Tuesday, October 29, 2013

ரூமியின் வைரங்கள் - part 11


காதலரின் சபையைக்
காணும்போது
கடந்து போய்விடாதே
அவர்களுடன் அமர்ந்துகொள்

காதலின் அக்னியில்
கதகதப்பாய் உள்ளது உலகம்

எனினும்
தீயும் இறந்துபோகிறது
சாம்பல்களின் சகவாசத்தில்
*

காதலனைப் போல்
மெதுவாகப் பேசு என்னிடம்

இவ்வுலகில்
அரிதாக உள்ளது மென்மை

மண்ணால் படைக்கப்பட்டோரிடம்
காதலின் மந்திரத்தைச் சொல்வதும்
மிகவும் கடினம்தான்
*

நண்பர்களுடன்
வளர்கின்றன உன் சிறகுகள்

தனித்துவிடில்
காற்றில் அலையும் ஒற்றை இறகு நீ

நண்பர்களுடன்
காற்றின் கடிவாளம் உன் கையில்

தனித்துவிடில்
எல்லாத் திசைகளிலும் அலைச்சல்தான்
*

எத்தனை மகிழ்ச்சியான நாள் இன்று
துயரத்திற்கு இடமில்லை இதில்

ஞானத்தின் கோப்பையிலிருந்து
நம்பிக்கையின் மதுவை அருந்துகிறோம்

ரொட்டியும் நீரும் மட்டும்
உயிர்வாழ போதாது நமக்கு

வாருங்கள், கடவுளின் கையிலிருந்து
ஒரு கவளம் உண்போம்
*

அறிந்தவை அனைத்தையும் விட்டு
உடைத்துக்கொண்டு விலகினேன் நான்

தொலைந்து போனேன் இடமேதுமின்றி
அலைந்து திரிகின்றேன் நான்

பித்தனைப்போல்
நடனமாடுகிறேன் கைகள் தட்டியபடி

நீயின்றி நான் வாழ்வது எப்படி?
எங்குமிருக்கிறாய் நீ எனினும்
எங்குமே காணவில்லையே ஏன்?
*

உலகின் ரகசியங்களை
ள்ளி அள்ளித் தருகிறார் சூஃபி

அவரின் சொற்கள்
விலைமதிப்பற்ற அன்பளிப்பு

அன்றாட ரொட்டியை
இலவசமாய்க் கேட்கவில்லை அவர்

உயிரையே தந்துவிட்டு அமர்ந்திருக்கிறார்
எதையுமே எதிர்பாராமல்
*

உன் ஒரு முத்தம் வேண்டும்
என்றது என் இதயம்

”சரிதான், உன் உயிரே விலை”

இன்பத்தில் துள்ளுகிறது இதயம்
விலையைப் பற்றி யாருக்கு அக்கறை?
*

எந்த வேடத்திலும்
இறைவன் அறிவான் உன்னை

நீ பேசாத சொற்களையும்
கேட்கிறான் அவன்

பேச்சுத் திறமையால்
தூண்டப்படுகிறார்கள் எல்லோரும்

ஆனால் நானோ
மௌனத் தலைவனின் அடிமை!
*

’என் கண்களின் விஷயம் என்ன?’
என்றேன்
கண்ணீரால் அவற்றை நிறைப்பேன்

‘என் இதயத்தின் விஷயம் என்ன?’
என்றேன்
துயரத்தால் அதனை உடைப்பேன்

’என் உடலின் விஷயம் என்ன?’
என்றேன்
நானே அதனைச் சிதைப்பேன்
*

காதலில் பேரம் இல்லை
தேர்ந்தெடுப்பவன் நீ அல்ல அதில்

காதல் ஒரு கண்ணாடி
அதில் நீ முகம் பார்க்கும்போது
உன் சுயமே அதில் பிரதிபலிக்கின்றது
*

சிறிது கால நோன்பும்
தூய்மை செய்கிறது உன்னை

உள்ளத்தின் தூய்மையுடன்
சொர்க்கத்திற்குள் நுழைவாய் நீ

ஒளியாய் மாற
மெழுகுவத்தி போல்
நோன்பில் எரி

ஒவ்வொரு கவளமும்
உன்னை மண்ணில் பிணைக்கும்
சங்கிலியின் கண்ணி
*

உன் காதலால் தூண்டப்பட்டு
இரவில் ஒரு மெழுகுவத்தியாய்
சுடர்விடத் தத்தளிக்கிறேன்

எனினும் எனினும்
என்னை மீண்டும் மீண்டும் கேட்கிறாய்
‘ஏன் இந்த முறையீடு?’
*

உன்னைக் காண முடியாத நெருக்கத்தில்
என்னுடன் இருக்கிறாய் நீ

ஒரு மூடனைப் போல்
சுற்றிலும் தேடியிருந்தேன் உன்னை

உன் தீண்டல் தொடாதபடி
எத்தனைப் போர்வைகளால் சுற்றப்பட்டுள்ளேன்
என்னிதயம் தேம்புகிறது, ஆறுதலின்றி
*

வலியில் மறைந்திருக்கும்
நிவாரணம் நீ

கோபத்திலும் ஏமாற்றுதலிலும் மறைந்துள்ளன
உன் கருணையும் நம்பகமும்

விண்ணில் மட்டும் இருப்பவனல்ல நீ
மண்ணில் எங்கெங்கும் காண்கிறேன்
உன் காலடிச் சுவடுகள்
*

கருணை என் இதயத்தை நிறைக்கும்போது
ஆசைகளையெல்லாம் விட்டு விடுதலையாகி
மண்ணைப் போல்
ஓசையற்று அமர்கிறேன் நான்

என் மௌனத்தின் இடிமுழக்கம் பரவுகிறது
இப்பிரபஞ்சம் எங்கும்
*

ராஜாளி போல் முனைப்புக் கொள்
அட்டகாசமாய் வேட்டையாடு

சிறுத்தை போல் கம்பீரம் கொள்
போராடி வெற்றி பெறு

குயில்களுடனும் மயில்களுடனும்
நேரத்தை வீணடிக்காதே

ஒன்று வெறும் சப்தம்
மற்றொன்று வெறும் நிறம்
*

தூய முழுமை காதல்,
தூய முழுமை!

மாயத் தோற்றம் உன் மனம்,
மாயத் தோற்றம்!

இக்காதலொரு மகத்துவம்,
அடடா, மகத்துவம்!

இந்நாள் இணைதலின் நாள்,
நம் இணைவின் நாள்!
*

பாலைவனத்தில்
வழிகாட்டிப் பலகைகள் ஏதுமில்லை
விண்மீன்களே திசை சொல்கின்றன
பயணக்குழுவிற்கு

நிராசையின் இருளில்
நம்பிக்கை மட்டுமே ஒளி

எனினும் என் அன்பே,
உன் வாழ்க்கையின் சோலையில்
பேரிக்காய் மரம் உனக்கு
பேரீச்சங்கனிகளைத் தரும் என்று
நம்பிக்கை வைக்காதே
*

வெறுமையாய் இருந்தேன் நான்
மலையினும் வலியவன் ஆக்கினாய் என்னை

பின் தங்கினேன் நான்
முன்னுக்குத் தள்ளினாய் என்னை

சிதறிப்போயிற்று என் இதயம்
முழுமையாக்கினாய் அதனை நீ

நானே என்னைக்
காதலிக்கத் தொடங்கினேன்!
*

என் இதயம், என் நம்பிக்கை, என் பணி
எனதனைத்தையும் அர்ப்பணித்து
என்னில் திளைத்திருக்கிறேன்

“கொடுப்பதற்கு உன்னிடம்
இத்தனை இருப்பதாய்
நினைக்கின்ற நீ யார்?
எங்கிருந்து வந்தாய் என்பதை
மறந்துவிட்டவன் போலும் நீ”
என்றாய்
*

உன்னைக் கைவிட்டு
ஏக்கத்தின் வலியில்லாமல்
வாழ முயன்றேன்

உனக்கான தகிப்பை விட்டு
வெறுமையாகிவிட முயன்றேன்

இப்போது தெரிந்துகொண்டேன், காதலனே!
நிஜ மனிதனாய் இருந்திருப்பின்
முயன்றிருக்க மாட்டேன் என்று
*

என் தேடலில்
குழம்பி ஓய்வின்றித் தவிக்கிறேன்

தீயில் இடப்பட்டதாய்
பிரிவின் துயரத்தில் நைகிறது மனம்

சிக்கித்தான் இருக்கவேண்டும்
இந்தப் போராட்டத்தில்
“நீயும் நானும்” என்பதைக்
கடக்கும் வரை
*

என் வேலையைக் கைவிட்டுத்
தொழிலையும் துறந்துவிட்டேன்
மாறாக,
கவிதை எழுதுகின்றேன்

என் பார்வை என் இதயம் என் வாழ்க்கை
எல்லாம் அவனுடையதே
மூன்றையும் ஒன்றாக்கிவிட்டேன்:
காதல்

*

No comments:

Post a Comment