Sunday, October 3, 2010

புனித நீர்!

பத்து வருடங்கள் ஓடிவிட்டன, அந்த விழா முடிந்து. ஹஜ் செல்வோருக்கு வழியனுப்பு விழா அது. அதில் பேசிய ஓர் இயற்பியல் பேராசிரியர் ஒரு கருத்தைச் சொன்னார். "ஹஜ் செல்லும் நீங்கள் அங்கே புனித ஜம்ஜம் நீரை வயிறு முட்டக் குடியுங்கள். எவ்வளவு முடியுமோ அவ்வளவு பருகுங்கள். வரும்போது எவ்வளவு முடியுமோ கொண்டுவாருங்கள். சுத்தமான ஜம்ஜம் நீரை இங்கே குடிக்கமுடிவதில்லை. கொஞ்சமாகக் கொண்டுவந்துவிட்டு இங்கே உள்ள சாக்கடைத் தண்ணீரில் கலந்து கொடுக்கிறார்கள்!" என்று அவர் பேசினார். இது மிகவும் அதிகப் பிரசங்கித்தனம் என்று அப்போதே வாங்கிக் கட்டிக்கொண்டார்.



அவர் சாக்கடை நீர் என்று சொன்னது எதை? காவிரி ஆற்று நீரைத்தான்! அதாவது ஜம்ஜம் நீரின் புனிதத்திற்கு முன் காவிரி நதி அவருக்குச் சாக்கடையாகத் தெரிகிறதாம். இது என்ன விதமான சமய மனநிலை என்று நான் வியப்புடன் சிந்தித்துப் பார்த்தேன். அவர் சார்ந்துள்ள இயக்கத்தின் பயிற்சியால் உருவான சப்பை மனநிலையாக இது இருக்கவேண்டும். ஜம்ஜம் நீரின் புனிதத்தைக் காப்பாற்ற - கோட்பாட்டு ரீதியாகவாவது - காவிரி நீரை அசிங்கப்படுத்த அவர் மனம் எத்தனிக்கிறது. ஹஜ் வழியனுப்பு விழா அதற்கான ஏற்ற களமாகவும், தன் முன்னால் அமர்ந்திருக்கும் முஸ்லிம் சமூகம் அதற்கான ஏற்ற கும்பலாகவும் அவருக்குப் படுகிறது. "பார்த்துப் பேசு, பல்லைப் பேத்துருவேன்!" என்று எழுந்து அவரை எச்சரிக்க அங்கே ஒரு அய்யங்காரோ அய்யரோ இல்லை என்னும் வசதியைப் பயன்படுத்துகிறது அவர் மனதின் மத அரசியல்!

இது போல் எல்லா மதத்திலும் சாரமற்ற சப்பைகள் இருக்கவே செய்கின்றன. நாற்பது வருடகால சமயப் பணியில் அந்த பேராசிரியர் அடைந்திருக்கும் புரிதல்கள் இவ்வளவுதான். இஸ்லாம் ஒரு யூனிவர்சல் மார்க்கம் என்று போதிப்பவரிடம் அப்படிப்பட்ட ஒரு யூனிவர்சல் அவுட்லுக் - புடவி தழுவிய மனநிலை - உண்டாவதற்குப் பதிலாக ஒரு லோக்கல் அரபி அவுட்லுக் உருவாகியுள்ளது! எனில், அவருடைய நாற்பதாண்டு கால இசுலாமியப் பணியை என்னவென்பது. இதன் நீட்சியாக ஒரு அவதானத்தைக் கூற விரும்புகிறேன்: ஜமாஅத் என்பது இன்றைக்கு ஆன்மிக சாராம்சத்தை இழந்துவிட்ட ஒரு வெற்று மந்தையாக உள்ளது!

இந்தப் பேச்சு அப்படியே ஒரு நதி போல் நகர்ந்து வேறு தளங்களுக்குச் சென்றது. மக்காவையும் மதீனாவையும் பெரிதும் நேசித்த நபிகள் நாயகம்தான் அரபு நிலங்களின் பாலை வரட்சிக்கு எதிராக இயற்கையின் அழகுகள் கொழிக்கும் டமாஸ்கஸ் நாட்டைக் கண்டபோது "இம்மண்ணிலே ஒரு சொர்க்கம் உள்ளதெனில் அது இதுதான்! அது இதுதான்! அது இதுதான்!" என்று கூறினார்கள்! இயற்கையின் அழகை ரசித்தல் என்னும் சமய மனநிலையை நபிகள் நாயகத்திடமிருந்து பெற்றுக்கொண்ட ஒருவராக இருந்தால் அமெரிக்கா என்ன, ஆஸ்திரேலியா என்ன, உலகில் எங்கே இயற்கை அழகு தென்பட்டாலும் அதை ரசித்துப் புகழவே செய்வார்.



நபிகள் நாயகம் விண்ணேற்றம் -மி'ராஜ் - சென்றபோது பிரபஞ்ச எல்லையான சித்ரத்துல் முன்தஹா என்னும் இலந்தை மரத்தைக் காண்கிறார்கள். அதன் வேரடியில் நான்கு ஆறுகள் ஓடிக்கொண்டுள்ளன. அவற்றில் இரண்டு நதிகள் அந்தரங்கமானவை (பாத்தின்), இரண்டு நதிகள் வெளிப்படையானவை (ழாகிர்). அவற்றைப் பற்றி ஜிப்ரீலிடம் கேட்கிறார்கள். அவர் சொல்கிறார், "அந்தரங்கமான இரு நதிகளும் சொர்க்கத்தினுள் பாய்கின்றன. வெளிப்படையான இரு நதிகள் நைல் நதியும், யூப்ரிடிஸ் நதியும் ஆகும்." (புகாரி # 3887 , நஸாயி # 444 )



எகிப்தில் பாயும் நைல் நதியும், துருக்கி, சிரியா மற்றும் இராக்கின் வழியே பாயும் யூப்ரிடிஸ் நதியும் ஏழு வானங்களுக்கு அப்பாலிருந்து, சொர்க்க ஆறுகளின் நதிமூலத்திலிருந்து பாய்பவை என்பது இதனால் விளங்கும். இவையும் புனிதமான நீர்களே!

அபு ஹுரைரா (ரலி) அறிவிக்கும் ஒரு நபிமொழியில் "சைஹான், ஜைஹான், நைல் மற்றும் யூப்ரிடிஸ் ஆகியவை சொர்க்கத்தின் நதிகள் ஆகும்." ( சஹீஹைன், திப்புன் நபவி ஜவ்ஜிய்யா) என்று கூறப்பட்டுள்ளது.

உலகில் எந்தச் சமுதாயத்திற்கும் இறைத்தூதர்கள் அனுப்பப்படாமல் இல்லை என்பதை நினைவில் கொண்டால், அந்த இறைத்தூதர்கள் அள்ளிப் பருகி தாகம் தணிந்த, குடைந்து நீராடி மகிழ்ந்த எல்லா, வழிபாட்டிற்கு அங்க சுத்தி செய்த எல்லா நதிகளுமே புனிதமானவைதான்! கங்கை, யமுனை, கோதாவரி, காவிரி, பாலாறு, வைகை, ஏன் பஹ்ருளியாரும்கூட புனிதமானதுதான்!

ஒரு நபிமொழி நவில்கிறது: "நிச்சயமாக, ஷைத்தான்கள் ஆதமுடைய மக்களின் இதயங்களைச் சூழ்ந்திருக்கவில்லை என்றால் வானங்களின் அரசாட்சியையே கண்டிருப்பார்கள்"

இறைத்தூதர்கள் அப்படித்தான் எங்கிருந்தாலும் இறையாட்ச்சியின் மகத்துவத்தை தரிசித்தார்கள். பிற மனிதர்களும் அந்தப் புனித நிலையை எட்ட முடியும் என்பதை மேற்கண்ட ஹதீஸ் காட்டுகிறது. அந்த நிலையை நானோ நீங்களோ மேற்படி இயற்பியல் பேராசிரியரோ அடைந்துவிட்டால், மக்காவிலோ மதீனாவிலோ மட்டுமல்ல, பீமநகர் ஓப்பாலத்தின் கட்டையில் உட்கார்ந்துகொண்டும் விண்ணரசை தரிசிக்கலாம்!

3 comments:

  1. Excellent!!!
    This kind of understanding is what stands for Islam. Islam means peace and if we all can understand and appreciate the fact that despite the religious differences, we all are still the creations of the same Creator and hence we do not have any rights to insult anyone or anything based on their or it's religious background.

    Interesting to read, simple but stunningly true one Rameez. Thanks a lot.

    ReplyDelete
  2. awesome....very educative...keep going please..

    ReplyDelete
  3. ///"பார்த்துப் பேசு, பல்லைப் பேத்துருவேன்!" என்று எழுந்து அவரை எச்சரிக்க அங்கே ஒரு அய்யங்காரோ அய்யரோ இல்லை என்னும் வசதியைப் பயன்படுத்துகிறது அவர் மனதின் மத அரசியல்!///

    நிச்சயம் அப்படி ஒரு பிராமணன் பேச மாட்டான்.பயம் மட்டும் காரணமல்ல!

    'சண்டை போடுவதால் ஆகப் போவதென்ன, இறைவனை அதனால் காண முடியுமா?' என்ற பண்பாடும் தான்.

    சொல்லப்போனால் 'ஒரு முஸ்லிமைப் பார்!எவ்வளவு நம்பிக்கையோடு இருக்கிறார்!அந்த நம்பிக்கை நம்மிடம் இல்லையே' என்று இந்தப் பேராசிரியரின் பேச்சை எல்லோரிடமும் வந்து சொல்லிக் கொண்டு இருப்பான்.

    அது சரி!வயிறு முட்டக் குடிக்கச் சொல்கிறாரே! ஜம் ஜம் நீரும் ஏகப்பட்ட கூட்டம் வருவதால் சுத்தத் தன்மை குறைந்து விட்டதாமே? உண்மையா?

    ReplyDelete