Friday, June 5, 2015

...என்றார் சூஃபி - part 11

40
மூல மந்திரமான திருக்கலிமா தரும் விளக்கங்களை உரையாடிக் கொண்டிருந்தோம்.
அப்போது சூஃபி கேட்டார், “திருக்கலிமாவைக் கொண்டு எத்தனை முஸ்லிம்கள் ஞானம் அடைகிறார்கள்?”

சிந்திக்க வேண்டியதுதான். திருக்கலிமாவை ஏற்றுக் கொண்டிருக்கும் அனைவரும் முஸ்லிம்கள். ஆனால் அதன் மீதான ஆத்ம சாதனைகள் செய்து ஞானம் அடைந்தவர்களையே நாம் ‘இறைநேசர்கள்’ (அவ்லியா) என்று கூறுகிறோம்.

திருக்கலிமா என்பது உன்னதமான ஞான வாசகம். எனினும், அதனை ஏற்றுக் கொள்வதே ஞானம் அடைவதுதான் என்று சொல்ல முடியாது.

எழுத்து என்றால் என்னவென்றே தெரியாத ஒரு குழந்தையின் கையில் பேனாவைக் கொடுப்பது போன்றது அது!

எழுத்து என்பதே தெரியாத குழந்தைக்கு எழுதுவது என்றால் என்னவென்று எப்படித் தெரியும்?

பேனா தன் கையில் இருப்பதாலேயே ஒருவன் தன்னை எழுத்தாளன் என்று பீற்றிக் கொள்வது எவ்வளவு பெரிய அபத்தம்! அப்படி நினைப்பவனுக்கு அறிவு வேலை செய்யவில்லை என்றுதானே பொருள்?

”என் கையில் பேனா இருக்கிறது சரி. ஆனால் எனக்கு எழுதவே தெரியவில்லையே? எழுதுவதற்கு நான் கற்றுக் கொள்ள வேண்டுமே” என்னும் நியாயமான சிந்தனையாவது ஒருவனுக்கு வந்தால்தான் அவனுக்கு அறிவு வேலை செய்கிறது என்று சொல்லலாம்.

“திருக்கலிமாவை ஏற்றுக் கொண்டிருப்பதாலேயே ஒவ்வொரு முஸ்லிமும் மேலான ஆன்மிக விழிப்புணர்வின் தளத்தில் வாழ்கிறான்” என்று கேள்வி-பதில் கூட்டமொன்றில் பிரச்சார பீரங்கி ஜாகிர் நாயக் பேசியதாக நியாபகம். அவரின் பேச்சுக்களில் நான் மிகவும் ரசித்த நகைச்சுவை துணுக்கு இதுவே!

”மாத்திரையைப் பற்றி நாம் அறிந்திருக்கா விட்டாலும் அதை விழுங்கினால் நமக்குள் வேலை செய்யத்தானே செய்யும்” என்று உவமை சொல்லி ’அமல்கள்’ (சமயச் சடங்குகள்) செய்யத் தூண்டப்படுவதைப் பார்த்திருக்கிறேன். இது போன்ற மொக்கை உவமைகள் வெறும் தூக்க மாத்திரைகளே அன்றி வேறில்லை! (”Religion is the opium of mankind” என்று கார்ல் மார்க்ஸ் கூறியது சரிதான் என்று ஆக்கிவிடும் அணுகு முறைகளில் இதுவும் ஒன்று.)

உங்கள் கையில் உலகின் விலை உயர்ந்த பேனாவே இருக்கலாம். ஆனால் உங்களுக்கு எழுதத் தெரியாத பட்சத்தில் நீங்கள் பெருமை அடித்துக் கொள்வதில் என்ன அர்த்தம் உள்ளது?

உங்களுக்கு எழுதத் தெரியவில்லை. ஆனால் திருக்கலிமா என்னும் உன்னதமான எழுதுகோலை வைத்துக் காது குடைந்து கொண்டிருக்கிறீர்கள்! இன்னும் மோசமான நிலைமை என்னவெனில், எழுதத் தெரிந்தவர்களைக் கிண்டலடித்துக் கெக்கலிக்கும் போக்கிரித் தனத்திலும் ஊறித் திளைக்கிறீர்கள்.

குறைந்த பட்சம் கிறுக்கிப் பார்க்கும் முயற்சியில்கூட நீங்கள் இறங்கவில்லை. பேனாவின் மூடியைக் கழற்றிப் பார்க்கக்கூட இல்லை.

ஆனால், பேனாவை ’அதன் தூய நிலையில்’ அப்படியே பாதுகாத்து வருவதாக போலி மகிழ்ச்சியில் போதை ஏறிப் பிதற்றுகிறீர்கள்.

திருக்கலிமாவின் வாசகத்தை மிக எளிதாக நீங்கள் மனனம் செய்துவிடலாம். அதன் வார்த்தைகள் உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். ஆனால், அதனாலேயே உங்கள் இதயத்தில் முஹம்மதின் ஞானம் வந்துவிடாது. அதற்கு அகப்பயிற்சிகள் அவசியம்.

“நம்மில் சிரத்தையாக முயல்வோரை நமது பாதைகளில் வழிநடத்துவோம்” (29:69) என்பது இறைவாக்கு.

“திருக்கலிமாவை நீங்கள் ஏற்றுக் கொண்டீர்கள். இனி, திருக்கலிமா உங்களை ஏற்றுக் கொள்வதற்குப் பாடுபடுங்கள்” என்றார் சூஃபி.

41

“புனித இரவு வருகிறது. அதில் நாம் என்னென்ன வழிபாடுகள் செய்ய வேண்டும்?” என்று சகோதரர் ஒருவர் கேட்டார். தொடர்ந்து பலரும் பலவிதக் கருத்துக்களை முன்வைத்துப் பேசிக் கொண்டிருந்தோம்.

உபரித் தொழுகைகள், சமயச் சொற்பொழிவுகள், இறைநாம ஜெபங்கள், திருமறை ஓதல்கள், இவை எதற்குமே ஆதாரங்கள் கிடையாது என்னும் தர்க்க வாதங்கள். இப்படியாக பேச்சு வளர்ந்து கொண்டிருந்தது.

புன்னகைத்துக் கொண்டிருந்த சூஃபி பின்வரும் திருவசனத்தைச் சப்தமாக உச்சரித்துப் பேசத் தொடங்கினார்:

“ஹிய ஹத்தா மத்லஇல் ஃபஜ்ரு” (97:5)
(“சாந்தி.
அது, வைகறையின் உதயம் வரை”)

இரவு முழுவதும், விடியல் வரை, உங்கள் மனம் சலனமற்று சாந்தமாக இருக்கும் எனில், எந்த இரவு ஆனாலும் அந்த இரவு உங்களுக்குப் புனித இரவுதான்!

”சலாம்” (பேரமைதி) என்பது அல்லாஹ்வின் திருப்பெயர்களில் ஒன்று. அதாவது, அவனின் திருப்பண்பு அது.

இறைப்பண்பினை இரவெல்லாம் நீங்கள் அனுபவித்திருப்பீர்கள் எனில் அந்த இரவு புனிதமானது அல்லாமல் வேறு என்ன?

அத்தகைய இரவினைச் சாதாரணமான இரவு என்று சொல்வது இறைவனையே அவமதிப்பதாகும் அல்லவா?

அதே சமயம், மற்றவர்களுக்கு அது புனிதமான இரவாக இருக்க வேண்டும் என்பதில்லை.
நபி (ஸல்) அறிவித்துத் தந்திருக்கும் புனித இரவுகளின் பின்னணியில் அவர்களின் ஆன்மிக அனுபவங்கள் இருக்கின்றன. அந்த அனுபவ சமுத்திரத்தில் இருந்து ஒரு துளியையாவது ஒரு முஸ்லிம் அனுபவிப்பான் என்னும் கோணத்தில்தான் அந்த இரவுகள் பொதுவாக அனைவருக்கும் புனித இரவுகள் என்று சொல்லப் பட்டுள்ளன.

எவன் தன் மனத்தில் மிருக உணர்வுகள் மிகைத்தவனாக வாழ்கிறானோ அவனுக்கு மனித இரவுகளே வாய்க்காது எனும்போது புனித இரவுகள் ஏது?

புனித இரவில் என்ன செய்வது என்று நீங்கள் கேட்கிறீர்கள்.

இன்னின்ன வழிபாடுகள் செய்யுங்கள் என்று நபி(ஸல்) சொன்னவை எல்லாம் புனிதத் தன்மையை உணர்ந்து கனிந்த நபித் தோழர்களிடம் என்பதைக் கவனியுங்கள். ஒளு (அங்க சுத்தி) செய்தபின் தொழவேண்டும் என்பதைப் போன்றது இது.


ஏதாவது செய்து அதன் புனிதத்தைக் கெடுத்து விடாதீர்கள். அதன் புனிதத்தை உணர்ந்து கொள்ளுங்கள். அதுவே முதலில் முக்கியமானது.” என்றார் சூஃபி.

No comments:

Post a Comment