Thursday, October 24, 2013

ரூமியின் வைரங்கள் - part 10


துக்கங்களுடன் ஒவ்வொரு நாளையும்
பின் தங்க விட்டுச் செல்
பாய்ந்தோடும் ஒரு நதியைப் போல்

நேற்றென்பது கடந்துவிட்டது
அதன் கதையும் முடிந்துவிட்டது

புதிய விதைகள் முளை விடுகின்றன இன்று
*

உன் பாதப் புழுதியில் கிடக்கிறேன்
உன் கூந்தலின் நெளிவுகளில்
சிக்கியுள்ளது என் இதயம்
போதும் போதும் என்றாகிவிட்டது
உன் உதடுகளைக் கொண்டு வா அருகில்
ஒரு முத்தத்தால் என் உயிரை விடுதலை செய்
*

அல்லும் பகலும்
காதலர்கள் மது குடித்து
மனதின் திரைகளைக் கிழித்தெறிகின்றனர்
காதலின் மதுவால் போதையுறும்போது
உடலும் உள்ளமும் உயிரும்
ஒன்றாகிவிடுகின்றன
*

நேற்றிரவு காதலன் இருந்தான்
நிலா தோற்கும் அழகாக
சூரியனை விடவும் சுடர்பவனாய்

என் அறிவிற்கு எட்டாததாய்
இருந்தது அவனின் அரவணைப்பு

பிறகு நடந்ததெல்லாம்
சொல்வதற்கில்லை நான்
*

உன் பாதையில் நடந்து
தனக்குத் தானே மரணிப்பவன்
வாழ்வை அடைகிறான்

“போதையேறி உன்னை இழக்காதே”
என்கிறாய் நீ

உன் மதுவை அருந்தியவன்
சுதாரிப்புடன் இருப்பது எங்கே?
*

ஞானத்தின் ஆயிரம் படிகளுக்கு அப்பால்
நன்மை தீமை என்பதை விட்டும்
விடுதலை ஆகியிருப்பேன்

திரைகளுக்கு அப்பால்
அத்தனை மகத்துவமும் அழகும்
அடைந்திருப்பேன்

என்மீது நானே காதலாகிப் போகும்படி!
*

செல்ல இதயமே!
நியாயமாய் இல்லை நீ
காதலில் வீழ்கிறாய்
பின்பு வாழ்வைப் பற்றிப் புலம்புகிறாய்
கள்ளமாய்த் திருடுகிறாய்
பின்பு சட்டத்திற்கு அஞ்சுகிறாய்
காதலில் இருப்பதாய்ச் சொல்கிறாய்
பின்பு ஊராரின் பேச்சு பற்றிக் கவலை ஏன்?
*

சுடர் ஏற்றப்படக் காத்திருக்கும்
ஒரு மெழுகுவத்திதான் இதயம்

காதலனை விட்டுப் பிரிந்ததாய்
மீண்டும் முழுமையாக ஏங்குகின்றது அது
எனினும் நீ வேதனையைப்
பொறுத்துக்கொள்ள வேண்டும்

காதலை நீ கற்க இயலாது
ஒரு பாடத்தைப் போல்

காதல் வருவதெல்லாம்
கருணையின் சிறகுகள் மீதே!
*

அறிவின் ஊற்றான அவனிடம்
கெஞ்சினேன் நேற்றிரவு
உலகின் ரகசியத்தைச் சொல்லும்படி

மென்மையாய் நயமாய் என் காதில் சொன்னான்
“சப்தமிடாதே
பேசக்கூடியதல்ல ரகசியம்
அது மௌனத்தினுள் மறைக்கப்பட்டுள்ளது”
*

காதலே கிழக்கின் ரஸவாதம்

மேகங்களைப் போல் அதனுள்
மின்னல்கள் ஆயிரம் மறைந்துள்ளன

என்னுள்ளே ஆழத்தில்
அவனது மகத்துவத்தின் பெருங்கடல்
அசைகின்றது

அதிலிருந்து வெளிப்படுகின்றன
படைப்புக்கள் எல்லாம்
*

“மிகவும் சிறியது என் இதயம்
எப்படி நீ அதன் மீது
இத்தனை பெரிய சுமைகளை வைக்கிறாய்?”
என்றேன்

“உன் கண்கள் அதைவிடச் சிறியவை
ஆனால் அவை
பிரபஞ்சத்தையே பார்க்கின்றன அல்லவா?”
என்றான்

*

No comments:

Post a Comment