Monday, September 30, 2013

ரூமியின் வைரங்கள் - part 6


ஒவ்வொரு தேய்ப்பிற்கும்
எரிச்சல் அடைகிறாய் எனில்
எப்படி மெருகேறுவாய் நீ?


உண்மையின் பூ
முகை அவிழ்கிறது
முகத்தில்


ஒருபோதும் நம்பிக்கை இழக்காதே
என்னருமை இதயமே!
உன் பார்வைக்கு அப்பால்
மறைந்துள்ளன
அதிசயங்கள் ஆயிரம்!


உன் முன்னே விரிகின்ற
கதைகளைக் கொண்டு
களித்திருக்காதே
உனது தொன்மத்தின்
உட்பொருளைத் திற!


எண்ணங்களைக் கடந்து பார்
இக்கணத்தின் இன்பத்தேன்
அருந்துவாய் நீ


உன் ஒளியில் கற்கிறேன்
காதலிக்கும் கலை

உன் அழகில் கற்கிறேன்
கவிதைகள் எழுத

யாருமே உன்னைப் பார்க்காத
என் நெஞ்சினுள் ஆடுகிறாய் நீ

சில நேரம் பார்க்கிறேன் நான்
அந்தப் பார்வைதான்
இந்தக் கவிதை ஆகிறது



இவ்வளவு மனத்துயர் ஏன்?
இவ்வளவு வேதனை ஏன்?
எக்கச்சக்க எண்ணங்களில்
சிக்கியுள்ளார்கள் எல்லோரும்


தட்டிக்கொண்டே இரு
உள்ளிருக்கும் ஆனந்தம்
ஜன்னல் திறந்து
மெதுவாய் எட்டிப் பார்க்கும்
வெளியே யாரது? என்று


பொறுமையின் செவிகளால் கேள்
கருணையின் கண்களால் பார்
காதலின் மொழியால் பேசு

எங்கு நீ நின்றாலும்
அவ்விடத்தின்
ஆன்மா ஆகு


எனது முதற் காதலின் கதையை
நான் கேட்ட நிமிடத்திலிருந்து
உன்னைத் தேடத் தொடங்கினேன்
அதுதான்
எத்தனைக் குருட்டுத்தனம்
என்பதறியாமல்

காதலர்கள்
முடிவில் எங்கோ சந்தித்துக் கொள்வதில்லை
நெடுகிலும்
இருக்கின்றார்கள் ஒருவரில் ஒருவர்


நன்மை தீமை எனும்
நினைவுகளுக்கு அப்பால்
உள்ளது ஒரு வெளி

உன்னை
அங்கே சந்திக்கிறேன்

அந்தப் புல்வெளியில்
ஆன்மா அமர்கையில்
உலகம் பற்றிப் பேச
ஏதுமின்றிப் போகிறது

மொழி, கருத்துக்கள்,
’ஒருவருக்கொருவர்’ என்பதும் கூட
அர்த்தப் படுவதில்லை அங்கே


கவலைப்படாதே!
நீ இழக்கும் எதுவும்
வேறொரு வடிவில்
வந்து சேர்கிறது உன்னை


உண்மையில் நீ நேசிப்பதன்
ஆழ்ந்த ஈர்ப்பில்
சப்தமின்றி உன் ஆன்மா
இழுக்கப்படுவதை உணர்

வழிகெடுக்காது உன்னை
ஒருபோதும் அது


No comments:

Post a Comment