Tuesday, June 18, 2013

ஒரு சூஃபியின் டைரி


சூஃபி குரு ஒருவருடனான சகவாசத்தில் சீடர்கள் அடைந்த அனுபவங்களைத் தொகுத்து ஒரு நாவலாக எழுதினார், அந்தச் சீடர்களில் ஒருவரான நாகூர் ரூமி. ‘திராட்சைகளின் இதயம்’ என்ற அந்த நாவலைப் படித்துவிட்டு, ‘இதே போல் நீயும் உன் அனுபவங்களைப் பதிவு செய்யலாமே’ என்று பேரா.யூனுஸ் ஒருசமயம் என்னிடம் சொன்னார். இதுவரை அதற்கான முனைப்பு என் மனத்தில் எழவில்லை.

சூஃபிகளின் உலகில் கனவுக்கு முக்கியமானதொரு இடம் உண்டு. சாதகனின் ஆன்மிக முன்னேற்றத்தை அளக்கும் அத்தியாவசியமான கருவி அது என்றால் மிகை அல்ல. உங்கள் கனவுகள் நீங்கள் யார் என்பதைக் காட்டும். உங்களுக்கே தெரியாத உங்களை! ’திராட்சைகளின் இதயம்’ நாவலில் கனவு ஒரு முக்கியமான அடிச்சரடாக நெடுகிலும் வருவதைக் காணலாம். கனவுலகம் பொய்யுலகம் அல்ல. இவ்வுலகை விடவும் இன்னும் நிஜமானது. (ஆனால கனவுகள் எல்லாமே நிஜமானவை என்று சொல்லிவிட முடியாது. இவ்வுலகில் சிலர் போதையாலோ மன-ப்ரம்மையாலோ ‘Hallucinations’ - பொய்த் தோற்றங்களைப் பார்ப்பதைப் போல் பலரும் கனவுலகிலும் பொய்த் தோற்றங்களையே கண்டு வருகிறோம்.)

சூஃபிகள் தம் அனுபவங்களைப் பதிவு செய்து எழுதியதாக அமைந்த இரண்டு நூற்களைச் சமீபத்தில் படித்தேன். இரண்டிலுமே கனவுக்காட்சிகள் முக்கியமாகச் சொல்லப்பட்டிருந்தன.
‘ஆரணி பாவா’ என்று அழைக்கப்பட்ட எம்.ஜே.முஹம்மது கமாலுத்தீன் பாகவீ (ரஹ்) அவர்களின் ஃகலீஃபா (பிரதிநிதி) ஹாஜி.பி.கே.ஷாஹுல் ஹமீது அவர்கள் எழுதிய ‘மல்பூஜாத்தே கமாலிய்யா’ என்பது அவற்றில் ஒன்று. தான் கண்ட கனவுகளையும் ஆரணி பாவா தனக்கு எழுதிய கடிதங்களையும் இந்நூலில் ஃகலீஃபா அவர்கள் தந்திருக்கிறார்.
உதாரணத்திற்கு ஒரு சுருக்கமான கனவு:

“அன்று இரவு கனவில் ஆரணி ஹஜ்ரத் கிப்லா அவர்களின் வீட்டில் வராண்டாவில் எனக்கு டிஃபன் கேரியரில் சாப்பாடு கொடுக்கப்பட்டு சாப்பிட்டுக் கொண்டு இருக்கிறேன். கனவு முடிந்து விடுகிறது. எனது மனதில் அப்போது விளக்கம் கொடுக்கப்படுகிறது. எதைக் கேட்டாலும் ஷைகுவிடம்தான் [குருவிடம்தான்] கேட்டு பெறவேண்டும் என தெளிவான விளக்கம் கிடைக்கிறது.” (பக்கம்:58)

மற்றொரு நூல் “THE UNVEILING OF SECRETS Diary of a Sufi Master”. இந்த சூஃபி குருவின் பெயர் ருஸ்பிஹான் பக்லீ (Ruzbihan Baqli). 12-ஆம் நூற்றாண்டில் அரபி மொழியில் எழுதப்பட்ட இந்நூலினை 21-ஆம் நூற்றாண்டில் ஆங்கிலமாக்கித் தந்திருக்கிறார் கார்ல் எர்ன்ஸ்ட் (Carl W.Ernst). இவர் வட-கரோலினா பல்கலைக்கழகத்தின் சமயவியல் துறையில் இஸ்லாமியப் பேராசிரியராகப் பணியாற்றி வருபவர். சூஃபித்துவத்தில் ஈடுபாடு கொண்ட அறிஞர்.

Carl W.Ernst

இருக்கட்டும். யார் இந்த ருஸ்பிஹான் பக்லீ?

சூஃபித்துவம் பற்றி ஓரளவு அறிந்தவர்களுக்கும் இப்பெயர் புதிதாக இருப்பதில் வியப்பில்லை. கார்ல் எர்ன்ஸ்ட் தன் முன்னுரையில் சொல்வதைப் கேளுங்கள்: “மாபெரும் பாரசீக சூஃபியான ஜலாலுத்தீன் ரூமியின் கவிதைகள் ஆங்கில வழி இப்போது பெரிதும் பிரபலமடைந்து வருகின்றன. ஆனால், இன்னமும் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் பெயர் அறியப்படாத முக்கியமான சூஃபிகளின் ஒரு பட்டியலே இருக்கிறது. அத்தகைய சூஃபிகளில் ஒருவரே ஷீராஸ் நகரில் வாழ்ந்த அற்புத ஞானியான ருஸ்பிஹான் பக்லீ (இறப்பு: கி.பி.1209). அவருடைய காலத்திலும், அதன் பின் சில நூற்றாண்டுகளிலும், ருஸ்பிஹான் சூஃபி மரபின் ஒரு முக்கியமான ஆளுமையாக மத்திய ஆசியாவிலும் இந்தியாவிலும் அறியப்பட்டிருந்தார். பாரசீக மகாகவிகளுள் ஒருவரான ஹாஃபிஸ் (இறப்பு: கி.பி.1389) ருஸ்பிஹானின் குடும்பத்தினர் உருவாக்கிய சூஃபி நெறியைச் சார்ந்தவரே. இறப்பிற்குப் பின் ருஸ்பிஹானின் புகழ் அவரின் சொந்த ஊரில் தேய்ந்து மறைந்தது. ஷீராஸில் உள்ள அவரின் அடக்கத்தலம் பாழடைந்தது. சமீப காலங்களில் அவரின் எழுத்துக்கள் ஈரான், இந்தியா, துருக்கி மற்றும் ஐரோப்பாவைச் சேர்ந்த அறிஞர்களின் சிறிய குழுவால் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டு அரபியிலும் ஃபார்ஸியிலும் அவர் எழுதியவை பதிப்பிக்கப்பட்டுள்ளன. 1972-ல் ஈரான் அரசின் தொல்லியல் துறை அவருடைய அடக்கத்தலத்தைப் புதுப்பித்தது. (1996-ல் அவ்விடம் செல்லும் பேறு அடியேனுக்குக் கிட்டியது.)”

Interlude: On a personal note

இந்த நூலை நான் கல்லூரி மாணவனாக இருந்தபோது (1999) சென்னை லேண்ட்மார்க்கில் பார்த்தேன். அப்போதே அதை வாங்க ஆசையாக இருந்தது. ருஸ்பிஹான் என்ற பெயரே மனதில் ஒருவித பரவச ருசியாகப் பட்டது. ‘அடடே இவர் நம்மாள்’ என்பது போன்ற ஒரு உணர்வு. அப்போது நூலின் விலை ரிலேட்டிவ்லி என் நிலைமைக்கு டைனோசர் விலையாக இருந்ததால் பலமுறை கையில் எடுத்து அழகு பார்த்துவிட்டு வைத்துவிட்டு வருவேன். அக்டோபர் 2011-ல் நூல் என் வீட்டுக்கே வந்துவிட்டது! இதோ, மே-ஜூன் 2013-ல் வாசித்துவிட்டேன். ஆனால் அப்போது ஒரு எண்ணம் இருந்தது, எனக்கொரு மகன் பிறந்தால் ருஸ்பிஹான் என்று பெயர் சூட்ட வேண்டும். 2004-ல் நிக்காஹ். 2005-ல் மகன் பிறந்தான். என்ன பெயர் சூட்டலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தோம். எனக்கிருந்ததைப் போலவே என் சகதர்மினிக்கும் மனத்தில் ஒரு பெயர் (அல்லது சில பெயர்கள்) இருக்கும் அல்லவா? நான் அவளிடம் கேட்கிறேன். என்ன சொன்னாள் தெரியுமா? ருஸ்பிஹான்! இந்தப் பெயர் எங்கிருந்து அவளுக்குத் தெரிந்தது என்று எனக்கு ஒரே வியப்பாக இருந்தது. அவளிடமே கேட்டேன். “எங்கேயோ பார்த்தது. ஆனால் இந்தப் பெயர் எனக்கு ரொம்பவும் பிடிச்சிருக்கு” என்றாள். அது ஒரு சூஃபி மகானின் பெயர் என்பதெல்லாம் அவளுக்குத் தெரியவே தெரியாது.

ஆனால் அந்தப் பெயரை என் குட்டனுக்குச் சூட்ட முடியாமல் போனது. காரணம் என்ன தெரியுமா? இங்கே முஸ்லிம்கள் வாயிலேயே பல அரபி & பாரசீகப் பெயர்கள் உருமாறித் தவிக்கின்றன. அதைக் கருத்தில் கொண்டு என் சின்னம்மா ஆட்சேபித்துவிட்டார்: “வேண்டாம்ப்பா. ’ஜுஜூப்பி கான்’னு சொல்லிருவாங்க”.
Interlude ends.

ருஸ்பிஹானின் வரலாற்றுக் குறிப்பை மேலே கண்டோம். அவருடைய ஆன்மிக ஆளுமை பற்றி டாக்டர். ஜவ்வாத் நூர்பக்‌ஷ் எழுதியிருப்பதை அப்படியே தமிழில் தருகிறேன்:
”பனிரண்டாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஷீராஸின் அருகே பாஸா என்ற இடத்தில் ருஸ்பிஹான் எனப் பெயரிய ராஜாளிப் பறவை ஒன்று பிறந்தது. இறை உள்ளமையின் வானில் அப்பறவை எந்த அளவு உயரே சென்றது எனில் தன் முன்னோர்களை எல்லாம் மிகைத்துவிட்டது. பாதையின் பரிபாஷை படி, ஜுனைத் அவர்களை அறிவின் சூஃபித்துவத்திற்கு அரசர் என்று சொல்கிறோம் என்றால், காதலின் சூஃபித்துவத்திற்குத் தலைவர் என்று ருஸ்பிஹானைக் கூறலாம்.

காதலின் அனுபவத்திற்கும் அறிவின் பயிற்சிக்கும் உள்ள வேறுபாடு விண்ணுக்கும் மண்ணுக்கும் உள்ள வேறுபாடு போன்றது என்பது தெளிவு. ஃகுராசானின் மாபெரும் சூஃபி குருமார்கள் சூஃபித்துவக் காதலின் விதைகளை நட்டு வைத்தார்கள். ராபியா, ஹல்லாஜ், ஷிப்லி மற்றும் பிறர் அது ஒரு மரமாக வளரும் வரை நீர் பாய்ச்சினார்கள். அந்த மரம் ருஸ்பிஹானின் ஆன்மிக எழுச்சியால் கனிகள் கண்டது.

சூஃபித்துவத்தில் ருஸ்பிஹான் சொன்ன கருத்துக்கள் மிகவும் ஆழமானவை. எதுவரை எனில், அவருக்குப் பின் சொல்லப்பட்டவை எல்லாம் அவர் சொன்ன கருத்துக்களுக்கான அடிக்குறிப்புக்களாகவே அமைந்தன! அவரின் பல கருத்துக்கள் சூஃபிகளிலேயே பலருக்கும் புரிந்துகொள்ள இயலாத நிலையில் இருந்ததால் அவர் ‘ஃபார்ஸின் பரவசப் பேச்சாளர்’ (ஷத்தாஹ்-இ-ஃபார்ஸ்) என்று அழைக்கப்பட்டார். அவரின் அகப்பார்வை எட்டிய மேலான படித்தரங்களுக்குச் செல்ல நாடும் யாரும் அவரின் எழுத்துக்களைப் படித்துப் பார்க்க வேண்டும். அவரின் எழுத்துக்களைப் படிப்பவர் கண்மூடி நம்பிக்கைகளின் நூலகங்களைக் கொளுத்திவிடுவார் என்பது திண்ணம்” (டாக்டர். ஜவ்வாத் நூர்பக்‌ஷ், லண்டன், 3 ஜூலை 1996)

இந்த நூலைப் பற்றி சில அறிஞர்கள் தெரிவித்துள்ள கருத்துக்கள் பின்-அட்டையில் உள்ளன. ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் இந்தோ-முஸ்லிம் பண்பாட்டியல் பேராசிரியையாக இருந்த டாக்டர்.அன்னிமேரி ஷிம்மல் சொல்கிறார்: “இந்த நூல் நம் முன் நறுமண ரோஜாக்களால், வியப்பூட்டும் துணிச்சலான தரிசனங்களால் ஆன ஓர் உலகைத் திறந்து வைக்கிறது. அதனை விளக்கியிருப்பவர், இஸ்லாத்தின் மெய்ஞ்ஞானக் காதல் துறையின் மாபெரும் ஆளுமைகளில் ஒருவர், ருஸ்பிஹான்.” இப்படி இவர் சொல்லியிருப்பதை அடியேன் வழிமொழிகிறேன். குறிப்பாக, visions of incredible boldness என்று சொல்லியிருப்பதை. நூலைப் படித்துப் பார்த்ததில் ஒரு கழி கொண்டு பிடரியில் அடித்தது போல் கிறுகிறு என்று இருக்கிறது!

ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் இஸ்லாமியத் துறையின் பேராசிரியராக இருக்கும் சையத் ஹுசைன் நஸ்ரு சொல்கிறார்: “அழகான எளிமையான ஆங்கிலத்தில் பெயர்க்கப்பட்டுள்ள இந்த அழகிய செவ்வியல் இலக்கியமான ஆன்மிக சுயசரிதை இஸ்லாமியச் சிந்தனையாளர்களுக்கு மட்டுமல்லாது, ஆன்மிக வாழ்வு பற்றி மெய்யாகவே அக்கறை கொண்டுள்ள எவரையும் ஈர்க்கும்.” (...appeal not only to scholars of Islamic thought, but also to anyone seriously concerned with the life of the spirit.) அடியேனுக்கு இந்நூல் எவ்வாறு சீரியஸ்லி கன்சர்ன் ஆனது எனில், ருஸ்பிஹான் அசாத்திய வீராப்புடன் சொல்லிச் செல்லும் தரிசனங்களின் நிழலாவது என் மீது விழாதா என்று ஏங்க வைத்துவிட்டது.


இனி ருஸ்பிஹானின் நூலுக்குள் நுழைவோம்.

(to be continued)

2 comments:

  1. மாஷா அல்லாஹ்.வசீகரமான துவக்கம். தொடருங்கள்.ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன்.

    பி.கு. பெரியோர்களின் அடக்கஸ்தலங்கள். அவர்களின் இருப்பின் அடையாள சின்னங்களாகவும் விளங்குகிறது.

    ReplyDelete