Wednesday, April 5, 2017

ஃப்ரிட்ஜாஃப் ஷுவான் கவிதைகள் - 1

ஃப்ரிட்ஜாஃப் ஷுவான் 1907 – 1998 காலகட்ட்த்தில் ஸ்விட்ஜர்லாந்தில் வாழ்ந்த ஜெர்மானிய ஆன்மிகவாதி. சூஃபித் துறையில் பயிற்சி பெற்ற இவர் ஈசா நூருத்தீன் அஹ்மத் அல்-மலிக்கி அஷ்ஷாதுலி என்று அழைக்கப்படுகிறார். அவரெழுதிய குறுங்கவிதைகள் சில இங்கே தமிழில்.

Related image

நுழைவாயில்

என் இதயத்திலிருந்து பாய்ந்தன எத்தனையோ பாடல்கள்
ஒருபோதும் நான் தேடியிருக்கவில்லை அவற்றை
என்னில் தூண்டப்பட்டவை அவை

தெய்வீக யாழோசை உள்ளம் கழுவி
நம்மை விண்ணுக்கு உயர்த்தட்டும்

சத்தியப் பேரொளி அன்புடன் இணைந்து
நம் தேடலில் உடன் வரட்டும்
நம் ஆத்மாக்கள் கருணை பெறுவதாகுக

முடிவிலிப் பாதை
இறைவனிடமிருந்து இறைவனுக்கு

Image result for frithjof schuon

ஆதஸ்த்ரா

விண்மீனுக்கு ஏகும் என் ஆன்மா
தணியாத ஏக்கத்தின் அழைப்பில்

யான் தேர்ந்த சத்தியப் பேரழகின் பாதையே!
ஆத்மாவில் வியாபிக்கும் இறை நினைவு

ஏக்கங்களை எல்லாம் தணிக்கும் பாடல் நீயே
கருணைப் பேரொளியே! என் நெஞ்சுள் ஒளிர்க!

இறைவனே நம் அடைக்கலம், நம் கவசம்!
அவனுடம் நீயிரு, உன்னுடன் இருப்பான் அவன்

Image result for frithjof schuon

நினைவுப் பரிசு

இறைவனின் நிலத்தில் நீ நிற்கையில்
இறைவனின் பாதையில் நீ நடக்கையில்
மறைவன பற்றி –
காற்று அகற்றிச் செல்லும் கனவுகள் பற்றி
விசனப்படாதே

நிஜத்தின் நிலம் பிழைபடாது ஒருபோதும்
ஈடேற்றத்தின் பாதை முழுதும் ஒளியும் நிம்மதியும்

பொய்ம்மைக்கு நின் விழி சாத்து
ஆன்மாவின் ஓய்வு சத்தியத்தில் மட்டும்

ஏமாறாதவன் ஆசிர்வதிக்கப்பட்டவன்
அவனொரு பாறை மீது உறுதியாக நிற்கிறான்

நின் பாதையில் திரும்பிப் பார்க்காதே
இதயத்தின் உவகை காலத்தில் தளைப்பட்டதன்று
அது வேறெப்படியும் இருக்கவியலாது

பிழைகளும் ஆற்றாமைகளும் இருக்கத்தான் வேண்டும்
மிக்க மேலானவன் நினது அடைக்கலமாய் இருக்கட்டும்
இறுதி வார்த்தை காதலினது

உண்மையும் விசுவாசமுமே
அனைத்து நன்மைகளையும் செழிக்கச் செய்யும் சக்திகள்

போராட்டம் என்பது காலத்தின் நியதி
முடிவிலியோ அமைதியைப் பாடுகிறது

உண்மையும் விசுவாசமும்
நம் இதயத்தை உருவாக்கும் ஆற்றல்கள்

ஒளியும் அன்பும்
காலத்திற்கு முன்பே

கடவுள் கேட்டிருந்த பாடல்

Image result for frithjof schuon

திரை

கனவுத் திரையுலகே!
யார் விளங்கக் கூடும் நின் லீலை?

விதியின் காற்று வீசுகையில்
அவ்வப்போது
வெறியுடன் கிளரும்,
ஆயிரம் கனவுகளால் நெய்யப்பட்ட அற்புதமே!
மருள் தேவதையின் முகத்திரையை நீக்க வல்லார் யார்?

இந்த ஆடை ஒரே சமயத்தில்
மறைக்கவும் வெளிப்படுத்தவும் செய்கிறது

ரகசியத்தை நீ காணமுடியாமல் இருக்கலாம்
ஆனால், காணா மையத்தைச் சுற்றிலும் திரளும்
வண்ணமய நிறைவுகளில்
படைத்தவனின் நாட்டம் தன்னைக் காட்டுகிறது

இதன் அறுதி அர்த்தம்தான் என்ன?
உள்ளின் நோக்கில் வெளிமை

இருத்தலின் உருவங்கள் கடந்து போகையில்
இறைநாட்டத்தால்
அவை நம்மை நம்முள் தள்ள வேண்டும்

இக்கனவிலெல்லாம்
எங்கிருந்து வந்தோம்? எங்கே செல்கிறோம்?
கேட்காதே இதை

உலகச் சக்கரம் ஏகனைச் சுற்றியிருக்கட்டும்
நாம் நம் இதயத்தில் அவனை எடுத்துச் செல்வோம்

Image result for frithjof schuon

குரு அஹ்மத்

நம்பிக்கை என்பதென்ன? நன்னடத்தை என்ன?
கல்வியின் கராரான பண்புகளா?
எவை ஆகும் எவை ஆகாதென்ற விவாதங்களா?
மகத்தானவனில் ஆத்மா ஓய்தல் வேண்டும்

குரு அஹ்மத் கூறினார்:
வெளிப்பாடுகளின் செல்வமனைத்தும்
இறைநாமத்தில் பொதிந்துள்ளது
கருணையின் ஆற்றல்கள் அனைத்தும் அதில் உள
அல்லாஹ்வின் பெயரில் ஓய்ந்திருப்பவன் பாக்கியவான்

to be continued...

No comments:

Post a Comment