஹ்வின் அளவற்ற அன்பிற்கும் ஏற்பிக்கும் அர்ப்பணமாகி வணங்குதலில் நம் முழு இருப்பையும் அவனுக்குத் தந்துவிடுவது, எதனையும் பின்னிழுத்துக்கொள்ளாமல், தொழுகையாடையின் கையைக்கூட!
      நீங்கள் போதித்திருக்கவும் உமது பாதத்தில் அமர்ந்து எனது எலும்புகள் வரை உமது குரலை உணர்ந்தபடி...

அன்னா

No comments:

Post a Comment