Monday, October 14, 2013

நாடோடி நினைவுகள் - part 6

(stray reflections of Allama Iqbal conluding part)

அலைவுறும் எண்ணங்கள்
(1917)
1
நஜீரியின் கவிதை
நஜீரியின் இந்தவொரு கவிதை வரிக்குப் பகரமாக அரை டஜன் தத்துவ முறைமைகள் என்றாலும் நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன்:
என் பாழ்நிலத்தில் எதுவும் குறைபட்டுப் போவதில்லை
பிரசங்க மேடையாகாத ஒவ்வொரு மரத்தைக் கொண்டும்
தூக்கு மேடை செய்துவிடுகிறேன் நான்
(நீஸ்த் தர் ஃகுஷ்கொ தரெ பேஷாயெ மன் கோத்தாஹி
ச்சூபெ ஹர் நஃகல் கெ மிம்பர் ந ஷவத் தார் குனம்)

(1925)
1
மெலியோரும் வலியோரும்
மெலியோர் இறைவனில் தம்மைத் தொலைக்கிறார்கள்; வலியோர் இறைவனைத் தம்மில் கண்டுபிடிக்கிறார்கள்.

2
கேள்வி
நூற்றாண்டுகளாகக் கிழக்கின் இதயமும் அறிவும் ஒரு கேள்வியில் மூழ்கிக் கிடந்துள்ளது: ‘மனிதன் இருக்கிறானா?’ இப்போது நான் ஒரு புதிய கேள்வியை எழுப்ப விரும்புகிறேன் – அதாவது கிழக்கிற்குப் புதிது – ’மனிதன் இருக்கிறானா?’


3
இஸ்லாம்
மதம் என்னும் சொல்லின் பழைய பொருளில் இஸ்லாம் என்பது ஒரு மதம் அல்ல. அது ஒரு கண்ணோட்டம். அதாவது, விடுதலை மற்றும் பிரபஞ்சத்தைப் பாதுகாத்தல் என்பதற்கான கண்ணோட்டம். அது பழைய உலகின் பார்வை முழுவதற்கும் எதிரான போராட்டம். சுருக்கமாக, அது மனிதனைக் கண்டறிதல்.

4
இஸ்லாமின் ஏகத்துவம் (தவ்ஹீத்)
இறை நம்பிக்கை மனிதனை பலவீனப்படுத்துவதாக நீஷே நினைக்கிறார். இறைக் கொள்கையை மனிதனின் நலனுக்காகப் பயன்படுத்ன் அவனை வலிமையின் ஊற்றாக மாற்றுவதே இஸ்லாமின் ஞானம் ஆகும். ஏனெனில் இஸ்லாமின் தவ்ஹீத் (ஏகத்துவம்) என்பது நடைமுறை வாழ்வில் அனைத்து அச்சங்கள் மற்றும் மூடநம்பிக்கைகளை விட்டு விடுதலை அடைவதாகும். வெறும் கருத்தாக்கமான இறை நம்பிக்கை என்பதற்கு இஸ்லாத்தில் அதிக மதிப்பில்லை.

5
சுய தியாகம்
சுய தியாகத்தைப் பற்றிப் பேசுவதற்கு முன் தியாகம் செய்வதற்கு உன்னிடம் சுயம் இருக்கிறதா என்பதை முதலில் பார். தன்முனைப்பு உள்ளவன் (Egoist) மட்டுமே சுய தியாகம் செய்ய முடியும்.


6
மனிதத்தின் மறுபிறப்பு
மனித வரலாற்றின் மிகவும் சுவாரஸ்யமான நிகழ்வுகளில் ஒன்று இஸ்லாமிய உலகில் மனிதத்தின் மறுபிறப்பாகும். சிந்தனை வயப்பட்ட சூஃபித்துவத்தால் பல நூற்றாண்டுகளாக மங்கிப்போய்விட்ட விஷயத்தில் நம் புலனை இந்நிலை கூர்மையாக்கும்; எனினும், ஐரோப்பாவின் மத்தியகாலச் சிந்தனையாளர்கள் ’பயன்பாடு’ மற்றும் ‘திளைப்பு’ ஆகியவற்றுக்கு இடையில் வேறுபடுத்திக் காட்டியுள்ளதை நாம் மறந்துவிடக் கூடாது. உச்சமான நன்மைக்கு இட்டுச் செல்லும் அனைத்தையும் நாம் ‘பயன்’படுத்திக் கொள்கிறோம். திளைப்பு என்பது இறைவனில் மட்டுமே; மற்ற அனைத்தும் பயனுக்குரியதுதான். இந்த வேறுபாட்டை ஐரோப்பா வெகு காலத்திற்கு முன்பே மறந்துவிட்டது. அதன் கட்டற்ற மனிதம் அதனை முன்னெடுத்துச் செல்லுமா என்பது சந்தேகம்தான்.

7
அறிவும் விதியும்
புறவய உண்மை என்று நாம் அழைப்பதைக் கட்டமைப்பதில் அறிவின் பங்களிப்பும் இருக்கிறது; ஆனால் விதியின் கருவறையில் இருந்து வெளிவரும் தொடர் நிகழ்வுகளின் தன்மைகள் மனிதனின் இதயத்தால் மட்டுமே முடிவு செய்யப்படுகிறது. மெலிவான மனிதனே விதியை அதன் கொடுக்கில் சந்திக்கிறான். வலிமையான மனிதனோ இன்னல்களையும் பயன்படுத்திக் கொள்கிறான். அவன் தன்னுடைய ஆன்மாவின் சக்தியைச் செலுத்துவதன் மூலம் வாழ்வின் இன்னல்களைப் புறக்கணிக்கும் கண்ணோட்டத்தை உருவாக்கிக் கொள்கிறான்.

8
மிஃறாஜ் (விண்ணேற்றம்)
இஸ்லாமில் ’மிஃறாஜ்’ (விண்ணேற்றம்) என்பது தனது சுயத்தை லேசாகக்கூட இழக்காத நிலையில் இறைவனை முகத்துக்கு முகம் தரிசிப்பதாகும். நபி (ஸல்) அவர்களைப் பற்றி முஸ்லிம் கவிஞர் மிக அற்புதமாகச் சொல்லியிருக்கும் பின்வரும் கவிதை வரிகள் மறக்க முடியாத ஒன்றாகும்:
”மூசா மயங்கி வீழ்ந்தார்
இறப்பண்பின் ஒற்றை வெளிப்பாட்டிலேயே
முஹம்மதே! நீங்களோ
சுயத்துடன் இறைவனை தரிசித்தீர்கள்
புன்னகை தவழ”
(மூசா ஸ-ஹோஷ் ரஃப்த் ப-யக் ஜல்வாயெ சிஃபாத்
தூ ஐனெ ஜாத் மீ நிகரீ தர் தபஸ்ஸுமே)


9
மனித விடுதலை
மனித விடுதலை என்னும் கோட்பாடு இறைவனின் முன்னறிவு என்பதுடன் ஒத்துப்போக முடியாது என்றே நமது இறையியலாளர்கள் பலரும் கருதினார்கள். விடுதலை மீதான நம்பிக்கை என்பது திரையிட்ட நாத்திகம் என்றே அவர்கள் பார்த்தனர். மஹ்மூத் ஷபிஸ்தரியும் அப்படியே கருதினார். ’குல்ஷனெ ராஸ்’-இன் அந்த ஆசிரியர், நியூட்டன் அனுமானித்ததைப் போன்றே, முழுமையான வரம்பற்ற சார்பற்ற காலத்தை அனுமானித்தார். காலம் பற்றிய அவருடைய அனுமானம் உண்மையாக இருக்கும் பட்சத்தில் இறைவனின் சுதந்திரமும் பறிபோய்விடும் என்பதை அவர் யோசிக்கவில்லை. ஷபிஸ்தரியின் வாதம் இன்று நிலைக்காது; ஏனெனில் இறைவன் காலத்தை ஒவ்வொரு கணமும் படைத்துக் கொண்டிருக்கிறான் என்று எண்ண இயலும். பிரபஞ்சம் என்பது திறந்த ஒன்றாக இருக்குமெனில் முன்பே இருக்கும் எதிர்காலம் என்பது இல்லை. அவ்வாறெனில், இறைவன் எதிர்காலத்தை அறிவான் என்பதும் இல்லை என்றாகும். ஏனெனில், அறிவதற்கு அங்கே ஒன்றுமே இல்லை.

10
நிகழ்காலம்

மக்கள் கடந்த காலத்தின் நினைவில் மூழ்கி நிகழ்காலத்தைத் தவிர்க்க நினைக்கிறார்கள். கடந்த காலம் முழுமையும் குவிக்கப்பட்டுள்ள ஒற்றைப் புள்ளிதான் நிகழ்காலம் என்பதை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை.

(tamaam shud - ended)

No comments:

Post a Comment