Thursday, September 26, 2013

ரூமியின் வைரங்கள்


(செப்டம்பர் 30. மௌலானா ரூமியின் பிறந்த நாள். பிரபஞ்சக் குடிலில் இன்றிலிருந்து கொண்டாட்டம் ஆரம்பம்)



உள்ளார்ந்த மென்மை
ரகசியக் காயத்தைக் கண்டடையும்போது
வேதனையே பாறையைப் பிளந்துவிடும்
ஆஹ்! அப்போது மெல்ல மெல்ல

வெளிப்படட்டும் ஆன்மா!


காதலின் மாபெரும் அருட்கொடை
தொட்டதை எல்லாம் புனிதமாக்கிவிடும்
அதன் ஆற்றல்தான்


நான் உனது
என்னையே என்னிடம்
திருப்பித் தராதே!



அகத்தில் காதலின்
தீயைப் பற்ற வைத்து
எண்ணங்களை
எரித்துத் தள்ளு




இது உன்னுடைய பாதை
உன்னுடையது மட்டுமே
உன்னுடன் நடக்கலாம் பிறர் அதில்
உனக்காக நடக்க முடியாது எவரும்




அவ்வப்போது வருகிறது ஒரு நேரம்
காதலுக்கு அடிபணிவதைத் தவிர
வேறெதுவும் அர்த்தமுடையதல்ல அப்போது

அப்படியே செய்!


ஒவ்வொரு கணமும்
உளி கொண்டு வடிவமைக்கிறேன்
என் விதியை
என் ஆன்மாவின்
தச்சன் நானே!


நடு வழியே
ஞான வழி



இறைக்காதலுக்கு வெளியே
ஒவ்வொரு காதலும் துன்பமே


உன் வாழ்வில்
தீப்பிடிக்க வை
உன் தழல்களுக்கு

ஊதி விடுவோரைத் தேடு


பறவைகள் பாடுவதுபோல்
பாட விரும்புகிறேன் நான்
யார் கேட்கிறார்கள்
அவர்கள் என்ன நினைக்கிறார்கள்
என்று கவலைப்படாமல்


வேதனை ஓர் அன்பளிப்பு
அதில் உள்ளது
மறைவான அருள்


மௌனமே
இறைவனின் மொழி
மற்றதெல்லாம்
மோசமான மொழிபெயர்ப்புக்களே!


இதயத்திலிருந்து இதயத்திற்கு
வாசல் இருப்பதாய்ச் சொல்கிறார்கள்
கதவினால் என்ன பயன்
சுவர்கள் இல்லாதபோது?


புதிய மொழி பேசு
உலகம்
புத்துலகம் ஆகட்டும்


அறிவிற்கு விளங்காத
விசயங்களைக் கேட்பதற்கு
அதற்கேயான செவிகள்
அருளப்பட்டுள்ளது ஆன்மா

2 comments:

  1. ஆஹா.. பலமுறை ரசித்து வாசித்துக்கொண்டே இருக்கின்றேன். நன்றி சகோ, பகிர்விற்கு

    ReplyDelete
  2. வாசிக்க வாசிக்க இனிமை குறைய வில்லை.

    ReplyDelete