Friday, April 7, 2017

ஃப்ரிட்ஜாஃப் ஷுவான் கவிதைகள் - 2

Image result for frithjof schuon

அறிவாளர்

சொல்லப்படுகிறது
ஒருபோதும் மனிதன் இறைவனை அறியமுடியாது என்று
இறைவன் மட்டுமே தன்னை அறிவான் என்று
இதனை மறந்துவிடு

ஞானியுள் இறைவன் தன்னை அறிகிறான்
தூய அறிவு அனைத்துப் பித்தங்களையும் அளக்க முடியும்
கடவுள் முதல் அணு வரை

இருந்தும் அது அறிந்திருப்பது
அது சொல்வதினும் ஆயிரம் மடங்கு அதிகமே


Related image
மரியா

சொல்லாது நகர்ந்துவிடுகின்றன புனித ஏடுகள்
கன்னியின் மகத்துவத்தை
அவளது மகனின் பெருமையை மட்டுமே
அவை பேச விழைகின்றன

மேரி சொன்னாள்: ‘அவர்களிடம் மது இல்லை
அப்படித்தான் பேசிற்று
வானிலிருந்து வந்த பரிசுத்த ஆவி

ஆன்மா அவளது உடலுள் நுழைந்த்தென்று சொல்லப்படுகிறது
அவர்கள் ஒன்றாயினர்
அது அற்புதம்

மேரி, பிரபஞ்சம் முழுவதின் தாய்
ஆதியில் இருந்த தெய்வீக ஒளிச்சுடர்
ஒளிர்மை அவள், தூய்மை அவள்
இறைவனின் இருத்தல் நிறைந்தவள்

அவளில், பனித்தூய்மை
சூரியன் அன்ன பேரின்பத்துடன்
இணைகிறது

புனிதக் கன்னி, அவளேயொரு
இறை தியானமாய் இருக்கிறாள்
எனவே வானவர் சொல்கின்றனர்:
முழுக்கருணையுடன் வாழ்க

நம் இதயங்களில் மகிழ்வு நிரப்பும் இறைநாமமே
அவள் நமக்கு வார்க்கும் மது

நீ அறிந்திருக்கும் அவளின் வார்த்தைகள் மட்டுமன்று –
அவளது பேரழகின் பிரகாசப் பிரசாதமுமாம்


Image result for meditation in forest
சரணாலயங்கள்

கல்லிலொரு பிரார்த்தனை
நெடிதுயர்ந்த தேவாலயம் அதுதான்
நீண்டு கம்பீரமாய், உள் இருண்டதாய்
ஒளியை நிறப்பிரிகைகளாய் உடைக்குமொரு சாளரம்
பொன்னுருவங்களின் முன் அசைவேதுமின்றி

இஸ்லாத்தின் வழிபாட்டிடம்
வெறுமையாய் ரூபங்களேதுமின்றி
பக்தியின் முகம் மக்காவை நோக்கி
வரிசை வரிசையாய் மனிதர்கள்
நம்பிக்கையின் நறுமணத்தில்
இறைவனிடம் சரணடைந்து தொழுகின்றார்

ஆதி காலத்தின் கன்னிமைச் சரணாலயம்
கல் இல்லை விரிப்பு இல்லை
வெறுமனே காடும் வெளியும்
மலை முகடுகளும் சூரியனும் ஆழ் இரவும் மட்டும்
அவை அனைத்திலும்
பேரிறையின் வல்லமை நிறைந்ததாக

கடவுள் நமக்குத் தந்திருக்குமொரு சரணாலயம்
தொலைவிலன்று, வாழ்விற்கு மிக மிக அருகில்
விதானம் கொள் வானவரின் உயரங்களும் எங்கே?
மனிதனின் உடலில் வாழ விரும்புகிறான் இறைவன்!

Image result for maya illusion

அத்வைதம்

மாயை என்பதும் ஆத்மாவின் பிரகாசம்
ஆத்மா பிரகாசிக்கிறது, அதுவே உயர்ந்த ஒளி

உலகங்களின் சுழற்சிகள் மாயையில் உள்ளன
எனினும் அவை வெறும் தோற்ற மயக்கங்களே
அவை ஆத்மாவைத் தொடுவதில்லை

உலகங்களும் சுழற்சிகளும் தோன்றி மறைகின்றன
ஆத்மாவின் முன் எதுவும் நிலைப்பதில்லை

இடம் காலம் பொருட்களென
நீ அனுபவிப்பவை எல்லாம் வெறுங்கனவே
சில சொற்களில் இதுவொரு கோட்பாடு

எனினும் மனிதனே!
ஆத்மாவிலிருந்தொரு பொறி உன் இதயத்துள் வீழ்ந்தது
நின் ஆழத்தின் ஆழம் மாயையால் மருள்வதில்லை
அஃது ஆத்மாவே அன்றி வேறில்லை
சாந்தி ஓம்

Image result for turban of sufi
குரு

குரு பிரம்மா
ஆனால், அவர்தான் இறைவனென்று நீ
முடிவுகட்டி விடாதே

நிலாவைப் பார், அது ஒளிர்வதை
சூரியன் அல்ல அது
எனினும், அதன் பிரகாசம் சூரிய ஒளியால் வருவதே

அவதாரமும் கடவுளும் ஒன்றா?
நீ விளங்கிக்கொள்ள வேண்டும்
இதற்கான விடை
ஆம் மற்றும் இல்லை இரண்டும்தான்


to be continued... 


No comments:

Post a Comment